Results 1 to 12 of 54

Thread: சித்திரை வைகாசியில் முத்திரைப்பதித்தவை...

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    சித்திரை வைகாசியில் முத்திரைப்பதித்தவை...

    கடற்கரையில் மதுவும் மாதுவும். இவர்களைப் பற்றித் தெரியாதவர்களுக்காக சிறு அறிமுகம். மது எனப்படுபவள் மதுமதி. மாது எனப்படுபவன் மாதேஸ்வரன். இருவரும் நம் மன்ற உறுப்பினர்களே... அந்நியோன்னிய தம்பதிகள் என்றாலும் அடிக்கடி ஊடல் வருவது இயற்கைதானே... இதோ ஊடலும் காதலுமாய் இவர்கள்!

    *************

    அம்மணிக்கு என்ன யோசனையோ?

    ம்? ஒண்ணுமில்லை...

    ஏன் மது... அதோ தூரத்தில் தெரியிதே.. அதென்ன உங்கப்பா வாங்கிவிட்ட கப்பலா?

    ம்?

    இல்ல, வந்ததிலேர்ந்து பார்க்கறேன், கன்னத்தில் வச்ச கையை எடுக்கவே இல்ல.... அதான் ஒருவேளை அது மூழ்கிடுமோன்னு கவலைப்படுறியோன்னு...

    ஜோக்கு?

    பின்னே? கடற்கரைக்கு வந்தா காத்து வாங்கணும், கடல் அலையில காலை நனைச்சு ரசிக்கணும், கடலை வாங்கிச் சாப்பிடணும், கடலை போட... ஸாரி...கதை பேசணும், அதை விட்டுட்டு இப்படிக் கன்னத்தில் கையை வச்சிகிட்டு உக்கார்ந்திருக்கக் கூடாது. மது... ஏன்டி உம்முனு இருக்கே...

    நம்ம வாழ்க்கைப் படகு கவுந்திடுமோன்னுதான் பயமா இருக்கு....

    ஏய்.. என்ன சொல்றே நீ?

    கடற்கரையில்
    கால்நனைக்கத்தானேப் போனோம்
    நீ ஏன் கைகழுவினாய்!!


    அப்படின்னு கெளதமன் கவிதை மாதிரி என்னைக் கேட்கவச்சிடாதீங்க...


    என்னம்மா உன் பிரச்சனை?... சொன்னாத்தானே தெரியும்?

    இதென்ன?

    உன் மொபைல்...

    அது எனக்குத் தெரியாதா? அதென்ன மெஸேஜ்? லவ் யூ டூ…ன்னு....?

    ஓ... அதுவா? ஹ்ஹா….. ஹ்ஹா…… ஹா...

    சிரிக்காதீங்க... சொல்லுங்க... யாருக்கு அனுப்ப வேண்டியது அது...?

    செல்லம்... கண்ணு... உன்னைத் தவிர வேற யாரையும் மனசாலயும் நினைப்பேனாடா... அது சும்மா... ஆதனுக்குப் பொழுது போகாமல் மன்றத்தில் விளையாடினார். நானும் கொஞ்சம் விளையாடிப் பார்த்தேன். நல்லா ஒர்க் அவுட் ஆவுது...

    அவர் சதுரங்கப் புதிர் தானே போட்டிட்டிருந்தார். இதென்ன புதுசா? பொய்யில்லையே...

    சீச்சீ... உன்கிட்ட பொய் சொல்வேனா? கமலகண்ணன் கதையில் அவசரவேலைன்னு சொல்லி ஆபிஸ் போன ராஜன் மாதிரி மாட்டிகிட்டு முழிக்கவேண்டியதுதான்.

    அவர் ஒண்ணும் பொய் சொல்லலை... உண்மையாவே அலுவலக வேலையாத்தானே போனார். நீங்க மட்டும் பொய் சொன்னீங்கன்னு தெரிஞ்சது.... உங்களை சும்மா விடமாட்டேன். பேகனோட மனைவி மாதிரி கண்ணைக் கசக்கிட்டு மூலையில உக்காருவேன்னு கனவு காணாதீங்க.

    பேகனா? அவர் ரொம்ப நல்லவராச்சே... மயிலுக்குப் போர்வையெல்லாம் கொடுத்தாரே..

    மயிலுக்குப் போர்வை கொடுத்தார். மனைவிக்கு அன்பைக் கொடுத்தாரா? சங்க காலப் பாடல்களோடு சொ.ஞா.ஐயா தெளிவாச் சொல்லியிருக்காரே...

    ப்ச்! பாவம்தான் அவர் மனைவி... எல்லா ஆண்களும் அப்படி இருந்திருக்க மாட்டாங்க மது. கணவன் தன் மேல் அன்பா இருந்ததால்தான் அவன் இறந்தபின்னால் அந்தக் காலத்தில் பல மனைவிகள் கணவன் சிதையிலேயே உடன்கட்டை ஏறியிருக்காங்க.

    அது அந்தக் காலம்... அதுக்கப்புறம் விருப்பமில்லாத பெண்களையும் எரியும் சிதையில் பிடிச்சுத் தள்ள ஆரம்பிச்சிட்டாங்களே...

