பாசவியல்

shivasevagan

New member
?

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்​


3. பாசவியல்

48. பாசமாவன யாவை?
ஆன்மாக்களைப் பந்தித்து நிற்பவைகளாம். (பந்தித்தல் - கட்டுதல், பாசம், மலம் என்பவை ஒருபொருட் சொற்கள்.)


49. பாசம் எத்தனை வகைப்படும்?
ஆணவம், கன்மம், மாயை என மூவகைப்படும். இம்மூன்றோடு, மாயேயம், திரோதயி என இரண்டுங் கூட்டிப் பாசம் ஐந்து என்று கொள்வதும் உண்டு.
50. ஆணவமாவது யாது?
செம்பிற் களிம்புபோல ஆன்மாக்களின் அநாதியே உடன்கலந்து நிற்பதாய், ஒன்றேயாய், ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாகி அவைகளுடைய அறிவையுந் தொழிலையும் மறைத்து நின்று தத்தங்கால வெல்லையிலே நீங்கும் அநேக சக்திகளையுடையதாய்ச், சடமாய் இருப்பது.

51. கன்மமாவன யாது?
ஆன்மாக்கள் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலே செய்த புண்ணிய பாவங்கள், இவை, எடுத்த பிறப்பிலே செய்யப்பட்ட பொழுது, ஆகாமியம் எனப் பெயர் பெறும். பிறவி தோறும் இப்படி ஈட்டப் பட்டுப் பக்குவப்படும் வரையும் புத்தித்தத்துவம் பற்றுக்கோடாக மாயையிலே கிடக்கும் பொழுது சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இச்சஞ்சித கன்மங்களுள்ளே பக்குவப்பட்டவை, மேல் எடுக்கும் உடம்பையும் அது கொண்டு அநுபவிக்கப்படும் இன்ப துன்பங்களையுந் தந்து பயன்படும் பொழுது, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.

52. மாயை எத்தனை வகைப்படும்?
சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என மூன்று வகைப்படும். இவைகளுள்ளே, சுத்தமாயை அசுத்தமாயை இரண்டும் நித்தியம்; பிரகிருதிமாயை அசுத்த மாயையினின்றுந் தோன்றியதாதலால் அநித்தியம்.

53. சுத்தமாயையாவது யாது?
நித்தியமாய், வியாபகமாய், அருவமாய்ச், சடமாய்ச் சொல்வடிவமுஞ் சுத்தமாகிய பொருள் வடிவுந் தோன்றுதற்கு முதற்காரணமாய், மயக்கஞ் செய்யாததாய் இருப்பது.

54. அசுத்தமாயையாவது யாது?
நித்தியமாய், வியாபகமாய், அருவமாய்ச், சடமாய்ப், பிரளய காலத்திலே ஆன்மாக்களுடைய கன்மங்களுக்கு உறைவிடமாய், ஆன்மாக்களுக்குச் சுத்தா சுத்தமும் அசுத்தமுமாகிய தனு கரண புவன போகங்கள் தோன்றுதற்கு முதற் காரணமாய், மயக்கஞ் செய்வதாய் இருப்பது.


55. மாயேயமாவன யாவை?
மாயையால் ஆகிய தத்துவங்களும், அவைகளால் ஆகிய தனு கரண புவன போகங்களுமாம்.
56. திரோதாயியாவது யாவை?
ஆணவங் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையுந் தொழிற்படுத்திப் பாசம் வருவிக்குஞ் சிவசக்தி. இது மலத்தைச் செலுத்துதலினாலே, மலம் என உபசரிக்கப்பட்டது.

57. மாயாகாரியமாகிய தனு கரண புவன போகங்களைச் சிவபெருமான் ஆன்மாக்களுக்குக் கொடுப்பது எதன் பொருட்டு?
ஆன்மாக்களைப் பந்தித்த ஆணவ மலமுங் கன்ம மலமுமாகிய நோய்களைத் தீர்த்துச் சிவானந்தப் பெரும் பேற்றைக் கொடுக்கும் பொருட்டு.

58. தனு கரண முதலியவைகளும் மலமன்றோ? மலமென்பது அழுக்கன்றோ? ஆணவமாகிய அழுக்கை, மாயா மலமாகிய அழுக்கினாலே எப்படிப் போக்கலாம்?
வண்ணான், கோடிப் புடவையிலே சாணியையும் உவர் மண்ணையும் பிசிறி, மிகக் கறுத்தது என்னும்படி செய்து, முன்னையதாகிய அழுக்கோடு பின்னையதாகிய அழுக்கையும் போக்கி, அப்புடைவையை மிக வெண்மையுடையதாகச் செய்வன்; அது போலவே சிவபெருமான் ஆன்மாவினிடத்தே மாயா மலத்தைக் கூட்டி, அநாதி பந்தமாகிய ஆணவ மலத்தோடு ஆதிபந்தமாகிய மாயா மலத்தையும் போக்கி, அவ்வான்மாவைச் சிவமாந்தன்மைப் பெருவாழ்வுடையதாகச் செய்வார்.


திருச்சிற்றம்பலம்
 
பிங்கல நிகண்டு படிச்ச மாதிரி இருக்குங்க.
செய்திகளுக்கு மிக்க நன்றி.
 
Back
Top