shivasevagan
New member
பசு ஓம்பல்
சிவலோகத்திலே சிவனது சந்நிதியில் இடபம் இருக்கும். அதன் பக்கத்திலே நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, கமனை என்னும் ஐவகைப் பசுக்கள் இருக்கும். இவை முறையே, கபிலநிறமும், கருநிறமும், வெண்ணிறமும், புகைநிறமும், செந்நிறமும் உடையனவாம். இவ்வைந்தும், சிவனது திருவருளினாலே திருப்பாற்கடலில் இருந்து, சிவபூசையின் பொருட்டும், யாகாதிகமருங்களின் பொருட்டும் பூமியில் உற்பவித்தன.
இப்பசுவின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருக்குமாறு கூறுதும். பிரமாவும் விட்டுணுவும் கொம்பினடியில் இருப்பர்; கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும் கொம்பின் நுனியில் இருக்கும்; சிவன் சிரத்திலும், உமாதேவி நடுநெற்றியிலும், முருகக் கடவுள் மேல் நாசியிலும், நாகேசர் உள் நாசியிலும், அச்சுவினிதேவர் இரண்டு காதுகளிலும், சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களிலும், வாயு பல்லிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி ஊங்காரத்திலும், இயமன் இருதயத்திலும், இயக்கர்கள் கெண்டைத் தலத்திலும், உதயாஸ்தமயன சந்திகள் உதட்டிலும், இந்திரன் கழுத்திலும், அருக்கர்கள் திமிலிலும், சாத்தியர் மார்பிலும், அனிலவாயு நான்கு கால்களிலும், மருத்துவர் முழந்தாள்களிலும், நாகலோகத்தார் குரத்தின் நுனியிலும், கந்தருவர் குரத்தின் நடுவிலும், தேவ மாதர்கள் மேற்குரத்திலும்; உருத்திரர் முதுகிலும், வசுக்கள் சந்திகளிலும், பிதிர்கள் அரைப்பலகையிலும், சத்தமாதர்கள் பசுத்திலும், இலக்குமி அபானத்திலும், நாகேசர் அடிவாலிலும் இருப்பர், சூரியனொளி வால் மயிரிலும், கங்கை மூத்திரத்திலும், யமுனை சாணத்திலும் இருக்கும், முனிவர்கள் உரோமத்திலும், பூமிதேவி உதரத்திலும் இருப்பர்; சமுத்திரம் முலையிலும், காருகபத்தியம் முதலிய அக்கினி மூன்றும் முறையே வயிறு இருதயம் முகம் என்னும் உறுப்புக்களிலும், யாகங்களெல்லாம் எலும்பிலும் சுக்கிலத்திலும் இருக்கும்; கற்புடைமகளிர் எல்லா அவயவங்களிலும் இருப்பர்.
இத்துணைச் சிறப்பினவாகிய பசுக்களை இயக்குங்கால், சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலினாலே மெல்ல ஓங்கி, போ போ என்று இயக்குக.
இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்து வீழ்வர். பசுக்களின் பெருமையை உணர்ந்து, அவைகளை வலஞ்செய்து, துதித்து வணங்கி, புல்லுக்கொடுத்தோர் சிவலோகத்தை அடைந்து இன்புறுவர். பசுக்களைத்தீண்டினும், தீவினைகள் நீங்கி, நல்வினைகள் பெருகும். அவைகள் இம்மை மறுமை இரண்டிலும் பயனைத் தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஓடைமண் புற்றுமண் வில்வத்தடிமண் அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்து, முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க, நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி, சுத்தி செய்க. மசகம் வராமல் தூபம் இடுக, தீபங்கள் ஏற்றுக சாலை எங்கும் பூமாலை நாற்றுக. பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னும் சொல்லைச் சொல்லி, மெல்ல மெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுக்க, நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத்துப் பேணுக. அட்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தூபதீபம் காட்டி வணங்குக. பசுக்களை வேனிற்காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்க்க, பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், பூசை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வர்கள். ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், சிவனுக்கும் ஆசாரியருக்கும், பசுவைத் தானம் செய்தலும், குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைச் சிவசந்நிதிக்குத் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டி இரங்கித் தாம் வாங்கி வளர்த்தலும், பெரும் புண்ணியங்களாம்.
பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க.
கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, ஜலத்தினாலே முலையைக் கழுவிக் கறக்க. ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால்விடாமற் கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து, கடும்பசியினாலே வீடுகள் தோறும் இரப்பன். கபிலையின் பாலைச் சிவனுக்கே கொடுக்க; அதனைத் தாம் பருகில் நரகத்து வீழ்வர். மலட்டுப்பழுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும், பாரம் ஏற்றினோரும், இடபத்தில் ஏறினோரும் நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவரின், எதிர்த்து காக்க; காத்தல் அரிதாயவழித் தம்முயிர் விடுத்தோர் சிவபதம் அடைவர். இதுகாறும் கூறியவற்றிற் கெல்லாம் பிரமாணம் சிவதருமோத்தரத்துக் கோபுரவியலின் இறுதியிற் காண்க.
கோமாதா நமக்கு இன்னொரு மாதா(அம்மா)
தாய் தன் முலைப் பாலை தன் பிள்ளைகளுக்கு கொடுக்கிறாள்.
பசுவோ நம் எல்லோருக்கும் அம்மா அது எல்லோருக்கும் பால் கொடுக்கிறது.
யாராவது அம்மாவைக் கொன்று உண்பார்களா?
சிந்தியுங்கள்.
இன்று பசு மாடுகள் கேரளாவிற்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகிறது.
நமக்கு பால் கொடுத்த அம்மாவைக் கொல்லலாமா?
தோலுக்காவும் பசுமாடுகள் கொல்லப்படுகின்றன.
ஆதலால் பசுதோலில் செய்யப்பட்ட பர்ஸ், பெல்ட், செருப்பு, சூ, முதலியவற்றை புறக்கணியுங்கள்.
பசு வதையை உண்மையான பசுவின் பிள்ளைகள் தடுங்கள்.
நமக்கு பால், தயிர், நெய், வீடு தெளிக்க சாணம், பூச விபூதி என்று அணைத்தையும் தரும் பசுவை வதைக்காதீர்கள்.
இந்த செய்தியை ஒவ்வொருக்கும் அனுப்பி வையுங்கள்....
ஆதரவு தாருங்கள்.