ரமணியின் ஆன்மீக மஞ்சரீ

ஜகத்குரு தரிசனம்
மானிடர்க்குத் தேர்த் திருவிழா!

(வெண்பா)

காஞ்சிவரு வாய்த்துறை ஆய்வர்நான் வந்ததுவோர்
ஆஞ்ஞை அறநி லயத்துறை ஆணையர்
ஆட்சியர் நண்பர் அருமுனி காஞ்சிமகான்
காட்சியருள் கொள்ளவிழை வாம். ... 1

பெரியவர்முன் பத்தைந்து பேராய மர்ந்தோம்
அருமுனி யும்தன் அகமலர்ந் தேசிறு
கோவிற் றிருப்பணி கொள்வது பற்றியே
நாவழுத்தும் சொல்லுரைத் தார். ... 2

சட்டென்றோர் கேள்வி தவமுனி கேட்டாரே
கட்டுகள் உள்ள அவனியில் தோன்றிக்
கருவில் திருவுற்ற மானிடர்மூ வர்த்தேர்த்
திருவிழாக் கொள்வர் எவர்? ... 3

மானிடர்க்குத் தேரா மயங்கினோம் மூளையை
ஆனமட்டும் தோண்டியும் காணவில்லை யேவிடை!
புன்னகை பூத்தந்தப் புங்கவர் சொல்லுற்றார்
நன்று விடைசொல்வேன் நான். ... 4

திருவில்லி புத்தூரில் தேர்-ஆண்டா ளுக்கே
பெரும்புதூர்ரா மானுசர் பெற்றார் ஒருதேர்
பெருந்துறை வாதவூர பெற்றதேர் என்றார்
ஒருகுழந் தைசிரிப் போடு. ... 5

[வாதவூரர் = மாணிக்கவாசகர்]

--ரமணி, 25/07/2014, கலி.09/04/5115

கட்டுரை:
’மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ இரண்டாம் தொகுதி
பக்.208-210, அன்பர் ’இராசு’வின் அனுபவம்

http://www.periva.proboards.com/thread/7693/great-devotees-who-receive-procession

*****
 
ஜகத்குரு தரிசனம்
’படிப்பிலே மக்குன்னு நெனச்சியோ?’

(வெண்பா)

உதவி:
http://www.periva.proboards.com/thread/7692/periva-good-studies
3670d1406774052-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-perivaschool.jpg


அருந்தவ மாமுனி காஞ்சி மகானின்
அரிதெனும் பள்ளிப் பருவப் பதிவொன்றை
ஆனந் தவிகடன் ஆன்மீகப் பேனாவாய்
ஆனபர ணீதரன்பெற் றார். ... 1

பரணீதரன் சொல்வார்:

ஆர்கா டுமிஷன் அமெரிக்கப் பள்ளியைநான்
ஆர்வத்து டன்-அணுகிக் காஞ்சிமுனி கற்ற
பழைய பதிவுகள் பற்றியே தேடித்
துழவியே தட்டினேன் தூசு. ... 2

திண்டிவனம் ஊரில் சிறந்தவப் பள்ளியில்
கண்டேன் ஒரேவொரு காகிதம் அஃதோர்
வருகைப் பதிவேட்டின் மக்கிய பக்கம்
இருந்ததே அன்னாரின் பேர்! ... 3

சுவாமிநா தன்பேர் சுவாசம் நிறுத்த
அவாவுடன் பள்ளி அனுமதி பெற்றந்த
ஆயிரத்துத் தொள்ளாயி ரத்திநா லாம்-ஆண்டின்
பாயிரம் பெற்றுவந்தேன் நான். ... 4

பெரியவர் ஃபாரம் இரண்டில் படித்த
வருகை அறிவித்த மக்கிய தாளுடன்
ஆந்திர தேசப் பயணத்தில் ஏகிய
காஞ்சிமுனி யைக்கண்டேன் நான். ... 5

நள்ளிரவு, பௌர்ணமி; ஞானியவர் மேனாவில்;
பள்ளி விவரப் பதிவேடு பற்றிநான்
சொன்னபடி கூடவே ஓடினேன் மேனாவும்
நின்றதுசற் றுத்தொலை வில். ... 6

உடன்வந்தோர் ஆகாரம் கொள்ள அனுப்பி
அட-இது எப்படிவுன் கையில் கிடைத்ததென்றார்
கைமின் விளக்கொளியில் கண்ணாடி வில்லையில்
கைமுன் னுளதாள்பார்த் தார். ...

முகம்மலர உள்ளத்தில் முன்னோக்கிப் பத்தாம்
அகவையின் நாட்களில் ஆழ்ந்தார் ஒருகணம்
தன்னுடன் கற்ற சகாக்கள் எவரெவெர்
இன்றில்லை மற்றவர் எந்தவூர் என்றுசொல்லி
என்னிடமோர் கேள்விகேட் டார். ... 8

என்பேர் கடைசியில் இத்தாளில் வந்ததால்
என்ன நெனச்சே? பெரியவா மக்குன்னா?
இல்லை பெரியவா பேரேன் கடைசியிலென்
றல்லல் மனம்கொண் டது. ... 9

பூர்வா சிரமத்தில் ஸ்கூல்-இன்ஸ்பெக் டர்தந்தை
ஊர்-ஊராய் மாற்றல் உறுதியாய்; செப்டம்பர்
மாதமவர் திண்டிவனம் வந்ததால் பள்ளியில்
பாதியில் சேர்ந்தேன்நான் ஆதலால் என்பேர்
கடைசியில் என்றார் குரு. ... 10

--ரமணி, 31/07/2014, கலி.15/04/5115

*****
 
ஜகத்குரு தரிசனம்
கணிதத்தில் சீவனும் பரமனும்!


(இதன் மூலத்தை அவசியம் படிக்கவும்:
http://periva.proboards.com/thread/4175/perivas-exposition-on-mathematical-formulae)

(எண்சீர் விருத்தம்: கூவிளம் காய் விளம் காய்
. விளம் காய் விளம் மா)


அத்வைதம் என்றாலும் துவைதமென் றாலுமவை
. சார்ந்தவி சிஷ்டாத்து வைதமென் றாலும்
தத்துவம் ஒன்றேதான்: சீவனின் இலக்கென்றே
. ஆவது பரமன்தான் என்றிவை சொல்லும்;
எத்தகு சூழ்நிலையில் சீவனின் இருப்பென்றும்
. எவ்வழி உய்வென்றும் சொல்வது மாறும்;
முத்தியின் வழிசொல்லும் தத்துவம் மூவகையின்
. ஒப்புமை கணிதத்தால் அறிந்திட லாமே. ... 1

சங்கரர் அத்துவைத வழியினில் பரமாத்மன்
. சதுரமாம் சீவாத்மன் அதனொரு பக்கம்!
இங்கிதம் என்னவெனில் சதுரமும் சுற்றளவில்
. சீவனாம் பக்கத்தின் நான்மடங் கென்றே.
சங்கையாம் நான்கென்றால் கூறுறா எண்ணாகும்
. சமுசயம் இல்லாத இணைப்பிது வாமே
இங்ஙனம் சமன்பாட்டில் சீவனும் பரமனாகி
. இணைந்தியல் நிலையென்று நிச்சயம் உண்டே! ... 2

