திருவாசகம் சிம்பொனி - இசைஞானி இளையராஜா

தகட்டில் முதல் பாடலாக இருப்பது "பூவார் சென்னி" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடல் ஏன் முதலிடத்தில் இருக்கிறது என்பது பாடலின் தொடக்கத்திலேயே புரிந்து விடுகிறது. பெரிய அலை போல இசை வந்து நம்மை பரவசக் கடலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. தப்பிக்க முடியவில்லை. பழைய நூற்றாண்டுத் தமிழ் மேற்கத்திய இசையில் அரியணை போட்டு அமர்ந்து கொள்கிறது.

இந்தப் பாடல் இளையராஜாவின் குரலுக்கு அழகாக பொருந்தி வருகிறது. மிகவும் சிறப்பு. இறைவனின் சிறப்புகளைச் சொல்லும் பாடல்கள். உணர்ச்சியின் உச்சியில் நின்று கொண்டு பாடியிருக்கிறார். அதனால்தான் பாடல் பெரியதாக இருந்தாலும் முடியும் வரை நாம் மெய் மறந்து போகிறோம்.

பீத்தோவானின் கொஞ்சம் சிம்பொனி கேட்டிருக்கிறேன். ரொட்ஜர்ஸ் அண்டு ஹாமர்ஸின் பாடல்கள் கொஞ்சமும் கேட்டதுண்டு. இவர்கள் மேற்கத்திய இசையில் ஊறித் திளைத்தவர்கள். அதே நேரத்தில் அவர்களும் மேற்கத்தியர்கள். அந்த அளவிற்கு பிசகாமல் செய்திருக்கிறார் இளையராஜா. இது The King and I படத்தில் சீன இசையைக் கையாண்ட முறைமையைப் போல சிறப்பாக இருக்கிறது. கேட்டவர்கள் எல்லாம் இந்தப் பாடலுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள்.

இரண்டாவது வருகின்ற பாடல் "பொல்லா வினையேன்" எனத் தொடங்கும் பதிகம். ஆனால் ஆங்காங்கே தேவைக்கேற்றவாரு கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக வேறு பதிகங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் அருமையாக இருக்கிறது. இந்தப் பாடல்தான் ஆறு பாடல்களிலும் நீளமானது. காரணமில்லாமலில்லை. தமிழ் வரிகளோடு ஆங்கில வரிகளும் கலந்து உணர்ச்சிக் கலவையாக வரவேண்டுமே! அதற்குத் தோள் கொடுத்திருக்கிறார்கள்....இல்லையில்லை உயிர் கொடுத்திருக்கிறார்கள் உடன் பாடிய ராய் ஹார்கோடும் குழுவினரும்.

திரையிசையில் இளையராஜாவின் முத்திரைக் கைத்திறன்கள் உண்டு. அவற்றை இலக்கண வரம்பிற்குட்பட்ட இந்த இசைக்கோர்வையில் காட்டியிருக்கிறார். மெல்லிய ஓடையாகத் தொடங்கும் பாடல் தடாலென அருவியாகப் பெருகி வழிந்து உணர்ச்சிப் பிரவாகமாய் மடை திறக்கிறது. விமானத்தில் பறந்து கொண்டு கடலைப் பார்க்கும் பரவசம். இந்த வெளியீட்டில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான்.

இது நல்லது அது நல்லது என்றெல்லாம் பிரித்துச் சொல்ல முடியாத அருமையான பாடல். ஒவ்வொரு வரியையும் பாடுகையில், அந்த வரியும் புரிகையில் (இதற்கு செய்யுட்களோடு கொஞ்சம் பழக்கமிருக்க வேண்டும்.) பரவசமே! அதனால்தான் கேட்கும் பொழுது பெரிய பாடலாக இருந்தாலும் அலுப்புத் தெரியவில்லை. ஒரே பாடலாக இல்லாமல் நாலைந்து பாடல்களாக கேட்பது போல உள்ளது இன்னமும் சிறப்பு. நமசிவாய வாழ்க பதிகத்தை கே.வீ.மகாதேவன் இசையில் பி.சுசீலா பாடக் கேட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு வேறு சிலர் இசையில் வேறு சிலர் பாடவும் கேட்டதுண்டு. ஆனாலும் மகாதேவன் போட்ட மெட்டுதான் எனக்கு வரும். அவ்வளவு உணர்ச்சியும் பண்பாடும் கலந்த இசை. இனிமேல் இளையராஜாவின் மெட்டும் நினைவிற்கு வரும். இரண்டுக்கும் அடிப்படை இசைக் கோர்ப்பில் வேறுபாடு இருந்தாலும் அவை சொல்ல வந்ததைச் சொல்லி விட்டன. மிகச் சிறப்பு.

இன்னும் நான்கு பாடல்கள் இருக்கின்றன. முடிவுரை வேறு. அடுத்த பதிப்பில் மற்ற நான்கு பாடல்களையும் அலசலாம்.
 
உண்மையில் ஓவ்வொரு இந்துக்களின்
இல்லத்திலும் இருக்க பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இது.
நண்பர்களே மிக்க நன்றி இப்பாடல்களை பதிவிரக்கம் செய்ய உங்கள்
தள சுட்டிகள் பேருதவியாக இருந்தன.

நண்பர் பிரதீப் கூறியது போல சராவுண்ட் சிஸ்தம் ஹை பையில் , மங்களான ஒளியில் ஒரு ராக்கிங் சேரில் உட்கார்ந்து மெய்மறந்து கேட்டு இன்புருங்கள்

மனோ.ஜி
 
Last edited:
மனோஜி, என்னைக் கேட்டால், இந்துக்கள் என்று சொல்வதைக் காட்டிலும் தமிழர்கள் அனைவரும் போற்றி வைத்திருக்க வேண்டிய கலைப் படைப்பு இது என்று சொல்வேன்.
 
ப்ரதீப்ஜி & ராகவன்ஜி நன்றிகள். படித்து மகிழ்ந்தேன். இனி கேட்டு மகிழ வேண்டும்.

இளையராஜாவை மதிக்க வேண்டுமானால், இந்த தகடுகளை விலை கொடுத்து வாங்க வேண்டும் அல்லது வாங்கிப் பரிசளிக்க வேண்டும். சுஜாதாகூட இதை வலியுறுத்தி இருக்கிறாரே!

===கரிகாலன்
 
gragavan said:
மனோஜி, என்னைக் கேட்டால், இந்துக்கள் என்று சொல்வதைக் காட்டிலும் தமிழர்கள் அனைவரும் போற்றி வைத்திருக்க வேண்டிய கலைப் படைப்பு இது என்று சொல்வேன்.

சரியாகச் சொன்னீர்கள் ராகவன். இந்த முயற்சி மதங்கள் கடந்தது. இதை தயாரித்தவர் ஜெகத் கஸ்பார் எனும் கிருத்துவர் அவர் சொன்னதும் இது மதத்திற்காக படைக்கப்பட்டதல்ல - தமிழுக்காக தயாரிக்கப்பட்ட படைப்பு.

ஊருக்கு சென்ற பின் முழுமையாக கேட்டுவிட்டு எனது உணர்வுகளை பதிக்கிறேன்
 
மூன்றாவது பாடல். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் சசிரேகாவும் பாடிய விழியில் விழுந்து என்று தொடங்கும் பாடல் எல்லாரும் கேட்டிருப்பீர்கள். அப்படி ஒரு பாடல்தான் மூன்றாம் பாடல். அதாவது அந்தப் பாடலில் ஆண்குரலும் பெண்குரலும் இணைந்து இழைந்து தேனாக ஒழுகும். சசிரேகாவும் இளையாராஜாவும் அருமையாகச் செய்திருப்பார்கள்.
ஆனால் "பூவேறு கோனும்" எனத் தொடங்கும் இந்தப் பாடலில் சசிரேகாவிற்கு மாற்றாக பவதாரிணி. உச்சரிப்பு தெளிவாக இருந்தாலும் ஒரு பிண்ணனிப் பாடகியாக பவதாரிணி செல்ல வேண்டிய தொலைவு இன்னமும் நிறைய என்பது எனது கருத்து. இளையராஜாவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். சித்ராவையாவது பாட வைத்திருக்கிலாம். ஆனாலும் தமிழர் என்பதால் என்னுடைய வாக்கு சசிரேகாவிற்கு. இளையராஜாவும் ஒரு தந்தைதானே. இருந்தாலும் ரசிக்கத்தக்க ஒரு பாடல்.

"உம்பர்கட்கரசே" எனத் தொடங்கும் பாடல் நான்காவதாக வருகிறது. எனது கருத்தில் இதுதான் அனைத்துப் பாடல்களிலும் இறுதியாக வருவது. இளையராஜாவே பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் ஜேசுதாசின் குரலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அவரை இளையராஜா பயன்படுத்தியிருக்கலாம். அப்படி அவர் பாடியிருந்தால் இந்தப் பாடல் மிகவும் சிறப்பாக இருந்திருக்குமென்பது எனது கருத்து.

நல்ல வேளையாக அடுத்து வரும் பாடலை இளையராஜா குழுவினருக்குக் கொடுத்து விட்டார். நல்ல வேளையாக என்று சொல்வதற்கு எனக்கே வருத்தமாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்தப் பாடல் சற்று சுறுசுறுப்பாக இருக்கிறது. பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது பாடும் "முத்து நாற்றமாம்" எனத் தொடங்கும் பாடல். மொத்தம் மூன்று பாடகர்களும் மூன்று பாடகிகளும். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி, ஆஷா, காயத்ரி ஆகியோர் பாடியிருக்கின்றார்கள்.
உன்னி கிருஷ்ணன் பாடியிருக்கின்றார் என்பது பெயர்ப் பட்டியலைப் பார்த்தால்தான் தெரிகிறது. மது பாலகிருஷ்ணன் குரலெடுத்துப் பாடியிருக்க வேண்டும். நம்மை ஆச்சரியப் படுத்துகிறவர் விஜய் ஜேசுதாஸ். நல்ல குரல்வளம். முன்னுக்கு வருவதற்கு வாய்ப்புகள் நிறைய. வருவார். பெண்களில் மஞ்சரி சிறப்பாகவும் மற்றவர்கள் நன்றாகவும் செய்திருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஆஷாவின் குரலையும் காயத்ரியின் குரலையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

சுண்ணமிடிக்கையில் பாடும் பாடலாதலால் உலக்கையிடிக்கும் ஒலியைத் தாளமாக வைத்துப் போட்டிருக்கிறார். இது அவர் முதல் திரைப்படத்திலேயே செய்து விட்டது. அன்னக்கிளி படத்தில் வரும் "முத்துச் சம்பா" பாடலைத்தான் சொல்கிறேன். அதிலும் உலக்கைச் சத்தமே தாளமாக வரும். உற்சாகமான பாடல்.

கடைசிப் பாடலைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். காரணம் அதில் இல்லாத ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்து பலர் இளையராஜாவை வீண் வம்புக்கு இழுக்கின்றார்கள். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
 
மிகச் சரியாகச் சொன்னீர்கள் ராகவன். நானும் என் பதிவில் இதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். பவதாரிணி சில உற்சாகமான பாடல்களைப் பாடும்போது நன்றாகவே பாடுகிறார். உ.ம். காதலுக்கு மரியாதை படத்தில் வரும் "இது சங்கீதத் திருநாளோ" பாடல். ஆனால் உணர்வுகள் என்று வரும்போது "பயதாரிணி" ஆகி விடுகிறார். இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமான தமிழர் என்று நான் கருதுவது உலோகக் குரல்களில் அனுராதா ஸ்ரீராம், மற்றவர்களில் ஹரிணி. முறையான சங்கீதப் பயிற்சி பெற்ற இவர்களில் யாருக்கு இந்தப் பாடல் போயிருந்தாலும் கலக்கி இருப்பார்கள். பவதாரிணியும் தேசிய விருது வாங்கிய பாடகியானாலும் நீங்கள் சொன்னது போல் இளையராஜாவும் ஒரு தந்தைதானே... :)
gragavan said:
"உம்பர்கட்கரசே" எனத் தொடங்கும் பாடல் நான்காவதாக வருகிறது. எனது கருத்தில் இதுதான் அனைத்துப் பாடல்களிலும் இறுதியாக வருவது. இளையராஜாவே பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் ஜேசுதாசின் குரலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அவரை இளையராஜா பயன்படுத்தியிருக்கலாம். அப்படி அவர் பாடியிருந்தால் இந்தப் பாடல் மிகவும் சிறப்பாக இருந்திருக்குமென்பது எனது கருத்து.
ஒரு இசையமைப்பாளர் தனது பாடலை யார் பாடுவது என்று முடிவெடுக்கும் முன் நிறைய யோசிக்கிறார். குறிப்பாகத் தனது கனவுப் படைப்புகளைப் படைக்கும்போது சில நேரங்களில் தான் கொண்டு வரத் துடிக்கும் உணர்வுகளை மற்றவர்களிடம் கொடுப்பதற்குப் பதில் தானே பாடலாம் என்று நினைக்கிறார். நேற்று மீண்டும் இந்தப் பாடலைத் தனிமையில் கேட்டுப் பார்த்தேன். இந்தப் பாடல் மிக மெதுவாகச் செல்வதால் மற்ற பாடல்களைப் போல் ஈர்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நடுவில் வரும் வரிகளைக் கேளுங்கள், நான் உன்னைக் கட்டினேன், என்னை விட்டு நீ எங்கும் செல்ல இயலாது என்று பெருமிதமும் ஏக்கமும் பொங்கும் வரிகளில் குரலை விட உணர்வுகள்தான் முன்னிற்கின்றன. ஒரு வேளை ஜேசுதாஸ் இளையராஜா நினைத்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நிச்சயமில்லை.
gragavan said:
நல்ல வேளையாக அடுத்து வரும் பாடலை இளையராஜா குழுவினருக்குக் கொடுத்து விட்டார். நல்ல வேளையாக என்று சொல்வதற்கு எனக்கே வருத்தமாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்தப் பாடல் சற்று சுறுசுறுப்பாக இருக்கிறது. பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது பாடும் "முத்து நாற்றமாம்" எனத் தொடங்கும் பாடல். மொத்தம் மூன்று பாடகர்களும் மூன்று பாடகிகளும். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி, ஆஷா, காயத்ரி ஆகியோர் பாடியிருக்கின்றார்கள்.
ஏன் உங்களுக்கு இப்படித் தோன்றியது என்று புரியவில்லை. இந்தப் பாடலே குழுவினருக்காக உருவாக்கப் பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்கு முன் ஒரு முறை இந்தப் பதிகங்களை மக்கள் குழுவாகக் குரலெடுத்து வேறொரு மெட்டில் பாடியதைக் கேட்டிருக்கிறேன். மேலும் குழுவினராகப் பாடுவதாலும் உற்சாகம் மட்டுமே உணர்வாக இருப்பதாலும் இதில் இளையராஜா தானே பாடுமளவு சரக்கு இல்லை. சுறுசுறுப்பு என்பது இளையராஜா பாடாததால் இல்லை. பாட்டின் இயல்பானதால் இருக்கிறது. இந்தப் பாடல்களின் வெற்றி குரலினிமையில் இல்லல, உச்சரிப்பிலும் உணர்ச்சி வெளிப்பாட்டிலும் இருக்கிறது. பின்னணி இசையே இல்லாமல் உலக்கைச் சத்தம் மட்டுமே கொண்டு இப்பாடல் துள்ளுவதை நான் கேட்டிருக்கிறேன்.
gragavan said:
உன்னி கிருஷ்ணன் பாடியிருக்கின்றார் என்பது பெயர்ப் பட்டியலைப் பார்த்தால்தான் தெரிகிறது. மது பாலகிருஷ்ணன் குரலெடுத்துப் பாடியிருக்க வேண்டும். நம்மை ஆச்சரியப் படுத்துகிறவர் விஜய் ஜேசுதாஸ். நல்ல குரல்வளம். முன்னுக்கு வருவதற்கு வாய்ப்புகள் நிறைய. வருவார். பெண்களில் மஞ்சரி சிறப்பாகவும் மற்றவர்கள் நன்றாகவும் செய்திருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஆஷாவின் குரலையும் காயத்ரியின் குரலையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சுண்ணமிடிக்கையில் பாடும் பாடலாதலால் உலக்கையிடிக்கும் ஒலியைத் தாளமாக வைத்துப் போட்டிருக்கிறார். இது அவர் முதல் திரைப்படத்திலேயே செய்து விட்டது. அன்னக்கிளி படத்தில் வரும் "முத்துச் சம்பா" பாடலைத்தான் சொல்கிறேன். அதிலும் உலக்கைச் சத்தமே தாளமாக வரும். உற்சாகமான பாடல்.
முன்னர் சொன்னது போல் இந்தப் பாடல் குழுவினருக்காகவே படைக்கப் பட்டது. இதில் மஞ்சரியின் குரல் நிறைய இடங்களிலும் மற்றோரின் குரல்கள் ஓரிரண்டு இடங்களிலும் அடையாளம் காணக் கிடைக்கிறது. அனைவருமே அருமையாகப் பாடி இருக்கிறார்கள்.
gragavan said:
கடைசிப் பாடலைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். காரணம் அதில் இல்லாத ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்து பலர் இளையராஜாவை வீண் வம்புக்கு இழுக்கின்றார்கள். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இது என்னய்யா புதுக்கூத்து? பொன்னியின் செல்வனில் வரும் திருமலையைப் போல் வீர வைணவர்கள் யாராவது குரல் கொடுக்கிறார்களா என்ன?
 
pradeepkt said:
ஒரு இசையமைப்பாளர் தனது பாடலை யார் பாடுவது என்று முடிவெடுக்கும் முன் நிறைய யோசிக்கிறார். குறிப்பாகத் தனது கனவுப் படைப்புகளைப் படைக்கும்போது சில நேரங்களில் தான் கொண்டு வரத் துடிக்கும் உணர்வுகளை மற்றவர்களிடம் கொடுப்பதற்குப் பதில் தானே பாடலாம் என்று நினைக்கிறார். நேற்று மீண்டும் இந்தப் பாடலைத் தனிமையில் கேட்டுப் பார்த்தேன். இந்தப் பாடல் மிக மெதுவாகச் செல்வதால் மற்ற பாடல்களைப் போல் ஈர்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நடுவில் வரும் வரிகளைக் கேளுங்கள், நான் உன்னைக் கட்டினேன், என்னை விட்டு நீ எங்கும் செல்ல இயலாது என்று பெருமிதமும் ஏக்கமும் பொங்கும் வரிகளில் குரலை விட உணர்வுகள்தான் முன்னிற்கின்றன. ஒரு வேளை ஜேசுதாஸ் இளையராஜா நினைத்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நிச்சயமில்லை.
கண்டிப்பாக. ஒரு இசையமைப்பாளருக்கு பாடகரைத் தேர்வு செய்யும் உரிமை முழுமையாக உள்ளது. அதில் தவறேதுமில்லை. ஒரு இசை ரசிகனாகக் கேட்கையில் இளையராஜாவின் குரலும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதே எனது கருத்து. அவ்வளவே. ஜேசுதாஸ் சிறப்பாகவும் செய்யலாம். செய்யாமலும் போகலாம்.
 
pradeepkt said:
ஏன் உங்களுக்கு இப்படித் தோன்றியது என்று புரியவில்லை. இந்தப் பாடலே குழுவினருக்காக உருவாக்கப் பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்கு முன் ஒரு முறை இந்தப் பதிகங்களை மக்கள் குழுவாகக் குரலெடுத்து வேறொரு மெட்டில் பாடியதைக் கேட்டிருக்கிறேன். மேலும் குழுவினராகப் பாடுவதாலும் உற்சாகம் மட்டுமே உணர்வாக இருப்பதாலும் இதில் இளையராஜா தானே பாடுமளவு சரக்கு இல்லை. சுறுசுறுப்பு என்பது இளையராஜா பாடாததால் இல்லை. பாட்டின் இயல்பானதால் இருக்கிறது. இந்தப் பாடல்களின் வெற்றி குரலினிமையில் இல்லல, உச்சரிப்பிலும் உணர்ச்சி வெளிப்பாட்டிலும் இருக்கிறது. பின்னணி இசையே இல்லாமல் உலக்கைச் சத்தம் மட்டுமே கொண்டு இப்பாடல் துள்ளுவதை நான் கேட்டிருக்கிறேன்.

முன்னர் சொன்னது போல் இந்தப் பாடல் குழுவினருக்காகவே படைக்கப் பட்டது. இதில் மஞ்சரியின் குரல் நிறைய இடங்களிலும் மற்றோரின் குரல்கள் ஓரிரண்டு இடங்களிலும் அடையாளம் காணக் கிடைக்கிறது. அனைவருமே அருமையாகப் பாடி இருக்கிறார்கள்.
உண்மைதான். குழுவினருக்கான பாடல்தான் இது. அதில் ஐயமில்லை. இளையராஜா பாடாததால் இது துள்ளலான பாடலென்று நான் சொல்லவில்லை. இயல்பாகவே துள்ளலான பாடல். தொடர்ந்து இளையராஜாவின் குரலிலேயே கேட்டுக் கொண்டு வந்து சட்டென்று குரல்கள் மாறும் பொழுது அது இன்னமும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல வந்தேன்.
 
pradeepkt said:
இது என்னய்யா புதுக்கூத்து? பொன்னியின் செல்வனில் வரும் திருமலையைப் போல் வீர வைணவர்கள் யாராவது குரல் கொடுக்கிறார்களா என்ன?
இல்லையில்லை. சிலர் திருவாசகத்தின் உட்பொருளை அறியாமல் பேசுகிறார்கள். எனக்குத் தெரிந்து இதைச் சில சைவ, வைணவ மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களும் சொல்கிறார்கள். பிரச்சனையையும் அதன் விளக்கத்தையும் நான் இடுகிறேன். உங்களுக்குப் புரியும்.
 
வாழ்த்துக்கள் பிரதீப்.. அருமையாய் தமிழனின் பெருமையை விளக்கும் பக்கம்... சரியான இடத்தில் தான் பதிந்து இருக்கிறீர்கள்....
 
என்ன பிரச்சினை, என்ன விளக்கம்?சொல்ல மறந்த கதை இது!!!
 
gragavan said:
கண்டிப்பாக. ஒரு இசையமைப்பாளருக்கு பாடகரைத் தேர்வு செய்யும் உரிமை முழுமையாக உள்ளது. அதில் தவறேதுமில்லை. ஒரு இசை ரசிகனாகக் கேட்கையில் இளையராஜாவின் குரலும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதே எனது கருத்து. அவ்வளவே. ஜேசுதாஸ் சிறப்பாகவும் செய்யலாம். செய்யாமலும் போகலாம்.
மற்ற பாடகர்களை ஒப்பிடும்போது கண்டிப்பாக இசைஞானியின் குரல் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதுதான். மறுக்கவில்லை. ஜேசுதாசும் நிறைய பக்திப் பாடல்களை இறையுணர்வு குறையாமல் பாடி இருக்கிறார்.
 
அறிஞர் said:
வாழ்த்துக்கள் பிரதீப்.. அருமையாய் தமிழனின் பெருமையை விளக்கும் பக்கம்... சரியான இடத்தில் தான் பதிந்து இருக்கிறீர்கள்....
நன்றி அறிஞரே... கேட்டிருந்தால் உங்கள் கருத்துகளையும் இடுங்களேன்.
 
இசைத்தட்டில் இறுதியாக வருகின்ற பாடல் "புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்" என்று வருகின்ற பதிகம். இந்தப் பாடலிலும் பிரச்சனையில்லை. அதற்கு இளையராஜா இசையமைத்துப் பாடியதிலும் பிரச்சனையில்லை. ஆனாலும் பிரச்சனை செய்கிறார்கள்.

பாடல் வரிகளைக் கவனிக்க வேண்டும். "புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்" என்று தொடங்கி, அதாவது புற்றில் வாழும் பாம்பிற்கும் அஞ்சேன், "பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்" என்று வளருகிறது. வளர்ந்து "கற்றை வார் சடை எம் அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணி" என்று இறைவனைச் சொல்லி விட்டு, இந்த இறைவனைத் தவிர வேறொரு இறைவன் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் அச்சமாக இருக்கிறது என்று முடிகிறது பாடல். வரிகளைக் கீழே தருகிறேன்.

புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடையெம் அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணி
முற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைத்து எம் பெம்மார்க்கு
அற்றிலாத அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே
இந்தப் பாடல் அச்சப் பத்து என்ற தலைப்பில் வருகிறது. அதாவது தான் அச்சப்படுகின்ற பத்து விடயங்களை மாணிக்க வாசகர் அடுக்கியுள்ளார். சரி. பிரச்சனைக்கு வருவோம்.

சிவபெருமானைத் தவிர வேறொரு தெய்வம் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் மாணிக்க வாசகருக்கு ஏன் வெறுப்பு? இறையருள் பெற்றவருக்கு இதுவா பொறுப்பு? இப்படி எழுதினால் ஏது சிறப்பு? இதற்கு இசையமைக்காமல் இளையராஜா செய்திருக்க வேண்டும் மறுப்பு?
இப்பொழுது புரிந்திருக்குமே பிரச்சனை. மாணிக்கவாசகரை சாதாரண மதவெறியராக்கி, இளையராஜாவை மதப்பித்தனாக்கி பிரச்சனையைக் கிளப்புகிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் அது உண்மை போலத்தான் தோணும். ஆனால் உண்மையல்ல. காரணமென்ன? தமிழ் நூல்களின் பண்பும் தமிழ் மொழியின் செழுமையும் தான். தமிழில் நுனிப்புல் மேயக்கூடாது. வரிக்குவரி அப்படியே பொருள் கொண்டு படிக்கக் கூடாது.

காலத்தில் இஸ்லாமியர்களின் வேதமான திருக்குரானுக்கும் முந்தையது திருவாசகம் என்பதிலிருந்து அதன் பழமை விளங்கும். அதனை ஒரு கிருத்துவப் பாதிரியார் மொழிமாற்றினார் என்பதிலிருந்து அதன் பெருமை விளங்கும். சரி. பிரச்சனைக்கு என்ன விளக்கம்?

அல்லாவின் திருவருளாலே அண்ணல் (ஸல்) முகமது நபியவர்கள் திருவாக்கினின்றும் வெளிவந்தது திருக்குரான். அரபு மொழியிலே அனைவருக்கும் புரியும் வகையிலே இசைநயத்தோடு அமைந்தது திருக்குரான். அரபு மொழியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமைந்த இறையருள் நூல். அரபு மொழி அறிந்தவர் அதை உணரலாம். நல்வழி பெறலாம். அரபு மொழி அரைகுறையாகத் தெரிந்தவர் தெரிந்தவரிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். விளக்கம் கொடுக்கவும் உண்டான ஊடகங்களை இஸ்லாம் அருமையாக ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

ஆனால் திருவாசகம் அப்படியில்லை. தமிழ் மொழி வளர்ச்சி கொண்டும், இன்றைக்கு பழக்கத்தில் வலுவிழந்தும் உள்ள நிலை. பழைய செய்யுட்களைப் படிக்கையில் நல்ல தமிழறிவு உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். நாமாகத் தேடிப் போய்க் கேட்ட வேண்டியுள்ளது. ஆங்காங்கே நண்பர்கள் விளங்களை இட்டுள்ளனர். இருந்தாலும் போய்ப் பார்க்கச் சோம்பல். பார்த்த சில விளக்கங்களில் செற்றி பற்றாமை.

இந்தப் பிரச்சனை எழுப்பியதும் ஒரு நண்பர் வியந்து சொன்னதை இங்கே தருகிறேன். "ஆகா! என்னே படைப்புச் சுதந்திரம். வைரமுத்துவோ வாலியோ எழுதியிருந்தால் ஈகோ பிரச்சனையில் வரிகளை மாற்றுவதில் மறுப்பு வரலாம். யாரோ மாணிக்க வாசகராமே. புது ஆள்தானே. இளையராஜா படக்கென்று மாற்றி எழுதி வாங்கியிருக்கலாமே!" கிண்டலாக அந்த நண்பர் சொன்னது உண்மை நிலையை வேதனையோடு எண்ணித்தான்.

மாணிக்கவாசகரை ஒரு evangelist என்றும் மதப்பிரசங்கி என்றும் இகழ்கின்றவர்கள் திருவாதவூராரின் வாழ்க்கையையும் அறியார். திருவாசகத்தின் பெருமையையும் அறியார். எனக்குத் தெரிந்த விளக்கம் சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள்.

இறையருள் பெற்ற ஒரு கிருஸ்துவரோ, இஸ்லாமியரோ, பௌத்தரோ......யாராயிருந்தாலும் இப்படிச் சொல்லியிருப்பார்கள். காரணம் என்ன? அன்புதான். அன்பினால் அச்சம் வருமா என்று கேட்கலாம். கண்டிப்பாக வரும். பிள்ளைகளின் மேலுள்ள அன்புதானே பெற்றோர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது!

நன்கு படித்துப் பெரியவர்களான பெற்றோர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் படிப்பின் ஆர்வலன். மற்றொருவன் விளையாடிப் பொழுது போக்குகின்றவர். இரண்டாமவனை நினைத்தால் பெற்றோருக்கு அச்சம் வரத்தானே செய்யும்? விளையாடும் பிள்ளை முன்னுக்கு வருமா என்று!
விளையாடி முன்னுக்கு வந்தவர்களும் உண்டு. ஆனால் இந்தப் பெற்றோர்களுக்கு அது தெரியவில்லை. இவர்கள் படித்து முன்னுக்கு வந்தவர்கள். நன்கு படித்தால் முன்னுக்கு வரலாம் என்று தெரியும். எடுத்துக்காட்டுகளாக அவர்களே இருகிறார்கள். இன்னொரு பிள்ளையும் நிருபிக்கப் போகிறான். எங்கே இவன் மட்டும் தப்பி விடுவானோ என்ற அச்சம்.

அந்த அச்சமே திருவாதவூராருக்கும். பாண்டி நாட்டுக்காரரய்யா அவர். அன்பே உருவானவர். எந்த மதப்பிரச்சாரமும் செய்யவில்லை அவர். இறையருளைப் பெற்றவர். எல்லாம் தெய்வந்தான். ஈஷ்வரு அல்லா தேரே நாம். "சிவனை வணங்கி நான் உய்வு பெற்று விட்டேன். இந்தப் பிள்ளை இன்னமும் உய்வு பெறவுமில்லை. சிவனை வணங்குகிறாற் போலவும் தெரியவில்லை. எப்படிப் பிழைக்கும் என்று அச்சமாக இருக்கிறது." இப்படி அஞ்சுகிறார் மாணிக்க வாசகர்.

சிவன் பெயரைச் சொல்லாதவரை கொல்லு என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை...எல்லாரையும் சிவநாமம் ஓதச் சொல்லு என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை. இல்லை. இவைகள்தான் மதப்பிரச்சாரம். திருவாசகத்தை முழுமையாகப் படியுங்கள். குற்றமற உணருங்கள். மாணிக்கவாசகரின் அச்சத்தை அன்பு என்று உணருங்கள்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்ததை தவறு என்றே சொல்ல முடியாது. மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார் இளையராஜா. சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் முழுவதும் அவரே பாடியிருப்பதும் சிறப்பாகவே இருக்கிறது. பாட்டுக்கு முன்னமே சிம்பொனி இசை வடிவத்திற்கு திருவாசகத்தைப் பொறுத்திப் பார்ப்பதும் அழகாக வந்திருக்கிறது.

சரி. மிச்சமிருப்பது முடிவுரைதான். அதுவும் விரைவில்.
 
அருமை அருமை.
எனக்கு இந்தப் பிரச்சினைகள் தெரியவில்லையே...
எது எப்படியாயினும் இசை என்னும் சக்தி இறையருள் என்னும் அன்பு அனைவரையும் கட்டிப் போடும்.
சீக்கிரம் உங்க முடிவுரையைக் கொடுங்கள்.
 
pradeepkt said:
அருமை அருமை.
எனக்கு இந்தப் பிரச்சினைகள் தெரியவில்லையே...
எது எப்படியாயினும் இசை என்னும் சக்தி இறையருள் என்னும் அன்பு அனைவரையும் கட்டிப் போடும்.
சீக்கிரம் உங்க முடிவுரையைக் கொடுங்கள்.
காரணம் நீங்கள் பிரச்சனை உண்டாக்க வேண்டுமென்று நோக்கத்தோடு பார்க்கவில்லை.
 
திருவாசகம் முடிவுரை

இதுவரையில் திருவாசக ஒலிப்பேழையிலுள்ள பாடல்களின் விமரிசனத்தைப் பார்த்தோம். இனி முடிவுரைதான்.

இந்த இசைவடிவத்தின் வெளியீட்டு விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் உருகியது நினைவிற்கு வருகிறது. அவரும் ஒரு இசைமேதை. திரையிசையிலும் பக்தியிசையிலும் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர். அவரது கண்களைக் கசிந்துருகச் செய்திருக்கிறது இந்த இசைக்கோர்வை. இசையை இசையாக மட்டுமே பார்க்கும் ஒரு நேர்மையானவரின் கருத்து அது.

இளையராஜாவின் மீது ஆத்திரமோ, திருவாசகத்தின் மீது ஆத்திரமோ அல்லது தமிழின் மீது ஆத்திரமோ என்னவோ...பெயரில் மட்டுமே ஞானமுள்ளவர்களால் இளையாராஜா கிழித்தெரியப் பட்டார். அவருடைய குலத்தைச் சொல்லிக் காட்டி அவமானப் படுத்தப் பட்டார். திரையிசையில் அவர் தொய்வு கொண்டது நினைவுறுத்தப் பட்டு சிரிக்கப்பட்டது. இதென்ன பைத்தியக்காரத்தனம்?

இசையை ரசி. அதில் குற்றமிருந்தால் சொல். அவர் குரல் சில இடங்களில் எடுபடவில்லை. உண்மைதான். ஒத்துக் கொள்கிறோம். அதற்காக இந்தப் படைப்பையே குற்றம் சொல்வதா? இசையின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத ஔரங்கசீப்புகள் இசை விமரிசனம் செய்தன. கரித்துக் கொட்டின.
தமிழிலிலக்கியத்தில் பழக்கமோ ஆழமான அறிவோ இல்லாமல் திருவாசகத்தைக் குற்றம் சொன்னர். சிவனைப் பாடும் பாடலுக்கு இசையமைத்தால் இளையாராஜா மதவெறியனாகவும் சூத்திரனாகவும் ஆகிவிட்டாராம்....இதென்ன கொடுமை. அவருக்குத் தெரிந்ததைச் செய்திருக்கிறார் அவர். இசை தெரியும். தமிழ் தெரியும். இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது. அந்தத் தொடர்பை வெளிக் கொண்டு வந்ததிற்கு இப்படி ஒரு பரிசு.

அல்லாஹு அக்பர் என்றுதான் இஸ்லாமியர்கள் சொல்வார்கள். அதனால் அவர்களை மதச்சார்பற்றவர்கள் அல்லர் என்ற முடிவுக்கு வரும் மடமையைத்தான் இந்த வீண் விமர்சகர்கள் செய்திருக்கின்றார்கள். சூரியனுக்குச் சேறு பூச முயன்றிருக்கின்றார்கள்.

இதே வேறு மொழி இலக்கியம் எதற்காவது இளையராஜா இசையமைத்திருந்தால் அவரை அந்த மொழிக் குடிதாங்கி என்று போற்றியிருப்பார்கள். போயும் போயும் தமிழ்ப் பாட்டுக்கு இசையமைத்தாரே இளையராஜா. அவருக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.
சரி. தமிழன் மனப்பாங்கு தெரிந்ததுதானே. விட்டுத் தள்ளுங்கள்.
இது போன்ற படைப்புகள் கண்டிப்பாக ஊக்குவிக்கப் பட வேண்டியவைகள். இன்னும் எதிர் பார்க்கிறோம் இளையராஜா. நிறைய இருக்கின்றன. சிம்பொனிகளும் ஓரேட்டோரியோக்களும் இருக்கட்டும். கொஞ்சம் சிலப்பதிகாரம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, தேம்பாவணி, சீறாப்புராணம் என்று திரும்பிப் பாருங்கள். உங்களுக்குத் தோன்றிய இசைவடிவிலேயே தாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். தமிழ் காத்திருக்கிறது. இசையும் காத்திருக்கிறது.

அன்புடன்,
கோ.இராகவன்
 
நல்ல முடிவுரை அய்யா!
நல்ல வேளை இது போன்ற சிறுமையான நேர்மையற்ற இசை சாராத விமர்சனங்கள் என் பார்வையில் படவில்லை.
 
pradeepkt said:
நல்ல முடிவுரை அய்யா!
நல்ல வேளை இது போன்ற சிறுமையான நேர்மையற்ற இசை சாராத விமர்சனங்கள் என் பார்வையில் படவில்லை.
நல்ல வேள தப்பிச்சீங்க........
 
Back
Top