ரமணி ஹைக்கூ

ரமணி

New member
ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****
 
4.
தோட்டத்தின் இருளில்
குழந்தை கையில் கண்ணாடி
சிரித்தது குழந்தை நிலா

5.
திருவிழாக் கரகாட்டம்
பொய்க்கால் குதிரைமேல் உட்காரக்
குழந்தை பிடிவாதம்

*****
 
6.
’கைலென்ன சொல்லு?’
குழந்தை முதுகின்பின் கைகள்
பார்த்தால் அந்துருண்டை!

7.
ஒலியற்ற இரவு
உள்முக சாதனை முயல்வில் நான்
சிள்வண்டின் அபஸ்வரம்

*****
 
8.
அப்பா பெருச்சாளி!
திடுக்கிட்டு விளக்கைப் போட்டேன்
ஜன்னலில் ரசித்தே மகன்

04/11/2015
9.
மழைத்துளி மாவிலை நுனி
சின்னத் துளி வண்ணம் வான்வில்
சிறைப்பட்டது ஓர் மலை

*****
 
பல வித காட்சிகள். பல வித மன பிம்பங்கள். இலைநுனி நீர்த்துளியில் சிறைப்பட்ட மலை போல். தொடருங்கள். பாராட்டுக்கள் ரமணி.
 
05/11/2015
11.
அலையற்ற வானம்
இறகே துடுப்பாய் ஓர் படகு
நிலத்தில் கண். கழுகு!

12.
அடை மழை. பேய்க்காற்று.
மாலை. மின்வெட்டு. கம்பியில்
காக்கை இரண்டு தவம்.

*****
 
06/11/2015
13.
நெகிழி மலர்க்கொத்து
மேசை மேலே குடுவையில்
பூவண்டு தேடும்

14.
சுட்டெரிக்கும் வெய்யில்
சுவரோரம் வண்டி ஓய்வு
காளை வாயில் நுரை

*****
 
15.
கட்டாந்தரையில் கொக்கு
ஆழக் கொத்தி எடுப்பது எது?
எரிவாயு எண்ணெய்

08/11/2015
16.
எறும்புக்கு இட்டாள்
வாசல் அரிசி மாக்கோலம்
தின்றது காக்கை அணில்

*****
 
17.
இருளில் ஒளிவெள்ளம்
சாலை மரங்கள் பெயர்த்தே
சுவரில் எரியும் கார்

18.
ஹெலிகாப்டர் தும்பி
வானில் பற்பல சாகசங்கள்
பூவில் அருந்துமோ தேன்?

*****
 
மிக் மிக அழகான ஹைக்கூ காட்சிகள். கார் லைட் சுவரில் எறியும் மரபிம்பங்கள், பிளாஸ்டிக் பூவை சுற்றும் வண்டு.. என எல்லாமே அருமை! சபாஷ் ரமணி!
 
19.
கை தொட்டால் நசியும்
சுற்றிலும் மணம் கமழ்ந்த பாம்பு
உயிரிலா ஊதுபத்தி

20.
தூபம் ஊதுபத்தி
தீபம் கற்பூரம் உற்சவம்
நாளும் வேண்டும் கொசு

*****
 
21.
தங்கச் சிறு கூண்டு
மங்காத ஆசை பலவிதம்
பங்கப் படுமே கிளி.

22.
அண்ணாந்து பார்த்தேன்
கண்ணாடி விரிசல் ஆச்சு
விண்ணின்று மழைத்துளி

*****
 
25.
காற்றடித்து விழுந்தன
எண்ணற்ற நட்சத்திரங்கள்
அட, வேப்பம்பூக்கள்!

26.
தோட்டத்தில் புதுமலர்
அடைமழை நீரில் மிதந்தாடும்
சாக்கடைநீர் சல்லடை

*****
 
23.
கன்னத்தில் மச்சம்
குழையக் காதல் தரும் மாலை
சின்னக் குழந்தை நகை

24.
நெகிழும் கண்ணாடி
செடி கொடி கல் ஆடவைக்கும்
மலையில் நீர்வீழ்ச்சி

*****
 
27.
தென்னை மட்டை மேல்
காக்கை மூக்கைத் தேய்க்கும் ஒலி
பதுங்கும் அணில் குஞ்சு

28.
ஜலதரங்கம் கூட்டும்
தனி ஆவர்த்தனக் கச்சேரி
குளியல் அறை சல்லடை

*****
 
ஹைக்கூவை அதன் உடலோடும் உயிரோடும் எழுத முயலும் என்னை ஊக்குவித்துப் பாராட்டும் ரவிசேகருக்கு மிக்க நன்றி.
ரமணி
 
29.
வெய்யில் கல்தரை குடம்
தரையில் படும்துளி உடன்மறையும்
காக்கை மூக்கில் துளி

30.
சீனித் துகள் சுவைத்தே
காலை இழுக்கும் கட்டெறும்பு
பாலாடை வலையில்

*****
 
31.
நள்ளிரவு மௌனம்
டிக்டிக் ஒலிக்கும் கடிகாரம்
நாணயம் விழும் சப்தம்

32.
தொட்டியில் காலிக் குடம்
நீர் மொள்ளும் சொம்பு குபுக் குபுக்
குழந்தை கால் உன்னும்

*****
 
33.
மழையில் சிறு கப்பல்
இழுத்துக் கரை சேர்த்தது குழந்தை
தப்பும் கட்டெறும்பு

34.
வீறிடும் குழந்தை ஒலி
செய்வது அறியாத் தாய் திகைத்தாள்
நாக்கில் மிளகாய் விதை

*****
 
35.
சீருடைச் சிறார் கலகல
ஆசையில் ஏங்கும் சிறுவன் முகம்
துருத்தியை இழுக்கும் கை

36.
அருவியாய் ஓடும் மழை
முள்மரம் முழுதும் வெண்மலர்கள்
காத்திருக்கும் கொக்குகள்

*****
 
Back
Top