[இங்கிதம் = குறிப்பு, கருத்து, இனிமை;
சங்கை = எண்; கூறுறா எண் = rational number;
சமுசயம் = சந்தேகம்; சமன்பாடு = equation]

மத்துவர் துவைதவழி யில்லிது கடுமையாகும்
. வட்டமும் வட்டத்தின் விட்டமும் என்றே
ஒத்ததோர் நிலையினிலே சீவனும் ஆத்துமனும்!
. சுற்றள வில்வட்டம் எத்தனை விட்டம்?
இத்தகு சமன்பாட்டில் ’பை’யெனும் மாறிலியே
. இரண்டையும் தொடர்புறுத்தும் கூறுறும் எண்ணாய்;
எத்தனை முயன்றாலும் ’பை’யதன் விகிதத்தை
. எண்ணுதல் முற்றுப்பெ றாதென வாகும். ... 3

[’பை’=mathematical pi; மாறிலி = constant]

எங்ஙனம் வட்டத்தின் சுற்றினை விட்டமொன்று
. நெருங்கவே முடியாத நிலையென் றாமோ
அங்ஙனம் சீவாத்மன் எத்தனை சாதனைகள்
. ஆற்றியும் பரமாத்மன் என்பதா காதாம்
எங்ஙனம் ஐன்ஸ்டயினின் தேற்றமும் ’பை’கொண்டே
. இப்பிர பஞ்சத்தில் அனிச்சயம் சொலுமோ
அங்ஙனம் பேதமுறும் சீவனும் ஆத்துமனும்
. சடமெனும் பொருட்களுடன் சீவனும் தாமே. ... 4

கருவிளம் காய் விளம் காய்
. விளம் காய் விளம் மா

உடையவர் விசிஷ்டாத்து வைதமாம் பரமாத்மன்
. உருவிலே வட்டம்போல் தோன்றிடும் சதுரம்!
விடையென இவ்வழியில் துவைதமும் அத்வைதமும்
. இணைத்தொரு வழியினையே முத்தியாய்ச் சொல்லும்!
நடுவென இருமுனையின் சராசரி யெடுப்பதுபோல்,
. அரிசுடாட் டில்’கோல்டன் மீன்’-தனைப் போல!
நடைமுறை நெறியெனவே நாரணன் நெறியிதுவே
. ஆகுமாம் நம்மிடையே பலவடி யார்க்கே! ... 5

பரமனே நீயென்றோர் சீவனி டம்சொன்னால்
. வருவதோ மிதப்பென்றே ஆகவாய்ப் புண்டு
பரமனாய் நீயென்றும் ஆவது இலையென்றால்
. வருவதோ விரக்தியென ஆகலாம்! எனவே
பரம்பொருள் குழப்பவட்டம் அவித்தையே உள்ளவரை
. பரம்பொருள் தெளிசதுரம் ஞானம துவந்தால்
உருவினில் பலபெயர்கள் வெளியிலே! பேருந்தின்
. உள்வரின் நடத்துனர்க்கோ அனைவரும் ’டிக்கெட்’! ... 6

--ரமணி, 10/08/2014, கலி.25/04/5115

*****
 
ஜகத்குரு தரிசனம்
24. ’நிறுத்திவிடு காமாட்சி!’
(அறுசீர் விருத்தம்: கருவிளம் மா காய் ... விளம் மா காய்)

உதவி:
http://periva.proboards.com/thread/8164/

திருவிசை நல்லூர் ஊரினிலே
. திருமுனி தந்தார் தரிசனமே
இருவிழி யற்ற பெண்ணொருத்தி
. இன்முகம் காணக் காத்திருந்தாள்
திரிபுர சுந்தரி வழிபாட்டில்
. தேர்ந்தவள் தங்க உண்ணச்செய்
தரிசனம் தருகுவன் அங்குவந்தே
. சங்கரர் சொன்னார் அடியரிடம்.

அடியவர் தானே தயாரித்த
. அரிசியா லான உப்மாவைப்
படையலாய்க் கொண்ட பெண்மணியும்
. பார்வையை மூடித் தியானிக்கக்
கிடைத்தத வள்கரம் ஶ்ரீசக்ரம்!
. இதையடுத் தேதோ செய்திடவே
கிடைத்தசக் கரமும் மறைந்ததுவே!
. சீடரும் கண்டே அதிசயித்தார்.

விளக்குகள் மெலிதாய் ஒளிர்ந்திடவே
. வினவிவினள் முனிவர் தரிசனத்தில்
விளக்குவீர் எனக்கேன் சகஸ்ராரம்
. விளங்கிடும் ஜோதி தெரியவில்லை?
உளத்தினை மூடிச் சிறுநேரம்
. ஒருமையில் தியானம் செய்யென்றார்
விளக்குகள் யாவும் அணையென்றார்
. விழிகளை மங்கையும் மூடிடவே.

அடுத்தவோர் நிமிடப் பொழுதினிலே
. அலறினாள் பெண்மணி தாளாதே!
கிடைத்தது ஜோதி தரிசனமே
. நிறுத்திதை போதும் காமாட்சி!
உடன்விளக் கெல்லாம் ஏற்றென்றார்
. புறவொளி யில்பெண் அமைதியுற்றாள்
சடுதியில் முனியும் சென்றுவிட்டார்
. அடியவர்க் கொன்றும் புரியவில்லை!

நடந்ததைக் கேட்ட அடியரிடம்
. நங்கையும் சொன்னாள் இங்ஙனமே
முடியுறும் ஜோதி தரிசனத்தை
. முனிவரும் எனக்குத் தந்தனரே
உடையவ ராயவர் காமாட்சி
. உருவினில் தந்த ஜோதியினை
இடிவரும் மின்னல் போல்நானும்
. இரண்டுநி மிடமே கண்ணுறலாம்!

அன்னைகா மாட்சி ஜோதியினை
. அதற்குமேல் காணத் தாங்காதே!
என்மனம் தாளா தேநானும்
. நிறுத்திடச் சொல்லி அலறினனே!
என்னவோர் பேறென அடியவரும்
. இந்நிலை வியந்தே துணுக்குற்றார்
மன்பதை போற்றும் மாமுனியே
. மன்றினில் ஆடும் இறையன்றோ?

