தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
4. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை

இ4. எந்திரப் புலமைவேலை ஏன்தோழி!
(அளவியல் இத்தாலிய சானட்: ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)


அந்தியின் வண்ணங்கள் அழகினை விரிக்கும்
மந்திரம் மேவும் மாலன்கை யாழி!
வந்துநீ காண வழியிலையே தோழி!
சிந்தனை யெல்லாம் திருவிரல் அரிக்கும்
விந்தைகள் புரிந்தவை விசைகளில் தரிக்கும்
எந்திரப் புலமைவேலை ஏனோ தோழி?
உந்துதல் பலவாக உதிர்ந்திடும் ஊழி
தந்திரம் எல்லாம் தகவென வரிக்கும்!

பெண்ணெனும் இயல்பின் பெற்றிமை உள்ளுவாய்
பெண்மையின் மென்மையைப் பெரிதும் வஞ்சித்தே
வண்ணங்கள் இழந்தே வாடுதல் விடுதோழி!
பெண்மையாய்ப் பொலியும் பேற்றினைக் கொள்ளுவாய்
உண்மையில் நீசெயும் ஊழியம் சிந்தித்தே
வண்மையால் வந்துசேரும் வளங்கொள்ள இதுநாழி!

[ஆழி = சக்கரம்; விசை = கணினி விசைப்பலகை விசைகள்;
ஊழி = வாழ்நாள்]

--ரமணி, 11/04/2015

*****
 
தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
4. நான்கு ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை

ஆ4. என்னில்லம் என்னில்லமான கதை
(அளவியல் ஆங்கில சானட்: ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ-ஏ)


கிடைநிலை மூன்றடுக்காய்க் கீழ்முதல் மாடியே
தடையிலா வாஸ்து சக்திகள் அருள்தரும்
மடைதிறந்த வெள்ளமாய் வரும்தென்றல் ஆடியே!

வான்கூரை மேல்மாடம் மாலையின் பொருள்தரும்
கான்சூழும் புள்ளிசை கவனத்தை ஈர்க்கும்
தேன்சூழும் மலர்வண்டு திண்டாடிக் கால்வைக்கும்!

எழுந்திரு விடிந்தது எனக்காலைக் கதிர்பார்க்கும்!
முழுநிலா சன்னல்வழி முகம்காட்டிக் கால்வைக்கும்!
இழுபறியாய்ச் சுற்றிலுமே இன்றுபல அடுக்ககமே!

வானம் துண்டாகி வருமெனக்கோர் பங்கென்றே
கானப் பறவையின் கவின்சிறகுத் துடிப்பிலையே
மோன உதயமும் முழுநிலவும் எங்கென்றே!

விண்ணும் மண்ணும் வேருடன் மறையும்
கண்ணில் மனிதன் கவலைகள் உறையும்!

--ரமணி, 12/04/2015

*****
 
தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை

இ5. கணிணித் துறையே கவையென்று...
(அளவியல் இத்தாலிய சானட்: வெண்டளைக் கலிவிருத்தம் + குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)

வான்சூழும் நீலம். வடிவம் உறுமேகம்.
தான்வீழும் செங்கதிர்த் தண்ணொளி ஜாலத்தில்
வானவில் லைவிஞ்சும் வண்ணமிகு கோலத்தில்
மோனச் சிரிப்பில் முகிழ்க்கும் உறவாகும்!
தேன்மலர் வண்டுகள் தேடிச் சிறகோயும்;
கானுறும் பண்ணில் கனியுள்ளம் சீலத்தில்;
ஆன்றமையும் சாந்தி அகம்வர ஞாலத்தில்
தோன்றும் இறைமையில் தொல்லை அறுந்தோயும்!

இவையெதுவும் காணா(து) இளநெஞ்சம் இன்று
கவையென்று கொள்ளும் கணிணித் துறையில்
சுவையின்றிச் சொல்லின்றிச் சோப்புக் குமிழ்செய்(து)
அவையே நிலையென்(று) அவனியை வென்றே
தவமென்று கொண்டே தனிமை அறையில்
சவமென்று முடங்கி சலத்தில் அமிழ்வெய்தும்!

[கானுறும் = செவியுறும்; சீலத்தில் = ஒழுக்கத்தில்;
கவை = வேலை, அக்கறை; சலம் = சுழற்சி, பட்சபாதம்,
மாறுபாடு, போட்டி, பிடிவாதம்.]

--ரமணி, 13/04/2015

*****
 
அன்புடையீர்!

கல்லூரிப் படிப்பை முடித்ததும் நான் ’பாபா அணு ஆராய்ச்சி நிலையம்’
அனுப்பியிருந்த நேர்காணல் மடலில் மகிழ்ந்து சென்னையில் இருந்து
மும்பைக்குத் தனியாக தாதர் விரவுவண்டியில் பதிவுசெய்யப் படாத
இருக்கையில் முப்பது மணிநேரம் அமர்ந்து பயணித்தேன்.