    நல்லவேளை, அந்தப் பழக்கம் ஒழிஞ்சது.

    அந்தப் பழக்கம் ஒழிஞ்சாலும் இப்பவும் பல மனைவிகள் தங்கள் கணவனுடைய ஈகோவுக்குப் பயந்து பயந்து இந்த வாகினி மாதிரி வாழவேண்டியிருக்குன்னு ஐ.பா.ரா. சொல்லியிருக்காரே. ரமணி மாதிரி 80கி.மீ ஸ்பீடுல போகுற பெண்களுக்கு வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்னு காமாட்சியும் அவங்க பாணியில் அழகாச் சொல்லியிருக்காங்க.

    இதே உலகத்தில்தான் ஜானு மாதிரியும் இருக்காங்கன்னு ஜெகதீசன் ஐயா சிலாகிச்சிருக்கார்... அது ஏன் உன் கண்ணில் படமாட்டேங்குது?

    எங்கயாவது ஒருத்தர் ரெண்டுபேர் இருக்கலாம்... பொதுவா சொல்றதுக்கில்ல... ஆனா என்ன இருந்தாலும் அம்மா இருந்து குழந்தைகளை வளர்க்கிற மாதிரி ஆகவே ஆகாது. அதைத்தான் ரவீ தன்னோட அம்மாதான் வேணும் கதையில் சொல்லியிருக்கார்.

    உண்மைதான். ஒரு கரு உருவாவதில் இருந்து அது மனிதனாய் முழுமை பெறும் வரைக்கும் ஒரு தாயின் பங்கு அலாதியானது. அரசு மருத்துவமனைகளில் நடக்கும் அவலத்தை இரக்கத்தின் விலை நூறு ரூபாய் கதையில் ரவீ அப்பட்டமா சொல்லியிருக்கார். படிக்கவே வேதனையாயிருக்கு.

    சுமுகமான சூழல் இல்லாதபோது கருவிலிருக்கும் குழந்தையே தன்னைக் கலைத்துவிடும்படி தாயிடம் இறைஞ்சும் கொடுமையை லென்ராம் உருக்கமாச் சொல்லியிருக்கார்.

    கருவில் இருக்கிற குழந்தை பற்றி சொன்னே... கைக்குழந்தை பேசினால் என்ன பேசும்னு சிமரிபா அழகாக் கற்பனை பண்ணியிருக்காங்க பாரு.. அதுக்கு மட்டும் பேசத் தெரிஞ்சது... அப்பவே அம்மாவை ஆயிரம் கேள்வி கேட்கும்போல...

    இந்தக் காலத்துக் குழந்தைகள் சாமர்த்தியத்தைப் பத்தி சொல்லணுமா... இங்கே பாருங்க... பாரதி அண்ணா எவ்வளவு அழகா குழந்தைகளின் குறும்பைச் சொல்றாருன்னு....

    அப்பாவுக்கே சுத்தம் பற்றிப் பாடம் சொன்னக் குழந்தை ராணியை கமலகண்ணன் கதையில் பாரு... இங்க சிமரிபாவோட மகன் அவங்களுக்கு எதிர்பாரா வாழ்த்து சொன்ன சாமர்த்தியத்தைப் பாரு.

    இயல்பாவே சாமர்த்தியத்தோடும், திறமைகளோடும் இருக்கிற குழந்தைகளுக்கு... அவங்க எதிர்காலத்துக்கு பெத்தவங்க இன்னும் கூடுதல் அக்கறை எடுத்தா... எவ்வளவு நல்லா இருக்கும்? இதுபத்திதான் ரவீ ஒரு திரி ஆரம்பிச்சார். பலரும் கருத்துச் சொல்லியிருக்காங்க.

    இப்பதான் பிள்ளைகள் படிப்புலயும் அரசியல் புகுந்திடுச்சே... சமச்சீர் கல்வி வேணுமா வேணாமாங்கிற பிரச்சனையில் மாட்டிகிட்டு முழிக்கிறது குழந்தைகளின் நிலைதான்.

    அதுவும் ஒரு வகையில் நல்லதுக்குதான் போல... கெளதமன் சொல்லியிருக்கிறதைப் பாருங்க..

    ஆச்சர்யமாக, பள்ளிக்குப் போக
    ஆலாய் பறக்கிறது பிள்ளைகள்
    தமிழக அரசுக்கு நன்றி!


    எல்லாம் சரி, சில பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கும் நேர்முகத்தேர்வு வச்சி என்ன கொடுமை பண்றாங்க? ஜெகதீசன் ஐயா எழுதின இந்தக் கதையைப் படி... புரியும்.

    குழந்தைகளாவே இருந்திட்டா தேவலாம் போல இருக்கு... எதுக்கு சிரிக்கறீங்க?

    ரவீ, இந்த தடவை சிரிப்புகள் பகுதியில் புகுந்து விளையாடிட்டார். தாமரை அண்ணாவைக் குழந்தையாக்கித் தொட்டிலில் கிடத்தியதையும், ஆதவாவோட தாத்தாவை வம்புக்கு இழுத்ததையும் நினைச்சேன், சிரிப்பு வந்திடுச்சி.