--ரமணி, 26/10/2014, கலி.09/07/5115

*****
 
ஜகத்குரு தரிசனம்
26. வறுமையே செல்வம்!
(எழுசீர் இயைபுக் குறள் வெண்செந்துறை)

அரசு அலுவலர் ஆன்ற முனிவரைத் தெரிசனம் செய்தார் நாடி
பெரிய வரிடம்தன் பெரிய சுமையென வறுமையே என்றார் வாடி. ... 1

கடனாய் மாதக் கடைசியில் வாங்கிக் காலம் ஓடுதல் சொன்னார்
கடமை அலுவலில் காப்பெனும் சம்பளம் போதிய தில்லை யென்றார். ... 2

உடனுறை மனையின் உற்ற மக்களின் அன்பெவண் என்றார் முனிவர்
நடந்து கொள்வரே நலிவிலும் அன்பாய் குறையிலும் உள்ளம் கனிவர். ... 3

சித்த நாழியென் எதிரில் அமர்வாய் என்றார் காஞ்சிப் பெரியவர்
எத்துணை பாக்கியம் என்றவர் எதிரே அமர்ந்து கொண்டார் வறியவர். ... 4

வந்தனர் ஒருசெல் வந்தர் மனையுடன் காணிக் கைகளை வைத்தே
முந்திரி பாதாம் முக்கனி மலர்களும் சந்தனத் தொடுசர்க் கரைத்தேன். ... 5

சால்முனி யிடம்பிர சாதம் பெற்றபின் செல்வரும் சொன்னதோர் செய்தி
ஆலெனச் செல்வமும் ஆட்களும் வாய்த்தும் வாய்த்திலை மனதில மைதி. ... 6

ஏழை யெனநான் இருந்திருந் தாலோ என்மனம் மகிழ்வுற் றிருக்கும்
நீழை யெனத்தொடர் நீரிழி நோயினால் நீக்குண வெல்லாம் விருப்பம்! ... [நீழை = நிழல்] ... 7

பிள்ளைகள் இருவரின் போக்கும் சரியிலை நல்லதை நாடுவ தில்லை.
உள்ளது துய்ப்பதில் உள்ளது துன்பமே வாழ்வதன் இறுதியில் தொல்லை! ... 8

நோயில் உடலும் நோவில் உளமும் நொந்திடும் வாழ்வென வாழ்வே?
தாயெனத் தாரம் தனயரும் தகவர் ஏழ்மையில் ஏதுறும் தாழ்வே! ... 9

நேரில் முனிவர் நிகழ்த்திய பாடம் கற்றுத் தெளிந்தார் அலுவலர்
சேரும் பணத்தில் செல்வது எதுவெனத் தெரிந்தவர் ஆனார் வலுவினர். ... 10

--ரமணி, 23/01/2015, கலி.09/10/5115

உதவி:
http://periva.proboards.com/thread/8532/

*****
 
ஜகத்குரு தரிசனம்
27. உச்சிட்ட நாதர்!
(அறுசீர்க் குறள் வெண்செந்துறை)

காளத்தி நாதரவர் கனிவோடு கொண்டாரே கண்ணப்பர் உச்சிட்டம்
காளமமர் கண்டருக்குக் காணிக்கை யாகநானும் தந்ததெலாம் மிச்சிலையே! ... 1

காளத்தி ஆலயத்தின் குடமுழுக்கு; காஞ்சிமுனி காணிக்கை இவ்விதமே
ஏளனமென் றிலையென்றார் ஏறுடையான் இட்டமுடன் ஏற்றிடுவான் எச்சிலையே. ... 2

பாலுடன்கங் கைநீரும் பட்டாடை யும்தேனும் நீராடற் கனுப்பினாரே
ஆலமர்ந்தான் ஆடலுக்கு அன்றுமுதல் இன்றுவரை ஆகிவந்த பொருளன்றோ? ... 3

தாய்மடியில் வாய்வைத்தே தான்கன்றும் எச்சிலாக்கி னாலொழியப் பால்தருமோ
தாயெனநாம் கொள்பசுவும்? ஆதலினால் தாயுமான வன்கொள்ளும் பாலெச்சில்! ... 4

தேமதுரம் தேடியலைத் தேனீதன் வாயாலே தேனுறிஞ்சிச் சேர்த்திடுமே
நாமதனை இட்டமாக நாடுதல்போல் நாதனவன் கொள்தேனும் எச்சிலாமே! ... 5

மீன்வாழும் கங்கைநீரும் மீன்வாயைத் திறந்துமூடிக் கொப்பளிக்க மிச்சிலாகும்
கூன்பிறையான் குடமுழுக்கும் குளிநீரும் எச்சிலாகக் கொள்ளுவனே இட்டமுடன்! ... 6

பட்டிழையை வாயாற்றான் பட்டுதரும் பூச்சிகளும் நூற்றிடுமே ஆகையினால்
இட்டமுடன் ஈசனனவன் ஏற்றணியும் பட்டாடை மிச்சிலென ஆவதுவே. ... 7

எனவேநான் ஐதீகம் ஏற்பதென ஈசனுக்குக் காணிக்கை எச்சிலாக
அனுப்பிவைத்தேன் என்றாரே அருமுனிதன் இன்முகத்தில் புன்னகையொன் றாடவிட்டே. ... 8

--ரமணி, 13/02/2015

உதவி:
http://periva.proboards.com/thread/8622/

*****
 
ஜகத்குரு தரிசனம்
29. பெயர்க் காரணம்
(கலிவெண்பா)

பெரியவா என்னும் பெயரேன்? அடியார்
அருமுனியைக் கேட்க அவரும் - பெரியவாய்,
ஓயாமற் பேசிடும் ஓட்டைவாய் என்றுதான்
தாயாரும் மற்றோரும் தக்கபெயர் வைத்தனரோ?
ஓயாமல் நீங்கள் உபநிடத வாக்கியம்
தாயாரின் அன்புடன் தந்தெமைக் காக்கப்
பெரியவாய் என்பதும் பேர்ப்பொருத்தம் ஆமே!
அருமுனியின் பத்தர் அவசரமாய்ச் சொல்லப்
பெரியவாள் என்னும் பெயரெதற் கென்றார்
கரிசனமே கண்ணுறும் காஞ்சி முனிவர்.
மனந்தங்கும் காமாதி மாயைதனை வாளால்
இனந்தெரி யாதறுக்கும் இன்செயற் பேரிதுவே!
காமகோ டிப்பீடம் காஞ்சியின் பேரெதற்கு?
சேமமுனி காரணம் செப்பினார் இன்முகமாய்:
காமகோ டிச்சொல்லே தர்மார்த்த காமகோடி
காமத்தின் கோடியில் கண்ணுறும் மோட்சமே
நாமத்தின் பின்னுறும் நற்பொருள் என்றாரே!
தெய்வத்தை நீணிழலாய்த் தேடித் தொடர்ந்துசென்று
தெய்வத்தின் தீங்குரலைத் தீந்தமிழில் தந்தே
அடியார் கணபதி ஆக்கிய நூலைப்
படிக்கவரும் பத்திநெறிப் பற்று.

