வேதாகமவியல்

shivasevagan

New member
4. வேதாகமவியல்


59. சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டு அருளிச் செய்த முதனூல்கள் எவை?

வேதம், சிவாகமம் என்னும் இரண்டுமாம். வேதத்தின் பெயர் சுருதி, நிகமம். ஆகமத்தின் பெயர் தந்திரம், மந்திரம், சித்தாந்தம்.

60. வேதம் எத்தனை?

இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நான்காம்.

61. சிவாகமம் எத்தனை?

காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞாநம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம

62. வேதம் நான்கும் எங்கே தோன்றின?

சதாசிவமூர்த்தியுடைய தற்புருட முகத்தினின்றும் இருக்கு வேதமும், அகோர முகத்தினின்றும் யசுர் வேதமும் வாமதேவ முகத்தினின்றுஞ் சாம வேதமும், சத்தியோசாத முகத்தினின்றும் அதர்வ வேதமுந் தோன்றின.

63. சிவாகம மிருபத்தெட்டும் எங்கே தோன்றின?

சதாசிவமூர்த்தியுடைய உச்சி முகமாகிய ஈசானத்தினின்றும் தோன்றின.

64. வேதம் நான்கும் எத்தனை சாகை யுடையன?

இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும், யசுர்வேதம் நூறு சாகையும், சாமவேதம் ஆயிரஞ் சாகையும் அதர்வவேதம் ஒன்பது சாகையும் உடையன (சாகை பிரிவு)

65. வேதம் நான்கும் தனித்தனி எத்தனை காண்டமுடையன?

பிரமகாண்டமும், பிரமகாண்டத்துக்கு நிமித்தமாகிய கருமகாண்டமும், என இரண்டு காண்டமுடையன. பிரமகாண்டத்தின் பெயர் பிரபல் சுருதி, வேதாந்தம், வேதசிரசு, உபநிடதம், கரும காண்டத்தின் பெயர் அற்பகருதி.

66. வேதத்துக்கு அங்கமாகிய நூல்கள் எவை?

சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் ஆறுமாம்.

67. சிக்ஷையாவது யாது?

வேதங்களை உதாத்தம் அநுதாத்தம் முதலிய சுர வேறுபாட்டினால் உச்சரிக்கும் முறைமையை அறிவிப்பது.

68. கற்பமாவது யாது?

வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை அநுட்டிக்கும் முறைமையை அறிவிப்பது.

69. வியாகரணமாவது யாது?

வேதங்களில் எழுத்துச் சொற் பொருளிலக்கணங்களை அறிவிப்பது.

70. நிருத்தமாவது யாது?

வேதங்களின் சொற்களுடைய பொருளை அறிவிப்பது.

71. சந்தோவிசிதியாவது யாது?

வேதமந்திரங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரையும் அவ்வவைகளுக்கு எழுத்து இவ்வள வென்பதையும் அறிவிப்பது.

72. சோதிடமாவது யாது?

வேதத்தில் விதிக்கப்பட்ட கருமங்களைச் செய்தற்கு உரிய கால விசேஷங்களை அறிவிப்பது.

73. வேதத்துக்கு உபாங்கமாகிய நூல்கள் எவை?

புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் நான்குமாம்.

74. புராணமாவது யாது?

பரமசிவன் உலகத்தைப் படைத்தல், அழித்தல் முதலியவைகளைக் கூறும் வேத வாக்கியப் பொருள்களை வலியுறுத்தி விரித்து அறிவிப்பது. உலகத்தினது தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும் மனுவந்தரங்களும், பாரம்பரியக் கதைகளுமாகிய இவ்வைந்தையும் கூறுதலால், புராணம் பஞ்சலக்கணம் எனவும் பெயர் பெறும். இதிகாசமும் புராணத்துள் அடங்கும்.

75. நியாயமாவது யாது?

வேதப் பொருளை நிச்சயித்தற்கு அநுகூலமாகிய பிரமாணம் முதலியவைகளை அறிவிப்பது.

76. மீமாஞ்சையாவது யாது?

வேதப் பொருளினுடைய தாற்பரியத்தை அறிதற்கு அநுகூலமாகிய நியாயங்களை ஆராய்ச்சி செய்து அறிவிப்பது. அது பூருவமீமாஞ்சை, உத்திர மீமாஞ்சை என இரண்டு வகைப்படும். பூருவ மீமாஞ்சையின் பெயர் கருமமீமாஞ்சை, உத்திர மீமாஞ்சையின் பெயர் பிரமமீமாஞ்சை, வேதாந்த சூத்திரம்.

