அப்பிள் நிறுவனம் ஐபோன் மூலம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கூகிள் அன்ரொயிட் மென்பொருளை வெளியிட்டது. உடனே கடுப்பாகிப் போனார் ஸ்டீவி ஜொப்ஸ். கூகிள் தமது பிரதான உற்பத்திப் பொருளைக் குறி வைப்பதாகக் கூறி கூச்சலிட்டார். கூகிள் நடத்துனர் சபையிலிருந்தும் வெளியேறினார். கூகிள் அப்பிள் மைக்ரோசாப்டிற்கு எதிராக செயற்பட்ட காலம் போய் கூகிளும் அப்பிளும் மோதத் தொடங்கியது இந்த நிகழ்வின் பின்னர்தான்.

மற்றைய பல கைபேசி இயங்கு தளங்கள் போல அன்ரொயிட்டிற்கு இது வரை இயல்பிருப்பான தமிழ் ஆதரவு இல்லை. ஆனால் பிந்தைய ஐ.ஓஸ் இயங்கு தளங்களில் தமிழ் ஆதரவு இருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. நீண்டகாலமாக இந்திய மொழி ஆர்வலர்கள் பல்வேறு வழு அறிக்கைகள் கூச்சல்கள் இட்டாலும் கூகிள் அசண்டை பண்ணவே இல்லை. வழு அறிக்கையில் உள்ள பின்னூட்டங்கள் நிறைந்து கொண்டே செல்கின்றன ஆனால் கூகிள் இது பற்றி அவ்வளவாக அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை.

அந்திரொயிட் இயங்கு தளம் ஒரு திறந்த மூல மென்பொருள். வேறு நிறுவனங்கள் இந்த மென் பொருளை எடுத்து தமது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. குறிப்பாக சாம்சுங், எச்.டி.சி, சொனி எரிக்சன், எல்.ஜி, மோட்டராலா போன்ற நிறுவனங்கள் இந்த அன்ரொயிட் மென்பொருளை எடுத்து தமது கைத் தொலைபேசிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து கைபேசிகளில் நிறுவி விற்கின்றார்கள். தற்போது மோட்டரோலா நிறுவனத்தை கூகிள் தாமே வாங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு கைத் தொலைபேசி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அன்ரொயின் மென்பொருள் மீது கூகிள் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதுவரை அன்ரொயிட்டில் தமிழ் ஆதரவை ஏற்படுத்த இரண்டு படிமுறை கொண்ட ஒரு செயலைச் செய்ய வேண்டியிருக்கின்றது.

  1. தொலைபேசியை ரூட் செய்வது.
  2. தமிழ் எழுத்துருவை /system/fonts கோப்பினுள் இடுவது


மேலே குறிப்பிட்ட செயற்பாடு இலகுவாக கடைநிலைப் பயனர்களால் செய்ய முடிவதில்லை. தொலைபேசியில் இந்த தமிழ் எழுத்துருவை நிறுவ முயன்று தமது தொலைபேசிகளின் மென்பொருளை நாசமாக்கியவர்களும் உண்டு.

சரி அனைத்தையும் தாண்டி சிறப்பாக தமிழ் எழுத்துருவை நிறுவி விட்டாலும் தமிழ் எழுத்துக்கள் சிதைந்து காணப்படும். சில பல வருடங்களிற்கு முன்னால் பயர்பொக்சில் சிதைந்த எழுத்துக்களைப் பார்த்த ஞாபகம் இருக்கின்றதா?? அதே நிலைதான் இங்கேயும். எழுத்துரு இருந்தாலும் கூகிள் அன்ரொயிட் இயங்கு தளத்திற்கு தமிழ் எழுத்துக்களை ரென்டரிங் செய்யத் தெரியாது.

கூகிளின் அன்ரொயிட் தொலைபேசியில் ஹார்வ்பஸ் எனும் ரென்டரிங் இயந்திரம் பாவிக்கப்படுகின்றது. புதிய பதிப்புகளில் இந்திய மொழிகள் பயன்பட்டாலும் அன்ரொயிடில் ஏன் இன்னமும் இது செயற்படவில்லை என்று தெரியவில்லை.



வாசிக்கவே இத்தனை திண்டாட்டம் என்றால் தமிழில் தட்டச்சிட எத்தனை திண்டாட்டமாக இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். அதுதான் இல்லை. ஜெகதீசனின் தமிழ் விசை செயலி மூலம் தமிழில் தட்டச்சிடலாம். தட்டச்சிடும் எழுத்துக்கள் பெட்டி பெட்டியாகத் தெரிந்தாலும் ஒரு முன்னோட்டப் பெட்டியில் தமிழ் எழுத்துக்களை அழகாகக் காட்டுகின்றார்கள்.

அண்மையில் நான் Samsung Galaxy Ace எனும் சாம்சுங் இரக அன்ரொயிட் தொலைபேசியை வாங்கிக் கொண்டேன். இந்த தொலைபேசியில் இயல்பிருப்பாக அன்ரொயிட் பதிப்பு 2.2 நிறுவப்பட்டுள்ளது. வழமை போல தமிழ் ஆதரவு இல்லை. தமிழ் தளங்களை வாசிக்க ஒபேரா மினியைப் பயன்படுத்தினேன். செட் உலாவியும் சில காரணங்களால் சரிவரச் செயற்படவில்லை. என்ன கொடுமை சரவணா என்று இருந்த போது அன்ரொயிட் 2.3.4 க்கான பதிப்பு தரமுயர்த்தல் மென்பொருளை சாம்சுங் வெளியிட்டது. எனது தொலைபேசிக்கான இந்த மென்பொருளை நிறுவி உலாவியில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தால் ஒரே ஆச்சர்யம்.



ஆமாம் 2.3.4 பதிப்பை நிறுவிய பின்னர் இயல்பிருப்பு தமிழ் ஆதரவு இருந்தது. இனி தமிழ் மொழியில் செயலிகளை நேரடியாக தயாரிக்கலாம். TSCII, பாமினி எழுத்துருக்களைப் பயன்படுத்தி சுத்தி மூக்கத் தொட வேண்டிய தேவை இல்லை.


Samsung Galaxy வகைத் தொலைபேசிகளில் இந்திய மொழி ஆதரவு இப்போது கிடைப்பதாகத் தெரிகின்றது. தமிழ் எழுத்துரு இருப்பதுடன் தமிழை சிதைக்காமல் அழகாகக் காட்டுகின்றது.

நிற்க, இந்த இயல்பிருப்பு தமிழ் ஆதரவு சில (கவனிக்கவும்: சில மட்டுமே) சாம்சுங், சொனி எரிக்சன், எல்.ஜி தொலைபேசிகளிலேயே அவதானிக்கப்பட்டுள்ளது. முன்பே குறிப்பிட்டபடி அன்ரொயிட் திறந்த மூலம் மென்பொருள் என்பதால், அன்ரொயிட் மூலத்தை எடுத்து இந்த நிறுவனங்கள் இந்திய மொழிகளிற்கான ஆதரவை வழங்கி உள்ளன.

சாம்சுங்கால் செய்ய முடியுமென்றால் கூகிளால் நிச்சயமாக ஒரு இன்ஜினியரை அமர்த்தி ஒரு மாதத்திற்குள் இந்த வேலையைச் செய்து முடிக்க முடியும். இந்திய மொழிகள் மீதான குறிப்பாக பிராந்திய மொழிகள் மீதான வழமையான அசண்டையீனத்தையே இது காட்டுகின்றது.