அனுபவத் துளிகள்

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல இதோ என் கிறுக்கல் !
" 50. எழுத்தாளரின் வெறுமை (writer's block)"


பக்கம் எல்லாம் வெற்றாகவே
பார்க்கையில் நெஞ்சில் வெட்கம்
பேனாவில் மசி இலா குறையா?
பணந்தேடி அலைவதின் விலையா?

பகிற அகப் பையில் எதுமிலா நிலையா?
பந்தமதில் வந்த சிக்கல் வலையா? அல்ல
பசியா ? பிணியா ? படிக்காத குறையா ?
பகர்வீர் ரமணி - என் துக்கம் தீர !
 
Last edited:
உங்கள் கவிதைகள் அனைத்துமே ! அருமை ரமணி ! வாழ்த்துக்கள் !
 
Last edited:
53. சின்ன வயதில் சேமிப்பு!
(அளவியல் இன்னிசை வெண்பா)

ஓட்டையாய்க் காலணா ஒவ்வோர் விரலிலும்
பாட்டுடன் தாளம் தகரடப் பாவிலே
மெட்டியாய்க் கால்விரல் போட்டேன் - தலையிலே
குட்டுவாங் கிக்கண் குளம். ... 1

நயாபைசாச் சட்டை அணிந்தே நடந்தோம்
தயாராய்க்கை பற்றியே தந்தையார் தந்ததைக்
கண்ணிலே ஒற்றிக் கரத்தால் வருடிமண்
உண்டியலில் சேர்த்தோம் உடன். ... 2

உண்டியல்வாய் முட்ட உடைத்தே தகப்பனார்
கண்படும் காசுகள் கட்டித் தொகுப்பார்
வகைக்கொரு பத்தாய் வளர்ந்துநிற்கும் தூணாய்த்
தகைத்திடுவார் காகிதத் தால். ... 3

தூண்களாய் நாணயம் தூங்குமோர் பெட்டியில்
நீண்டநாள் ஆக நெகிழ்த்தியே தந்தை
பலவகை யான பரிசுகள் ஆக்கக்
குலவும் மனத்திலே கூத்து. ... 4

--ரமணி, 24/11/2015

*****
 
54. வற்றாத உற்சாகம் சிற்றப்பா!
(அளவியல் நேரிசை/இன்னிசை வெண்பா)

ஒவ்வொரு நாளும் ஒருரூபாய் என்றவர்
செவ்விதின் சேர்த்தேயென் சிற்றப்பா - அவ்விதம்
பார்த்த பணத்தில் பலவூர்ப் பயணமாம்
சேர்ந்தே குடும்பத் துடன். ... 1

கோடையில் கானலோ கூனூரோ ஊட்டியோ
வாடையில் சென்னைபோல் வாரிக் கரையூர்
வருடம் ஒருமுறை வாகாய் அமைத்தார்
திருத்தல யாத்திரை யோடு. ... 2

உலகியல் ஆன்ம ஒழுக்கம் இரண்டின்
கலவையாய் வாழ்ந்தார் கனிவுடன் வாழ்ந்தார்
இனியவர் பார்க்கப் பழகவென வாழ்ந்தார்
இனியவர் நெஞ்சில் என. ... 3

--ரமணி, 25/11/2015

*****
 
55. சின்ன வயதுச் சேட்டைகள்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

ஆதாரப் பள்ளி அறிமுகம்; ஆசிரியர்
தோதாக ஜிப்பாவில் தொங்குகை விட்டே
புகையிலை பிய்த்தவர் பொக்கைவாய் இட்டால்
வகையாய்ப்பா டம்வாய் வரும். ... 1

மூக்குப் பொடியினை மூன்றாம் வகுப்பாசான்
தூக்கி உதறித் துளித்துளியாய் மூக்கில்
நுழைத்தே விரல்கள் நொடித்ததுகண் டேநான்
விழைந்ததில் கண்ணீர் விடை! ... 2

காகித அம்பு களிப்பில் ஒருவன்மேல்
ஏகமாய் எய்ததில் ஒன்று முதல்வர்
அறைசன்னல் உட்புக ஆடிப்போ னேனே
அறைவாங்கா இன்ப அதிர்வு! ... 3

ஐந்தாம் வகுப்பிலே ஆசிரியர் பாடமாய்ப்
பைந்தமிழ்ப் பாவெழுதிப் பக்கம்போய் நின்றவர்
போண்டாவைத் தின்ற பொழுதுகள் இப்போது
தீண்டும் மனத்தில்தித் திப்பு. ... 4

சின்ன வயதிலே செய்தபல சேட்டைகள்
தின்னும் மனத்தில் திகைப்புடன் தித்திப்பும்!
இன்றைய பிள்ளைகள் இத்தகு இன்பமின்றிக்
கன்றிலே ஆவர் கனி. ... 5

--ரமணி, 26/11/2015

*****
 
57. அகத்தில் குடிவந்த பள்ளி!
(பஃறொடை வெண்பா)

தாத்தாவோர் நாள்பார்த்துத் தக்கசகு னம்பாட்டி
பார்த்துத்தம் பேரனைப் பள்ளிக் கனுப்பப்
புதிய சிலேட்டைப் புதுப்பையில் வைத்தே
புதுப்பையைத் தோளிலே தோகை விரித்தே
முகத்திலே புன்னகை முன்னிற்கப் பள்ளி
அகத்தில் குடிவந்த(து) அன்று. ... 1

