விரைவாக இருநாடு உருவாகலாம்

விரைவாக இருநாடு உருவாகலாம்

தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரித்து அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதை சிங்கள அரசியல் தலைமைத்துவங்கள் விரும்பவில்லை. பேரினவாதத்தில் மூழ்கி இனவாதங்களைத் தொடர்ச்சியாக விதைத்து வருவதான செயல் விரைவாக இரு நாடுகள் என்ற வரலாற்றை எழுதுவதற்கே வழிவகுக்கும். அன்னிய ஏகாதிபத்திய சக்திகள் இலங்கைதீவை தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தது.

அவர்கள் வெளியேறிய போது அதன் அதிகாரத்தைச் சிங்களத் தலைமைத்துவங்களின் கைகளில் வழங்கி விட்டுச் சென்றதால் அவர்கள் இது சிங்கள தேசம், எங்கள் நாடு என இனவெறியால் வரிவடிவம் கொடுக்கின்றார்கள். ஆனால் இதில் தமிழினம் வாழ்ந்த வரலாற்று சுவடுகள் இன்னும் அழிந்து விடவில்லை. அது மீளவும் தமிழினம் ஆளுகிறது என்ற வார்த்தைகளை மெய்பிக்கவே செய்யும்.

இப்போது ஜனாதிபதித் தேர்தலுக்காக சிங்கள தேசம் தயாராகின்ற நிலையில், அவர்களின் பேரினவாத முகங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்ற கொள்கையை மீளவும் நிலை நாட்டுவதற்கான சூழ்ச்சிகள், அபாய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எந்த மதத் துறவியானாலும் அவர்களின் குண இயல்புகள் சாதுவாக இருக்கும். மென்போக்கான குணம் அவரின் மதகுரு என்பதற்கான அடையாளப்படுத்தல். ஆனால் பிக்குகளை இப்போது அவ்வாறு நோக்க முடியாது.

அரசகுமாரன் சித்தாத்தன் தனது அரச சுகபோகங்களை வெறுத்து போதி மாதவனாக புத்த பகவானானார். இந்த புத்த பகவானின் போதனையைப் புகட்டி நாட்டில் சாந்தி சமாதானம் ஏற்படுத்த வேண்டிய பிக்குகள் இன்று இனவாதத்தை வளர்த்து வருகின்றனர். அது கொழுந்து விட்டு எரிகிறது. ஒரு புறம் ஜே.வி.பி மறுபுறம் பிக்குகள். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தை உணராது அழித்து விடுவோம் என ஆவேசப்பட்டு நிற்கிறார்கள்.

அவர்களின் அடாவடித்தனங்களை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு அராஜகம் புரிய வைப்பதற்கான ஒரு தலைமைத்துவம் தேவை. தமிழினத்துக்கு எதிரான வில்லன் யார்? இப்போது மகிந்த மீது இந்த இனவாதிகள் மகுடம் சூட்டியிருக்கின்றனர்.

நிபந்தனைகளை விதித்து உடன்படிக்கையில் கையொப்பமிட்டு தமிழினத்திற்கு எதிராக சதிகாரச் செயல்களில் ஈடுபடுவதற்கு தங்கத் தட்டில் வைத்து தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். தேர்தல் வெற்றியும் சிங்கள ஆதிக்கமுமே இங்கு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக சிங்கள அதிகார தரப்பின் ஆதிக்கம் தமிழ் மக்களின் உரிமைகளை நலிவடையச் செய்துள்ள நிலையில் இன்னும் அதனைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான அபாய உடன்படிக்கை தான் மகிந்த கையொப்பமிட்ட உடன்படிக்கை. அது நாட்டை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும். தமிழ் மக்கள் பலமோடு இருக்கின்றனர். இலங்கைத் தீவில் இரு நிருவாகங்கள் நடைபெறுகின்றன.

இது சிங்கள நாடு எனக் கூறுவபர்கள் ஓமந்தைக்கு அப்பால் அனுமதியின்றி கால் வைக்க முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டம் வெறும் ஆயுதப் போராட்டமாக மட்டும் கொண்டிருக்கவில்லை.

ஒரு நாட்டின் ஆட்சியை நடத்துவதற்கான பல கட்டுமானங்களைக் கொண்டிருக்கிறது. இதனைப் போரியலுடன் தேசியத் தலைவர் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். அத்தோடு ஒட்டுமொத்த தமிழினமும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றனர். விடுதலையை விரைவாக வென்றெடுக்க வேண்டும். தேசியத் தலைவரின் காலத்தில் தமிழினம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆதங்கத்திலுள்ளனர்.