    ஆதவாவே ஒரு தாத்தா... அவருக்குத் தாத்தான்னா... ரொம்ப வயசாயிருக்குமே...

    அடிப்பாவி... ஆதவாவை தாத்தான்னே முடிவுபண்ணிட்டியா? சமீபத்தில்தான் பிறந்தநாள் கொண்டாடியிருக்கார்... இங்க போய் அவர் வயசைத் தெரிஞ்சுக்கோ...

    சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். அட... வாழ்த்துப் பகுதியே ஜெகஜோதியா இருக்கு... தாமரை அண்ணா, மனோஜி அண்ணா , சிவாஜி அண்ணா, ஜார்ஜ் அண்ணா, அன்புரசிகன் லீலுமா இத்தனைப் பேர் பிறந்தநாள் கொண்டாடி இருக்காங்க... ரவீ, கீதம் அக்கா, குணமதி ஐயா, ஆதன், நிவாஸ் இவங்க எல்லாரும் அடுத்தப் படிக்கு முன்னேறியிருக்காங்க... முக்கியமா நம்ம அமரனுக்குத் திருமண வாழ்த்து! எவ்வளவு சந்தோஷமா இருக்கு!

    அமரன் திருமணம் பத்தி தாமரை அண்ணா கல்யாண வைபோகமேன்னு அசத்தலா எழுதியிருக்காரே... இன்னும் படிக்கலையா?

    சென்னையில் சில நாள்னு அமரன் ஒத்தை வெடி கொளுத்திப் போட்டாலும் சரவெடி மாதிரி ஒரு பெரிய சந்திப்பே நடந்திருக்கு. உரிமையாக உறவாக அணையாத அக்னியாக... அமரத்துவம் வாய்ந்ததாக ஒரு நட்பின் அறிமுகம் பத்தி அருமையாப் போனதே ஒரு திரி... அதில் அக்னி சொன்ன மாதிரி எல்லாரும் அமரனுக்கு ஒரு குத்து வைத்து வரவேற்றார்களான்னு தெரியலையே... அதைப் பத்தி ஒவ்வொருத்தரும் எழுதுவாங்கன்னு பார்த்தா... ம்கூம்... போன சந்திப்பே இன்னும் எழுதி முடிக்கல.. அதுக்குள்ள அடுத்த சந்திப்பைப் பத்தி எங்க எழுதியிருக்கப் போறாங்கன்னு நினைச்சேன்..

    ஆச்சர்யப்படுத்தற மாதிரி தாமரை அண்ணா அழகாத் துவங்கி அழகா வர்ணிச்சு நிறைவா முடிச்சிட்டார். மதியும், ஜானகி அக்காவும் அவங்க பார்வையையும் அழகாச் சொல்லி மனசை நிறைச்சிட்டாங்க...

    இப்பதான் ச்சீய் கவிதைக்கு அர்த்தம் புரியுது..

    நம்ம கல்யாணத்தன்னிக்கு நீயும் ஒரு செவ்வானச் சேலை கட்டியிருந்தியே... அதுக்கப்புறம் கட்டுறதே இல்ல... ஏண்டி?

    அடிக்கடி கட்டினா... பழசாப் போயிடுமே... நினைவுகளைப் பொக்கிஷமாப் பாதுகாக்க வேண்டாமா?

    பிசினாரிடி நீ... ஹூம்... அந்த சேலையில் உன்னைப் பார்க்க நான் ஏங்குற மாதிரி அந்தச் சேலையும் ஏங்காதுன்னு என்ன நிச்சயம்?

    சிமரிபா மாதிரி நீங்களும் சொல்றீங்க? பட்டுப்புடவையின் ஏக்கம் பத்தியும் இன்னொரு முறை கட்டுறதுக்காக அது காத்திருக்கிறதாகவும் கவிதை பாடியிருக்காங்க. சரி, புடவை பத்தி அக்கறையாக் கேக்கறீங்களே... அட்சயதிரிதியை அன்னைக்கு எனக்கு ஒரு குண்டுமணித் தங்கமாவது ஆசையா வாங்கித் தந்தீங்களா?

    அதெல்லாம் வியாபார உத்தி, மது... நம்பாதே... நீதாண்டி என் தங்கம், வைரம், பவளம்...

    போதும்.. போதும்... இப்படியே பேசி என் வாயை அடைச்சிடுங்க.

    இங்க பார், ஜகதீசன் ஐயாவே என்ன சொல்லியிருக்கார்னு.

    புன்னகையே பெண்ணுக்கு நன்நகையாம் அஃதன்றி
    பொன்நகையால் உண்டோ பயன்.


    வாங்கித் தராம இருக்க இதெல்லாம் ஒரு சாக்கு. சரி, அதுவும் வேணாம்... வெயில் என்னமா இருக்கு? வெய்யில் எவ்வளவு கொடுமைன்னு பூமகள் எழுதியிருக்காங்க பாருங்க.

    பனையோலை நொங்கும்..
    பதமான பதநீரும்..
    இளைப்பாற தென்னைநிழலும்..
    விளையாட உண்டிவில்லும்..
    இல்லாத கோடை..
    நெஞ்செங்கும் நிறைக்கிறது
    வெயிலினும் வெம்மை..!!


