Results 1 to 12 of 12

Thread: நியன்டதாலின் காதல் -சிறுகதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    நியன்டதாலின் காதல் -சிறுகதை

    இன்றிலிருந்து சுமார் 28,000 ஆண்டுகள் பின்னோக்கிச் வரலாறு திரும்பிப் பார்க்கின்றது. தற்போதைய பிரான்சு, ஸ்பெயின் இடையில் உள்ள அந்தப் பரந்த சமவெளியில் ஒரு உருவம் நிலை குலைந்து நிலத்தில் குப்புறப் படுத்துக்கிடக்கின்றது.. அதுதான் நம் கதையின் நாயகன். ஒரு நியன்டதால் இனத்தை சேர்ந்த அரைமனிதன்.

    ஓ..ஜீ!!!! அந்த உருவத்தின் வாயில் இருந்து அடக்க முடியாத வேதனையுடன் பிளிரல் ஒன்று மேல் எழும்புகின்றது. பின்னர் அது மெல்ல மெல்ல அடங்கி முனகல் ஆகின்றது. அதில் அவன் இயலாமையும், வெறுப்பும், இழப்பும் கலந்து ஒலிக்கின்றது. மார்பில் ஆழமாக ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து குருதி இன்னமும் கசிந்துகொண்டே இருக்கின்றது.


    இது எங்கள் பூமி.. நாங்கள் வேட்டையாடிப் பிழைத்த பூமி.. மந்தைகளையும், குதிரைகளையும், மான்களையும் நாம் வேட்டையாடிய பூமி. இடையில் வந்தவர்கள் எம்மை அழிப்பதா? அவன் மனது பதைபதைத்தது. வேதனை மிகுதியில் மெல்ல மெல்ல வார்த்தைகள் அடங்கி அரை மயக்கத்தின் பிடியில் மாட்டிவிடுகின்றான். நினைவுகள் மெல்ல மெல்ல சுழல்கின்றன.


    பச்சிளம் புல்வெளியினூடே அழகிய நியன்டதால் மங்கை ஓடிவருகின்றாள். கையிலே அன்றலர்ந்த சூரியகாந்திப் பூ. அவள் முகத்தின் முன்னே அந்தச் சூரிய காந்திப்பூ களையிளந்துவிடுகின்றது. அவள் கூந்தல் காற்றிலே அங்குமிங்குமாய் அலைபாய்ந்துகொண்டு இருந்தது. அலை பாயும் அந்தக் கூந்தல் அவளுக்கு மேலும் அழகு சேர்ப்பதை கா தன் கண்களால் இரசித்துச் சிரித்துக் கொண்டு இருந்தான்.


    ஏய்.. கா..!!! என்ன? கண்களால் தன் காதலனைப் பார்த்து கேள்வி கேட்டாள் ஜீ. ஏக்கமும் ஏளனமும் அவள் கண்களில் தெறிப்பதை புரியாதது போல புன்னகை பூத்தான் கா.


    இவர்கள் இருவரும் இந்த சமவெளியில்தான் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். இருவரும் வெவ்வேறு நியன்டதால் குழுவைச் சேர்ந்தவர்கள். காதல் யாரைத்தான் விட்டது. குழு குழுவாக பரந்த நிலப்பரப்பினூடே இரையைத் தேடி அலைந்து திரிந்த நியன்டதால் மக்கள் இடையிடையே சந்தித்து உறவு பாராட்டுவதும் மோதிக்கொள்வதும் இந்தப் பகுதியில் சர்வசாதாரணமாக நடந்துவருகின்றது. ஜீயைச் சந்தித்த கா அவளைக் கவர்ந்து வந்து தன்னுடைய குழுவுடன் சேர்த்துக்கொண்டான். அத்துடன் குழுவில் உள்ள மற்ற ஆண்கள் யாரும் அவளை அண்டாமல் கவனமாகவும் கவனித்துக்கொண்டான்.