இந்நிலையில் இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்குப் பின்னோக்கியுள்ள நிலைக்கு சிறுபான்மை சமுகத்தைத் தள்ளி விட்டு இலங்கைத்தீவு எங்கும் சிங்களக் கொடியைப் பறக்க விடலாம் என மகிந்த ராஜபக்ஷ, வீரவன்ச, சோமவன்ச மற்றும் பேரினவாதப் பிக்குகள் கனவு காண்பார்களாயின் அது நிறைவேறாது.

அது அழிவுகளை ஏற்படுத்தும். தென்னிலங்கை எங்கும் ஒப்பாரி வைத்து அழவைப்பதற்கான ஒரு சூழலையே இவர்கள் ஏற்படுத்துகின்றார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர வேண்டும்.

தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சக்திகளின் துணையுடன் பலவீனப்படுத்தலாம் என்பது இவர்களது திட்டமாக இருக்கலாம். ஆனால் அது நிறைவேறப் போவதில்லை விரைவாக இரு நாடுகள் உருவாகவே அது வழியமைக்கும்.

நன்றி:மட்டு.ஈழநாதம்
 
இரண்டு நாடுகள் உருவாவதுதான் அமைதிக்கு வழி வகுக்கும் என்றால் அதை ஆண்டவன் உருவாக்கட்டும். எமது சகோதரர்கள் அமைதி பெற்று வாழட்டும்.
 
தீர்வு காண்பதை இழுத்தடித்தால் மாற்றுவழி

சர்வதேச சமூகத்தை வலியுறுத்தப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடிக்குமானால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு சர்வதேசம் வெளிப்படையான அங்கீகாரத்தை வழங்க வேண்டுமென கோருவதைத் தவிர தமிழ் மக்களுக்கு மாற்று வழி எதுவுமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் இழுத்தடிக்கும் போக்கை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

22.02.02 அன்று ஸ்ரீலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதை அடுத்து, படிப்படியாக சமாதான நடைமுறையில் ஈடுபடுவது என்று இணக்கம் காணப்பட்டவிதத்தில், சமாதான முயற்சியின் முதல்கட்டம் ஆரம்பமானது. யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முக்கிய அம்சமாக, இயல்பு நிலையை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குவதன் அவசியத் தேவையுடன் இணைந்ததான சண்டை நிறுத்தம் அமைந்தது. இது தொடர்பாக யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முகப்புரையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மோதலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் வாழ்க்கை நிலைவரத்தை விருத்தி செய்வது மற்றும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஸ்ரீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் அங்கீகரிக்கின்றனர்".

உடன்படிக்கையின் இரண்டாவது ஷரத்தில் "இயல்பு நிலையை மீண்டும் ஏற்படுத்தும் நடவடிக்கைகள்" என்ற தலைப்பின் கீழ் ஸ்ரீலங்கா அரசாங்கமும் முக்கிய நிபந்தனைகள் பலவற்றை ஏற்றுக் கொண்டது. பாடசாலைக் கட்டிடங்களிலிருந்து படையினர் வெளியேறுவது, அவற்றை அவற்றின் உரிய தேவைகளுக்குப் பயன்படுத்த திருப்பிக் கொடுப்பது; ஏனைய பொதுக் கட்டிடங்களையும் அவற்றுக்குரிய தேவைகளுக்குப் பயன்படுத்த திருப்பிக் கொடுப்பது; பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் குறிப்பாக செறிவாக மக்கள் வாழும் நகரங்கள், பட்டினங்களில் குடிமக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கக்கூடிய முறையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவது ஆகியவற்றை மீளாய்வு செய்வது; ஒதுக்கப்பட்ட சில இடங்களைத்தவிர இரவு, பகல் மீன்பிடித்தலுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவது ஆகியன ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளாகும்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்றரை ஆண்டுகள் சென்ற பின்னரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் இந்த நிபந்தனைகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இதன்காரணமாக, இலட்சக்கணக்கான பொதுமக்கள் மீளக்குடியமர முடியாது முகாம்களில் அகதிகளாக பரிதாப நிலையில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். மற்றும் சுதந்திரமாக தங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை தொடர முடியாது உள்ளனர்.