    சமாளிக்க எங்கயாவது ஊட்டி, கொடைக்கானல்னு கூட்டிப் போறீங்களா?


    வெயிலைச் சமாளிக்க அதெல்லாம் எதுக்குமா... அழகான கடற்கரையும், கரைதொட்டு விளையாடும் நுரைததும்பும் அலைகளும், ஆகாயத்தில் ஒளிவிடும் வட்ட நிலவும்... அருகில் என் ஆசைப் பெண்டாட்டியும் இருக்கும்போது....

    ஓ... கவிதையா? அதெல்லாம் உங்களுக்குதான் வராதே... எதுக்கு வீண்முயற்சி பண்றீங்க?

    என்ன நீ? தக்ஸ் மதியைக் கிண்டலடிச்ச மாதிரி சொல்றே?

    அது சும்மா... நான் சொல்றது நிஜம். உங்க கவிதை விலைபோகணும்னா... சுண்டல் மடிச்சிதான் கொடுக்கணும்.

    ரவீயின் விலை போகாத கவிதை பத்திதானே சொல்றே?

    அட, இவ்வளவு சீக்கிரம் உங்களுக்குப் புரிஞ்சிடுச்சே... அப்ப நீங்க பெரிய கவிஞர்தான் ஒத்துக்கறேன்.

    ஏண்டி என் காலை வாரறே... அடுத்த வருஷம் கட்டாயம் ஏற்காடு போறோம். ஷீ-நிசி அழகா தகவல் கொடுத்திருக்கார், புகைப்படங்களோட. கண்டிப்பா போறோம்.

    இன்றே செயற்பட ஏற்றநா ளாமென்றே
    என்றும் வினைசெய எண்ணு.


    குணமதி ஐயாவின் குறள்!


    கண்ணம்மா... இதெல்லாம் நினைச்சவுடனே நடக்கிற காரியமில்லம்மா... விளையாடாதே... அதுக்கெல்லாம் நிறைய பிளான் பண்ணனும்.

    எனக்குத் தெரியாதா? சும்மா கலாட்டா பண்ணினேன்பா.

    எது கலாட்டா எது சீரியஸ்னே புரியமாட்டேங்குது...

    ரகஸ்யா மாதிரி...

    ஆதவா எழுதுறதைச் சொல்றியா? ஆமாம், எது உண்மை, எது விளையாட்டுன்னே தெரியலயே... ஆனாலும் அந்த கோயில் மேட்டர் சூப்பர், ஒரு கவிதை மாதிரி இருந்தது.

    இப்படித்தான் தன் காதலியும் திருவிழாவுக்கு வந்ததைச் சிலாகிச்சு எதற்காக வந்தாளோன்னு ஏக்கமா எழுதியிருக்கார் குளிர்தழல்.

    ஒருதலைக்காதலில் எதுவுமே புரியாதுதான். நிவாஸுக்கு அது நிலாச்சோறு மாதிரியாம்…. ஒருசமயம் சாதகமா தெரியும், ஒருசமயம் பாதகமா தெரியும்.

    யாருக்கும் தெரியாம ஒரு தப்பு ன்னு ஜார்ஜ் புலம்பியிருக்கிற மாதிரி...

    ம்... என்னதான் காலம் மாறினாலும், காதலை வெளிப்படுத்தக் கடிதங்கள் உதவுற மாதிரி வேற எதுவுமே உதவுறதில்ல... நீ எழுதிய நானில் ஒரு காதல் கடிதமே படாத பாடுபட்டுக் காதலர்களைச் சேர்த்துவைக்கிறதா காமாட்சி எழுதியிருக்காங்களே...

    காதல் கடிதங்களிலாவது தமிழ் வாழுதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.

    நீ சொல்லவும் காதல் இராஜா கடிதங்கள் நினைவுக்கு வந்திட்டு. என்னமா காதலைப் பிழிஞ்சு அற்புதமா எழுதியிருக்கார். நானும்தான் என்னென்னவோ எழுத நினைக்கிறேன். ஒண்ணுமே எழுதவரமட்டேங்குதே.

    சில சமயம்அப்படிதான். நாம் என்னதான் முயற்சி பண்ணினாலும் எதுவுமே எழுத வராது.. PremM தவிக்கிற மாதிரி தான் தவிப்போம். அல்லது ஜகதீசன் ஐயா மாதிரி காகிதப் பந்துகள் செய்துகொண்டிருப்போம். வல்லம் தமிழ் மாதிரி எதையாவது கிறுக்குவோம். ஆனாலும் அவையெல்லாம் அழகான கவிதைகளாகிடும்.

    சசிதரன் சொன்ன உங்கள் விருப்பம் மாதிரி...

    அழகான கவிதை அது. அதே மாதிரி கலாசுரன் தன் உருமாறிச் செல்கிறேன் கவிதையில் தூசுபடிந்த ஒரு வறிய கவிஞனின் அறையைக் காட்சிப்படுத்துவார். பிரமாதமா இருக்கும்.