முதல்வரவர் சேர்க்கைப் பதிவு முடிக்க
மிதக்குமோர் காகிதநா வாய்போல் கதிரொளி
முற்றத்தில் ஊர்ந்திடச் சுற்றி வகுப்பிலே
உற்றவா சானிடம் ஒப்படைத் தார்தாத்தா
கண்ணாடி ஆசான் கனிவில் பலவகைப்
பண்புடன் நண்பர் பலர். ... 2

பாரதி வாழ்த்திய பாரதம் காலையில்
சாரதி யாயொரு காரிகை பாடச்
சிறுவர் சிறுமியர் சேர்ந்தொலித்த கூத்துடன்
ஏறிப் பறக்கும் மணிக்கொடி ஏற்றியே
திங்கட் கிழமையதைச் சிந்தை நிறைத்தோமே!
தங்கத் தமிழுடன் தாய்நாட்டை மாலையில்
மீண்டுமோர் கூடலில் மீசைக் கவிநினைத்த
ஆண்டுகள் நாட்கள் அசையும் மனத்திலே
வண்ண மலர்கள் மணம்வீசும் பற்பலவாய்
எண்ணநெகிழ்ப் பந்தாய் எழும். ... 3

[நெகிழ்ப் பந்து = பலூன்]

[பள்ளிக் கூடலில் பாடிய பாரதி பாடல்கள்:
காலை: பாரத சமுதாயம் வாழ்கவே
மாலை: வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
திங்கள் காலை: தாயின் மணிக்கொடி பாரீர்]

--ரமணி, 28/11/2015

*****
 
58. முகிற் கள்வன்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

முதுகில் முகிலெனும் மூட்டை சுமந்தே
மெதுவாய் நகர்ந்திடும் மேல்வளிக் கள்வனை
எய்த கணையால் இரவி வெருட்டவே
வெய்யிலிற் கொட்டும் விசும்பு.

[மேல்வளி = மேல் காற்று; இரவி = சூரியன்]

--ரமணி, 29/11/2015

*****
 
59. திரையில் வந்ததால் திரும்பினோம்!
(கலி வெண்பா)

வங்கியில் வேலை வெளிமா நிலத்திலே
அங்கே புதிய சகாக்கள் அறிமுகம்!
ஐதரா பாத்-அது ஆந்திர மாநிலச்
செய்திகள் மிக்க திருத்தலைப் பேரூராம்
நண்பர்கள் மூவருடன் நானாங் கிலப்படம்
கண்தேக்கிப் பார்க்கக் கடுஞ்சினம் கண்மறைக்க
நண்பனின் நானறியா நண்பன் திரையிலே
கண்ணில் நழுவுமோர் கண்ணாடிச் செய்தியிடப்
பாதிப் படத்தில் பதறிவெளி வந்ததிலே
ஏதென்னை விட்டீர்கள் என்றானே பார்க்கலாம்!
நண்பனை நானறியா நண்பனை விட்டின்னோர்
நண்பனுடன் மற்றைநாள் நான்படம் பார்த்தது
கண்களில் இன்றும் களிப்பு.

[பார்த்த ஆங்கிலப்படம்: Close Encounters of the Third Kind;
கண்ணில் நழுவுமோர் கண்ணாடிச் செய்தி = சினிமாத் திரையில்
காட்டும் ஸ்லைட் விளம்பரங்கள், செய்திகள்]

--ரமணி, 29/11/2015

*****
 
61. முதல் தேதி!
(அளவியல் இன்னிசை வெண்பா)

மாதமுதல் தேதி மணக்குமே சம்பளக்கை!
காதலுடன் தந்தை கரன்சி ஒருரூபாய்க்
கட்டினைக் காட்டக் களிப்பில் முகர்ந்தேநான்
கட்டினேன் கோட்டை களை. ... 1

கட்டியல் வாவுடன் காராச்சே வும்கையில்
வெட்டியே உண்டோம் விழிகள் விரிந்திட
சம்பளம் தந்த சலுகை முதல்தேதி
கம்பளத்தில் ரத்தினக் கல்! ... 2

தினமுமொரு ரூபாயில் தீரும் செலவு
மனக்கணக் கில்பூபால் வாங்கும் செலவும்
மளிகைக் கணக்குமுதல் வாரத்தில் தீர்த்தே
தளிகை நடந்த தரம். ... 3

கையிலே சில்லறையாய் மிஞ்சிடும் காசுகள்
செய்யும் சிறப்பு தெரிந்தெம தன்னை
கடுகு மிளகு கடுக்காய்டப் பாவுள்
அடியில்சே மித்தாள் அவள். ... 4

சனிக்கிழமை மாலையில் சாதுவாய் நாங்கள்
பனகல்பூங் காவில் பரவி அமர்ந்து
கொறித்திடுவோம் வேர்க்கடலை கொஞ்சுமொழி பேசி
அறிந்துமறி யாநாள் அவை. ... 5

வீட்டுவா சல்முன்னே வீசிய காற்றிலே
கேட்டறிந்தோம் பேசினோம் கிள்ளையாய்க் காதைபல
பள்ளி அறியாப் பருவத்தின் பாடமின்றும்
பள்ளமும் மேடும் சொலும். ... 6

படுக்கை உதறித் தலையணை தட்டி
வெடிபோலச் சத்தம் விளைவித்தே தந்தை
கனிவுடன் எங்களைக் கண்மூடச் செய்யக்
கனவுலகில் எங்கள் கதி. ... 7

--ரமணி, 09/12/2015

*****
 
Back
Top