முற்களைத் தாண்டித்தான்
உன்னைக் கண்டேன்.
கொன்று போட்டிடும்
அந்த வேள் விழியால்
அன்றே கொன்றிருக்கலாம்
இன்று சித்ரவதைப் படும் என்னை.


குருதியால் ஏற்பட்ட
ரணத்தை விட
குருட்டுக் காதலில் ஏற்பட்ட
ரணங்களின் வடுக்கள்

ஆறத் துடிக்கவில்லை
இன்னும்.

என்னுள் கொப்பளிக்கும்
ரத்தங்கள் உன்னையே
நினைப்பதாலோ என்னவோ
சூடேறிவிடுகிறது.
தணிக்கத்தான் ஒருமுறை
நீ காண்வாய் என்னை..
தன்னை மறந்து
தணிக்கவும் மறந்து
ஓட்டங்களை நிறுத்திவிட்டு
எட்டிப் பார்க்கிறது இத்திரவம்.


கூந்தலில் ஏறிய என்னை,
மாலையில் பூக்களை
மதிக்காமல்
மிதிப்பதுபோல
கிடத்திவிட்டாய்..
நறுமணத்தை இழந்து
ஒரு சாக்கடைக்குள் தவிக்கிறேன்
பூ என்ற குணத்தோடு மட்டும்.


அள்ளிக்கொண்ட
அனைத்து நீரையும்
பருகிவிட முடியாது.
உன் உதடு பட்ட நீராக
நான் இருக்கையில்
உன் கைவிரல் இடுக்குகளில்
தொலைந்து போகிறேன்.


என் கதிர்களின் வீச்சை
தடுத்து விட்ட பிறகு
என்னடி உனக்கு இன்னும் பார்வை?
என்றாவது நின்றுபோன கதிர்களுக்கு
நீ வருத்தப்படுவாய்..
அன்று நான் மேகத்திலிருந்து
உன்னைக் கண்டு
அழுவதா, சிரிப்பதா என்று
யோசிப்பேன்..


விழிகளில் அடக்கிக்கொண்ட
உன் மனதினை
ஒரு முறையாவது காட்டு.
உன்னால் ஒரு ஜென்மம் பிழைக்கட்டும்.


தொடரும் இந்த புலம்பல்கள்.....