    கவிதைகள் சொல்வது பாதி, சொல்லாமல் மறைந்திருப்பது மீதி. அவங்க என்ன சொல்லவராங்கன்னு நமக்குப் புரியும்போது அதன் ரசனை மிகப் பிரமாதமா இருக்கும். ரசிகனுடைய பாதிக்கப்பட்டவன் படிச்சுப் பார்... படிக்கும்போதே... அப்படியொருவனைப் பத்தி மனசு அசைபோடும்.

    இன்னைக்கிருப்பவன் நாளைக்கில்லன்னுதான் எல்லாரும் சொல்வாங்க. ஜெகதீசன் ஐயாவின் ஒரு வித்தியாச சிந்தனை… இன்னைக்கு இல்லாமலிருப்பவன் நாளை இருப்பவனாவான்கிற மாதிரி ஒரு பாஸிடிவ் எண்ணம்.

    இலரென்று இன்றிருப்போர் நாளை உளராவார்
    என்பது ஊழின் விதி
    .


    ஆனா... அதுக்கு நாம் காத்திருக்கிற காலம்? காத்திருப்பு ரொம்பக் கொடுமையானது. கண்முன்னால் காலம் கடந்துகிட்டேதான் இருக்கும். காலமே உன் கணக்கை நிறுத்துன்னு Krishna 1988 மாதிரி என்ன கெஞ்சினாலும் நிறுத்தாது.

    மாது.... ஒரு நிமிஷம் நீங்க நிறுத்துங்க... அந்த ஆளைக் கவனிச்சீங்களா? அடிக்கடி நம்மள திரும்பித் திரும்பிப் பார்க்கறார்? சரியான ஜொள்ளு பார்ட்டி போல... ஜொள்ளு வாத்தியாரோட சபலத்துக்கு ஆப்பு வச்சதோட... அவரைக் கைது பண்ணி உள்ள தள்ளினமாதிரி இந்த ஆளையும் தள்ளிடவேண்டியதுதான்.

    என்னடி சொல்றே?

    சும்மா தள்ளக் கூடாது. வெண்மதி அளகேசனுக்குப் பாடம் புகட்டின மாதிரி அதிரடியா பாடம் புகட்டணும்.

    மது... அநாவசியமா யாரையும் சந்தேகப்படாதே... நல்லாப் பாரு... அவன் உன் முன்னாள் காதலன் இல்லையே.... எப்படிக் கேட்பேன் உன்னிடம்னு இளமாறன் பாடினமாதிரி அவரும் யோசிக்கிறாரோ?

    ஏய்.. உதைபடப் போறீங்க... அவர் உங்க நண்பரா இருக்கப்போறார், ஜார்ஜ் அண்ணா எழுதின மாதிரி இவன் அவனில்லையோன்னு குழம்பியிருப்பார். யார்கிட்டயாவது கடன் வாங்கியிருந்து கொடுக்க மறந்திட்டீங்களா?

    அந்தப் பழக்கமே அய்யாவுக்குக் கிடையாது...

    எது? கடனைத் திருப்பிக்கொடுக்கிற பழக்கமா?

    பாவி... நீயே அந்தாளைக் கூப்பிட்டு நீங்க சந்தேகப்படுற ஆள் இவன்தான்னு என்னை மாட்டிவிட்டுடுவே போல இருக்கே... சொ.ஞா ஐயா எழுதிய அளந்த கோல் படிச்சியா? அதுப்படி உண்மையான நண்பர்கள்தான் எனக்கு...

    நீங்களும் அவங்களுக்கு உண்மையா இருக்கணும்ல...

    நிச்சயமா... நட்பில் பொய் கூடாது. நண்பர்கள் பிரியலாம், நட்பு பிரியக்கூடாது.

    ப்ச்! பூமகளோட நட்பு கவிதையில் வர மாதிரி பெண்களின் நட்பின் எல்லை திருமணம் வரைக்கும்தான். அப்புறம் வாழ்க்கைச் சுழலில் புதிய நட்புகள் கிடைத்தாலும் பால்ய நட்புகள் காணாமலே போயிடுது. ரிஷான் மொழிபெயர்த்த அம்மாவின் நடிகைத்தோழி படிச்சீங்களா?

    ஆண்களுக்கு மட்டும் என்ன வாழுதாம்? இப்பெல்லாம் வேலை, மேற்படிப்புன்னு அவங்களும் பல சிநேகங்களை இழக்கவேண்டிய நிலைதான். எப்பவாச்சும்தான் பழைய நண்பர்களைச் சந்திக்க முடியுது. அதிலும் ரவீ சந்திச்ச அந்த பால்ய நண்பனின் நிலையை நினைச்சாலே மனசு கனக்குது.

    ஒரு புதிய நட்பு எவ்வளவு சந்தோஷம் தருமோ... அதை விடப் பல மடங்கு வலியை அதன் பிரிவு தருது. நிவாஸுடைய நண்பரின் மரணத்துக்கு ஒரு ஒப்பாரி பாடினாரே... வலி அதிகம்.