77. மிருதியாவது யாது?

அவ்வவ் வருணங்களுக்கும் ஆச்சிரமங்களுக்கு உரிய தருமங்களை அறிவிப்பது.

78. உபவேதங்கள் எவை?

ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம் அருத்தவேதம் என்னும் நான்குமாம்.

79. ஆயுர்வேதமாவது யாது?

எல்லாவற்றையும் அநுட்டித்தற்குச் சாதனமாகிய சரீரத்தை நோயின்றி நிலைபெறச் செய்தற்கு வேண்டப்படுபவைகளை அறிவிப்பது.

80. தனுர்வேதமாவது யாது?

பகைவர்களாலே நலியாது உலகத்தைக் காத்தற்கு வேண்டப்படும் படைக்கலப் பயிற்சியை அறிவிப்பது.

81. காந்தருவ வேதமாவது யாது?

கடவுளுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கும் இசை முதலியவைகளை அறிவிப்பது.

82. அருத்த வேதமாவது யாது?

இம்மைக்கும் மறுமைக்கும் ஏதுவாகிய பொருள்களைச் சம்பாதிக்கும் உபாயத்தை அறிவிப்பது.

83. சிவாகமம் இருபத்தெட்டுந் தனித்தனி எத்தனை பாதங்களுடையன?

ஞானபாதம், யோகபதம், கிரியாபதம், சரியாபாதம் என நான்கு பாதங்களுடையன.

84. சிவாகமங்களுக்கு வழிநூல் எவை?

நாரசிங்கம் முதல் விசிவான்மகம் ஈறாகிய உபாகமங்கள் இருநூற்றேழுமாம். நாரசிங்கத்துக்கு மிருகேந்திரம் என்றும் பெயர்.

85. சிவாகமங்களுக்குச் சார்பு நூல் எவை?

தத்துவப்பிரகாசிகை, தத்துவசங்கிரகம், தத்துவத் திரயநிர்ணயம், போககாரிகை, மோஷகாரிகை, நாதகாரிகை, பரமோஷநிராசகாரிகை, இரத்தினத்திரயம் என்னும் அட்டப்பிரகரணம் முதலியவைகளாம்.

86. வேதத்தை ஓதுதற்கு அதிகாரிகள் யாவர்?

உபநயனம் பெற்றவராகிய பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் முதன் மூன்று வருணத்தார்.

87. சூத்திரரும், நான்கு வருணத்துப் பெண்களும் எதற்கு அதிகாரிகள்?

இதிகாச புராணம் முதலியவைகளை ஓதுதற்கும், வேதத்தின் பொருளைக் கேட்டற்கும் அதிகாரிகள்.

88. சிவாகமத்தை ஓதுதற்கு அதிகாரிகள் யாவர்?

சிவாகமத்திற் கிரியாகாண்டம் ஓதுதற்கு விசேஷதீக்ஷை பெற்ற நான்கு வருணத்தாரும். ஞான காண்டம் ஓதுதற்கு நிருவாணதீக்ஷை பெற்ற நான்கு வருணத்தாரும் அதிகாரிகள்.

89. பிராமணர் முதலிய முதன் மூன்று வருணத்தாருக்கு எக்கிரியைகள் செய்யத் தக்கன?

உபநயனம் மாத்திரம் பெற்றவருக்கு வைதிகக் கிரியைகள் மாத்திரஞ் செய்யத்தக்கன. உபநயனத்தோடு சிவதீக்ஷையும் பெற்றவருக்கு வைதிகக் கிரியைகளும். ஆகமக் கிரியைகளும் கலந்து செய்யத்தக்கன. ஆகமக் கிரியைகள் செய்யா தொழியின், அவர் பெற்ற சிவதீக்ஷையினால் ஒரு சிறிதும் பயனில்லை.

90. சூத்திரர் முதலாயினாருக்கு எக்கிரியைகள் செய்யத் தக்கன்?

சிவதீக்ஷை பெற்ற சூத்திரருக்கும் அநுலோமருக்கும் ஆகமக் கிரியைகள் செய்யத்தக்கன. சிவதீக்ஷை பெறாத சூத்திரர் முதலானவருக்குப் பிரணவமின்றி நமோந்தமாகிய தேவ தோத்திரங்களைக் கொண்டு கிரியைகள் செய்யத் தக்கன.

91. வேதத்தின் ஞானகாண்டப் பொருளைச் சிவாகமத்துக்கு மாறுபடாவண்ணம் உள்ளபடி அறிவிக்குந் தமிழ் வேதங்கள் எவை?

தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம்.

92. தேவாரம் அருளிச் செய்தவர் யாவர்?

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.

93. திருவாசகம் அருளிச் செய்தவர் யாவர்?

மாணிக்கவாசக சுவாமிகள்.

94. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய இந்நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவர்?

சைவ சமய குரவர் எனப் பெயர் பெறுவர்.

95. சிவாகமத்தின் ஞானகாண்டப் பொருளைச் சுருக்கி இனிது விளக்குந் தமிழ்ச் சித்தாந்த சாத்திரங்கள் எவை?

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபாவிருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் பதினான்குமாம்.

96. திருவுந்தியார் அருளிச் செய்தவர் யாவர்?

உய்யவந்ததேவ நாயனார்.

97. திருக்களிற்றுப்படியார் அருளிச் செய்தவர் யாவர்?

திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்; இவர் திருவுந்தியார் அருளிச் செய்த உய்யவந்த தேவ நாயனாருடைய சீடராகிய திருவியலூர் ஆளுடைய தேவ நாயனாருடைய சீடர்.

98. சிவஞானபோதம் அருளிச் செய்தவர் யாவர்?

திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவர். இவருக்கு சுவேதனப் பெருமாள் என்பது பிள்ளைத் திருநாமம்.

99. சிவஞானசித்தியார், இருபாஇருபஃது என்னும் இரண்டும் அருளிச் செய்தவர் யாவர்?

சகலாகம பண்டிதர் என்னுங் காரணப்பெயர் பெற்ற திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியர்; இவர் மெய்கண்டதேவருடைய சீடர் நாற்பத்தொண்பதின்மருள்ளே தலைவர்.

100. உண்மை விளக்கம் அருளிச் செய்தவர் யாவர்?

திருவதிகை மனவாசகங்கடந்தார்; இவர் மெய்கண்டதேவருடைய சீடர்களுள் ஒருவர்.

101. எஞ்சி நின்ற சிவப்பிரகாசம் முதலிய எட்டும் அருளிச் செய்தவர் யாவர்?

கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியர்; இவர் தில்லைவாழ்ந்தணர்களுள் ஒருவர்; இவர் அருணந்தி சிவாச்சாரியருடைய சீடராகிய திருப்பெண்ணாடக மறைஞானசம்பந்த சிவாச்சாரியருடைய சீடர்.

102. மெய்கண்டதேவர், அருணந்தி சிவாச்சாரியர், மறைஞான சம்பந்த சிவாச்சாரியர், உமாபதி சிவாச்சாரியர் என்னும் நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவர்?

திருக்கைலாச பரம்பரைச் சந்தான குரவர் எனப் பெயர் பெறுவர்.

103. மெய்கண்டதேவருக்கு ஆசாரியர் யாவர்?

திருக்கைலாச மலையினின்றுந் தேவ விமானத்தின் மேற்கொண்டு எழுந்தருளி வந்த பரஞ்சோதி மகாமுனிவர்.

104. பரஞ்சோதி மகாமுனிவருக்கு ஆசாரியர் யாவர்?

சத்தியஞான தரிசனிகள்.

105. சத்தியஞான தரிசனிகளுக்கு ஆசாரியர் யாவர்?

சனற்குமார மகாமுனிவர்.

106. சனற்குமார மகாமுனிவருக்கு ஆசாரியர் யாவர்?

திருநந்திதேவர்.

107. திருநந்திதேவருக்கு ஆசாரியர் யாவர்?

ஸ்ரீ கண்டபரமசிவன்.
 
இது போன்ர ஆன்மீக சிந்தனை விஷயங்கலை எதிர் பார்கின்ரேன் வித்யாசமானது.
 
அருமையான தொகுப்பு.
ஆனால் முதல் 55 கேள்விகளும் அவற்றின் பதில்களும் கிடைத்தால் மகிழ்வோம்.
 
Back
Top