--ரமணி, 01/05/2015, கலி.18/01/5116

உதவி:
?????? ??????? ???????? ???????? ??.????????? ????.! | Kanchi Periva Forum

*****
 
அருமுனி அறவுரை
1. பிள்ளையார் தத்துவம்
(அளவியல் வெண்பா)

[காஞ்சி முனிவர் உரையிலிருந்து:
’தெய்வத்தில் குரல்’, பாகம் 1 பக்.42-46]


தேங்காய் உடைத்துத் திருவருள் வேண்டுவோம்
ஈங்கதன் காரணம் ஈசன் தலையையே
ஓங்காரப் பிள்ளை ஒருமுறை கேட்டதே!
தேங்காயின் முக்கண்ணுள் தேன். ... 1

சிதறுதேங் காயின் சிறப்பென்ன வென்றால்
சிதறினைக் கொள்வர் சிறாரே - அதனை
உகந்தருள் செய்வார் உமைமகன், இஃதேன்?
அகங்கார ஓட்டுள் அமுது. ... 2

ஆனை உடல(து) அமர்ந்தே பயணிக்க
மோனையாய் உள்ளது மூஞ்சுறு - மேனி
மலைபோல் இருந்தும் மனதுட் புகுந்தே
இலகாய் அமர்வார் இனிது. ... 3

மானுக்கு வாலும் மயிலுக்குத் தோகையும்
ஆனைக்குக் கொம்பும் அழகெனிலிவ் - வானை
கொடியோனைக் கொம்பினால் கொன்றபின் கொம்பை
ஒடித்தெழுதும் காவியம் ஒன்று. ... 4

புள்ளி விரிக்கும் புனித இறையிணையின்
பிள்ளையாய் வந்துநம் பிள்ளையாரே - உள்ள
முதற்பொருளாய் நிற்கும் முழுமுதற் றெய்வம்
முதலில் துதிகொள்ளும் முத்து. ... 5

தொந்திக் கணபதிமுன் தோப்புக் கரணங்கள்
உந்துதல் ஏனெனில் ஓர்முறைகோ - விந்தன்
சகடம் பறிக்கவர் தன்காதைப் பற்றி
விகடமாய்ச் செய்தார் விழுந்து. ... 6

விக்கினம் நீங்க விநாயகர் போற்றியே
முக்கணமும் உள்ளவரும் மோனமே - சிக்கல்
இகவாழ்வில் தீரும் இனிதே இனிநாம்
சுகமாகக் கொள்வோம் சுமை. ... 7

--ரமணி, 07/05/2015, கலி.24/01/5116
(சங்கடஹர சதுர்த்தி தினம்)

*****
 
அருமுனி அறவுரை
2. அத்வைத தரிசனம்
(அளவியல் வெண்பா)

[காஞ்சி முனிவர் உரையிலிருந்து:
’தெய்வத்தில் குரல்’, பாகம் 1 பக்.49-51]


சீவன் பிரமமெனும் செம்பொருள் ஒன்றென்றே
ஆவதால்நாம் எல்லோரும் ஆண்டவன் ஆவோம்
அருமுனி சங்கரர் ஆதியில் சொன்னார்
உருவம் அனைத்துமே ஒன்று. ... 1

இரண்ய கசிபு இதைத்தானே சொன்னான்?
நரசிம்ம ரென்றுலக நாதன் - அரக்கனைக்
கொன்றாரே! சங்கரர் கொள்வதும் ராட்சசன்
சொன்னதும் ஒன்றாமோ சொல்? ... 2

அரக்கனவன் சொன்ன(து) அவனைத் தவிரப்
பரம்பொருள் இல்லை! பரமாம் பொருள்தவிர
வேறொன்றும் இல்லையென வேதியர் சங்கரர்
ஆறுதல் சொன்னார் அறிந்து. ... 3

தன்னகங் காரத்தைத் தள்ளினால் சீவாத்மா
ஒன்றாய்க் கலந்தே ஒளிபெற்றே - நன்றாகத்
தானே பரம்பொருள் தானே கடலெனத்
தானாகக் கண்டறிவ தாம். ... 4

நாம்கடவுள் இல்லையெனில் நாம்கட வுள்தவிர
ஆம்பொருள் வேறேன்றே ஆகுமே! - தாமோர்
பொருளில்லை வேறு பொருளுமுண் டென்றால்
பரமெவண் ஆகும் பரம்? ... 5

ஆண்டவன் நாமென்னும் அத்வைதி ஆண்டவன்
மாண்பைக் குறைப்பதில்லை; மாறாக - ஆண்டவன்
அல்பமாம் சீவனென் றாவதில்லை என்றடித்துச்
சொல்வோர் செயலத் தொழில். ... 6

கடலாய் விரிந்த கடவுளேதன் சக்தி
உடல்பல வாம்சிற் றுருவாய்ப் - படைத்தே
நதியாய்த் துளைகிணறாய் நம்மூர்க் குளமாய்
விதிகொள் உயிராம் விளை. ... 7

மனிதனாம் போது மனம்தந்தே பாவ
வினையுடன் புண்ய விளையென்(று) - அனுபவிக்கச்
செய்தோர் நிலையில் சிவமாம் பொருளாகி
உய்ய வழிசெய்யும் ஊற்று. ... 8

நிலையற் றமன நிலையிலே பாவ
வலைபுண் ணியவளம் வற்றித் - தொலைய
இயலா நிலையில் இறைபோற்றும் பக்தி
பயில்வதால் கிட்டும் பலன். ... 9

குரங்குமனம் பற்றும் குரம்பை அழுகல் ... ... [குரம்பை = உடல்]
பரமன் அழுகாப் பழமென்(று) - உரமுடன்
பக்தியில் ஆண்டவன் பாதவிணை பற்றினால்
முக்தியாம் ஞான முறும். ... 10

--ரமணி, 08/05/2015, கலி.25/01/5116

*****
 
அருமுனி அறவுரை
3. தர்மமே தலைகாக்கும்
(அளவியல் வெண்பா)

[காஞ்சி முனிவர் உரையிலிருந்து:
’தெய்வத்தில் குரல்’, பாகம் 1 பக்.123-129]


வருடம் புதியாய் வருமடை யாளம்
மரவர்க்க ராச்சிய மக்கள் - அரசுடன்
வேம்பும் இலையுதிர்த்தே மீண்டும் வசந்தத்தில்
ஓம்பும் துளிரின் ஒளி. ... 1

அரசுடன் வேம்பை அருமணம் செய்வித்(து)
இரண்டின் அடியிலும் ஏகதந்தன் நாகம்
உருவைத்துப் போற்றும் உளமே நமது;
தருமம் விரியும் தரு. ... 2

இயற்கையாம் அன்னை இதுபோல் மரங்கள்
வெயிலிளங் காலசுக வெம்மை - வெயில்முதிர்
காலம் தருநிழல் காணவழி வைத்தது
சாலச் சிறந்தவோர் சால்பு. ... 3

முருகனே நாகத்தின் மூலமென்று கொண்டே
தெரிந்தவோர் சொல்லாய்த் தெலுங்கில் - இரண்டுக்கும்
பேர்சுப்ப ராயுடுவாய்ப் பேச மரத்தடியில்
ஏரம்பன் தம்பி யிணை. ... 4

நியதி பிரபஞ்ச நீதி;-நெறிக் கேடாம்
நியதி இயங்காது நீங்க; - நியதி
உருகொள்ளும் சீவசடம் ஒத்துவாழ்ந் துய்ய;
தருமம் மனிதன் தகை. ... 5

ஏதோவோர் சக்தி உலகம் அனைத்திலும்
ஏதோவோர் தர்மம் இயற்றுமே - ஏதேனும்
நாமமாய் நீறாய் நமாஸாய்ச் சிலுவையாய்த்
தீமையகல் வாழ்வெனத் தீர்வு. ... 6

அந்தவோர் சக்தியே ஆண்டவன் என்றுலகில்
வந்த மதங்கள் வழிபடுமே - அந்தம்
எதுவென் றறியா எளியன் மனிதன்
இதுவுலக வாழ்வின் இயல். ... 7

உடல்விழையும் உள்ளத்தின் உள்ளலாம் செல்வம்
நடையெதிர் கால நலமாம் - மடமையிதே!
ஆயுளின் காப்பாய் அமையுமோ செல்வசுகம்?
தோயும் தருமமே தோள். ... 8

கடவுளுக்கே சொந்தம்நாம் காணுலகம் என்று
நடப்பதே தர்மம் நமக்கு - உடையார்
அவர்முன் சிறுதுரும்பே ஆவோம்நாம் என்றே
தவிர்ப்போம் சுயநலத் தை. ... 9

சுயநலம் தள்ளி சுதருமம் பக்தி
பயில்வதே மாந்தரின் பாதை - நயம்மேவும்
பக்தியுற அன்பே பரமென்(று) அணைக்கும்!
முக்திக்கு பக்தி முதல். ... 10

மனதுறும் பக்தி மகிழ்வின் செயலாய்த்
தினமும் வழிபாடு சேவை - தனதென்று
கொள்ளாத் தியாகமென்று கொள்கை - யெனமதம்
விள்ளுமே வாழ்வின் விடை. ... 11

தருமத்தில் வாழ்ந்தால் தன்னுயிர் தெய்வம்
அரசாள் உலகம் அடையும்; - பரமாகும்
ஓருயிர்; தெய்வ உலகிலே சேவைசெய்யச்
சேருமெனப் பல்வகையில் தீர்ப்பு. ... 12

முடிவு எதுவெனினும் மோனமா னந்தம்
தடையேதும் இல்லாத் தகையாய் - அடியோடு
துன்பம் துயரம் துராசைகள் தோல்வியிலா
இன்பநிலை என்போம் இதை. ... 13

இந்தநிலை எய்தி இறைசுகம் கொள்ளவே
எந்த தருமந்தான் ஏற்றதெனில் - சொந்தமென
வந்தடையும் முன்னோர் வழியில் செயல்படச்
சிந்திக்க நேரும் சிறப்பு. ... 14

இராமர் தருமம் இகத்திலே கொண்டால்
பிராணிகளும் கொள்ளும் பிரியம் - இராவணன்
துர்நெறி கொள்வார்க்குச் சோதர னும்பகை!
தர்மமே காக்கும் தலை. ... 15

--ரமணி, 08/05/2015, கலி.25/01/5116

*****
 
ஜகத்குரு தரிசனம்
31. வீணை இசைத்த வித்தகர்!
(கலிவிருத்தம்)

சதாராவில் ஓர்சமயம் தங்கினார் பெரியவர்
விதானமாய் அரசமரம் விளைநிழல் இருக்க
நிதானமாய் அதன்வேரில் நிலத்தில் படுத்தார்
யதார்த்தமாய் ஓர்திரை யதிராஜர் முன்னே. ... 1

வீணையுடன் தரிசித்தார் வித்துவான் ஒருவர்
ஆணையை வேண்டினார் அருமுனிமுன் வாசித்தார்
காணுவோர் யாவருமே கனிமழையில் நனைந்தனர்
வீணையைக் அவரிடம் வித்தகர் கேட்டனரே! ... 2

அருமுனி கேட்டதில் அனவருக்கும் ஆச்சரியம்!
சுருதியைச் சேர்த்தவர் சொன்னார் சரிபார்க்க
சரியெனச் சொன்னதும் சகத்குரு வாசித்தார்
ஒருசில நிமிடம் தொடர்ந்தது வாசிப்பே. ... 3

அழுதார் வித்துவான் அகம்பதறிக் கால்விழுந்தே
தொழுதார் ஆவியைத் தோய்த்தே கண்ணீரில்
பழுது பொறுத்தருளப் பணிவுடன் வேண்டினார்
இழைகல்விச் செருக்கை இனிவிடென் றார்முனியே. ... 4

விடைபெற்று நண்பரிடம் வித்துவான் சொன்னார்
விடையோனின் மலைதூக்க விழைந்தான் இராவணன்
அடிவிரலால் அம்பலத்தான் அவனைச் சாய்க்கவே
கொடைவேண்டிச் சாமகானம் கொண்டிசைத்தான் அல்லவா? ... 5

நானங்கே சாமகானம் நாடியே வாசித்தேன்
ஆனமட்டும் முயன்றும் அதுசரியாய் வரவில்லை
கானத்தை யாரறிவார்? கர்வமே தலைதூக்க
நானெதையோ வாசித்து நலிவை நிறைத்தேனே. ... 6

பெரியவர் சர்வக்ஞர்! பேதம் உடன்கண்டார்!
சரிசெய்தே வாசித்தார் தரித்திரனை மன்னித்தே!
தெரிந்ததைச் செய்வாய் தெரியாத தைத்தெளிவாய்த்
தெரிந்துகொள் எனும்புத்தி தீட்டினார் மனத்துள்ளே! ... 7

--ரமணி, 29/05/2015, கலி.15/02/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9358/maha-periva-knows-veena-vadyam

*****
 
ஜகத்குரு தரிசனம்
32. சாத்திரமும் எள்ளுப் புண்ணாக்கும்!
(அளவியல் வெண்பா)

வெளிநாட்டில் பக்தருக்கு வேலை யெனவே
அளித்திருக்கும் வாய்ப்பில் அவரும் - களித்தே
குடும்பத்தின் சூழல் குறைகள் களைய
உடும்பாய்ப் பிடித்தார் உவந்து. ... 1

சாத்திரம் மீறியதாய்ச் சஞ்சலம் வாட்டவே
தீத்திறப் பார்ப்பனர் தீதகல - சாத்திரக்
காவலர் ஆகிய காஞ்சிமுனி கோலத்தை
நாவுள்ளம் சித்தரித்தார் நன்று. ... 2

[தீத்திறப் பார்ப்பனர் = வேத வேள்விகள் செய்யும் அந்தணர் குலம்;
சித்தரித்தார் = விவரமாய் எழுதினார், சித்தம் தரித்தார்]

விடுமுறை நாளில் வெகுகாலம் காணக்
கிடைக்காத் தரிசனம் கிட்ட - அடியார்
விமான நிலையம் விடுத்தே முனிவர்
சமாஜம் உடனேவந் தார். ... 3

அன்று சமையலில் ஆவதைக் கேட்டமுனி
நின்றே சிலவற்றை நீக்கியே - இன்னின்ன
சேரென்று சொன்னதில் சிப்பந்திக் காச்சரியம்
சீரார் முனியின் செயல்! ... 4

பத்தர் முனிகண்டு பாதம் பணியவே
இத்தருணம் உண்ணச்செய் என்றுசொன்னார் - பக்தர்
வயிறாரச் சாப்பிட்டு வந்தார் முனிவர்
உயிராகப் பார்த்தாரே உற்று. ... 5

விரதம் முடிந்ததா வித்தகர் கேட்கக்
கருவிழி நீர்வழியக் கண்டே - உருகிப்
பெரியவா என்றுமட்டும் பேசிநின்றார் பக்தர்
தரிசனத்தில் தீர்ந்த தவிப்பு. ... 6

எதுவும் புரியாமல் எல்லோரும் பார்க்க
யதிசொன்னார் இங்கிவன் யாத்திரை யாக
வரும்வரை ஏதுமே வாயுண்ண வில்லை
விரதத்தில் வந்தார் விழைந்து. ... 7

இடையிலே சம்பவம் இன்னொன்று: பக்தர்
கொடுவென் றெதைக்கேட்டுக் கொள்ள? - திடமுனி
கேட்ட(து) அதிசயம்! கேட்டறியா தார்கேட்ட
ஆட்டத்தில் ஆடினரே அங்கு! ... 8

வந்தவர் உண்ண, வரமுனி ஆணையிட்டார்
இந்தா இவனிடம் எள்ளுப்புண் ணாக்குடன்
தையலிலை வாங்கித் தரச்செய்தே கொண்டுவா!
கையுடன்செல் என்றார் கனிந்து. ... 9

அருள்லீலை ஏனோ? அருமுனி சொன்னார்
பிரியம் இவனுக்கென் பேரில் - ஒருபார்ப்பான்
சாகரம் தாண்டினால் சாத்திரம் சொல்வதெனில்
ஆகா(து) எதுவும் தர. ... 10

சாத்திரமே நானிங்கு சார்ந்துநிற்க வேண்டும்தான்
பாத்திரம் ஓர்பெரும் பக்தரென்றால் - பாத்திரமும்
வேண்டும்தான் சாத்திரம் வேண்டல் அனுசரித்தே
ஆண்டுநான் கொள்வேன் அகம். ... 11

எள்ளுப்புண் ணாக்கினை இந்த மடப்பசு
கொள்வதில் நாளை கொடுத்திடும் பாலை
எனக்குத் தரநீங்கும் எல்லாக் குறையும்
மனத்தில் இவனுக்கும் மாண்பு. ... 12

சாத்திரம் தர்மம் தவறாத காஞ்சிமுனி
சூத்திரத்தில் பக்தர் சுகமுற்றே - நேத்திரம்
நீரோடக் கைகூப்பி நிற்க முனிதருமம்
வேரோடும் பக்தியில் வேய்ந்து. ... 13

--ரமணி, 06/06/2015, கலி.23/02/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9379/

*****
 
ஜகத்குரு தரிசனம்
33. சம்புசொல் அன்றோ வசம்பு!
(அளவியல் இன்னிசை வெண்பா)

சிறுநீ ரகத்தில் சிரமம் சிகிச்சை
உறிந்தது செல்வம் உளைச்சலென் உள்ளத்தில்
ஐயன் அருளில் அடியேன் குணம்பெற்றென்
மெய்தேற நான்வேண்டு வேன். ... 1

இதுபோன்ற போதில் இனியவராய்ப் பேசிப்
பொதுவில் கருணை பொழியும் பெரியவர்
இச்சம யம்கடிந்தே ஏசியது கண்டவர்
அச்சம் எழநின் றனர். ... 2

பண்ணும் அதர்மத்தைப் பற்றியெல் லாரும்தான்
எண்ணாது என்னிடம் இங்கு வருகின்றார்
தான்செய் அதர்மம் தவறை உணர்வதில்லை
நானென்ன செய்வது நன்று? ... 3

முன்னோர் தரும முறைக்கென்று வைத்திருந்தார்
நின்று விளைநிலம் நீர்ப்பந்தல் வைக்க!
இவரதை விற்றுண்டால் இன்னல் வராதா?
தவறுசெய் தால்துன்பம் தான். ... 4

உறைத்தது வந்தவருக்(கு) உள்ளம் நெகிழ
உறுதிமொழி தந்துநின்றார் உற்றதர்மம் நீர்ப்பந்தல்
என்றவர் செய்யவே; இன்முனி கேட்டவரை
மன்னித்துச் சொன்னார் மருந்து. ... 5

கடையில் வசம்பு கணிசமாய் வாங்கி
அடிவயிற் றில்பூ(சு) அறைத்தே; சிலநாளில்
எல்லாம் சரியாகும் என்றார் தருமத்தில்
நல்லதே செய்துவா நன்கு. ... 6

பத்துநாள் சென்றதும் பத்தரும் மீள்வந்தார்
அத்தனை துன்பமும் ஆவியாய்ப் போனதென்றார்!
நம்முடல் உள்ள நலிவுகள் போக்கிடும்
சம்புசொல் அன்றோவ சம்பு! ... 7

--ரமணி, 09/07/2015, கலி.24/03/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9623/

*****
 
ஜகத்குரு தரிசனம்
34. எப்போதும் ராமநாமம்
(எண்சீர் விருத்தம்: கூவிளம் காய் காய் காய் ... காய் காய் மா மா)

உத்தர மாநிலத்தில் பணிசெய்து வாழும்நம்
. ஊர்க்கார ராயொருவர் ஓர்நாள் காஞ்சிச்
சித்தரைக் காணவந்தார், பிரச்சினையாம் அவருக்கு:
. செவிகேட்கும் எப்போதும் ஏதோ பேச்சு!
அத்தனை யும்ராம தூதனென்று பேர்பெற்ற
. ஆஞ்சநேயர் குரலென்றே உள்ளம் கொண்டார்
இத்தகு தெய்வீக சக்தியவர்க் கிருப்பதனை
. வேறெவரும் அறியாதே ஒளித்தல் ஆமோ? ... 1

கூடிய நண்பர்கள் தூண்டுதலால் அம்மனிதர்
. குறிசொல்ல ஓர்நாளை ஒதுக்கி வைத்தார்
கூடரும் சக்திபயன் பிறமனிதர் பெறும்வண்ணம்
. கூட்டுதலை விழைந்தவரைச் சுற்றிக் கூட்டம்
பாடதற்குப் பணமென்று அவரேதும் கொள்ளவில்லை
. பலித்ததிவர் சிலபேர்க்குச் சொன்ன குறியே!
நாடுவோர்க் கிவர்சொல்லால் நலிவுசில தீர்ந்ததெனில்
. நன்மைசெயும் இவர்மனத்தில் அமைதி இல்லை! ... 2

காஞ்சியில் பெரியவரை தரிசித்தே அலுவலகக்
. காரியத்தில் சென்னைக்கு மாற்றம் கேட்டார்
ஆஞ்சநே யர்கருணை பூரணமாய் உனக்கிருக்கே
. அவரிடமே வேண்டிக்கொள் என்றார் முனிவர்!
பூஞ்சையாய்க் கவலைபடர் முகத்துடனே இவர்சொன்னார்
. புரைதீர்க்கும் சொல்தீய தேவ தையோ
ஆஞ்சநே யர்சொல்லாய் நான்கொண்ட ஊகத்தால்
. அடியேனுக் கிரவினிலே தூக்கம் இல்லை! ... 3