    பிரிவு ரொம்பக் கொடுமைப்பா... நட்பில் மட்டுமில்ல... எந்த உறவிலுமே பிரிவின் வலியை நம்மால் தாங்கவே முடியாது. ஆனா பாரு, மின்மினி பிரிவு வரட்டும்னு சொல்றாங்க.

    பிரிவு வரட்டும் அன்பே
    அது உன்னை
    அதிகம் நேசிக்க
    அல்லவா சொல்லி தருகிறது !


    இன்னம்பூரான் ஐயா இந்தப் பதிவில் சிங்கை அதிபர் எஸ்.ஆர். நாதனோட வாழ்க்கையைச் சொல்லியிருக்கார். பதினாறு வருஷம் காத்திருந்து தன் காதல் மனைவியைக் கரம் பிடிச்சாராம்.

    இந்தக் கதை மாதிரிதான் கீதம் அக்காவும் பூக்கள் பூக்கும் தருணத்தில் எழுதியிருக்காங்க.

    சிலருக்குதான் இதுமாதிரி கொடுப்பினை இருக்கும். பலருக்கு ஒருதலைக் காதல்தான். நினைவுகளே வாழ்க்கைன்னு திவ்யா சோக கீதம் பாடியிருக்காங்க.

    துன்பின்பம் வாழ்வில் தொடராத மாந்தரென
    என்றும் எவரும் இலர்.


    அப்படின்னு குணமதி ஐயா சொன்னபடி வாழ்க்கையை அதன் போக்கில் ஏத்துகிட்டு வாழவேண்டியதுதான்.

    அப்படி வாழமுடிந்தால்தான் பிரச்சனையே இல்லையே... இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ரவீ தன் அப்பாவின் நினைவுகளால் எப்படி வேதனைப்படுறார் பாருங்க.

    அதைத்தான் சொல்றேன். ஒரு மனிதர் வாழ்ந்தார், மறைந்தார் அப்படிங்கிறதைவிட... பல வருஷங்களுக்குப் பின்னும் அழியாமல் நம் நினைவுகளில் வாழுறது பெருமைதானே... அப்படி வாழ்ந்த அவரை நினைச்சுப் பெருமைப்படணும்.

    அப்படிதான் ஒரு அற்புதமான மனிதரைப் பத்தி ரங்கராஜன் எழுதியிருக்கார். உண்மையில் அவர்தான் ஆணழகன். எவ்வளவு கொடுத்துவச்சவங்க அந்த மனைவி!

    ஆணழகன்னு சொன்னதும் இந்தக்கவிதை நினைவுக்கு வருது... ஒரு கிராமத்துப் பெண் தன் அத்தானைப் பார்த்து எப்படியெல்லாம் அழகழகா வர்ணிக்கிறா ... நீ என்னைக்காவது என்னை அப்படி வர்ணிச்சிருக்கியா?

    ஆசைதான்.... அதுசரி, ஒரு ஆண் கறுப்பா இருந்தா அவனை அழகுன்னு சொல்றாங்க. அதுவே ஒரு பெண் கறுப்பா இருந்தா நிராகரிக்கிறாங்களே... எதுக்குன்னு மின்மினி ஆதங்கப்படுறாங்க. நியாயம்தானே?

    எல்லாத்துலயும் பிரிவினை இருக்கு. ஒரு நாய்க்குட்டிக்குக் கூட ஆண் பெண் பேதம் பார்க்கிற மனிதர்கள் இருக்காங்களேன்னு இங்க Krishna 1988 ஆதங்கப்படுறார். என்ன பண்றது? நாமதான் கொஞ்சங்கொஞ்சமா மாறணும். மாத்தணும்.

    மாற்றம்னு சொன்னதும் தமிழகத் தேர்தல் நினைவுக்கு வருது... ஆட்சி மாற்றம் எவ்வளவு பெரிய அளவில் நடந்திருக்கு. மன்றத்தில் பல திரிகளில் அரசியல் நெய் ஊற்றப்பட்டுக் கொளுந்துவிட்டு எரிஞ்சுகிட்டு இருந்ததே....

    ஆமாம், இப்ப கொஞ்சநாளா நீறுபூத்து இருக்கு. அரசியல் நிகழ்வுகளையும் நாட்டு நடப்பையும் அடிப்படையா வச்சி சாமா சாஸ்திரிகள் நடத்துற நவீன கதாகாலட்சேபத்துக்கு சிவாஜி அண்ணாகிட்ட இருந்து சிக்னல் கிடைச்சிடுச்சே...சூப்பரா இருக்கு. இதே மாதிரி இன்னம்பூரான் ஐயா அந்தக் காலத்துத் திண்ணைவாசிகள் மாதிரி நாட்டுநடப்பை விவாத மோஹம்னு அழகாச் சொல்லியிருக்கார்.

    இன்னம்பூரான் ஐயாவோட அந்த நாள் நிகழ்வுகள் படிக்கிறீங்களா? ஒவ்வொரு நாளையும் அவர் நினைவுகொள்ளும் பாங்கே அலாதியா இருக்கு. எத்தனை எத்தனை வரலாற்று நிகழ்வுகள், விஞ்ஞானத் தகவல்கள், அரசியல் பிரஸ்தாபங்கள், தத்துவங்கள், வேதாந்தங்கள்னு அவர் பேனா போகாத பாதையே இல்லை.