என் நண்பன் இதே வேலைக்கு ஒருநாள் முன்னதாகவே மடல் வந்து
முதல்நாள் கிளம்பிச் சென்றவன் என்னை தாதர் மாதுங்கா ரயில் நிலையம்
வந்து கூட்டிச் செல்வதாகச் சொல்லியிருந்தான். பயணத்தில் புனே-மும்பை
ரயில்வே தடத்தில் அதிகாலை சென்றபோது மேற்குத் தொடர்ச்சி மலையின்
இயற்கை அழகை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ரயில்வண்டியில் வாசல் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு காலைத்
தொங்கப்போட்டபடி அங்கும் இங்கும் கண்ணோட்டி ரசித்த காட்சிகள்
இன்றும் என் நெஞ்சில் பசுமையாக. இந்தப் பாடலில் நான் ரயில்
சக்கரம் எழுப்பும் ஒலியை எதிரொலிக்கும் வகையில் சொற்களை
அமைத்துள்ளேன். பாடலைப் பற்றி அன்பர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
ரம்ணி

*****

தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை

ஆ5. படித்ததும் கிடைத்ததும்
[அளவியல் ஆங்கில சானட்: கலிவிருத்தம் (விளம் விளம் விளம் மா) + குறள் வெண்செந்துறை:
இயைபு: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ*எ]


புனேநகர் கடந்ததும் பூத்ததே எங்கும்
சினேகிதம் நடம்பயில் சிலிர்ப்பினில் இயற்கை!
அனேகமாய்ப் பசுமையே, அருவிகள் தொங்கும்
முனேவரும் குகைத்தடம் முடுக்கிடும் மயற்கை!

இயற்கையின் நடக்கையில் எழுந்திடும் ஆடல்
நயம்படும் முகத்துடன் நடம்புரி மங்கை!
கயங்கிடும் கருந்திரள் கசிந்திடும் தூறல்
இயன்றிடும் வெடித்திடும் இசைத்திடும் கங்கை!

படிப்பினை முடித்தவன் பார்க்கவோர் வேலை
கிடைப்பதற் கென்றுநான் கிடந்தவண் சென்றேன்
கடுமையாய் வந்தநேர் காணலோர் காலை
கடிதமும் வருமெனக் கனவுகள் கண்டேன்.

வந்ததோ மறுப்பென; வாழ்விலே இறைவன்
தந்தவோர் வேலையில் தங்கியே நிறைவன்!

--ரமணி, 13/04/2015

*****
 
தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
6. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை

இ6. சவலத்தில் மனம்தோய்வேன்!
(அளவியல் இத்தாலிய சானட்: குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)


எத்தனை புத்தகங்கள் எப்படிப் படிப்பேன்?
இத்தனை சஞ்சிகைகள் ஈயென மொய்த்தால்
மாமரப் பூக்களாய் மலைக்க வைத்தால்
பாமரன் நானெதைப் படித்து முடிப்பேன்?
இவைபோ தாதென்று இணையத்தில் கால்கடுப்பேன்
கவையோ கலையோ கரைமீறிக் கால்வைத்தால்
கனவிலும் அலைமனம் கட்டெறும்பாய் மொய்த்தால்
நனவிலெதைக் கொள்ளுவேன் நலமெனவாய் மடுப்பேன்?

மனதின் விருத்தியில் வளரும் வினைகளாய்
நனவின் மாயயை நன்றாய் மறைப்பதில்
உள்ளுறை ஆன்மாவை உள்ளுதல் தடுத்தே
கள்ளுறும் போதையாய்க் காமச் சுனைகளாய்
அவலத்தை நலிவை அறிவென்றே உரைப்பதில்
சவலத்தில் மனம்தோய்வேன் சாதனை விடுத்தே.

[கவை = செயல், வேலை; சவலம் = சபலம்]

--ரமணி, 26/04/2015

*****
 
தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
6. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை

ஆ6. காக்கையும் யாக்கையும்!
[அளவியல் ஆங்கில சானட்: குறள் வெண்செந்துறை:
இயைபு: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ*எ]

வாடைக் காற்றில் வானம் வழியும்
கோடை மழையில் குளிர்ந்தது உள்ளம்
சல்லடை மேகம் சலித்துப் பொழியும்
உல்லாச முழுக்கில் உச்சிகள் துள்ளும்!

மின்காற் றனலில் மேனி புழுங்க
மின்னல் வெட்ட மின்வெட் டானது
வெள்ளை வானை மேகம் விழுங்க
உள்ளக் குமுறல் ஒருவழி யானது.

மழைப்பொழி வோட மண்ணில் அலையாய்
குழையும் சிறகைக் குறுக்கி யமர்ந்தே
காக்கை யொன்றுமின் கம்பியில் சிலையாய்
தாக்கும் மழையில் தவமாய்ச் சிறந்தே!

காக்கையின் ஒருமை கண்ணுறும் போதும்
யாக்கையின் கவனமே என்னிடம் மோதும்!

