இளைஞர் புராணம்
1. ஞானமே கனியாக
ரமணி
பாயிரம்
ஆனைமுகன் ஆறுமுகன் ஆன்மவொளி தந்தருள்வீர்
தானெனுமென் பற்றைத் தணிவித்தே - நானுமிந்த
நானிலத்தில் நாடுகின்ற நன்மையெலாம் தந்தேயென்
ஈனங்கள் குன்றச்செய் வீர். ... 1
கரிமுகன் கந்தன் கனியது வேண்டும்
அரிய கதையினில் ஆர்த்திடும் அர்த்தம்
அருமுனி வாரியார் தந்ததைப் பாட்டில்
உருசெயக் கொண்டேன் உளம். ... 2
முன்னாளில் ஏதும் ஒழுங்கில் முயலாமல்
சின்னாட்க ளாகவே செய்யுளியல் கற்கும்நான்
என்னாலே ஆவதெனச் செய்திடும் பாக்களின்
வின்னம் பொறுத்தருள் வீர். ... 3
விநாயக மூர்த்தி கனிபெற்ற வரலாறு
அறுசீர் விருத்தம்
(கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
. கூவிளம் கருவிளம் கூவிளங்காய்)
கனியது எனக்கே!
முன்னொரு யுகமதில் ஆயிரம் நரம்புகள்
. முன்னுறும் மகதியாம் யாழிசைத்தே
இன்னருங் கனியென மாதுளங் கனியினை
. தேவரின் முனிவராம் நாரதரும்
பன்மையில் ஒருமையாய் உள்ளுறை சிவபிரான்
. பன்னகம் அணியடி வைத்துநின்றே
இன்னருள் புரிசிவன் என்றுமே மகிழ்வளித்
. தீங்கனி புசித்திட வேண்டிநின்றார். ... 1
அண்ணனாம் கணபதி தம்பியாம் முருகனும்
. கண்ணுதற் கடவுளை வேண்டினரே
பண்ணிசை அருமுனி பக்தியில் படைத்திடும்
. நண்ணருங் கனியது தான்தனியே
உண்ணுதற் களித்திடத் தந்தையும் உவகையில்
. ஒப்பியே தமக்கது தந்திடவே
அண்ணலும் கனியினை விண்டிலர் அதற்கொரு
. காரணம் நினைவினில் வந்திடவே. ... 2
ஓர்கனி யிருவரும் கேட்டபின் உதவிட
. ஒல்லுதல் எவணெனச் செப்பிடுவோம்
ஓர்கணப் பொழுதினில் பல்வகை யுலகமும்
. சுற்றியே வருபவர் யார்முதலோ
ஆரமு தெனவுள இக்கனி அவர்வசம்
. ஆகுமே மனங்களித் துண்டிடவே
நீரிரு வருமிதைச் செய்திடக் கிளம்புவீர்
. இக்கணம் முடிந்ததும் மீள்வரவே. ... 3
தந்தைசொல் முடிந்திடு முன்னரே சரவணர்
. தன்னுடை மரகத மாமயிலில்
முந்தியி வர்ந்தவர் காற்றினும் மனதினும்
. ஓங்கிய விரைவினில் செல்பயணம்
விந்தையாம் உலகுகள் ஏழிரண் டுடன்வரும்
. இன்னமும் பலப்பல மண்டலமும்
அந்தமில் கடவுளர் மூவரின் உலகமும்
. அந்தவோர் கணமதில் சுற்றிவந்தார். ... 4
இங்ஙனம் முருகனும் ஏழிரண் டுலகையும்
. சென்றவக் கணமது தீருமுன்னே
அங்கணன் எதிரிலே நந்தனன் கணபதி
. வந்துநின் றொருமொழி கூறலுற்றார்
பங்கயன் ஒளியினில் வெம்மைபோல் பரவியும் ... (பங்கயன்=சூரியன்)
. பாலொடு சலமன விண்ணொடு வளியென
அங்கமாம் உடலொடு ஆவியாய்க் கலந்துளே
. அந்தமில் லுறவதே சங்கரனாம். ... 5
பூவுடன் மணமென ரத்தின வொளியென
. ஒன்றிடும் பரம்பொருள் தந்தையன்றோ?