என்துயர் பெரியவர்தான் தீர்த்தருள வேண்டுமென்றே
. இங்குவந்தேன்! கருணைமுனி சொன்னார் தீர்வு:
என்றுமே இராமரது நாமத்தைச் செபம்செய்வாய்
. இம்மடத்தின் குருவான போதேந் திராளின்
இன்னருள் அதிஷ்டானம் உன்மனத்தில் சாந்திதரும்
. இங்குசென்று சிலகாலம் வாசம் செய்வாய்
கும்பகோ ணம்பக்கம் இப்பெரியார் அதிஷ்டானம்
, கோவிந்த புரமென்றோர் ஊரில் உளதே. ... 4

பின்னையோர் நாளினிலே பத்தரவர் வந்துநின்றார்
. பெரியவரை தரிசித்தே ஆசி பெறவே
என்னவோய் ஆஞ்சநேயர் தன்ராம சேவைக்கே
. இப்போது போய்ட்டாரா என்றார் முனிவர்,
தன்முகத் தில்குறும்பு தவழ்ந்திடவே! எப்போதும்
. சத்தியரா மர்நாம செபத்தில் உறைவோர்
பொன்மனச் செம்மலென்றே பூவுலகில் செல்வரென
. போதேந்தி ராள்முனிவர் வாழ்க்கை சொலுமே! ... 5

--ரமணி, 16/07/2015, கலி.31/03/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9683/

*****
 
ஜகத்குரு தரிசனம்
35. குழந்தைகள் சாமிக்கு வழிபாடு!
(அளவியல் இன்னிசை வெண்பா)

அந்தநாள் பாலர்கள் ஆடுவிளை யாட்டிலும்
இந்துமா தொல்வழக்கம் இல்லா திருக்காது
கோவில் விழாக்காண் குடந்தைக் குழந்தையுடன்
மேவிவிளை யாடு மிறை! ... 1

கூடைக் களிமண்ணைக் குஞ்சுக் கரம்பல
கூடிப் பிசையவே கூடும் இறையுரு!
வெண்ணைகொள் தாழியும் வேங்கடவன் வாகனமும்
வண்ணத்தில் வந்திடும் வாகு! ... 2

பற்பலவாய் தெய்வம் பரியூர்தி மூஞ்சூறாம்
கற்பனை ஊற்றெடுக்கக் கற்ற குழந்தைகள்
மந்திரம் சொல்லும் மழலைக் குரலிலே
கந்தனை யெண்ணியே காப்பு. ... 3

சிவாய நமஹ திருமால் நமஹ
சிவநந்தி யேபோற்றி தேவியே போற்றி
கரிமுக னேநமஹ கந்தனே போற்றி
பரிவுடன் எங்களைப் பார்! ... 4

காவிரி யோரம் தருக்கள் சொரிந்திடும்
பூவும் இலைபுல்லும் பூசையில் அர்ச்சனை!
வெண்ணீறும் குங்குமமும் மேனி யலங்கரிக்கப்
பண்ணும் அமர்க்களப் பாங்கு! ... 5

நடைவண்டிச் சட்டத்தில் நட்டுவெச்ச சாமி
உடைகலைய ஒய்யார ஊர்வலத் தில்வரக்
காவலுக்கு தெய்வம் கருப்பண சாமியென
ஏவலுக்குக் காத்திருக்கு மே! ... 6

இப்படியோர் சாமி எதிர்வரவே காஞ்சிமுனி
சப்பரத்தின் முன்னே திருமட வீதியிலே!
தண்டத்தால் வந்தித்துத் தண்கரத்தால் கும்பிட்டுக்
கண்பார்த்தே நின்றார் கனிந்து. ... 7

குழந்தைகள் சாமிக்குக் கொள்ளைகற் கண்டும்
பழம்தேங்காய் நைவேத்யம் பண்ணிடச் சொல்லி
விநியோகம் செய்ததில் வீதியில்கை லாயப்
பனியாய் மலர்ந்தது பற்று. ... 8

திருக்கரம் ஆசீர்வ திக்கக் குழந்தைத்
திருவிழா ஊர்வலம் சென்றது மேலே
இளம்வயதில் கொள்ளும் இறைப்பற்று மேலே
வளரவே செய்தார் வழி! ... 9

இளம்வயதில் இங்ஙன் இறைப்பற்று ஓங்கிக்
களம்கொண்டே வாழ்வில் களிப்பும் கனிவும்
நிலைபெறச் செய்தே நியமங்கள் நாடும்
கலைகற்பித் தல்நம் கடன். ... 10

--ரமணி, 27/07/2015, கலி.11/04/5116

*****
 
ஜகத்குரு தரிசனம்
36. வேப்பம்பூ பச்சடி
(எழுசீர் விருத்தம்: காய் விளம் விளம் தேமா . காய் காய் காய் )

வேப்பம்பூ புளியுடன் வெல்லமும் நாங்கள்
. வேதமுனி அவைதன்னில் சமர்ப்பித்தோம்
வேப்பம்பூ பச்சடி செய்விதம் என்ன
. மேதையவர் எங்களிடம் கேட்டாரே
யாப்பென்றே அவரிடம் ஓர்முறை சொன்னோம்
. யாதுமறி யாதவர்போல் செவிமடுத்தார்
சாப்பாட்டுக் கித்துடன் தேனுடன் நெய்யும்
. சற்றேசேர் பச்சடியில் சுவைகூடும்! ... 1

பக்குவமாய்ச் செய்தபின் பச்சடி அம்பாள்
. பாதத்தில் நைவேத்யம் செய்வீரே
முக்கண்ணி நம்மிடம் வசப்படு வாளே
. முன்வந்தே அருள்செய்து காத்திடுவாள்
அக்கணத்தில் கேட்டது சரியெனச் சொல்வார்
. அகமுடையான் பச்சடியை உண்டாலே!
சிக்கலின்றி பணிகளைச் செய்வரே செய்வோர்
. சீர்மிக்க பச்சடியின் மகிமையன்றோ! ... 2

பக்குவமாய்ப் பச்சடி செய்திடச் சொல்லிப்
. பணித்தாரே திருமடத்தின் பிரசாதம்!
சிக்கனமாய்ப் பச்சடி தந்தவர் கேட்டார்
. தெரிகிறதா நான்தந்த காரணமே?
தக்கபடிப் பெரியவர் சொல்வது உள்ளம்
. தங்கிடவே என்றுரைத்தாள் ஓர்மங்கை
முக்கண்ணி பக்தியில் எந்நாளும் நீங்கள்
. முழுகிடவே தந்தேன்நான் என்றாரே. ... 3

புதுக்கோட்டை பத்தராய்த் தரிசனம் செய்தே
. புண்ணியங்கள் பெற்றோமே நாங்களெலாம்!
எதுசொன்னா லுமதிலோர் தத்துவம் காட்டி
. எங்களுக்கு வழிசொல்லும் காஞ்சிமுனி
பொதுவான அறமென உள்ளதைச் செய்தால்
. பொலிவுடனே வாழ்ந்திடலாம் என்றாரே
எதுநல்ல காரியம் என்றுநாம் தேர்ந்தே
. இறைபக்தி உடன்சேரச் செய்வோமே! ... 4

--ரமணி, 13/08/2015, கலி.28/04/5116

*****
 
காஞ்சி பெரியவா குழுமத்தில் மகாபெரியவர் மீது S. Sriram என்பவர் எழுதியுள்ள
சமஸ்கிருத துதி கீழே.