சமாதான முயற்சியை படிப்படியாக மேற்கொள்வது என்று சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அதன் முதற்கட்டமாக யுத்த நிறுத்த உடன்படிக்கையைச் செய்துகொண்டதையடுத்து யுத்த நிறுத்த உடன்படிக்கையின்படி போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் இயல்புநிலையை மீண்டும் ஏற்படுத்துவதான நிபந்தனையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியிருந்தும் கூட விடுதலைப் புலிகள் அடுத்த கட்டமாக நேரடிப் பேச்சுகளை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

முறையான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவிருந்த சமயத்தில், பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணுவது தொடர்பான பேச்சுகளுக்கு முன்னோடியாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் பாரிய அளவிலான மீளக் குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய பணிகளை மேற்கொள்வது குறித்தும் தீர்வு காணுவதே இடைக்கால நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது. இப்புரிந்துணர்வு இருந்தும் கூட, இது தொடர்பாக தாம் சில அரசியல் நெருக்கடிகளை நோக்குவதாக ஐ.தே.க. அரசாங்கம் தெரிவித்ததை அடுத்து, கூட்டுச் செயலணிகளை அமைக்கும் திட்டத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் இணங்கியது. இவ்விணக்கம் காரணமாக இடைக்கால நிர்வாகம் என்பதற்குப் பதிலாக, உப குழுக்கள் உருவாகின.

பல மாதங்கள் உபகுழுக்கள் இயங்கி வந்தபோதும், எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா அரசு தவறியது; சில சமயங்களில் அம்முடிவுகளை செயலற்றதாக்கும் நிலைப்பாட்டையும் அரசாங்கம் எடுத்தது.

இத்திருப்திகரமற்ற நிலைவரத்தில் ஸ்ரீ லங்கா அரசு ஒழுங்கு செய்த வாஷிங்டனில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகள் கூட்டத்திற்கு விடுதலைப் புலிகளை அழைக்காது, தமிழ் மக்கள் ஓரங்கட்டப்பட்டனர். இதனால் 2003 ஏப்ரலில் சமாதானப் பேச்சு நடைமுறையிலிருந்து விலகாமல், சமாதானப் பேச்சுகளில் பங்குபற்றுவதை விடுதலைப் புலிகள் இயக்கம் இடை நிறுத்தி வைத்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் அனுசரணையாளரான நோர்வே அரசுடனும் மற்றும் அனுசரணையாளர் ஊடாக ஐ.தே.மு. அரசுடனும் தொடர்புகளை வைத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கம் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை எழுத்து மூலம் முன் வைத்தது. 31.10.2003 அன்று விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த யோசனைகள் மீது பேச்சுகளை ஆரம்பிக்க திகதி நிர்ணயிக்கும் படி கேட்டுக் கொண்டது. சமாதான நடைமுறையின் போது எழுத்து மூலமான யோசனைகளை விடுதலைப் பலிகள் இயக்கம் முன்வைத்தது இதுவே முதல் தடவை என்பதைக் குறித்துக் கொள்ளவேண்டும்.

விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து நான்கு தினங்களுக்குள் 04.11.2003 அன்று ஐ.தே.மு. அரசைச் சேர்ந்திராத ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருந்த ஐ.தே.மு. அரசின் பொறுப்பிலிருந்து பாதுகாப்பு, உள்துறை, ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவ்வமைச்சுகள் சமாதான நடைமுறையுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. பொறுப்பேற்ற அமைச்சுகளை தனது பொறுப்பிலும் மற்றும் தனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே பகிர்ந்து கொண்டார்.

இதனையடுத்து, சமாதான நடைமுறைக்கு யார் பொறுப்பு என்பதில் தெளிவற்ற நிலை காணப்படுவதாகக் கூறி, அனுசரணையாளரான நோர்வே அரசாங்கம் தனது பங்களிப்பை இடைநிறுத்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இக்கட்டான நிலையில் ஐ.தே.மு. அரசு கவிழ்க்கப்பட்டது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு 2004 ஏப்ரலில் புதிய அரசு பதவியேற்றது. ஜனாதிபதி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பதவிக்கு வந்தது. பொதுசன முன்னணியும் ஜே.வி.பி.யும் இணைந்த புதிய அரசாங்கம். ஜே.வி.பி. சமாதான நடைமுறைக்கு எதிராக பிரசாரம் செய்ததும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதும் தெரிந்ததே.

ஐ.ம.சு.மு. அரசாங்கம் விடுதலைப் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனை மற்றும் சமாதான நடைமுறைக்கு எதிரான தனது போக்கை கடினமாக்கியது. சமாதான நடைமுறையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைக்கு இதுவே காரணமாகும். பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் குறித்து பேச்சுகளை ஆரம்பிக்கும் படி அரசைக் கோரியது.