நாவினில் பெயர்வர நானுமென் தகப்பனை
. ஆடியே வலம்வரும் செய்கையிலே
மூவரின் உலகுடன் ஏழிரண் டுலகமும்
. ஒன்றிடும் பலப்பல மண்டலமும்
ஆவியோ டுடலுடன் உள்ளமும் பொருந்திட
. நான்வலம் வரக்கனி தந்திடுவீர்! ... 6
தந்தையும் மகிழ்வுடன் தந்தனர் கனியதை
. தன்னைநன் கறிந்தவன் சர்வமென
கந்தனும் மறுகணம் வந்தவன் திகைத்திட
. கந்தனே பழமதே நீயென்றார்!
தந்தைசொல் செவிவிழக் கந்தனும் பழனியில்
. தானுமோர் நடனமே ஆடினனே
இந்தவோர் கதைதனில் நின்றநுண் பொருளினை
. இனிவரும் அடிகளில் நோக்குவமே. ... 7
கனிந்துள தத்துவம்
தந்தையேன் கனியினை விள்ளுதல் விழைந்திலர்?
. தானொரு கனியுரு வாக்கிலரேன்?
முந்தியோர் அடியவர் வேண்டிய இருகனி
. உண்டென வழங்கிய வள்ளலன்றோ? [*1]
கந்தனும் தமையனும் ஒற்றுமை யுறுதலில்
. அக்கனி ஒருவருக் காகுமன்றோ?
அந்தவோர் கனிக்கென அத்தனை யுலகமும்
. வந்தது தகவுறும் ஊதியமோ? ... 8
வல்லப கணபதி சர்வமும் வலம்வரும்
. வண்மைகொண் டிலரென ஆகிடுமோ?
அல்லது முருகனும் சர்வமும் சிவமதே
. ஆவதென் றுளமறி யாதவனா?
பல்வகை வினவிடும் ஐயமும் எழுப்பியே
. பல்வகை யுறைந்திடும் நுண்பொருளைச்
சொல்லுவார் அருமுனி வாரியார் சுவாமிகள் [*2]
. தொன்மதக் கதைகளில் தத்துவமே. ... 9
முன்னொரு யுகமதில் தேவரும் கணங்களும்
. பூமியை முதற்கொள ஓம்வரையில்
துன்னிடும் அளவிலா லோகமோர் தினமதில்
. சுற்றியே பயணமாய் வந்தவர்தாம்
உன்னிடும் பரம்பொருள் யாரினும் பெரியவர்
. முன்மொழிந் தவைதனில் ஏற்றனரே.
முன்னவர் முழுமுதல் என்றொரு கடவுளை
. உன்னுதல் முக்தியைத் தந்திடுமே! ... 10
நான்முகன் அரியுடன் இந்திரன் முதலிய
. வானவர் அனைவரும் இச்செயலில்
தான்முதல் வருவதோ வான்முதல் உறுவதோ
. தன்னால் இயன்றிடும் செய்கையல
ஏனிதை முயல்வதும் ஏற்றமே விழைவதும்
. வீண்செயல் எனவிருப் பற்றிருக்க
வானவர் அனைவரும் யார்முதல் எனவுளம்
. ஆவலில் திளைத்திட நின்றனரே. ... 11
கண்ணுதற் கடவுளும் வானவர் சமுசயம்
. ஆற்றவோர் வழியினை மேற்கொளவே
மண்டலம் சருவமும் மாத்திரைப் பொழுதினில் ... [சருவம்=சர்வம்=அனைத்தும்]
. வான்வலம் வருவதும் வேலவனே
கண்ணுறும் உலகெலாம் ஆக்கியும் அழித்தும்
. காத்தருள் புரிவதும் வேலவனே
நண்ணரும் முழுமுதல் தெய்வமும் அவனென
. நாட்டிடக் கனிநடம் ஆடினரே. ... 12
ஒன்றெனும் சிவத்தினுள் யாவையும் அடங்குதல்
. ஓர்ந்திடும் குணமதே ஆனைமுகன்
நன்றெனும் சிவமதே யாவுமாய் வருவதை