    சில காலங்கள் இருவரும் எந்தப் பிரைச்சனையும் இல்லாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தனர். ஆனாலும் இவர்கள் சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.


    கா ஒரு நாள் காலை தன் குழுவுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். தான் கடைசியாகத் தங்கியிருந்த குகையில் ஜீ மற்றும் ஏனைய நங்கைகளை விட்டுவிட்டு கா தன் கூட்டத்துடன் வேட்டைக்குப் புறப்பட்டான். அவன் கையில் மரப் பிடியுடன் அமைந்த கோடாலி இருந்தது. கோடாலியின் வெட்டும் பகுதி கல்லினால் செய்யப்பட்டிருந்தது. அதே போல அவன் நண்பர்கள் ஈட்டி போன்ற அமைப்பைத் தம் கையில் வைத்திருந்தனர்.


    நேற்று இவர்கள் வேட்டையாடிய காட்டு எருமையின் எலும்புகள் குகை வாயிலில் கிடந்தது. அவற்றை ஒரு தடவை பார்த்து சிரித்துக்கொண்ட கா சத்தமிட்டு தன் நண்பர்களுடன் பேசத் தொடங்கினான். வார்த்தைகளை விட அங்கங்களே அதிகமாகப் பேசின.

    நேற்று காட்டு எருமை, இன்று மான் அல்லது குதிரையை வேட்டையாட வேண்டும் அவன் பேச்சின் பின்னர் எல்லோரும் தம் கையில் இருந்த ஆயுதங்களை உயர்த்தி சத்தம் இட்டனர்.

    பின்னே திரும்பிய கா தன் அருமை ஜீயைப் பார்த்து தீ மூட்டத் தயாராகுமாறு கூறிவிட்டுச் செல்லத் தொடங்கினான். அன்றுதான் கா தன் வாழ்க்கையில் முதல் தடவையாக அந்த வித்தியாசமான விலங்குகளைக் கூட்டமாகப் பார்த்தான். தன்னைப் போலவே உருவமாக இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் முகங்கள் தட்டையாக இருந்தது. உயரத்திலே கொஞ்சம் அதிக உயரமாக இருந்தார்கள்.


    யார் இவர்கள்? எம் பூமியில் இவர்களுக்கு என்ன வேலை?. காவின் மூளையைக் கேள்விகள் துளைக்கத் தொடங்கின. உடனடியாக அவர்களைத் தாக்குவது என்று கா முடிவு செய்தான். தன் கூட்டத்தினருக்கு சைகையால் பதில் சொல்லிவிட்டு எல்லோரும் ஓ.!!!!!!!!!!!!!!!!!!!!!! என்று கூக்குரல் இட்டவாறே தங்கள் பூமியுள் புதிதாக கண்ட அந்த விலங்குகளை நோக்கி ஓடத் தொடங்கினர்.

    அருகே சென்றதும்தான் அவர்களுக்கு புரிந்தது. தாங்கள் மோதிக்கொண்டிருப்பது தங்களிலும் பார்க்க கொஞ்சம் புத்திசாதூர்யம் கூடியதும், பலம் கொண்டதுமான மனிதர்களுடன் என்பது.

    இரு தரப்பும் மோசமாக மோதிக்கொண்டனர். மனிதர்கள் கொஞ்சம் முன்னேற்றமான ஆயுதங்களினால் ஆக்ரோஷமாகத் தாக்கினர்.

    ஆயினும் கா தரப்பில் அதிகமான நபர்கள் இருந்ததினால் காயப்பட்ட தம் இனத்தவரைவிட்டுவிட்டு மனிதர்கள் ஓடத் தொடங்கினர்.