    தணிக்கை என்னும் முட்டுக்கட்டை என்னும் அவரோட படைப்பை பாரதி அண்ணா பதிவேற்றம் பண்ணிட்டிருக்கார், பார்த்தியா?

    ம்... எவ்வளவு விஷயங்கள் அதில் புதைஞ்சுகிடக்கு? அரசுத் துறைகளுக்குள் நடக்கிற ஊழல் பத்தியெல்லாம் நிறையத் தெரிஞ்சுக்க முடியுது.

    ஊழல் எல்லா இடத்திலயும்தான் புகுந்து விளையாடுதே...

    ஊழலை 100 % ஒழிக்கமுடியும்னு ஷீ-நிசி ஒரு விவாதம் முன்வச்சாரே...

    அதிலிருக்கும் சாதக பாதகங்கள் பத்திதான் நிறைய அலசினாங்க... அரசும் கறுப்புப்பணத்தை ஒழிக்க யோசனைகள் கேட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறதா நிவாஸ் தெரிவிச்சிருந்தார். ஊழல், பொய், பித்தலாட்டம் இவையெல்லாம் இல்லாத நாடு என்னைக்கு உருவாகும்னு ஆசையா இருக்கு. போலிச்சாமியார்கள் பின்னால் திரிகிற மக்களை நினைத்து நாகரா ஐயா மனசு நொந்து சொல்லியிருக்கிறதைப் பாரேன்.

    சத்தி திருடுங் கள்ளன் காலில்
    மண்டி இடுதல் மூடம்.

    குருவெனச் சொல்லிக் கள்ளன் காலை
    வருடிடுங் குருட்டுக் கூட்டம்.

    உன்னை மறைத்தேதான் உன்முன் னமர்ந்தான்
    கள்ளன் குருவேடம் பூண்டு.

    அவனை இவனைக் குருவெனச் சொல்வாய்நின்
    அகத்தான் உவனே குரு.

    குருவெனும் பேரைக் கூட்டிக் குருடன்கால்
    வருடிடும் குருட்டுக் கூட்டம்.


    சரியாதான் சொல்லியிருக்கார்.

    உண்மை எது, பொய் எது உணர முடிஞ்சவங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.

    மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் தன்னைப்
    பொய் கலந்தார் முன் புகுதா ஒருவனை
    உய்கலந்து ஊழித் தலைவனுமாய் நிற்கும்
    மெய் கலந்தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.


    ஜானகி அக்கா எழுதிவரும் தினமொரு திருமந்திரத்தில் தாமரை அண்ணா அழகா விளக்கியிருக்கார்.

    அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
    பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
    உண்டி சுருங்கில் உபாயம் பல உள
    கண்டங் கறுத்த கபாலியுமாமே.


    உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் மனக்கட்டுப்பாட்டைப் பேணுதல் பற்றியும் சொல்றார் பார்...

    சாப்ட்வேர் துறையினருக்கான உணவுக்கட்டுப்பாடுகள் பத்தி தங்கவேல் இங்க எழுத ஆரம்பிச்சிருக்கார்.

    அவங்களுக்கு நிச்சயமா தேவையான ஒண்ணு. ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்து உணவிலயும் கட்டுப்பாடா இல்லைன்னா... எடை கூடும், நோய்கள் பெருகும்.

    உடல் உழைப்பே நிறைய பேருக்கு மறந்துபோயிடுச்சி. அதனால்தான் மின்மினி மிதிவண்டி ஓட்டிக்கு ஜே போடுறாங்க.

    ஆமா... அப்படி முயற்சி எடுத்து உடல் எடை குறையலைன்னா அதிர்ச்சிவைத்தியம் தான் கொடுக்கணும், சொ.ஞா ஐயா எழுதியிருக்கிற மாதிரி.

    இப்படிதான் டாக்டர் கோதண்டராமன் கதையில் ஜெகதீசன் ஐயா நமக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கார்.

    ஜெகதீசன் ஐயாவோட கதை, கவிதை எழுதுற வேகம் மலைக்கவைக்குது. அதிலும் பலதரப்பட்ட கருக்களையும் வச்சி கதை எழுதி நல்லா ரசிக்கவைக்கிறார். கவிதையிலும் நகைச்சுவையைப் புகுத்தி என்னமா விளையாடறார். அடுத்தது ரவீ... பல பதிவுகளிலும் பங்கெடுத்துச் சிறப்பிக்கிறார். ஜார்ஜ் அண்ணா சொன்ன மாதிரி மன்றத்தில் நிரம்பி வழியறார். நாஞ்சில் த.க.ஜெய் பின்னூட்டத்தில் பிரமாதப்படுத்தறார். அப்புறம் நிறைய தொடர்கதைகள் ஆரம்பமாயிருக்கு... விரைவில் தொடர்ந்து அசத்துவாங்கன்னு நினைக்கிறேன். செல்வாவோட ஒரு சித்திரக்காரனும், வர்ணப்பெட்டியும் சில தூரிகைகளும் , ரவீயோட இரண்டாம் முகம் , நிவாஸுடைய அவன் ... ராஜாராமோட இரயில் சிநேகம்

    ராஜாராம் வந்தாச்சா....?

