ரமணியின் கவிதைகள்

ரமணி

New member
ரமணியின் கவிதைகள்

பொதுவாக எனக்கு மரபுக் கவிதைகள் பிடிக்கும். புதுக் கவிதைகளில் நாட்டமில்லை. இந்தத் திரியில் நான் இதுவரை எழுதிய கவிதைகளப் பகிர்ந்துகொள்வேன்.

1. கவிதையை/கழுதையைக் கட்டிப் போடு!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

புதுக்கவிதை யென்றுநான் புனைந்திட முனைந்தது
புதுக்கழுதை யாகியே புறங்கால் உதைவிட்டுத்
தலைதெறித்(து) ஓடியும் திரிந்தும் கணிணியின்
வலைமின் தாள்களை விழுங்குவது கண்டதை
அசைசீர் தளைதொடை ஓசை கொண்டுவந்(து)
இசைவலி யுறுத்திக் கட்டிப் போட்டேனே.

உதைத்தது கடித்துக் குதறிவிட் டாலோ
பதைத்தது விடுத்தெனை ஓடிவிட் டாலோ
நியதி இல்லா சுதந்திர உரிமையில்
அவதி யுறுவது அடியேன் அன்றோ?
--ரமணி 20/11/2012

*****

2. என்னதான் பிடிக்கும்?
(மரபில் புதுக்கவிதை)

(கலித்தாழிசை)
என்னதான் உனக்குப் பிடிக்கும் என்றேன்.
கோபித்துக் கொண்டாள்.
என்னத்தான் உனக்கு பிடிக்கும் என்று
சொன்னேன் என்றேன்.
என்ன, ஸ்மார்ட் என்று நினைப்போ?
எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
என்முகம் இப்போது சுருங்கியது கண்டு
எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்றேன் என்றாள்!
--ரமணி 21/11/2012

(இணைக்குறள் ஆசிரியப்பா: 22/12/2012)
என்னதான் உனக்குப் பிடிக்கும் என்றேன்.
கோபித்துக் கொண்டாள்.
என்னத்தான் உனக்குப் பிடிக்கும்
என்று சொன்னேன் என்றேன்.
ஸ்மார்ட் என்று நினைப்போ?
எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
என்முகம் இப்போது
சுருங்குதல் கண்டு
எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்றேன்
என்றாளே பார்க்கலாம் என்முகம் மலரவே!
--ரமணி 22/11/2012

*****
 
3. போகதது போக...
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

கேட்காதது கேட்டுவிட்டுத் தோன்றாதது தோன்றிவிட
படிக்காதது படித்திருந்து உணராதது உணர்வில்வர
தெரியாதது தெரிந்துகொண்டு முயலாதது முனைந்துபார்த்துக்
காணாதது கண்டுவிட வேண்டாதது வேண்டிநின்று
போகாதது போவதற்குப் பெருமுயற்சி செய்கின்றேன்!
--ரமணி, 20/08/2012

*****
 
மிகவும் அருமையாக இருக்கிறது. இன்னும் கொடுங்கள்.. நன்றி
 
ரமணியின் கவிதைகள் ரசிக்கதக்கவை, வாழ்த்துக்கள்.
 
4. உண்டு இல்லை எனப் பண்ணுவோம்!
(குறள் வெண்செந்துறை)

உண்டு என்பது உண்மை ஆயின்
இல்லை என்பது மாயை ஆகும்.

உண்மை என்பது ஒன்றே யாகில்
மாயை என்றது பலவே யாகும்.

ஒன்றே என்பது உள்ளே உறைவது
பலவே என்றது வெளியே தெரிவது.

உள்ளே உறைவதைப் புலன்கள் அறியா
வெளியே தெரிவதே புலன்கள் அறிவது.

புலன்களின் பின்னால் உள்ளது மனமே
மனதின் செயல்வகை புத்தியால் சிறக்கும்.

புத்தியால் ஒடுங்கும் தானெனும் அகந்தை
அகந்தை ஒடுங்கினால் ஆத்மா தெரியும்.

ஆத்மா தெரிந்திட ஞானம் பிறக்கும்
ஞானம் நிலைபெற மனமும் வசப்படும்.

மனம்வசப் பட்டால் புலன்கள் ஒடுங்கி
ஒருங்கித் தெரியும் உள்ளே உறைவது.

உள்ளே உறைவதன் தரிசனம் கிடைத்தால்
பலவகை உலகின் மாயை விலகும்.

மாயை விலகிட எல்லை இல்லா
ஆத்மா ஒன்றே என்பது தெரியும்.

ஒன்றின் உண்மை தெரியத் தெரிய
நான்நீ இவையெனும் பேதங்கள் குறையும்.

பலவகை பேதங்கள் குறையக் குறைய
மனதின் எல்லை வானாய் விரியும்.

வானாய் விரிய உயிரொளி பெருகும்
சச்சிதா னந்த உண்மை விளங்கும்!

--ரமணி, 19/08/2012

*****
 
5. நகைச்சுவை வெண்பாக்கள்

யார் உங்கள் ருக்கு?
நாருக்குப் பூமணம்போல் நீருக்குத் தீஞ்சுவைபோல்
ஊருக்குக் கோவில்போல் சீருக்கு ஓசைபோல்
காருக்குப் பெட்ரோல்போல் யாருக்கும் தீங்கெண்ணா
வேருக்கு நீராவாள் ருக்கு.

எருக்கு முளைபோல் கிறுக்குப் பிடிபோல்
முருக்குப் புளிபோல் நறுக்குத் தெறிபோல்
கருக்குதல் காய்க்கத் தருக்கு நிறைந்தே
செருக்குடன் வாழ்ந்திடும் ருக்கு.

[முருக்கு=எலுமிச்சை கருக்குதல்=திட்டுதல்
தருக்கு=வலிமை, தைரியம் செருக்கு=கர்வம்]
--ரமணி, 28/11/2012

பெருங்காயம் வெங்காயம்
பெருங்காயம் வெங்காயம் ஓர்விகுதி யாயின்
பெருங்காயம் ஆகுமோ வெங்காயம் -- முன்னது
உண்ணும் உணவில் மணம்பெருக்கும் -- பின்னதோ
கண்ணீர் பெருக்கி விடும்.
[விகுதி=சொல்லின் இறுதிப் பகுதி]

பெருங்காயம் மாவடு
மாவிளம் பிஞ்சுதான் மாவடு ஆயினும்
மாவடு என்றால் பெருங்காயம் என்றுபொருள்
மாவடுவி லேது பெருங்காய(ம்) ஏனெனில்
மாவடுவின் காயம் சிறிது.
[காயம்=உடல்]

மாவடு தன்மரத்தில் ஓங்கி வளர்ந்திட
மாங்காய் பெயரில் பெருங்காயம் பெற்றந்த
மாங்காயே கல்லடி வாங்கிப்பின் காயத்தில்
மாவடு வோடு விழும்.
[காயம்=உடல், அடிபட்ட காயம் வடு=தழும்பு]

--ரமணி, 30/11/2012

*****
 
6. கணினி போற்றுதும்!?
(தனிச்சொல் பெற்ற நிலைமண்டில ஆசிரியப்பா)

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் பாரினில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவா(று) உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

நில்லா உலகின் எலிகள் போட்டியில்
அல்லும் பகலும் மானிடர் வாழ்வினில்
வல்லமை வழங்கிடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்துக்
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

அலுவல கத்தினில் பணியினில் அமர்ந்து
அலுவல் கணக்கர் ஆளுனர் செயலோர்
அலுவலில் உதவியும் ஆக்கம் தந்தும்
தொழில்மனைக் கருவியில் தொழிலோர் கரத்தினில்
வழுவறப் பயின்றும் விளைச்சல் தருமே.

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மடிமேல் கணினியும் மேசைக் கணினியும்
மின்பொருள் உட்புறம் உறையும் கணினியும்
அன்னை தந்தை ஆசான் தோழன்
தூதுவன் மருத்துவன் கேளிக்கை யாளன்
யாதொரு பாத்திரம் தன்னையும் ஏற்று
சாதுவாய்ச் செய்தே ஆடிடும் பாடிடும்!

வன்பொருள் மென்பொருள் இணைபொரு ளாக
மின்னலை பரப்பும் கைத்தொலை பேசியுள்
பின்னலாய் இழைந்திடும் கணினிக் கூறுகள்
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
தொழிலினை உறவினை வம்பினை வளர்த்திட
வழிவகை செய்யும் வித்தக னாகுமே.

வெளிப்பகை உட்பகை வானிலை பொருளியல்
செயல்வகை நடைமுறை விதிமுறை போன்று
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

கரங்கள் பலவாம் கடவுள் வடிவினில்
கரங்கள் பலவே கணினி வடிவிலும்!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதிந்து
பிரதிகள் அச்சிடும் அச்சுப் பொறிக்கரம்
இணைப்புகள் தாங்கி மோடம் டெலிஃபோன்
இணைய தளங்களை எட்டிடும் கரத்தால்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மூதுரை நனவாய் நேரினில் காட்டிநம்
விழிகள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்.

எனினும்

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
வித்தகன் நாயகன் வேலையாள் தோழனாய்ப்
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

மின்னெலியில் மௌனமாய்க் கண்விழித்துக் கைச்சொடுக்கி
மென்விரல்கள் ஐந்தையும் வலிகாண வைத்து
சுட்டுவிரல் நோகவைக்கும் மின்னெலியின் சக்கரத்தில்!
தட்டெழுதல் எளிதாகக் கையெழுத்தே மறந்துவிடும்!

எழுவது மறந்து தொழுவது வரண்டு
பொழுதுகள் மறந்து அறநெறி துறந்து
உடல்நலம் பேணுதல் அசட்டை செய்து
பெரியவர் மனதினில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

--ரமணி, 14/12/2012

*****
 
கவிதைகள் அனைத்துமே பெருங்காயம் போல் மணத்து,
மாவடு போல் நறுக்கென்று உரைத்து,
கணினி எனும் மாயத்திரையில் உலாவி
அனைவர் மனதையும் கொள்ளைகொள்கின்றன...
பாராட்டுக்கள்! தொடருங்கள் !
 
வணக்கம்.

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

ரமணி

கவிதைகள் அனைத்துமே பெருங்காயம் போல் மணத்து,
மாவடு போல் நறுக்கென்று உரைத்து,
கணினி எனும் மாயத்திரையில் உலாவி
அனைவர் மனதையும் கொள்ளைகொள்கின்றன...
பாராட்டுக்கள்! தொடருங்கள் !
 
7. ஒரு கணினி யந்திரப்புலவரின் விஞ்ஞானப் புலம்பல்
(குறள் வெண்செந்துறை)

பள்ளியின் கல்லூரியின் பயிற்சியில் கலகலப்பில்
உள்ளியது போல்முனைந்து உயர்வது எக்காலம்?

அன்று நினைத்ததெல்லாம் தமிழில் முயன்றதெல்லாம்
இன்று செய்துபார்க்க இயல்வது எக்காலம்?

’பொன்னியின் செல்வன்’போல் கதைகள் மறுபடியும்
உன்னிப் படித்துமனம் உவப்பது எக்காலம்?

சுஜாதா கதையுலகம் பாரதியின் பாடல்கள்
தி.ஜா. கதையுலகம் திரும்புவது எக்காலம்?

வாங்கிக் குவித்த ஆங்கில நாவல்கள்
தூங்கி வழிவதனை எழுப்புதல் எக்காலம்?

எல்லோரும் எளிதாக எழுதிவரும் கவிதைகளை
பல்லாயிரம் நானும் படைப்பது எக்காலம்?

தென்னந் தோப்புகளில் தென்னையிள நீர்குடித்து
முன்னம்போல் மட்டைப்பந் தாடுவது எக்காலம்?

திருச்சிநகர்த் தெருக்களிலே தோழர்கள் புடைசூழ
சுற்றிவந்து கண்ணோக்கிப் பற்றுவது எக்காலம்?

கதிரவன் மறையும்போது காவேரிப் பாலம்நின்று
உதிர்த்த வண்ணங்களை வியப்பது எக்காலம்?

மென்பொருள் துறையினிலே மேன்மைகள் அதிகமென்று
வண்ணங்கள் பறக்கத்தேறி விழுந்து மாட்டினேனே!

பொருளீட்ட ஊர்சுற்ற வெளிநாடு போகவர
அனைவரும்போல் ஆசைப்படப் பொறியினிலே விழுந்தேனே!

வாழ்வியல் ஆசைகள் தேவைகளாய் உருவெடுத்து
நுண்கலை ஆசைகளை வெல்லுமென நினைக்கவில்லை!

விருந்துகளில் பொம்மைகளின் தொழில்சார்ந்த நட்புறவில்
விருதுகளில் நானுமோர் கைப்பாவை யானேனே!

ஆட்டுவித்தார் ஆட்டியபடி ஆடிவரும் ஆட்டத்தில்
ஆட்டுமந்தை ஆடாகிக் காட்டும்வழி போகிறேனே!

உறவுகள் மறந்துவிட சிறகுகள் முறிந்துவிட
இரவுபகல் மாறிவிட உணவுகள் கூளமென!

இயற்கையின் அழகினை பொதுமனிதர் இயல்பினை
வியக்கும் வழியின்றி விரைகிறேன் கரைகிறேன்!

பள்ளிப் பருவத்தில் கணினியின் கவர்ச்சியில்
லெம்மிங்ஸ்* ஆடியது நனவாகிப் போனதே!

வீடற்றோர் வழிகாட்ட விழிபொருத்திச் சார்ந்திருந்து
ஆடுகள்போல் தொடர்ந்து ஆற்றினோமே அருவினைகள்!

வினைகளின் விலைகளை விளைவுகளை யேற்று
உயர்ந்தும் தாழ்ந்தும் வீழ்ந்தும் வெடித்தோமே!

இத்தகைய இயந்திர வாழ்க்கையின் இறுக்கத்தைப்
பொத்தலிட்டு வெளிவருவது எக்காலம், எக்காலம்?

மூழ்காமல் வெளிவந்து முந்தைய தலைமுறைபோல்
வாழ்வின் அர்த்தங்கள் அலசுவது எந்நாளோ?

அந்தநாள் என்வாழ்வில் அகப்படாது போய்விடுமோ?
கந்தலாய் லெம்மிங்போல் கிழிந்துநான் மறைவேனோ?

--ரமணி, 23/12/2012

குறிப்புகள்:
தி.ஜா.--தி.ஜானகிராமன், பிரபல எழுத்தாளர், ’மோகமுள்’ நாவலாசிரியர்
http://azhiyasudargal.blogspot.in/

லெம்மிங் மின்விளையாட்டு பற்றி அறிந்திட:
http://en.wikipedia.org/wiki/Lemmings_(video_game)

*****
 
8. கடவுளிடம்...
(மரபில் புதுக்கவிதை)

(இணைக்குறள் ஆசிரியப்பா)
கடவுளிடம் வேண்டிக் கேட்பது தவறா?
என்றான் சிஷ்யன்.
கடவுளிடம் வேண்டிக் கேட்பதினும்
கடவுள் கொடுப்பதைக் கொள்வது மேலாகும்
என்றார் அவன்குரு.
ஏனிப்படி குருவே என்றான் சிஷ்யனே.