    கா தன் கையில் இருந்த கோடாரியை உயற்றி.. வெறியுடன் உச்ச ஸ்தாயியில் சத்தம் இட்டான். அவனைத் தொடர்ந்து அவன் குழுவினரும் தம் ஆயுதங்களை உயர்த்திச் சத்தமிட்டனர். இவ்வாறாக சில ஆண்டுகள் மனிதர்களும் நியன்டதாலும் மோதிக்கொண்டு இருந்தனர். சுமார் 10000 ஆண்டுகள் நியன்டதாலும் மனிதர்களும் ஒரே காலப்பகுதியில் ஐரோப்பாவில் இருந்துள்ளனர்.


    கடைசியாக ஒரு நாள் வேட்டையாடிவிட்டு காவும் குழுவினரும் தாங்கள் கடைசியாக அமைத்துத் தங்கியிருந்த குடில் நோக்கி வருகின்றனர். தூரத்திலேயே அவர்களின் குடிலில் இருந்து புகை மண்டலமாக எழும்புவது தெரிந்தது.


    ஜீ!! காவின் வாயில் இருந்து மீண்டும் பிளிரல். வேட்டையாடும் போது அந்த றெயின்டீரினால் காலில் ஏற்பட்ட காயத்தையும் அதன் ரணத்தையும மறந்து தங்களின் குடிலை நோக்கி ஓடத் தொடங்கினான் ஜீ.


    அங்கே சென்ற போது அனைத்தும் முடிந்திருந்தது. அவர்களின் குடிலில் இருந்த பெண்கள் யாவரும் கொலை செய்யப்பட்டு குடிலில் போட்டு எரிக்கப்பட்டிருந்தார்கள். நெருப்பாக எரிந்துகொண்டிருந்த காவிற்கு கண்முண்னே தெரிந்த நெருப்பு நெருப்பாகவே புரியவில்லை. எரிந்த குடிலினுள்ளே புகுந்து தன் காதலி ஜீயை மட்டும் தன் கைகளிலே தூக்கிவந்தான்.


    கா.. கா.. மனிதர்கள்.. அத்துடன் அந்த முனகலுடன் அவனருமைக் காதலியின் ஆத்மா அவளுடல் விட்டுப் பிரிந்துவிடுகின்றது. காவின் குழுவினருக்கு அன்றயதினம் ஒரு கறுப்பு நாள். பரந்து வாழ்ந்து வந்த நியன்டதால் இனத்தினர் பல்வேறு காரணங்களால் அழியத்தொடங்கியிருந்தனர். அவற்றில் மனிதர்களின் தாக்குதலும் ஒரு காரணம்.


    அவளின் உடலை தூக்கிச் சென்று அருகில் இருந்த பசுந்தரையில் அடக்கம் செய்தான் கா. எந்தக் காதலனுக்கும் வரக்கூடாத பயங்கரமான நிலை. தன் காதலியை தானே அடக்கம் செய்வதா?. நினைக்கயிலேயே ரணமாக வலிக்கிறதல்லவா?


    காவின் குழுவினர் பழிக்குப் பழி வாங்குவது என்று முடிவு செய்தனர். காவிற்குத் தெரியும் எங்கே மனிதர்கள் முகாமிட்டு வாழ்கின்றார்கள் என்பது. கா முடிவு செய்துவிட்டான், இனிப் பழிக்குப் பழிதான்.


    மறுநான் நியன்டதால் குழு மனிதர்களின் முகாமை நோக்கி நகர்கின்றன. அவர்களுக்குத் தெரியும் இதில் இருந்து தாம் மீண்டு வரப்போவதில்லை என்று. ஆனாலும் பழிவேண்ட வேண்டும் குறைந்தது ஒரு மனிதனது குரல்வளையையாவது பிடுங்க வேண்டும் என்பதில் அனைவரும் குறியாக இருந்தனர்.


    மெல்ல மெல்ல முகாமை நோக்கி நகரத் தொடங்கினர். இரவு நேரம் பால் நிலவொளியில் மனிதர்களின் முகாம் கண்முன்னே விரியத் தொடங்கியது. கிட்ட நெருங்க நெருங்க இவர்களிடம் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. முகாமை அடைந்ததும் தம் சம்ஹார வேலையைத் தொடங்கினர் நியன்டதால் இனத்தின் கடைசி மைந்தர்கள்.


    நரமாமிசம் உண்ணும் அழுக்கர்கள் கத்தியவாறே ஒரு மனிதன் ஓடினான். மறு நிமிடம் காவின் கையில் இருந்து பறந்த கோடாரி அவன் இதயத்தை துளைத்து அவனை அமைதியாக்கியது. ஆனாலும் அவன் குரல் கேட்டு பல மனிதர்கள் தங்கள் ஆயுதங்களைத் தூக்கியவாறு வெளியே வந்தனர். மனிதர்களுக்கும் நியன்டதாலுக்குமான இறுதி யுத்தம் ஆரம்பமாகியது.


    இரு தரப்பும் மோசமாக மோதிக்கொண்டனர். அந்தப் பிரதேசம் எங்கும் பெண்களின் அலறலும், ஆண்களின் உறுமல்களும் மாறி மாறி யும் ஒன்று சேரவும் ஒலித்துக்கொண்டிருந்தன. இரு தரப்பிலும் பலர் காயம் அடைகின்றனர். ஆனாலும் 10 நிமிடங்களில் நிலமை மாறத் தொடங்குகின்றது. நியன்டதால் மைந்தர்கள் ஒவ்வெருத்தராக வீழத் தொடங்கினர். கா தன் கண்முன்னே மடியும் தன் சகோதரர்களைப் பார்க்கின்றான். வேதனையும், திருப்பிதியும் ஒன்றுசேர்ந்த ஒரு உணர்வு அவன் இதயம் எங்கும். இதே வேளை எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு கோடாலி காவின் மார்பில் ஆழமாகப் பாய்கின்றது.


    கண்கள் இருள்கின்றன. உதடுகள் ஏதோ முணு முணுக்கின்றன.. காவின் கால்கள் தள்ளாடிவாறே நடக்கின்றன. அருகில் இருந்த ஆற்றில் அப்படியெ வீழ்கின்றான் கா.


    சிறிது நேரத்தில் கண்விழிக்கின்றான் கா. ஆற்றுவெள்ளத்தில் அடிபட்டு தன் காதலியை முதலில் கண்ட அதே சமவெளியில் குற்றுயிராய்க்கிடக்கின்றான். ஓ..ஜீ!!!! அந்த உருவத்தின் வாயில் இருந்து அடக்க முடியாத வேதனையுடன் பிளிரல் ஒன்று மேல் எழும்புகின்றது. பின்னர் அது மெல்ல மெல்ல அடங்கி முனகல் ஆகின்றது. அதில் அவன் இயலாமையும், வெறுப்பும், இழப்பும் கலந்து ஒலிக்கின்றது. மார்பில் ஆழமாக ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து குருதி கசிந்து கொண்டு இருந்தது.


    அவனுக்குத் தெரியும் தான் தப்பிப்பிழைக்கப் போவதில்லை என்பது. கண்களைத் திறந்து சூரியனைப் பார்த்து ஒரு தடவை தன் வணக்கத்தை செலுத்துகின்றான். சூரியனை இவன் பரம்பரையினர் பக்தியுடன் பார்த்து வந்தனர். அவனால் கண்களைத் திறக்கும் வலிமைகூட இப்போது இல்லை. கண்களை மூடியதும் அவன் கண்முன்னே ஜீ.. நினைவில் இனி அவளுடன் தான் இவன் வாழப் போகின்றான்.


    ஜீ.. அவன் உதடுகள் கடைசியாக உச்சரித்த வார்த்தை. அத்துடன் கடைசி நியன்டதால் மனிதனின் உயிரும் இந்தப் பூமித்தாயின் வயிற்றில் இருந்து பிரிந்தது. தாங்காத பூமித்தாய் மழையாகத் தன் கண்ணீரை தன் மைந்தன் மீது சொரிந்தாள். அவனின் இரத்தம் மழை நீரில் கரைந்து மண்ணுடன் இரண்டறக் கலந்தது.

