shivasevagan
New member
உ
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்
10. நித்தியகருமவியல்
230. நாடோறும் நியமமாக எந்த நேரத்திலே நித்திரை விட்டெழுதல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை விட்டெழுவது உத்தமம்; மூன்றேமுக்கால் நாழிகைக்கு முன் எழுவது மத்திமம்; உதயத்தில் எழுவது அதமம்.
109. சிவ தீக்ஷை பெற்ற பின் ஆவசியமாக அநுட்டிக்கப்படும் கருமங்கள் எவை?
இயமநியமங்களும், சந்தியாவந்தனம் சிவலிங்க பூசை, தேவார திருவாசக பாராயணம், சிவாலய கைங்கரியம், சிவாலய தரிசனம், குருவாக்கிய பரிபாலனம், இயன்றமட்டும் மாகேசுர பூசை முதலியவைகளுமாம். (கைங்கரியம் = தொண்டு)
110. இயமம் என்பன யாவை?கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் மனைவியரையும் பொதுமகளிரையும் விரும்பாமையாகிய ஆண்டகைமை, இரக்கம், வஞ்சனையில்லாமை, பொறையுடைமை, மனங் கலங்காமை, அற்பாகாரம், சுசியுடைமை என்னும் பத்துமாம்.
111. நியமம் என்பன எவை?
தவம், மனமுவந்திருத்தல், கடவுள் உண்டென்னும் விசுவாசம், பாவத்துக்குப் பயந்து தேடிய பொருளைச் சற்பாத்திரமா யுள்ளவருக்குக் கொடுத்தல், தன்னின் மூத்தோரை வழிபடுதல், உயிர்க்கு உறுதி பயக்கும் உண்மை நூல்களைக் கேட்டல், குலஞ்செல்வம் அதிகாரம் முதலியவைகளினாலே கெருவம் இன்றி அடங்கி யொழுகுதல், தக்கனவுந் தகாதனவும் பகுத்தறிதல், செபம், விரதம் என்னும் பத்துமாம்.
112. அநுட்டிக்கலாகாத கருமங்கள் எவை?
சிவநிந்தை, குருநிந்தை, சிவனடியார் நிந்தை, சிவசாத்திரநிந்தை, தேவத்திரவியங்களை உபயோகஞ் செய்தல், உயிர்க்கொலை முதலியவைகளாம்.
113. அநுட்டானத்தில் வழுகிய பாவங்கள் எப்படி நீங்கும்?அறியப்பட்ட பாவங்கள் பிராயச்சித்தங்களினாலே நீங்கும்; அறியப்படாத பாவங்கள் அந்தியேட்டிக் கிரியையினாலே நீங்கும்.
114. தீக்ஷை பெற்றுந் தத்தமக்கு விதிக்கப்பட்ட சைவாசாரங்களை அநுட்டியாது விடுத்தவர் யாது பெறுவர்?பைசாச புவனத்திற் பிசாசுகளாய் அங்குள்ள போகங்களை அநுபவிப்பர்.
115. சிவதீக்ஷை பெற்றுச் சிவபெருமானை வழிபடுவோர்கள் யாது பெயர் பெறுவார்கள்?
சைவர் என்னும் பெயர் பெறுவார்கள்.
116. சைவர்கள் சாதிபேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?
ஆதிசைவர்; மகாசைவர்; அநுசைவர்; அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என அறு வகைப்படுவார்கள்.
117. ஆதிசைவராவார் யாவர்?
அநாதிசைவராகிய சதாசிவமூர்த்தியுடைய ஐந்து திருமுகங்களினுந் தீக்ஷிக்கப்பட்ட இருடிகளுடைய கோத்திரங்களிற் பிறந்தவராகிய சிவப்பிராமணர். (இருடி = முனிவர்)
118. மகாசைவராவர் யாவர்?
பிரமாவினுடைய முகங்களிற் றோன்றிய இருடிகளுடைய கோத்திரங்களிற் பிறந்தவராகிய வைதிகப் பிராமணருள்ளே சிவதீக்ஷை பெற்றவர்.
119. அநுசைவராவார் யாவர்?
சிவதீக்ஷை பெற்ற க்ஷத்திரியரும், வைசியரும்.
120. அவாந்தரசைவராவார் யாவர்?
சிவதீக்ஷை பெற்ற சூத்திரர்.
121. பிரவரசைவராவார் யாவர்?
சிவதீக்ஷை பெற்ற அநுலோமர்.
122. அந்நியசைவராவார் யாவர்?
சிவதீக்ஷை பெற்ற பிரதிலோமர் முதலிய மற்றைச் சாதியார்.
123. சைவர்கள் தீக்ஷா பேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?
சமய தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், நிருவாண தீக்ஷிதர், ஆசாரியர் என நால்வகைப்படுவார்கள்.
124. சமயதீக்ஷிதராவார் யாவர்?
சமய தீக்ஷை பெற்றுக்கொண்டு, சந்தியாவந்தனத்தை மாத்திரமேனும், சந்தியாவந்தனம் சிவாலயப் பணி என்னும் இரண்டுமேனும் அநுட்டிப்பவர்.
125. சந்தியாவந்தனம் மாத்திரம் அநுட்டிக்குஞ் சமயிகள் யாது பெயர் பெறுவர்?
சந்தியோபாஸ்திபரர் என்னும் பெயர் பெறுவர். (உபாஸ்தி = வழிபாடு)
126. சந்தியாவந்தனம், சிவாலயப் பணி என்னும் இரண்டும் அநுட்டிக் குஞ்சமயிகள் யாது பெயர் பெறுவர்?
சிவகர்மரதர் என்னும் பெயர் பெறுவர்
(ரதர் = விருப்பமுடையவர்)
127. விசேஷ தீக்ஷிதராவார் யாவர்?
சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, என்னும் இரண்டும் பெற்றுக்கொண்டு, சந்தியாவந்தனம், சிவலிங்க பூசை என்னும் இரண்டும் அநுட்டிப்பவர்.
128. நிருவாண தீக்ஷிதராவார் யாவர்?
சமய தீக்ஷை, விசேக்ஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை என்னும் மூன்றும் பெற்றுக்கொண்டு, சந்தியா வந்தனம், சிவலிங்க பூசை என்னும் இரண்டனோடு ஞான பூசையும் அநுட்டிப்பவர்.