shivasevagan
New member
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்
16. அன்பியல்
410. அன்பாவது யாது?
ஒருவருக்குத் தம்மொடு தொடர்புடையவராய்த் தமக்கு இனியவராய் உள்ளவரிடத்தே நிகழும் உள்ள நெகிழ்ச்சியாம்.
411. உள்ளபடி ஆராயுமிடத்து நம்மோடு தொடர்புடையவராய் நமக்கு இனியவராய் உள்ளவர் யாவர்?
அநாதியே மலத்தினாலே மறைக்கப்பட்டுள்ள அறிவுந் தொழிலும் உடையவர்களாய்த் தம்வயத்தரல்லாதவர்களாய் உள்ள பசுக்களாகிய நம்மோடு அநாதியே இரண்டறக் கலந்து நின்று, நமக்கெல்லாம் நித்தியானந்தப் பெருஞ் செல்வத்தைத் தந்தருள விரும்பி, தந்தொழில்களெல்லாந் தம் பயன் சிறிதுங் குறியாது, நம் பயன் குறித்த தொழில்களாகவே கொண்டு, பெத்தநிலையிலே தாம் நம்முள்ளே அடக்கித் தாம் நமக்கு முன்னாகியும், இப்படியே என்றும் உபகரிக்கும் இயல்புடைய பெருங்கருணைக் கடலாகிய பசுபதி, சிவபெருமான் ஒருவரே. ஆதலினால் அவரொருவரே நம்மோடு என்றுந் தொடர்புடையவராய், நமக்கு நம்மினும் இனியவராய் உள்ளவர்; அவருக்கே நாமெல்லாம் உடைமைப் பொருள்; அவருக்கே நாமெல்லாம் மீளா அடிமை. ஆதலினால் அவரிடத்திற்றானே நாமெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்.
412. நாம் சிவபெருமானிடத்து எப்பொழுது அன்பு செய்தல் வேண்டும்?
இம்மனித சரீரம் பெறுதற்கு அரியதாதலாலும் இது இக்கணம் இருக்கும், இக்கணம் நீங்கும் என்று அறிதற்கு அரிதாகிய நிலையாமையுடையதாதலாலும் நாம் இடையறாது எக்காலமும் அன்பு செய்தல் வேண்டும்.
413. சிவபெருமான் இம்மனித சரீரத்தை எதன் பொருட்டுத் தந்தருளினார்?
தம்மை மனசினாலே சிந்திக்கவும், நாவினாலே துதிக்கவும், தம்மால் அதிட்டிக்கப்படுங் குருலிங்கசங்கமம் என்னும் மூவகைத் திருமேனியையுங் கண்களினாலே தரிசிக்கவும், கைகளினாலே பூசிக்கவுங் கும்பிடவும், தலையினாலே வணங்கவும், கால்களினாலே வலஞ்செய்யவும், தமது பெருமையையுஙந் தமது திருவடியார் பெருமையையுங் காதுகளினாலே கேட்கவுமே இம்மனித சரீரத்தைத் தந்தருளினார்.
414. சிவபெருமானிடத்து அன்பு எப்படி விளையும்?
பசுக்களாகிய நம்முடைய இலக்கணங்களையும், நம்மைப் பந்தித்த பாசங்களின் இலக்கணங்களையும், பசுபதியாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும், எத்துணையும் பெரிய சிவபெருமான் எத்துணையுஞ் சிறிய நமக்கெல்லாம் இரங்கி, எளிவந்து, ஓயாது என்றும் உபகரிக்கும் பெருங்கருணையையும், இவ்வியல்பின் அநந்தகோடியில் ஒரு கூறாயினும் உடையவர் பிறரொருவரும் நமக்கில்லாமையையும் இடையறாது சிந்திக்கச் சிந்திக்க, நமக்கு அச்சிவபெருமானிடத்து அன்பு விளையும்.
415. சிவபெருமானிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்கள் யாவை?
அவருடைய உண்மையை நினைக்குந்தோறும், கேட்குந்தோறுங்ம் காணுந்தோறுந் தன்வசமழிதலும், மயிர்க்கால்தோறுந் திவலை உண்டாகப் புளகங்கொள்ளலும், ஆனந்தவருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரைதடுமாறலும் பிறவுமாம்.
416. இல்வாழ்க்கை முதலியவைகளிற் புகுந்து அவ்வவைகளுக்கு வேண்டுந் தொழில்கள் செய்வோருக்கு இடையறாத வழிபாடு எப்படிக் கூடும்? அவர் யாது செய்வார்?
கழைக்கூத்தன் கூத்தாடும் பொழுதும் அவன் கருத்து உடற்காப்பிலே வைக்கப்பட்டிருத்தல் போல, நாம் லெளகிக கருமஞ் செய்யும் பொழுது நமது கருத்துச் சிவபெருமானிடத்தே வைக்கப் பட்டிருத்தல் வேண்டும்; இப்படிச் செய்யாதொழியின், மரண காலத்திலே சிவத்தியானஞ் சிந்திப்பது அரிதரிது.
417. சிவபெருமானை வழிபடுவோர் மரிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?
சுற்றத்தாரிடத்தும், பொருளினிடத்துங் சற்றாயினும் பற்று வையாது, சுற்றத்தாரைத் தூரத்தே இருத்தி விட்டுத், தாம் விபூதி தரித்து, மனங் கசிந்துருகக், கண்ணீர் பொழிய, உரோமஞ் சிலிர்ப்பச் சிவபெருமானைத் தியானித்து, வேத சிவாகமங்களையேனுந் தேவார திருவாசகங்களையேனுஞ் சிவ பக்தர்கள் ஓதக் கேட்டல் வேண்டும்.
418. அவர் மரிக்கும் பொழுது அவருக்கு யாது செய்தல் வேண்டும்?
அவருடைய புத்திரர் முதலானவர்களுள்ளே சிவதீக்ஷையுடையவர், மனம் ஒரு சிறிதுங் கலங்காது, அவர் நெற்றியிலே சிதம்பரம் முதலிய புண்ணிய ஸ்தலத்து விபூதி சாத்தி, அவருடம்பிலே வில்வத்தடி மண் பூசி, அவர் வாயிலே கங்காதீர்த்தம் விட்டு, அவர் தலையைத் தமது மடிமீது கிடத்தி, அவர் செவியிலே அருமருந்தாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உபதேசித்தல் வேண்டும்.
தேவாரம்
உற்றா ராருளரோ உயிர்கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்மைக்
குற்றார் ஆருளரோ.
-திருநாவுக்கரசர்-திருமுறை-4
-திருஅங்கமாலை.