    பி.கு: இதைக் கதை என்பதை விட கதை மூலம் நம் மக்களுக்கு அறிவியல் உண்மைகளை அறிவிக்க முயன்றுள்ளேன். இங்கு நான் பயன்படுத்திய தகவல்கள் பெரும்பாலும் நியன்டதாலின் வாழ்க்கை முறையைப் பின்பற்றியதே. உதாரணமாக அவர்களின் ஆயுதங்கள், உணவு முறை, மனிதருடனான சண்டை, வாழ்க்கை அமைப்பு, வாழிடம் என்பன. இனி உங்கள் பின்னூட்ட நேரம்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மயூரேசா... முதலில் சபாஷ்.. நல்ல காதல் கதை. அதிலும் குரங்குகளின் காதல் .. ஆனால் படிக்க படிக்க எனக்கென்னவோ உமது பழைய கதைகளிலிருந்து தள்ளி இருப்பதை உணர்கிறேன். சிறுவர்களுக்கு ஏற்ற கதையோ என்றூ தோன்றுகிறது. அதோடு அறிந்த அறிவியல் உண்மைகளை வைத்து என்னப்பா செய்ய/? ஏதாகிலும் அறியாத உண்மைகளை வைத்து கதை எழுதுங்க.. நிச்சயம் ஜயம்.

    அதென்ன கா? ஜீ? ஜூ ஜே னு பேரு.. இருந்தாலும் ரசிக்க வைக்குதுப்பா.

    மக்களே! பின்னூட்டம் ஏன் போடவில்லை?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மயூ நிதானமாகப் படித்துவிட்டுப் பின்னூட்டம் போடுகிறேனே!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    அப்பாடியோவ்...!!!
    கடைசியா ஒரு பயல் பின்னூட்டம் போட்டுட்டாருப்பா...!!! இதில் அனைத்தும் நீங்க அறிந்த தகவல்களா?? அவர்கள் வேட்டையாடும் மிருகம், பயன்படுத்தும் ஆயுதம், உருவ அமைப்பு என்பன.. அப்படியானால் நீங்க இருக்க வேண்டிய இடமே வேற.. அதாவது.. பிரான்சு.. ஸ்பெயின் பாடரில...

    நியன்டதாலிடம் சரியான பேச்சு முறை இருந்ததா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை சிலர் இருந்தது என்கிறார்கள் சிலர் இல்லை என்கிறார்கள். அதனால்தான் கா கீ கு என்று பெயர் வைத்தேன்...!!!!!

    சிறுவர் கதை என்பதை விட.. வித்தியாசமாக ஏதாவது எழுத விழைகின்றேன். வலைப்பதிவில் இந்தக் கதை தனக்கு வொல்கா முதல் கங்கை வரை புத்தகத்தை ஞாபகப் படுத்தியதாக ஒருவர் பின்னூட்டம் இட்டார்!!!

    இப்படியான கதைகளுக்கு அவ்வளவு ஆதரவு கிடைக்காது என்று எதிர்பார்த்ததுதான்.. என்றாலும் இப்படியான கதைகளை எழுதி உங்களை வதைப்பேன் என்பதை இங்கே வருத்தத்துடன் அறிவித்துக்கொள்கின்றேன்.!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by ஓவியன் View Post
    மயூ நிதானமாகப் படித்துவிட்டுப் பின்னூட்டம் போடுகிறேனே!!
    நிதானமாக ஆற அமரவே பின்னூட்டம் போடுங்க...!!!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மயூ வித்தியாசமான கரு, வித்தியாசமான கதைக் களம், வேறுபட்ட கற்பனைகளென்று அமர்களப் படுத்திவிட்டீர்!.

    ஆதவன் சொன்ன மாதிரி இது உம்முடைய வழமையான பாணி இல்லை தான், ஆயினும் வேறுபட்ட இந்தக் கோணத்தில் இவ்வளவு திறமையாக எழுதியமை பெரிய விடயம். நியண்ட தாள் மனிதனும் காதலித்தான், அவனுக்கும் உணர்வுகளுண்டென்று வெளிக்காட்டியமையும் அதனை வெளிக்காட்டிய விதமும் அருமை.

    உம்முடைய முயற்சிக்கு என் பாராட்டுக்கள் (இதைக் கதை என்பதை விட கதை மூலம் நம் மக்களுக்கு அறிவியல் உண்மைகளை அறிவிக்க முயன்றுள்ளேன்). தொடர்ந்து இவ்வாறான வித்தியாசமான முயற்சிகளைத் தொடருங்கள் நான் ஆதரிக்கக் காத்திருக்கிறேன்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0
    இந்தப் பதிவை கதை என்ற ஒரு கோணத்திலேயே படிக்க முடியவில்லை...

    இதற்க்காக நிறைய தகவல்களை திரட்டியுள்ளீர்கள் போல..


    பாதுகாப்பு உணர்சியும் பால் உணர்ச்சியும் (காதல் உனர்ச்சி மனிதன் பிற்காலத்தில் தன் வசதிக்காக ஏற்படுத்திக் கொண்டது) ஆதி மனிதனின் முதல் உணர்ச்சிகள்...அவற்றை செதுக்கியுள்ளீர்கள்..


    நன்று மயூரேசன்.
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உண் அல்லது
    உண்ணப்படுவாய்!

    உயிரியல் வேதம் இது...

    அழிக்கப்படாமல் போராடி நிலைப்பது = வாழ்க்கை!
    டார்வின் கொள்கை இது..

    அனுதாபம் தோன்றினாலும் ..
    எல்லாம் இயற்கையின் கையில் என
    ஆசுவாசப்படுத்திக்கொள்வதில்
    நியாந்தரதால் அழிவு முதல் இடத்தில்.


    அறிவியல் கதைகள் தமிழில் அதிகம் வர விரும்புபவன் நான்.
    அந்த வகையில் சிறப்புப்பாராட்டுகள் மயூரேசனுக்கு!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு நண்பரே,
    உண்மையிலேயே கதையின் ஆரம்பம் இராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய "வால்கா முதல் கங்கை வரை" என்ற கதையை நினைவுறுத்தியது. இருப்பினும் அந்தக்கதையின் பாதிப்பு அதிகம் இருப்பதால், இக்கதையின் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது. இவ்வகையான கதைகளை நீங்கள் படைக்க விரும்பினால் வால்கா முதல் கங்கை வரை புத்தகத்தை படியுங்கள். உங்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக விளங்கும். உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    Last edited by பாரதி; 24-06-2007 at 02:17 PM.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    முற்றிலும் புதியதான கோணத்தில் ஒரு கதை...
    எனக்கு உண்மையிலேயே ரசிப்பைத்தந்தது...
    மேலும், தொடருங்கள் நண்பரே...
    உண்மைகளுடன் கற்பனை கலக்கும்போது, ரசிப்புடன் உள்வாங்க முடிகிறது வரலாறை...
    பாராட்டுக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    புதியவர் பண்பட்டவர் sns's Avatar
    Join Date
    25 Apr 2007
    Location
    Dubai
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    26
    Uploads
    0
    ரொம்ப நல்ல கதை மேலும், தொடருங்கள் நண்பரே

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    சிறப்பாக இருந்தது மயூ
    வித்தியாசமான கோனம் எங்களை ஒர ஆங்கில படம பார்க்க வைத்துவிட்டீர்கள் நன்றி நண்பா தொடர்ந்து வித்தியாசமாக எழுத
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •