திருவாசகம் சிம்பொனி - இசைஞானி இளையராஜா (Extra copy)

pradeepkt

New member
திருவாசகம் சிம்பொனி - இசைஞானி இளையராஜா (Extra copy)

இந்தப் பதிப்பை எந்தப் பகுதியில் போடுவதென்று தெரியாமல், ஆன்மீகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். கண்காணிப்பாளர்கள், மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் விரும்பினால் வேறு எங்கும் மாற்றிக் கொள்ளலாம்.

தமிழால் இசையால் எந்தையை நுந்தையை சிந்தையை ஒருமைப் படுத்தித் தொழுத மாபெரும் காப்பியம் திருவாசகம். ?திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்? என்பது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை. அதற்கு இசை வடிவம் கொடுப்பதற்கு தன்னை மறக்கும் தன்மை, இறையிடம் முழுதாய்த் தன்னைக் கொடுக்கும் உண்மை அவசியம்.

அந்த உண்மையை உளமார உணர்ந்தே இசையமைத்திருக்கிறார் இளையராஜா. இசைஞானி என்று அன்று கலைஞர் கொடுத்த பட்டம் இன்று மீண்டும் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. அற்புதமான கிழக்கு ? மேற்கு இசை இணைப்பு, மிகச்சிறந்த பின்னணி இசைக் கோர்ப்பு, என்று அனைத்துமே மிக மிக அருமை. தமிழ்ப் பதிகங்களில் மேற்கத்திய இசை வடிவத்தைக் கச்சிதமாய்க் கலந்ததில் ஒன்றும் வியப்பேயில்லை.


எனக்கு சிம்பொனி வடிவம் என்றெல்லாம் அதிகமாய் கருத்துகள் இல்லை. எனவே ஒரு சாதாரண ரசிகனாய் என் பார்வையை உங்கள்முன் படைக்கிறேன். எந்தப் படைப்பும் நூறு விழுக்காடு சிறந்த படைப்பென்று சொல்லி விட இயலாது. மக்களைச் சென்றடையும் எந்த வடிவிற்கும் குற்றம் குறைகள் இருக்கும். இதை இசைஞானியும் உணர்ந்தே இருக்கிறார். இதற்கு எந்தப் பெருமையும் அந்த நாதனின் தாளைச் சென்றடையும் என்கிறார். இதோ என் பார்வை. இதற்கு மதிப்பென்று நான் எதையும் கொடுக்கவில்லை. அது மக்கள் பார்வைக்கு!


1. பூவார் சென்னி
பாடியவர்:இளையராஜா.
இந்தப் படைப்பின் பெரும்பாலான பாடல்களை இளையராஜாவே பாடி இருக்கிறார். அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. மெல்ல மேற்கத்திய தோல் வாத்தியங்களும் வயலின்களும் முழங்க மெல்ல
?பூவார் சென்னி? என்று இளையராஜாவின் குரல் எழும்போது அந்த உணர்விலும் உச்சரிப்பிலும் மெல்ல மெல்ல உள்ளாழ்கிறோம். அனைத்து கர்வங்களையும் அறுக்கும் இப்பதிகங்கள் எல்லா புகழும் புயங்கன் ஆள்வான் என்று முடியும் வரை கட்டிப் போடுகிறது இந்தப் பாடல். இந்தப் பாடலில் எந்த ஆங்கிலக் கலப்பும் இல்லை. பதம் பிரித்து இசை குரலை அமிழ்த்தாமல் ஒவ்வொரு வார்த்தையும் காதுகளை வந்தடைய தனிமையில் அமர்ந்து கேட்க இப்பாடல் கொள்ளை கொள்ளும் நம் மனதை!




2. பொல்லா வினையேன்
பாடியவர்:இளையராஜா, ராய் ஹார்கோர்ட்.
இந்தப் பாடல் இந்தத் தொகுப்பின் மிக நீண்ட பாடல். அங்கங்கு ஆங்கில ஆக்கங்கள் தலை காட்டுகின்றன.
?நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!? என்ற நமக்கெல்லாம் நன்கு அறிமுகமாகிய பதிகங்கள். குழுவினரின் குரல் கூடத் தங்கள் பங்கை அருமையாய்ச் செய்திருக்கின்றன. மெதுவாய்ப் பொல்லா வினையேன் என்று ஒரு குரலில் ஆரம்பிக்கும் பாடல் செல்லச் செல்ல முடிவில் நமச்சிவாயத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நம் குழுவினரும் சிம்பொனி குழுவினரும் முறையே குரலுயர்த்தி வாழ்த்த உடல் சிலிர்க்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பும் அத்தனைக் கச்சிதம். அதிகமாய்த் தோல் வாத்தியங்கள் தலை காட்டாது குழுவினரும் வயலினும் மட்டுமே வைத்துச் சிறந்திருக்கிறது இந்தப் பாடல். வசன நடையாய் நகரும் பாடல் சட்டென்று ஒரு மெல்லிசையாய் ?மாசற்ற சோதி! மலர்ந்த மலர்ச்சுடரே? என மலர்வது சுகம்! இது எனக்குப் பிடித்த ரகம்!




3. பூஏறு கோனும்
பாடியவர்:இளையராஜா, பவதாரிணி.
இந்தப் பாடலில் கர்நாடக இசையின் மேற்கத்திய சங்கமம்தான் சிறப்பு. இரண்டு பதிகங்களை பவதாரிணி பாட மீதியை இளையராஜா பாடி இருக்கிறார். மிகச்சில இடங்களில் உச்சரிப்பு சறுக்கினாலும் கவனமாகப் பாட வேண்டும் என்ற முனைப்பிலேயே உணர்ச்சியைக் கைவிட்டு விட்டார் பவதாரிணி. அது உணர்ச்சிப் பிழம்பான இளையராஜாவோடு பாடும்போது தெளிவாகத் தெரிகிறது.
?சென்றூதாய், கோத்தும்பி? என்று இறைவனுக்குத் தூதனுப்பும் பாடல்கள். மேலும் விளக்கங்கள் ராகவன் கொடுக்கலாம். நடு நடுவில் இருபது வினாடிகள் இடைவெளி விட்டுப் பாடல் தொடர்கிறது. மற்ற பாடல்களைக் கவனிக்கையில் இந்தப் பாடல் அவ்வளவு சிறப்பாகத் தோன்றவில்லை!




4. உம்பர்கட்கரசே
பாடியவர்:இளையராஜா.
எந்நாட்டவர்க்கும் இறைவனைச்
?சிக்கெனப் பிடித்தேன், எங்கெழுந்து அருளுவதினியே?? என்று கேட்கும் பாடல்கள். இவையும் நாம் சிறு வயதில் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் படித்தவையே! ஒவ்வொரு வரியைப் பாடி முடித்ததும் இசை தொடர்கிறது. ஆனால் நிறைய மேற்கத்திய வாசனை. ?தெள்ளிடத் தடியார் சிந்தையும் புகுந்த செல்வமே! சிவபெருமானே!? என்று உளமார உருகியிருக்கிறார் இளையராஜா. தனிமையில் கேட்டு நாமும் உருக வேண்டிய பாடல் இது!




5. முத்து நற்றாமம்
பாடியவர்:உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி, ஆஷா, காயத்ரி, குழுவினர்.
இத்தனை பாடகர்கள் பாடியிருந்தாலும் பெரும்பாலான வரிகளைக் குழுவினரே பாடி இருக்கின்றனர். இந்தத் தொகுப்பின் மிக உற்சாகமான பாடல் இது. இறைவனுக்காகப் பொற்சுண்ணம் இடிக்கும் போது பாடும் அருமையான பாடல்கள். அதற்கு இசையும் உற்சாகமாகப் பொங்கிப் பிரவாகிக்கிறது. அங்கங்கு தோல் வாத்தியங்கள் மெல்லியதாய்த் தன் இருப்பைத் தெரிவிக்க மற்ற மேற்கத்திய வாத்தியங்கள் குரலா குழலா என்று தெரியாத வண்ணம் கலக்கின்றன. அந்த உற்சாகம் சட்டென்று நம்மைத் தொற்றுகிறது, ஒற்றுகிறது, பற்றுகிறது.



6. புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்
பாடியவர்:இளையராஜா.
சிவனை நினையாத அன்பிலாதார், சிவனைத் தொழாதார், வெண்ணீறு அணிகிலாதார் என்பாரை மட்டுமே கண்டஞ்சுவேன் என்று வீர சைவராய் மாணிக்க வாசகர் உற்பத்தி செய்த பாடல் களஞ்சியங்கள் இவை. ஒரு பாடலுக்கு இசையமைக்கும் முன் வார்த்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை இசைஞானியின் வாயிலாகவே முன் கேட்கலாம். நல்ல மெல்லிசை மனதை வருடுகிறது. அப்படியே எண்பதுகளில் இசைஞானி போட்ட பாடல்களை ஞாபகப் படுத்துகிறது மெட்டு.


இந்த அனைத்துப் பாடல்களையும் கேட்ட பிறகு என் கருத்து இது!

இயைந்துச் செய்சிறுசெயலும் மனதைக் கிறக்கும் - அதில்
இறைத்தன்மை கலந்திருப்பின் மக்களை உருக்கும்
இத்திருவாசகம் மனத்தில் கறைகளைக் கறக்கும்
இந்நூற்றாண்டைக் கடந்திது கண்டிப்பாய்ச் சிறக்கும்

அன்புடன்,
பிரதீப்
 
நல்ல பதிவு பிரதீப். மொத்தம் எத்தனை நிமிடங்கள் ஓடக்கூடியது ...
 
எதிர்ப்பார்த்தது மாதிரியே கொடுத்துட்டிங்க.. இராகவன் வந்து தொடரட்டும்..
அன்புடன்
மன்மதன்
 
நன்றி தம்பி,

நானே விமர்சனம் கேட்க நினைத்தேன், கண்டிப்பாக சிடி வாங்கி பாடல்கள் கேட்க வேண்டும். விரைவில் யாராவது பாடல்களை எம்பி3-யில் சேமித்து இணையத்தில் கொடுப்பார்கள்.

அப்படி தளம் இருந்தால் சொல்லுங்க, இங்கே காசு கொடுத்தாலும் சிடிகள் கிடைக்காது.
 
நன்றி பிரியன் மன்மதன்
இந்தத் தொகுப்பு 64 நிமிடங்கள் ஓடக்கூடியது.
6 பாடல்கள். அருமையான இசை.
ராகவன் தொடரட்டும்.
 
நன்றி பிரதீப். விமான நிலையத்தை விட்டு இறங்கினவுடன் திருவாசகம் சிம்பொனி வாங்கிட்டுதான் அடுத்த வேலை
 
தமிழ்மையம் தயாரிப்பு இது...தற்போது சேரன் அங்குதான் பணியிலிருப்பதாய் கேள்வி...நான் அவரிடம் ஒரு இசைத்தட்டு கேட்டிருக்கிறேன்..அநேகமாக இன்னும் இரு வாரங்களில் எனக்கு கிடைக்கலாம்...
 
இங்கே MP3 வடிவில் உள்ளது...

Poovar Senni Mannan:(Illaiyaraaja)::::
http://charanraj.spymac.net/PoovarSenniMannan---Charanraj.mp3

Pooerukanum Purantharunam:(Illaiyaraaja)::::
http://charanraj.spymac.net/PooerukanumPurantharunam(Illaiyaraaja)--charan.mp3

PollaaVinayen (Illaiyaraaja)::::
http://www.megaupload.com/?d=19PB86GI

Muthu Natramam (Unnikrishnan, Madhu Balakrishnan, Vijay Jesudas, Manjari, Asha, Gayathir & Chorus)::::
http://www.megaupload.com/?d=1975JVLD

Umbarkatkarasaey (Illaiyaraaja)::::
http://www.megaupload.com/?d=19YXV0A4

PuttrilVazhaAravumAngen(Illaiyaraaja)::::
http://www.megaupload.com/?d=20JFK2F8
 
ஒரு பாடல் கேட்டுவிட்டேன்...... இந்த முறை நண்பர்களுக்கு அன்பர்களுக்கு இதைத்தான் பரிசளிக்க எண்ணியிருக்கிறேன்
 
நன்றி ஜீவா.. தரவிறக்கி கேட்டேன்...தமிழ் உலகிற்கு ஒரு பொக்கிஷம் இது என்பதில் ஐயமில்லை....