श्री महास्वामि योग चक्र स्तवम्
Authored by Sri S Sriram

सिद्धयोगीश्वर प्रियामृत पूर्ण ज्ञान सागरा
मूलाधार रूपिणे भक्तानुग्रह कारण न्यान मूर्त्ते॥ १

तत्वार्थ रूपरमणीय मनोनाश रञ्जने
स्वधस्सिद्धस्स्वाधिष्ठाने वसति मनोहर:॥२

भू क्षेत्र वससि कामकोट्यालंकृत कामाक्षि प्रिया
अत्भुत शिरो मनिपुर सकल शास्त्र प्रपण्डिता॥३

हृदयप्रिय प्रेमेश्वरो हृदयालय प्रतिष्ठिता
अनादि रूप अनाहतःस्वरूप ब्रह्मैव केवलम्॥४

श्रुति रक्षको श्रुति गीतप्रियो श्रुति शब्द: स्वरूपा
विशुद्धि रूपो तव प्राणस्य जीवो चतुर्वेद:॥५

भ्रुवोर्मध्य ध्यानैक्य नाथा इन्दु अलंकृत ईश:प्रिय:
अज्ञान निवृत्ति कारणा आज्ञा ज्ञानं ददातु देवो॥६

जटामकुटालंकृत रुद्राक्षप्रियधारि प्रदोषपूजकाले
सहस्रारार्चन प्रीतिभावेन शिवशक्तैक्य सदा शिवं कुरु॥ ७

*****

சமஸ்கிருதப் பாடலைத் தமிழ்ப் பாடலாக அடியேனை மொழிபெயர்க்கச் சொன்னார்கள்.
அடியேனின் மொழிபெயர்ப்பு கீழே. சரியாக உள்ளதா என்று அன்பர்கள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
ரமணி

*****

அருள்மிகு மகாபெரியவர் யோகசக்கரத் துதி
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா . விளம் மா தேமா)

நெஞ்சினுள் துறவி யாக
. நின்றிடும் உருவே போற்றி
தஞ்சமாம் உயிர்கள் தம்மைத்
. தாங்கிடும் அமுதே போற்றி
வஞ்சமில் கடலாய் ஞானம்
. வதியவே நடந்தாய் போற்றி
அஞ்சவே செய்யும் மூலா
. தாரமாய் ஆனாய் போற்றி! ... 1

தத்துவப் பொருளே போற்றி
. தாயெனத் திளைப்பாய் போற்றி
வித்திடும் மனம ழித்தே
. வினைகளை அறுப்பாய் போற்றி
தத்தமாய் மனதைத் தந்தால்
. தன்னிலை லயிக்கச் செய்தே
சித்தமாய் சுவாதிட் டானம்
. சேர்த்தருள் பரமே போற்றி! ... 2

பூமியில் காம கோடி
. புண்ணிய பீடம் ஏற்றுச்
சேமமே அருளும் வேந்தே
. தேவிகா மாட்சி யன்ப
நேமமாய் மனிதர் வாழும்
. நெறியினைத் தருவாய் போற்றி
தாமரை மணிபூ ரத்தில்
. சாத்திரம் அருள்வாய் போற்றி! ... 3

வினாவென ஏது மில்லா
. விதயமாம் ஆல யத்தில்
சனாதன மூர்த்தி யாகச்
. சகலமும் அருள்வாய் போற்றி
அனாதியாம் பரமாய் நெஞ்சில்
. அளாவிடும் ஒளியே போற்றி
அனாகதத் தனிமை வாழும்
. ஆரணண் உருவே போற்றி! ... 4

வேதமே காத்த ருள்வாய்
. வேதகா னத்தில் நேசம்
வேதமாம் ஒலிகள் கொள்ளும்
. விழுப்பொருள் உருவே போற்றி
வேதனின் மூச்சுக் காற்றாய்
. மேவியே திகழும் நான்கு
வேதமே உயிராய் வாழும்
. விசுத்தியின் உருவே போற்றி! ... 5

தற்பதம் புருவம் மத்தி
. தந்திடும் ஒளியே போற்றி
நெற்றியில் கனலைக் கொள்ளும்
. நிலவணி ஈசர் நேசன்
கற்பனை யுள்ளம் கொள்ளும்
. கருமையஞ் ஞானம் போக்கி
நெற்றியில் திகழும் ஆஞ்ஞை
. நிலையருள் ஒளியே போற்றி! ... 6

விருப்புறு அணியாய் சந்தி
. வேளையில் தலையின் உச்சி
உருத்திராட் சமணி மாலை
. ஊடுறும் வடிவே போற்றி
அருச்சனை வழிபா டாக
. ஆயிரம் விழைவாய் போற்றி
உருத்திரை பிணைந்தே காணும்
. உருசதா சிவமே போற்றி! ... 7

--ரமணி, 19/09/2015, கலி.02/06/5116

குறிப்பு:
பாடல் 1.
தஞ்சமாம் = தஞ்சமாகும்; வதியவே = தங்கவே, வசிக்கவே;
அஞ்சவே செய்யும் மூலாதாரம் = மூலாதாரச் சக்கரம் கீழே உள்ள அதர்ம சக்கரங்களே
நம் வினைகளுக்குக் காரணம். மூலாதார மூர்த்தியாகப் பிள்ளையார் அமரும்போது இந்தக்
கீழினச் சக்கரங்கள் மூடப்படுகின்றன. இறைவன்/குருவின் அருளின்றி நாம் மூலாதாரச்
சக்கரத்தைச் சுழலவைக்க முடியாது. அதே சமயம், அது மூடாமல் இருக்கும்வரை
கீழுள்ள சக்கரங்களின் ஆதிக்கத்தில் நம்முள் தர்மமே மேலோங்கும். எனவேதான்,
மூலாதாரத்தை வசப்படுத்துவது ஓர் அஞ்சவைக்கும் சாதனையாகும்.

கீழுள்ள புத்தகத்தில் இதுபற்றிய விளக்கம் உள்ளது:
http://www.himalayanacademy.com/media/books/loving-ganesha/loving-ganesha.pdf

பாடல் 3.
நேமமாய் = நியமத்துடன்

பாடல் 5.
தற்பதம் = ’தத்’ என்னும் பதம், பிரம்மஞானம் (தான் பிரம்மமே என்னும் ஞானம்)

பாடல் 7.
உருத்திரை = உமை, பார்வதி.

*****
 
Back
Top