குழந்தை தின்பண்டம் விழைந்து எடுத்தால்
குறையளவே கொள்ளுமன்றோ?
குழந்தை இருகைகள் குவித்து அள்ளினாலும்
குறையளவே ஆகுமன்றோ?
அம்மா கொடுத்தால் அதிகம் ஆகாதோ?
என்றார் அவன்குரு:
யோசித்துப்பார் சிஷ்யா யாசிக்கும் போதினிலே!

--ரமணி, 24/12/2012

[குறிப்பு: பேரா. பசுபதி தமது ’கவிதை இயற்றிக் கலக்கு’ புத்தகத்தில் இணைக்குறள் ஆசிரியப்பாவைப் பற்றி, "இது, வடிவில், தற்காலப் புதுக்கவிதை மாதிரி இருக்கும்" என்கிறார் (பக்.93) இந்த உத்தியை முயன்று பார்க்க எழுதிய கவிதையிது. கதை பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

*****
 
9. திரமும் திறமும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தன்திறம் என்பது தந்திரம் இல்லை.
தன்திறம் உணர்த்தும் தன்னியல் பெதுவென.
தந்திரம் உரைப்பதோ தானெனும் அகந்தையே.

என்திறம் என்பது எந்திரம் இல்லை.
எந்திரப் புலவனே தன்திறம் காட்டுவன்
என்றே நிகழும் இன்றைய நிலையிலும்
என்திறம் என்பது எந்திரம் இல்லை.
எந்திரம் தாண்டிய இன்திறக் கலைகள்
தாங்கிடும் உள்ளப் பாங்கெனக் குளதே.

மன்திறம் என்பது மந்திரம் இல்லை.
மன்னெனில் காவலன் மன்னன் கணவன்.
மந்திரத் தாலே மாங்காய் காய்க்குமோ?
மன்னன் கணவன் அவரவர் ஆவது
மன்னன் திறமன்றி மந்திரம் ஆகுமோ?

கேள்திறம் என்பது கேந்திரம் இல்லை.
கேந்திரம் என்பது குறுவட்ட மையம்
கேந்திர மையம் குறிப்பது தன்னை.
கேளென் பதுவோ சுற்றமும் நட்பும்.
கேளிர் திறன்தம் குடும்ப மையமெனில்
கேளிர் ஆகார் இவர்கள் எனக்கே.

சுயம்திறம் எல்லாம் சுதந்திரம் இல்லை.
சுயம்திறம் என்பது சகலர்க்(கு) உண்டு.
சுதந்திரம் என்பதும் சகலர்க்(கு) உண்டு.
நீயென் பின்னால் நிழலெனத் தொடர
நானென் குடைவீசி நடக்கும் போது
என்குடை உன்நாசி தொடாத வரைதான்
என்சுதந் திரத்தின் வரையென யாகும்.
சுயத்தில் ஆளும் திறமை யெல்லாம்
சுதந்திரம் என்னும் பெயரில் மற்றோர்
சுயம்திறம் அடக்கிச் சூளும் போது
சுயம்திறம் யாவும் சுதந்திரம் ஆகுமோ?

முகத்திற னுக்கு முகாந்திரம் இல்லை.
முகத்திற னாலே முகஸ்துதி பெறினும்
முகத்திறன் அகத்தை முன்வைப்ப தாமோ?
முகத்தில் உள்ளது அகத்தில் இலையென
முகத்தைப் பூசியே மழுப்பக் கற்றோர்
முகத்திறம் என்பது அகத்திறன் ஆகுமோ?

இன்திறம் இருந்தால் இந்திரம் வருமா?
இன்திறம் என்பது இனிய திறமைகள்
இந்திரம் என்பது இந்திர பதவி.
இறைவன் கருணை இல்லா விட்டால்
இனியதே எண்ணிச் செய்யும் திறமை
இருந்தால் கூட இந்திரம் வருமோ?

ஆள்திறம் என்பது ஆத்திரம் இல்லை.
ஆள்திறன் குணத்தா லாவது ஆனால்
ஆள்திறன் நலம்தர ஆத்திரம் நீங்கும்.
ஆள்திறன் பணத்தால் ஆவது ஆனால்
ஆள்திறன் பலம்தர ஆத்திரம் ஓங்கும்.
ஆள்திறன் ஆத்திரம் சூழ்ந்திடும் கலியே.

நம்திறன் நோக்கி நயம்பட வாழ்ந்து
இன்திறன் வளர்த்து இனிமை சேர்த்தால்
இறைத்திறம் ஓங்கிச் சரித்திரம் படைப்போம்.

--ரமணி, 25/12/2012

*****
 
10. கலைமகளை வேண்டுவோம்!
(குறள் வெண்செந்துறை)

கலிசூழ்ந்த இந்நாளில் கல்வி எதுவென்று
கலைமகளே நானறியக் கருணைசெய் தாயே!

கல்வி எதுவென்று நானறிந்து உன்னருளால்
இல்லறத்தில் சிறக்க உதவுவாய் தேவீ!

இல்லறத்தில் சிறக்க வேண்டியது அனைத்தும்
பல்வகையில் எனக்கருள வேண்டும் அம்மா!

கல்வியும் செல்வமும் வேறல்லவே தாயே!
கலைமகளும் அலைமகளும் மலைமகளும் ஒன்றன்றோ!

எல்லோரும் இதையுணர்ந்து நல்லறத்தினில் வாழ்ந்து
கல்வியும் செல்வமும் அறன்வழிப்பட அருள்வாயே!

கல்வியும் செல்வமும் வீரமும் பெற்றோங்கும்
நல்லவர்கள் பெருகியே அறம்வளர்க்க அருள்வாயே!

நல்லவர்கள் பெருகி உலகில் அறம்தழைத்து
இல்லறத்தில் ஆன்மஒளி கூடிடவே அருள்வாயே!

--ரமணி, 30/12/2012

*****
 
11. பெருமையும் புகழும்
(ஆசிரியத் தாழிசை)

எத்தகு மனிதன் வாழ்வில்
பெருமையும் புகழும் பெறுவான்?
குருவிடம் சிஷ்யன் கேட்டான்.

கேள்வியே தவறு சிஷ்யா!
எத்தகு வாழ்வில் மனிதன்
பெருமையும் புகழும் பெறுவான்?

நாடகம் ஒன்று நடப்பதாக
நினைவிற் கொள்வோம் சிஷ்யா
நவின்றார் அவனது ஆசான்.

அரசன் வேடத்தில் ஒருவன்
அறிஞன் வேடத்தில் ஒருவன்
வறியவன் வேடத்தில் ஒருவன்.

பெருமை யாருக்கு இவர்களில்?
நடிப்பில் சிறப்பவ னுக்கே!
நன்றாய்ச் சொன்னாய் சிஷ்யா!

வாழ்க்கை நாடக வழிதான்
வாழும் மனிதனோர் நடிகன்
வேடம் முக்கியம் அல்ல.

அறம்தரும் நெறிகளைக் கொண்டு
அகிம்சை வழியே நடந்து
ஆணவம் எல்லாம் துறந்து

தானொரு நடிகன் ஆயினும்
தானும் அவனும் வேறெனும்
தத்துவம் அறிந்து கொண்டு

ஒருவன் வாழ்வில் நடித்தால்
பெருமையும் புகழும் அவனுக்கே!
அருமையாய் முடித்தார் ஆசான்.

--ரமணி, 01-01-2013
[கதை: பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

*****
 
12. உறவாடும் படிமக் குறிகள் (Icons)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

காலையில் ஜனித்தெழுந்தால் கண்படும் ஜன்னல்
மூளையில் செய்தியோர் மூலையில் இணைக்கும்:
கணினிகள் ஜனிப்பதும் ஜன்னல்கள் என்னும்
அணிமிகு மென்பொருள் ஆதரவில் தானே?