--ரமணி, 27/04/2015

*****
 
தமிழில் நெடிலடி இத்தாலிய சானட் உதாரணங்கள்
1. இரண்டு கலித்துறை + ஒரு கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை

இ7. தலைமேல் உறுமோ மழைக்கால்?
(நெடிலடி இத்தாலிய சானட்: கலித்துறை (மா கூவிளம் விளம் விளம் மா) x 3
+ ஒரு குறள் வெண்செந்துறை: இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)

வெய்யில் அக்னியின் தணலெனப் பரவியே வேர்க்கும்
கையில் ஜன்னலின் கம்பிகள் கனலுறக் காயும்
மெய்யின் ஆடையை மீறியே அனலது மேயும்
பெய்யும் வான்மழை நேருமோ அத்தனை பேர்க்கும்?
செய்யும் காரியம் எதுவுமே சலிப்பினில் சேர்க்கும்
நெய்யில் வாணலித் தணலுற வறுபடும் நேயம்
ஒய்யா ரம்தரும் நிழலுமே குறுகியே ஓயும்
கொய்யா மஞ்சளுள் வெண்மையாய்ச் சூரியன் கூர்க்கும்!

வேற்றில் ஈரமாய் வேண்டியே கவிதையில் விதைத்தேன் ... ... [வேற்றில் = வேற்றுமை இல்லாத]
சேற்றில் தாமரை விந்தையாய்க் கருமுகில் சிரிக்கும்
போற்றும் மழையாய்ப் பூமியில் சிலிர்க்கப் பொழியும்!
சீற்றம் மின்னலின் இடியென வெம்மையைச் சிதைத்தே
நேற்றுக் கண்படாக் கார்முகில் நீரினை நிறைக்கும்
ஏற்றம் பெற்றநீர்க் மழைக்கால் வரிகளாய் இழியும்!

--ரமணி, 25/05/2015

*****
 
தமிழில் நெடிலடி ஆங்கில சானட் உதாரணங்கள்
1. முன்று கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை

ஆ7. தனியெனில் நன்றே பொதுவெனில் ஊறே!
[நெடிலடி ஆங்கில சானட்: முன்று கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
இயைபு: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ*எ]


சொன்னால் செய்பவன் எனக்கொரு நண்பனாம் சூர்ய
மின்சா ரக்கதிர் ஆற்றலைக் கொண்டவன் இல்லம்
அன்றா டம்கொளும் மின்னொளி வெம்மையை ஆர்ய
மின்சா ரம்வழிப் பெற்றவன் வாழ்வது செல்லும்!

மழையோ வெய்யிலோ தடையிலா மின்னளி மாட்சி
இழியும் சக்தியின் காப்பென மின்கலன் இரண்டு
நிழலாய் ராத்திரி அரசுமின் சார்ஜினில் நீட்சி
கழுகாய்க் காத்திருக் கும்விசை தட்டிடக் கரண்ட்டு!

அனலோன் ஆடிகள் பலமைல் பரப்பினில் அமைத்தே
கனலின் ஆற்றலைப் பொதுசனம் பெறுதலைக் காணில்
சனனம் கொண்டது கொல்லுமே பறவைகள் சமைத்தே!
வினவும் நன்மையைத் தருமென முனைவது வீணே.

தன்னில் லந்தனில் கதிரொளி நலம்தரும் சக்தி
உன்னில் ஊர்க்கென ஊறுகள் விளைத்திடும் யுக்தி!

--ரமணி, 27/05/2015

உதவி:
The Dark Side Of Solar Power
http://news.investors.com/ibd-edito...s-a-light-on-the-dark-side-of-solar-power.htm
போன்ற இணையச் செய்திகள்.

*****
 
தமிழில் நெடிலடி இத்தாலிய சானட் உதாரணங்கள்
2. மூன்று கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை

இ8. தீத்திறந் தான்வரும் சிந்தையிலே!
(நெடிலடி இத்தாலிய சானட்: மூன்று கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)


மாலைப் பொழுதின் மயக்கில் பறவை மரக்கிளையில்
ஓலம் விடுத்தவை ஒன்றோ பலவோ ஒருங்கமரும்
சோலை மலர்கள் சொகுசாய் மலர்ந்தே மணங்கமழும்
சாலை மருங்கில் சருகுகள் காற்றில் உருக்குலைவில்!

மாடப் புறாவினம் மட்டும் எளிதாய் அமர்வதில்லை
கூடும் துரத்தும் குழுவாய்ப் பறந்தபின் மீண்டமரும்
சாடும் துணையைத் தவிர்க்க மறுபடித் தாண்டிவரும்
ஓடும் ஒடுங்கும் உறையும் அவைதான் அயர்வதில்லை!

ஒருநிலை கொள்ளா துலவும் புறாவின் மனமெனக்கே
துருவும் அலகால் துரத்தும் பறக்கும் சிறகடித்தே
உருவம் மயங்கியே உள்நினை வோடிடும் அந்தியிலே
கருவம் செழித்துக் கனல்வரும் எண்ண வனமெனக்கே
வெருவும் சினமும் வெளிப்படத் தாக்கும் விறகொடித்தே
திருவெனக் கொள்முதல் தீத்திறந் தான்வரும் சிந்தையிலே!

--ரமணி, 15/06/2015

*****
 
Back
Top