இது தொடர்பாக அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுக்களில் உருவாகும் உடன்பாட்டுக்கு தனது ஆதரவு இருக்கும் என்று ஐ.தே.க. பகிரங்கமாக அறிவித்தது.

இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதைத் தாம் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பதாக விடுதலைப் புலிகள் திரும்பத் திரும்ப தெரிவித்தனர். பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டவுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகள் தொடர்பாக அரசாங்கம் சமர்ப்பிக்கும் முன்மொழிவுகளைப் பரிசீலிக்கத் தயாராகவிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடையே தெளிவற்ற நிலைப்பாடு, முரண்பாடுகள், திட்டவட்டமான செயல்பாடு குறித்து, நேர்மையான அறிவிப்புகளை விடுக்கமுடியாத நிலை ஒருபுறம், இதனிடையே அரசாங்கத்தின் இயலாத்தன்மை ஆகியனவே சமாதான நடைமுறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பிரதான முட்டுக்கட்டைகளாக இருந்தன.

ஜனாதிபதி 4.11.2003 அன்று ஐ.தே.மு. அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்காவிட்டால் விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டபடி 2003 நவம்பரில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியிருந்திருக்கும். இந்த அதிருப்திகரமான நெருக்கடி நிலை இன்னும் தொடர்கிறது.

இதேவேளை, யுத்த நிறுத்த உடன்படிக்கை ஷரத்து 1.8 இன்படி துணை இராணுவப் படைகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இதற்கு முரணாக ஸ்ரீ லங்கா ஆயுதப் படையினர் புதிய துணை இராணுவப் படைகளுக்கு பாதுகாப்பு வழங்கி வளர்த்து வருகின்றனர். யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஆபத்துக்குள்ளாக்கும் விதத்தில் கொலைகளும் பாரிய சம்பவங்களும் இடம் பெறுவதற்கு இது உதவுகின்றது. இச் சம்பவங்கள் இன்னும் தொடர்கின்றன.

சமாதானப் பேச்சுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாத நேரத்திலும் யுத்த நிறுத்த உடன்படிக்கை நிலைத்து நிற்பது சந்தேகமான சூழ்நிலையிலும் தான் கடல்கோள் தாக்கியது. உயிரிழந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், சொத்து அழிவுகளில் 60 சதவீதத்திற்கு மேல் வடக்கு, கிழக்கில் கடல்கோளினால் ஏற்பட்டன. இரு தசாப்த கால பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கடல்கோளினால் ஏற்பட்ட பாதிப்பு பாரதூரமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியது. இரு தசாப்த கால யுத்தம் வடக்கு, கிழக்கின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை முற்றாக அழித்த நிலையில் கடல்கோள் மேலும் துன்பத்தை ஏற்படுத்தியது.

கடல்கோளினால் ஏற்பட்ட பாரிய அழிவுக்கு மத்தியில், அழிவிலிருந்து ஏதாவது ஆக்கபூர்வமான விளைவுகள் வரலாம் என்று நம்பப்பட்டது. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஒன்றாகப் பணியாற்றும் வாய்ப்பை கடல்கோள் தந்திருப்பதாக சர்வதேச சமூகம் சரியாக இனங் கண்டது. இவ் வாய்ப்பு முன்னர் இருக்கவில்லை.

அரசும் விடுதலைப் புலிகளும் வடக்கு, கிழக்கில் சம்பந்தப்படக் கூடியதான பொதுக் கட்டமைப்பு ஒன்றை சர்வதேச சமூகம் முன்மொழிந்தது. சமாதான நடைமுறையை மீண்டும் ஆரம்பிக்கக் கூடிய உகந்த சூழலை பொதுக் கட்டமைப்பு உருவாக்கும் என்றும் சர்வதேச சமூகம் எண்ணியது. நீண்ட தாமதத்திற்குப் பின்னர், பொதுக் கட்டமைப்பு உடன்பாட்டுக்கு அரசாங்கம் சம்மதித்தது. பொதுக் கட்டமைப்புக்கு சர்வதேச ஆதரவு வெளிப்படையாக இருந்தது.