அப்பா...பிரதீப்பு..நீ சொன்னது எல்லாம் கொஞ்சம்தான்...அந்த இசை கேட்கும்போது...ஆஹா அற்புதம்...ரெம்ப நன்றிப்பா பிரதீப்பு.....
 
நன்றி மக்களே.
நான் நேற்றிரவு எழுத்தாளர் சுஜாதா கூறியதைப் போல் இரவில் மெல்லிய விளக்கொளியில் குறைவான ஒலியமைப்பில் ஹோம் தியேட்டரில் இந்த இசை வடிவத்தைக் கேட்டேன்.
உண்மையில் நெகிழ்ந்து சொக்கி விட்டேன் சொக்கி.
நண்பர்களுக்கும் இந்த முறையை சிபாரிசு செய்கிறேன்.
 
இப்போது பூவார் சென்னி கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்னையறியாமல் கண்களில் நீர் வந்துவிட்டது,
 
ம்ம்ம்ம். மன்றத்தில் அனைவரும் திருவாசகம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நல்லது. சரி. இன்று அல்லது நாளைக்கு என்னுடைய விமரிசனத்தை இடுகிறேன்.
 
அட என்னய்யா இது?
ரஜினிகாந்து மாதிரி.
சீக்கிரம் உங்க விமரிசனத்தை இடுங்க...
 
//இங்கே MP3 வடிவில் உள்ளது...//

இதைனை டவுன்லோட் செய்து zip வழியாக அளித்தால் எம்பி3 டவுலோட் செய்ய இயலாதவர்களும் ரசிக்க உதவியாக இருக்கும்...
 
ரொம்ப நன்றி ரவி.. இதைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்..
 
வாங்க ரவி, அப்படியே உங்களைப் பற்றிய அறிமுகத்தையும் கொடுங்களேன்.
 
திருவாசக இளையராஜாங்கம்

இன்னிசைப் பூக்களான தமிழ்ப் பாக்கள் எத்தனை என்றால் பலப்பல. அவற்றில் மக்களைச் சேர்ந்தவை எவையென்றால் சிற்சில.

எனக்குத் தெரிந்த வரையில் திருக்குறளுக்குச் சிலர் இசையமைத்து ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள். பல ஔவையார் பாடல்கள் ஔவையார் திரைப்படத்தில் மனங் கவர்ந்தன. சில சிலப்பதிகாரப் பாடல்களுக்கு சலீல் சவுத்திரி அருமையாக இசையமைத்து பி.சுசீலாவும் யேசுதாசும் பாடியிருக்கின்றார்கள். பின் தேவார திருவாசகப் பதிகங்கள் திரையில் வந்தன. எம்.எஸ்.ஸ¤ம் சில சிலப்பதிகாரப் பாடல்களைப் பாடியிருக்கிறார். பக்திப் பாடல்கள் என்ற வகையிலும் பல வந்துள்ளன. விஸ்வநாதன் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசை வடிவில் வந்துள்ளது. பாரதியார் பாரதிதாசன் பாடல்களும் வந்துள்ளன. இளையராஜாவின் இசையில் "கற்றது கைமண்ணளவு" என்ற ஔவையார் பாடல் தாய் மூகாம்பிகை படத்தில் பி.சுசீலா பாட வந்துள்ளது. தளபதி படத்தில் "குனித்த புருவமும்" என்ற தேவாரப் பாடலும் வந்துள்ளது. இன்னமும் சிலவும் இருக்கலாம்.

இவையனைத்திற்கும் இப்பொழுது வந்திருக்கும் திருவாசகத்திற்கும் என்ன வேறுபாடு? தமிழ்ப் பண்பாட்டிற்குப் பழக்கமான இசை வடிவங்களில் மேற்கூரிய பாடல்கள் அனைத்தும் வந்துள்ளன. ஆகையால் அந்தப் பாடல்களை நாம் மூழ்கிச் சுவைத்து மகிழ முடிந்தது. ஆனால் இப்பொழுதைய இளையராஜாவின் முயற்சி வேறுபட்டது. மேற்கத்திய இசை வடிவத்தில் இறைவனை வணங்குவதற்குண்டான இலக்கண முறையைப் பின்பற்றி தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்திருப்பது. அதிலும் பழம் பாடல்களுக்கு. ரொம்பச் சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில பைபிளையோ அராபிய திருக்குரானையோ தமிழிசை முறைப்படிப் பாடுவது.

இது எளிதன்று. மிகக் கடினம். காரணம்? தமிழிசையில் பாடல்கள்/செய்யுட்கள் எழுதும் பொழுதே அதற்குரிய பாவை முடிவு செய்து விடுவார்கள். வெண்பாவோ ஆசிரியப்பாவோ கலிப்பாவோ வஞ்சிப்பாவோ கொண்டுதான் செய்யுள் எழுதப்படும். ஆக இங்கே மெட்டுக்குப் பாட்டுப் போட முடியாது. Oration என்ற மேற்கத்திய பாணியில் தமிழ்ப் பாடலைப் பாட தமிழறிவும் தேவை. தமிழிசையறிவும் தேவை. மேற்கத்திய இசையறிவும் தேவை. இவை மூன்றுமே இளையராஜாவிடம் இருப்பவைதான். அனைத்திற்கும் மேலாக இறையருளும் பங்கேற்றவர்களின் மதங்களை மீறிய தமிழுணர்வும் இங்கே பெருங் காரியமாற்றியிருக்கின்றன.

திருவாசகத்தைப் படித்தவர்களுக்கு அதன் பெருமை தெரியும். ஜீ.யூ,போப் அவர்களின் மொழி பெயர்ப்பும் சிறப்பானது. வரிக்கு வரி அவர் மொழி பெயர்க்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்காது. Understanding என்றால் கீழே நிற்பது என்று அவர் மொழி பெயர்க்கவில்லை. திருவாசகப் பாடல்கள் சொல்லும் கருத்தை உள்வாங்கி அதனை ஆங்கில முறைப்படி படைத்திருக்கிறார் போப். இதுவும் மிகக் கடினமான செயலே. இசைத் தட்டோடு வந்திருக்கும் பாட்டுப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் இது உங்களுக்குப் புரியும்.

சரி. முன்னுரை முடிந்தது. பாடல்களைப் பற்றி அடுத்த பதிப்பில் பார்க்கலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

அன்னைக்குப் பெயர் வைத்த முறை
http://www.tamilmantram.com/vb/showt...525#post111525
என் கொங்கை நின்
http://www.tamilmantram.com/vb/showt...319#post111319
 
அடடா..
இதற்குத் தானய்யா நான் உங்களுக்குக் காத்திருந்தேன்.
மிக அருமையாகச் சொன்னீர்கள்.
இதில் முக்கியமானது இலக்கணம், அதாவது வரையறை. தமிழ்ப் பண்களின் இலக்கணம் மீறாது, வார்த்தைகள் சிதையாது, மேற்கத்திய சிம்பொனி இலக்கணத்தையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.
சிம்பொனி அமைப்பு பற்றியும், அதில் வரும் வாத்தியங்களின் பங்கு பற்றியும் இங்கே ஒரு சிறுகுறிப்பு உள்ளது. படித்துப் பாருங்கள்.
அதிலும் மொழிபெயர்ப்பு ஒரு சிறப்பு... உதாரணங்கள் கொடுத்துக் கட்டுப்படியாகாது.
ராகவா, நீங்கள் தொடருங்கள்.

அன்புடன்,
பிரதீப்
 
Back
Top