சைவ வினா விடை

ஸ்நானம்


19.தந்த சுத்திக்குப்பின் யாது செய்யத்தக்கது?

ஸ்நானஞ் செய்யத்தக்கது.

20.ஸ்நானஞ் செய்யத்தக்க நீர் நிலைகள் யாவை?

ஆறு, ஓடை, குளம், கேணி, மடம் முதலியவையாம்.

21.ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?

கௌபீனத்தைக் கசக்கிப் பிழிந்து தரித்து, இரண்டு கைகளையும் கழுவி, வேட்டியைத் தோய்த்து அலம்பித் தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி, செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.
 
22.எவ்வளவினதாக ஆகிய சலத்தில் இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?

தொட்பூழ் அளவினதாகிய சலத்திலே இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.

23.எந்த திக்கு முகமாக நின்று ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?

நதியிலே ஆனால் அதற்கு எதிர்முகமாக நின்றும், குளம் முதலியவற்றிலே ஆனால் வடக்கு முகமாகவேனும் நின்றும் ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.

24.சலத்திலே எப்படி முழுகல் வேண்டும்?

ஆசமனஞ் செய்து, இரண்டு காதுகளையும் இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும் இரண்டு கட்டு விரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக் கொண்டு சிவபெருமானைச் சிந்தித்து முழுகல் வேண்டும்.
 
25.இப்படி முழுகின உடனே யாது செய்தல் வேண்டும்?

ஆசமனஞ் செய்து கொண்டு, கரையில் ஏறி, வேட்டியைப் பிழிந்து தலையில் ஈரத்தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பில் உள்ள ஈரத்தைத் துவட்டிக் குடுமியை முடித்து, ஈரக் கௌபீனத்தைக் களைந்து, உலர்ந்த கௌபீனத்தைத் தரித்து, இர்ண்டு கைகளையுங் கழுவி, உலர்ந்த வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, ஈர வஸ்திரத்தையும் கௌபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடவேண்டும்.

26.சிரஸ்நானஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?

கண்ட ஸ்நானமேனும், கடிஸ்நானமேனுஞ் செய்தல் வேண்டும்.

27.கண்ட ஸ்நானம் ஆவது யாது?

சலத்தினாலே கழுத்தின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம் படிம்படி துடைப்பது.
 
28.கடி ஸ்நானமாவது யாது?

சலத்தினாலே அரையின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம் படும்படி துடைப்பது.
 
அநுட்டானம்


29.ஸ்நானத்துக்குப்பின் யாது செய்தல் வேண்டும்?

சுத்த சலம் கொண்டு அநுட்டனம் பண்ணி பஞ்சாக்ஷர செபஞ் செய்து தோத்திரம் பண்ணல் வேண்டும்.


போசனம்


30.அநுட்டானத்திற்குப்பின் யாது செய்யத்தக்கது?

போசனஞ் செய்யத்தக்கது.

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.
 
32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

34.எவ்வகைப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்?

கோமயத்தினாலே மெழுகப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்.

35.போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?

வாழையிலை, பலாவிலை, புன்னையிலை, பாதிரியிலை, தாமரையிலை என்பனவாகும்
 
36. போசன பாத்திரங்களை யாது செய்தபின் போடல் வேண்டும்?

சலத்தினாலே நன்றாகக் கழுவியபின் போடல் வேண்டும்.

37.வாழையிலையை எப்படிப் போடல் வேண்டும்?

தண்டு உரியாமல் அதனுடைய அடி வலப்பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும்.

38. இலை போட்ட பின் யாது செய்ய வேண்டும்?

அதிலே சலத்தினாலே பரோஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவற்றைப் படைத்தல் வேண்டும்.

39. போசனம் பண்ணும் போது எப்படி இருத்தல் வேண்டும்?

வீண்வார்த்தை பேசாமலும், சிரியாமலும், தூங்காமலும், அசையாமலும், கால்களை மடக்கிக் கொண்டு செவ்வையாக இருத்தல் வேண்டும்.
 
40. போசனம் எப்படிப் பண்ணல் வேண்டும்?

அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறகப் பிரித்துப் பருப்பு, நெய்யோடு பிசைந்து சிந்தாமல் புசித்தல் வேண்டும். அதன்பின் சிறிது முன்போல் பிரித்து, புளிக்கறியோடு ஆயினும் இரசத்தோடு ஆயினும், பிசைந்து, புசித்தல் வேண்டு. அதன்பின் மோரோடு பிசைந்து, புசித்தல் வேண்டும். கறிகளை இடயிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும். இலையிலும் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனும், தண்ணீரேனும் பானம் பருகல் வேண்டும்.

41. போசனம் பண்ணும் போது உமியத்தக்கதை எங்கே உமிழ்தல் வேண்டும்?

இலையின் முற்பக்கத்தை, மிதத்தி, அதன் கீழ் உமிழ்தல் வேண்டும்.

42. போசனம் பண்ணும் போது மனத்தை எதிலே இருத்துதல் வேண்டும்?

சிவபெருமானுடைய திருவடியிலே இருத்துதல் வேண்டும்.

43. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து வீட்டுக்குப் புறத்தே போய்க் கைகளைக் கழுவி, சலம் வாயிற் கொண்டு, பதினாறு தரம் இடப்புறத்திலே கொப்புளித்து, வாயையும் கைகளையும் கால்களையும் கழுவுதல் வேண்டும்.
 
44. உச்சிட்டத்தை எப்படி அகற்றல் வேண்டும்?

இலையை எடுத்து எறிந்துவிட்டு, கை கழுவிக்கொண்டு, உச்சிட்டத்தானத்தைக் கோமயஞ் சேர்ந்த சலந்தெளித்து மெழுகிப் புறத்தே போய்க் கழுவிவிட்டுப் பின்னும் அந்தத்தானத்தில் சலந்தெளித்து விடல் வேண்டும்.

45. உச்சிட்டத்தானத்தை எப்படி மெழுகுதல் வேண்டும்?

இடையிலே கையைஎடாமலும், முன்பு தீண்டிய இடத்தை பின்பு தீண்டாமலும், புள்ளி இல்லாமலும் மெழுகுதல் வேண்டும்.
 
படித்தல்


46. போசனத்திற்குப் பின் யாது செய்யத்தக்கது?

உபாத்தியாயர் இடத்தே கல்வி கற்கத்தக்கது.
 
இரவிற் செய்யுங் கருமம்


47. சூரியன் அஸ்தமிக்கும் போது யாது செய்தல் வேண்டும்?

மலசல விமோசனஞ் செய்து, சௌசமும் ஆசமனமும் பண்ணி, விபூதி தரித்து, சிவபெருமானை வணங்கித் தோத்திரஞ் செய்து கொண்டு, விளக்கிலே பாடங்களைப் படித்தல் வேண்டும்.

48. அதன்பின் யாது செய்தல் வேண்டும்?

போசனஞ் செய்து, நூறு தரம் உலாவி, சிறிது நேரஞ் சென்றபின், சயனித்தல் வேண்டும்.

49. எப்படிச் சயனித்தல் வேண்டும்?

கிழகே ஆயினும், மேற்கே ஆயினும் தலைவைட்த், சிவபெருமானைச் சிந்த்தித்துக் கொண்டு வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும். வடகே தலை வைத்தல் ஆகாது.

50. எப்போது எழுந்து விடல் வேண்டும்?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே எழுந்துவிடல் வேண்டும்.
 
1. சிவபெருமானை வழிபடுதற்கு உரிய முக்கிய ஸ்தானம் யாது?

திருக்கோயில்.

2. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?

ஸ்தானஞ் செய்து தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து, விபூதி இட்டுக்கொண்டு, போதல் வேண்டும்.

3. திருக்கோயிலுக்குச் சமீபித்த உடனே யாது செய்தல் வேண்டும்?

தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்து, சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு, உள்ளே போதல் வேண்டும்.

4. திருக்கோயிலின் உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?

பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

5. கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும், மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நம்ஸ்காரம் பண்ணல் வேண்டும்?

வடக்கே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
 
6. தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

கிழக்கே தலை வைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

7. எந்த திக்குக்களிலே கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது?

கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது.

8. ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

9. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?

தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

10. பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
 
11. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?

தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

12. நமஸ்காரம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம், இருதரம் பண்ணுதல் குற்றம்.

13. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?

பிரதக்ஷணம்(வலம் வருதல்) பண்ணல் வேண்டும்.

14. எப்படி பிரதக்ஷணம் பன்னல் வேண்டும்?

இரண்டு கைகளையும் சிரசிலேனும் மார்பிலேனுங் குவித்து சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு, கால்களை மெல்ல வைத்துப் பிரதக்ஷணம் பண்ணல் வேண்டும்.

15. பிரதக்ஷணம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும்.
 
16. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?

முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி, தக்ஷ?ணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளைத் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

17. விக்னேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?

முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து, கும்பிடல் வேண்டும்.

18. சந்நிதானங்களிலே தரிசனம் பண்ணும் பொழுதெல்லாம் யாது செய்தல் வேண்டும்?

இரண்டு கைகளையுஞ் சிரசில் ஆயினும் மார்ப்பில் ஆயினும் குவித்துக்கொண்டு, மனங் கசித்துருகத் தோத்திரஞ் செய்தல் வேண்டும்.
 
19. எந்தக் காலத்தில் சுவாமி தரிசனஞ் செய்யல் ஆகாது?

அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடக்கும் பொழுது தரிசனஞ் செய்யல் ஆகாது.

20. அபிஷேக காலத்தில் பிரதக்ஷ?ண நமஸ்காரங்களும் பண்ணல் ஆகாதா?

அப்பொழுது உட்பிரகாரத்திலே பண்ணல் ஆகாது.

21. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

சண்டேசுரர் சந்நிதியை அடைந்து கும்பிட்டு, மூன்று முறை கை கொட்டி, சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்தல் வேண்டும்.
 
22. சண்டேசுர தரிசனத்தின் பின் யாது செய்தல் வேண்டும்?

சிவசந்நிதானத்தை அடைந்து, நமஸ்காரம் பண்ணி, இருந்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச்செபித்துக் கொண்டு, எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.

23. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?

சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திர கிரகணம், சிவராத்திரி, நவராத்திரி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும்.
 
24. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?

ஆசாரம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டு இருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை உண்டல், சிரசிலே வஸ்திரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே உத்திரீயம் இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் (பூசித்துக் கழித்த பொருள்) கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசல், சிரித்தல், சண்டை இடுதல் விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குங் குறுக்கே போதல் முதலியவைகளாம்.
 
6. தமிழ் வேத இயல்
1. சைவசமயிகள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் எவை?

தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம்.

2. தேவாரஞ் செய்தருளினவர் யாவர்?

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.
 
Back
Top