கடற்கரையிலிருந்து 2 கிலோ மீற்றர் பிரதேசத்தில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் நிவாரண வேலைகளை மேற்கொள்ளும் சாதாரண நிர்வாக இயந்திரமே இப் பொதுக் கட்டமைப்பு. இதன் உருவாக்கம், அரசிலிருந்து ஜே.வி.பி. வெளியேற வழி வகுத்தது. பின்னர் ஜே.வி.பி., உயர் நீதிமன்றம் சென்றது. பொதுக் கட்டமைப்பின் சில ஷரத்துகள் தொடர்பாக இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. கடல்கோள் வடக்கு, கிழக்கை தாக்கி ஒன்பது மாதங்கள் சென்று விட்டன, பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்கள் தொடருகின்றன. பொதுக் கட்டமைப்புக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் தொடர்பே இல்லை.

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. தனக்கு ஆதரவு திரட்டு முகமாக பிரதமர் ஜே.வி.பி. யுடனும் ஜாதிக ஹெல உறுமயவுடனும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்துள்ளார். அப்புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் முக்கிய கருப் பொருள் பின் வரும் அடிப்படையில் அமைந்துள்ளன.

* ஒற்றையாட்சி அரசமைப்புத் தன்மையை பேணுதல்.

* அதிகாரப் பகிர்வு, சமஷ்டி மற்றும் சுய நிர்ணயம் ஆகியவற்றை நிராகரித்தல்.

* தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் என்று அங்கீகரிக்கப்படுவதை நிராகரித்தல்.

* விடுதலைப் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகளை முற்றாக நிராகரிப்பது.

* கடல்கோள் பொதுக் கட்டமைப்பைக் கைவிடுவது.

* யுத்த நிறுத்த உடன்படிக்கையை முற்றாக மாற்றியமைப்பது.

* நேர்வே அரசின் அனுசரணையாளர் பங்களிப்பு குறித்து மீள மதிப்பீடு செய்தல்.

மேற்கூறப்பட்ட நிலைப் பாடுகளின் கூட்டு மொத்த விளைவு, தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் சாத்தியத்துக்கான கதவுகளை மூடுவதாகவே இருக்கும் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியது இல்லை.

சமாதான நடைமுறை ஆரம்பமானதிலிருந்து இடம் பெற்று வரும் அரசியல் நிகழ்வுகள், தமிழ் மக்களிற்கான மனிதாபிமான தேவைகளாக இருக்கட்டும் அல்லது சமாதான நடைமுறையாக இருக்கட்டும், தமிழ் மக்களுடன் சேர்ந்து ஒரு கூட்டு முயற்சியை மேற்கொள்ளக் கூடிய மன உறுதி மற்றும் திறன் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கிடையாது என்பதை மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. விடுதலைப்புலிகளுடன் நல்ல உள்ளத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ்மக்களின் கூட்டு உறுதிப்பாட்டை வலுவற்றதாக்கும் நடவடிக்கையைத் தான் மேற்கொண்டு வருகின்றது.

தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக்கையிழந்த நிலையில் தற்போதைய நிலைவரம் வந்துள்ளது. தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு ஒன்றைக் காணவே தமிழ்மக்கள் மிகவும் விரும்புகின்றார்கள். அவ்வாறு காணப்படும் தீர்வு, நீண்ட காலமாக தாங்கள் அடைந்து வரும் துன்ப, துயரங்களை ஈடு செய்யக்கூடியதாகவும் தங்களின் சட்டபூர்வமான அபிலாஷைகளைத் திருப்தி செய்வதாக அமைவதுடன், அத்தீர்வு நீதியானதாகவும் நிலைத்து நிற்கக் கூடியதாகவும் அமைய வேண்டும் என்றும் தமிழ்மக்கள் விரும்புகின்றார்கள். அவ்வாறான ஒரு தீர்வு கிடைப்பதை உறுதி செய்வதற்கு முன்வருமாறு தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக்காணுவதற்கு அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டு போகுமானால், தமிழ் மக்களுக்குள்ள ஒரேயொரு மாற்றுவழி, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு வெளிப்படையாக அங்கீகாரம் வழங்கும்படி சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுப்பதாகவே அமையும்.
 
இளையவன் said:
தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக்காணுவதற்கு அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டு போகுமானால், தமிழ் மக்களுக்குள்ள ஒரேயொரு மாற்றுவழி, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு வெளிப்படையாக அங்கீகாரம் வழங்கும்படி சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுப்பதாகவே அமையும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயணத்துக்கு தடைவிதித்துள்ள சர்வதேசமா தனி நாட்டை அங்கீகரிக்கப்போகிறது?
 
மக்களுக்கு நல்வழி பிறக்குமானால்.... அனைவருக்கும் சந்தோசமே
 
Back
Top