    ம்..ம்.. வந்து சேட்டையை ஆரம்பிச்சிட்டார்...ச்சே... சேட்டையராஜாவைப் பத்தி எழுத ஆரம்பிச்சிட்டார். ஒவ்வொரு பதிவிலயும் நகைச்சுவையோடு நல்ல கருத்துக்களையும் சொல்லி வரார். அழியா சுவடுகளில் எப்படி ஆன்மீகத்தில் ஈடுபாடு வந்ததுன்னு எழுதியிருக்கார். கொடுங்கல்லூர் பகவதி அம்மன் பத்தி எழுதியிருக்கார்.

    அப்படியா? நல்ல விஷயம்தான். பகவதி அம்மனைச் சொன்னதும் வல்லம் தமிழ் எழுதிய புன்னை நல்லூர் மாரியம்மன் புகழ் பாடும் பாடல்கள் நினைவுக்கு வருது. சரி, அன்புரசிகனோட யாழ்ப்பயணம் என்னாச்சு?

    அட, அதை உண்மைன்னு நம்பிட்டியா? அது முழுக்கக் கனவாம்.

    ஓ... கனவுலயும் அவருக்கு நிம்மதி இல்லையா? பாவமே... கனவையும் இவ்வளவு சுவாரசியமா சொல்றது நம் மன்றத்தில்தான்னு நினைக்கிறேன். அதனால்தான் ஜெகதீசன் ஐயா இப்படி குறள் எழுதியிருக்கார்.

    யாம்கண்ட மன்றத்தில் நம்தமிழ் மன்றம்போல்
    பூமிதனில் யாங்கனுமே இல்
    .


    ஆகா... எவ்வளவு சந்தோஷமா இருக்கு... எஸ்தோய் பெலிஸ்!

    இதென்ன? புரியாத பாஷையில் பேசுறீங்க? திட்டுறீங்களா? பாராட்டுறீங்களா?

    நான் சந்தோஷமா இருக்கேன்னு சொன்னேன்.

    ஓ... இது எப்பத்திலிருந்து?

    கிருஷ்ணன்சுப்பாராவ்னு ஒரு பன்முக மனிதர் வந்திருக்கார்... நெல்லிக்காய் சாதம் , பாகற்காய் புளியோதரைன்னு சமையலிலும், ஆன்மீகத்திலும் , அழகுக்குறிப்புகளிலும் தரும் பதிவுகள் தவிர ஸ்பானிஷ் மொழியும் கத்துக்கொடுத்து அசத்தறார். அவர்கிட்டயிருந்து கத்துகிட்டதுதான் அது.

    வாவ்... சூப்பர்.

    சரி, புதுசா வந்த படங்கள் பத்தி என்னம்மா சொல்லியிருக்காங்க மன்றத்தில்?

    ஐயோ... நல்ல நல்ல படமா விமர்சனம் போட்டிருக்காங்க... Rio படத்துக்கும் Transformers – 3 படங்களுக்கும் ஆரண்ய காண்டத்துக்கும் ஆதவா அருமையா விமர்சனம் பண்ணியிருக்கார். கோ படத்துக்கு ஓவியன் அட்டகாசமான விமர்சனம். Thor படத்துக்கு பூமகளின் சூப்பர் விமர்சனம். பைரேட்ஸ் அஃப் கரீபியனை ஷரவணன் அழகா விமர்சிச்சிருக்கார்

    மொத்தத்தில் எல்லாப் படத்தையும் பார்க்கணும்னு சொல்றே...

    புரிஞ்சா சரி. பழைய படங்களை ஒரு மீள்பார்வை மாதிரி டூரிங் டாக்கீஸ்னு rajeshkrv பதிவிடுறார்.அதில் முதல் படம் சபாஷ் மீனா. நல்ல ரசிக்கவைக்கும் படம். நினைவுகளே இனிமையா இருக்கு. அப்புறம் நடிகர் திலகம் பத்தி மதுரை மைந்தன் அண்ணா மறுபடியும் எழுத ஆரம்பிச்சிட்டார். அட்டகாசமான படங்களோட பிரமாதமா இருக்கு பதிவுகள்.

    அப்படியா? நிச்சயமா பார்க்கணும். சரி, இப்ப நேரமாயிடுச்சே மது.... நேரா ஹோட்டல்தானே போறோம்?

    அதென்ன ஒரு மாதிரி நமுட்டுச் சிரிப்போட கேட்கறீங்க?

    தாமரை அண்ணா எழுதின ஹோட்டல் படும் பாட்டை நினைச்சுகிட்டேன்.

    அதானே... வேறொண்ணும் இல்லையே...

    இல்லடா செல்லம், உன்னைப் பகைச்சுகிட்டு நான் உயிர்வாழமுடியுமா?

    என்ன முணுமுணுப்பு?

    ஐ லவ் யூ சொன்னேம்மா....

    அதானே பார்த்தேன்.

    ******
    Last edited by கீதம்; 06-07-2011 at 10:57 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •