வெளியே பனி மோசமாக வீசிக்கொண்டு இருந்த்து. சுந்தரம் தனது கம்பளிப் போர்வையை இறுக்கிப் போர்த்தவாறே யன்னல் அருகில் வந்து ரொறண்டோ நகரத்தை நோட்டம் இட்டார். மறை ஒன்று செல்சியஸ் வெப்பத்தில் நகரம் விறைத்துப்போய் இருந்தது. சுந்தரம் இருக்கும் தொடர்மாடியில் இருபதாம் அடுக்கில் சுந்தரத்தின் வீடு. யன்னல் அருகில் வந்து பார்த்தால் டொறண்டோ நகரின் பளபளக்கும் டவுன்டவுன் அழகாகக் காட்சியளிக்கும்.
எங்கும் பனிக் குவியல்களாக இருந்தன. வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து இருந்தது. ஆனாலும் வாகனங்கள் தமது ஒழுங்கையிலயே முன்னே இருக்கும் வாகனம் செல்லும் வரை பொறுமையாகக் காத்துக் கிடந்தது. சுந்தரம் முகத்தில் படர்ந்திருந்த கவலை ரேகைகளின் மத்தியிலும் மெல்லியதாய் ஒரு புன்முருவல்
“கொழும்பா இருந்தால் இந்நேரம் ஒரு வாகனத்துக்கு மேல மற்ற வாகனம் ஏத்தி ஓட்டியிருப்பாங்கள்” சுந்தரம் மனதினுள்.
“இன்றுடன் 10 நாள் ஆகுது விசயம் அறிஞ்சு. எத்தனைதரம் கோல் எடுத்தாலும் கதைக்கினம் இல்லையே” நினைக்கும் போதே சுந்தரம் கண்களில் இருந்து இரண்டுதுளிக் கண்ணீர் கன்னம் வழியே வழிந்தோடி நாடியில் முத்தமிட்டுக்கொண்டன. முத்தமிட்ட கண்ணீர் துளிகள் அப்படியே சங்கமித்து கார்பெட் நிலத்தில் வீழ்ந்து அப்படியே காணாமல் போயின.
சுந்தரம் குளிரிற்கு சிவந்திருந்த தன் மூக்கை கசக்கிக்கொண்டு மெல்ல முனகியவாறே வீட்டின் மண்டபத்தினுள்ளே நுழைந்து யாரும் இல்லாமல் தன் போக்கிற்கு தனியே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்தார். “டப்” என்ற சத்தத்துடன் தொலைக்காட்சி வெட்கப்பட்ட பெண்போலத் தன் திரையை மறைத்துக்கொண்டது.
சுந்தரம் தொலைக்காட்சி அருகே இருந்த தனது கைத்தொலைபேசியை எடுத்து இறுதியாக அழைத்த இலக்கங்களைப் பெரு மூச்சுவிட்டவாறே பார்த்தார்.
“கடைசியில பிள்ளை குட்டிகள் எல்லாம் கையை விரிச்சுட்டுதுகள். அப்படி அதுகள் செஞ்சதிலையும் ஞாயம் இருக்குதுதானே. ஈஸ்வரா கெதியாக் கூப்பிடு என்னைய உன்னோட” மனதினுள் விசும்பத் தொடங்கினார் சுந்தரம். கையில் இருந்த கைத் தொலைபேசியை மேசைமேல் வைத்துவிட்டு கூரையைப் பார்த்தவாறே சில நிமிடங்கள் இருந்தார்.
ஏதோ நினைவு வந்தவராக சுந்தரம் மறுபடியும் தொலைபேசியை எடுத்து வேந்தன் என்று இருந்த இலக்கத்திற்கு அழைப்பை எடுத்தார். மறுமுனையில் தொலைபேசி அடிக்கத் தொடங்கி ஒரு குரல் பதில் சொன்னது.
“ஹல்லோ…” என்றது வேந்தனின் குரல்.
‘நான் சுந்தரம் கதைக்கிறன்’
“எந்த சுந்தரம்?” வேந்தன்
“இந்துக்கல்லூரியில படிச்சன் உன்னோட.. நினைவிருக்கா? ஒண்டா ஊர் எல்லாம் சுத்தியிருக்கம் மச்சான். பிறகு ரொறண்டோ வந்திட்டன்” என்றார் சுந்தரம்.
“ஓம் ஓம் ஞாபகம் இருக்கு. இப்ப எதுக்கு எனக்கு கோல் பண்ணுறாய்? நீ செய்திட்டுப் போன வேலையால உன்னோட சேர்ந்து திரிந்த என்ட பெயரும்தான் திருகோணமலையில கெட்டுப் போச்சு. தயவு செய்து கோல் எடுக்காதை. எக்கேடாவது கெட்டுப்போ” என்றான் வேந்தன்.
“இப்ப விசயம் கொஞ்சம் வித்தியாசம். நான் இலங்கைக்கு வரவேணும். ஏதாவது வீடு ஒண்டு அங்க எடுத்துத்தருவியா மச்சான்?” என்று கேட்டார் சுந்தரம்.
“ஐயோ!! சாமி!! ஆளவுடுப்பா. உன்னால பட்டது போதும்”
“மச்சான்… ஹல்லோ ஹல்லோ…. ஹல்லோ…” மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த்து.
நண்பனும் கைவிட்ட நிலையில் சுந்தரம் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். மெல்ல மெல்ல அவர் நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணமானது.
அப்போது சுந்தரத்திற்கு 27 வயது. திருமணத்திற்கு சரியான வயது என அனைவரும் கூறிப் பெண்பார்க்கத் தொடங்கினர். சுந்தரம் திருகோணமலை இந்துக்கல்லூரியில் உயர்தரம் முடித்து இப்போது கனடாவின் டொறன்டோ பல்கலைக்கழகத்தில் வைத்தியகலாநிதிப்படத்திற்காகப் படித்துக்கொண்டு இருக்கின்றான்.
வீட்டில் இருந்து சுந்தரத்திற்கு அடிக்கடி அழைப்பு எடுத்து கலியாணப் பேச்சுகளை வீட்டார் சொன்னதும் சுந்தரம் தனக்கு அப்படியாக எதுவும் வேண்டாம் என்று பலதடவை அடித்துக் கூறினான். இருந்தாலும் தாயார் தினமும் கண்ணீரும் கம்பலையுமாக தொல்லை தரவே சுந்தரம் அரை மனதாகத் திருமணத்திற்குச் சம்மதித்தான்.
பெற்றோர் முன்னிலையில் மல்லிகாவிற்கும் சுந்தரத்திற்கும் திருமணம் உறவினர் புடைசூழ ஜாம் ஜாம் என்று நடைபெற்றது. பெண்வீட்டார் மாப்பிள்ளையைப் பற்றி கேட்டபோது சுந்தரத்தின் உயிர் நண்பன் வேந்தன் சுந்தரம் போன்ற மாப்பிள்ளை உங்களுக்கு கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று சொல்லி பெண்வீட்டார் சம்மதத்தை இலகுவில் வாங்கிவிட்டான். வேந்தன் வாயிலிருந்து வந்த இந்த வார்த்தைகள் சில வருடங்களின் பின்னர் அவனுக்குப் பெரும் சங்கடத்தைக் கொடுக்கப் போகின்றது என்பது அப்போது வேந்தனுக்குத் தெரிந்திருக்கவாய்ப்பில்லை.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே சுந்தரத்திற்கு மேலைத்தேய வாழ்க்கையின் மோகமும் வாழ்க்கை முறையும் தன்னை நோக்கி வா வா என்று கம்பளம் விரித்து அழைக்கத் தொடங்கியது. திருமணமும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கைகளும் அவனுக்குப் பிடிக்கவில்லை. தினமும் மல்லிகாவுடன் சண்டை. ஒரு வருடம் மணவாழ்க்கை முடியும் தருவாயில் அவர்கள் தாம்பத்தியத்தின் பேறாய் மல்லிகா கருவுற்றுஇருந்தாள். சுந்தரம் அக்காலத்திலேயே வாழ்வின் மிகப்பெரிய முடிவொன்றை யாரும் எதிர்பாரா நேரத்தில் தனியே திட்டமிட்டு செயற்படுத்தினான்.
வீட்டில் நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா செல்வதாகச் சொல்லிவிட்டு மீளக் கனடா வந்துசேர்ந்துவிட்டான். வந்தாரை வாழவைக்கும் டொறண்டோவும் சுந்தரத்தை மீள அணைத்துக்கொண்டது. வீட்டாருடன், மனைவி மக்களுடன் இருந்த தொடர்புகளை சுந்தரம் விட்டு எறிந்தான். மனம் போன போக்கில் வாழ்க்கையை நடத்தினான். அவன் படிப்பு மட்டும் கைநிறைய பணத்தை வாரி இறைக்கவே வாழ்கை பற்றிய கவலை ஏதும் இல்லாமல் வாழ்க்கையை இன்பமாகக் கடத்தினான்.
பழைய நினைவுகளில் இருந்து மீண்ட சுந்தரம் சுதாகரித்து எழுந்துகொண்டே மூலையில் இருந்த அலுமாரியை நோக்கி நடக்கத் தொடங்கினார். அலுமாரியின் கதவைத் திறந்து உள்ளேயிருந்து ஒரு கோப்புறையை எடுத்தார். அதனுள்ளே பல மருத்துவச் சான்றிதள்கள் இருந்தன.
அதில் ஒரு பத்திரத்தில் “Diagnosed with cancer” (கான்சர் இருப்பது அறியப்பட்டுள்ளது) என இருந்த்து. அதைப் பார்த்த மாத்திரத்தில் ஏதோ வெறி கொண்டவர் போல சுந்தரம் அந்தக் கோப்பையும் பத்திரங்களையும் தூக்கி எறிந்தார்.
இன்னுமொரு பத்திரத்தை எடுத்து அதை நிரப்பி நஷனல் பாங் ஒப் கனடா என விலாசமிடப்பட்ட உறையினுள் இட்டார்.
சுந்தரம் எதையும் இரசிக்கும் மனநிலையில் இல்லாமல் இருந்தாலும் மறுபடியும் வந்து கதிரையில் உட்கார்ந்து ரொன்டோ நகரின் அழகை பனி மூட்டத்தினூடே பார்த்தார்.
---------------------------------------------------------------------
இரண்டு வாரங்களின் பின்னர்
மல்லிகா வீட்டிற்கு தபால்காரன் இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தான்.
அன்புடையீர்,
உங்கள் கணக்கிற்கு கனடா தேசிய வங்கியில் இருந்து 20 மில்லியன் ரூபா பணம் வந்து சேர்ந்துள்ளது.
இதற்கான உள்நாட்டு வரி மற்றும் மேலதிக விடையங்களை ஆலோசிக்க அண்மையில் உள்ள வங்கிக்கிளைக்கு வருகைதரவும்
அன்புடன்,
தேசிய சேமிப்பு வங்கி
என இருந்தது அந்தக் கடிதம்.
-----------------------
மயூவின் குறிப்பு : கிட்டத்தட்ட 4 வருடங்களின் பின்னர் ஒரு கதை எழுதியுள்ளேன். டச்சுவிட்டுப் போச்சோ தெரியவில்லை. மோசமாக இருந்தால் மன்னித்து அருளவும்![]()
Bookmarks