. நாடிடும் குணமதே ஆறுமுகன்
ஒன்றெனும் தகப்பனே யெங்கணும் எனச்சொலக்
. குன்றெறி குமரரும் ஓடினரே
ஒன்றெனும் தகப்பனை நின்றுமே அறியலாம்
. என்பதை கணபதி காட்டினரே. ... 13
பூவது அரும்பெனில் பூசையின் சரியையாம்
. பூவெனில் கிரியையாய் ஆகுமென்பர்
பூவதே முதிர்வதில் காயெனும் உருவினில்
. ஓர்நிலை வழிப்படும் யோகமென்பர்
பூவரும் முதிர்கனி ஞானமென் றுரைப்பரே
. சூலியின் கரக்கனி ஞானமயம் ... [சூலி=சூலம் தாங்கும் சிவன்]
நாவரும் கிரியையும் யோகமும் சரியையும்
. ஞானமே உணர்ந்திட முற்படியே. ... 14
நாதனும் கனியினை விள்ளுதல் இலையெனில்
. ஞானமும் சிதைக்கவொண் ணாததன்றோ?
நாதனின் எதுவுமே வேறல வெனச்சொல
. ஐங்கரன் தகப்பனைச் சுற்றிவந்தார்
நாதனே அனைத்துமாய் நிற்பவன் எனச்சொல
. ஞாலமும் அறுமுகன் சுற்றிவந்தார்
நாதனின் கழலிணை நாடியே உருகுவோர்
. ஞானமே அகம்வர உய்வரன்றோ? ... 15
ஐங்கரன் அறுமுகன் ஒன்றென உணர்வதால்
. ஐம்புலன் கவிமனம் ஒன்றிடுமே
ஐங்கரன் அறுமுகன் பாலொடு சுவையென
. ஐயமின் றுணர்வதே ஐக்கியமாம்
ஐங்கரன் கனியெனும் ஞானமே சுமப்பவன்
. பாலது சுவையினைத் தாங்குதலாய்
ஐங்கரன் தம்பியே ஞானபண் டிதனென
. பாலது தாங்கிடும் சுவையவனே. ... 16
நூற்பயன்
அன்றைய உலகினில் பாமர சனங்களின்
. ஆன்மிக வழிமேம் படுத்தினவே
தொன்மத தருமமாம் நம்மதக் கதைகளில்
. உள்ளுறை பலப்பல தத்துவமே
இன்றைய இளைஞரும் இத்தகு கதையெலாம்
. ஏற்புடைத் தலவெறும் கற்பனையே
என்பதை விடுத்ததன் தத்துவம் மனம்கொளத்
. தென்றிசைச் செலாதவர் வாழ்தினமே. ... 1 [*3]
--ரமணி, 01-09/12/2013, கலி.15-23/08/5114
குறிப்பு:
1. ’முந்தியோர் அடிவயவர் வேண்டிய இருகனி’
காரைக்கால் அம்மையார்க்கு சிவன் இரண்டு மாங்கனிகளை அவர் கையில்
தோன்றச்செய்து அளித்த வரலாறு இங்கே:
http://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_அம்மையார்
2. ’செல்லுவார் அருமுனி வாரியார் சுவாமிகள்’
விநாயக மூர்த்தி கனி பெற்ற வரலாற்றின் நுண்பொருளை வாரியார் சுவாமிகள்
தம் ’திருப்புகழ் விருவுரை’யில் விளக்குகிறார்:
http://www.tamilvu.org/slet/l41F0/l41F0pd1.jsp?bookid=259&pno=4&brno=1
3. ’தென்றிசைச் செலாதவர் வாழ்தினமே’
’going south' என்னும் ஆங்கிலச் சொற்றொடரின் என்பதன் தமிழாக்கம்.
’going south' என்றால் ’to fall, to slide’=’வீழ்தல், வழுக்குதல்’ என்று பொருள்.
*****