காப்பி குடித்திடக் காலைப் போதினில்
சாப்பாட்டு மேஜையில் சாய்ந்தபடி அமர
ஆவி பறக்கும் காப்பியில் தெரிவதோ
ஆரகிள் மென்பொருள்-யாப்பொருள் ஜாவா!

இதுபோல் பொதுவில் இணைத்துப் பார்க்கையில்
மதுராபுரிக் கண்ணனும் மனதில் வந்தால்
கொஞ்சம் பாரதி என்னுள் தோன்றி
கிஞ்சித் தேனும் களிப்புறு வேனே!

ஐகான் என்று ஆங்கிலம் குறிப்பிடும்
எத்தனை எத்தனை படிமக் குறிகள்
எதிர்ப்படு கிறதுநம் வாழ்வில் என்று
விதிர்த்தது உண்டோ ஒருகணம் நின்று?

உண்மையின் முகமென உருத்திடும் மாய
ஹீரோ க்ளிஃபிக்ஸ் ஹாஸ்யம் என்னை
ஊடாடிப் பரிகசித்து ஆள்வது கண்டேன்
உறவினன் நண்பன் ஆசான் ஆக.

பார்த்ததும் புரிந்திடும் பாமரன் அறிந்திடும்
பூர்வப் படிக்குறி எதுவெனப் பார்த்தால்
கழிப்பறைச் சுவர்களில் பளிச்சென வரைந்து
விழித்திடும் ஆண்-பெண் படிக்குறி தானே!

ஒருபடம் வரைவது ஆயிரம் சொல்வது
என்னும் பழமொழி உண்மை போல
வரையும் படிக்குறி ஆயிரம் படங்கள்
வரைவது போலென வரையாது சொல்லலாம்!

எங்கும் படிக்குறி எதிலும் படிக்குறி!
சிங்காரச் சின்னங்கள் சாலைக் குறிகளில்
பெட்ரோல் விற்பனை பேருந்து நிறுத்தம்
மெட்ரோ ரயிலடி மின்னும் கடைகளில்!
அலுவல கத்தினில் ஆள்வதும் அவைதான்!
வலுவினில் நுழைந்து வலைதள ஏட்டினில்
பலுகமாய் உழன்று பழிப்புக் காட்டுமே! ... ... ... ... [பலுகம்=குரங்கு]

ஊழ்வினை யெனவே உறுத்தும் படிக்குறி
வாழ்வினை மாற்றும் கூழைகள் ஆகும்!
நடத்தல் பேசுதல் எழுதுதல் எல்லாம்
படிக்குறி விரவிப் பல்கிப் பெருகிட
தினசரி வாழ்வில் சுழலும் தொழில்நுட்பம்!

மொழியின் எழுத்துகள் ஒலிகள் மறைந்து
மொழியின் சொற்பொருள் படிக்குறி யாகிட
மொழியே கைசெய் சைகைகள் ஆகி
எகிப்தியர் காலம் எனமீண்டும் வருமோ?

இறைவனின் படிக்குறியாய் இலங்கும் படிமங்கள்
இந்துமத வாழ்வினில் இணைந்து இன்றைய
படிக்குறி போலவே பார்க்குமிடம் அமர்ந்து
விடிவுறும் அறத்தை வாழ்வில் வலியுறுத்தும்.

மட்டிலாப் படிக்குறிகள் மனிதன் வாழ்வினில்
சட்டமும் வடிவமும் இரவினில் ஒளிரும்
வண்ணமும் பெற்றிட நாமதன் வழிபட்டு
வளமும் நெறியும் வாழிவில் சேர்த்திட...

பீடம் ரூபம் படைக்கலம் முத்திரை
கூடி அருள்செயும் இறைப்படி மங்களை
வாழ்வில் வளம்நெறி வளர்க்க வழிபடும்
மக்களைப் பழிப்பதென் மூர்க்கம் அன்றோ?

--ரமணி, 03/01/2013

*****
 
13. துறவியின் தர்மசங்கடம்
(குறளடி வஞ்சிப்பா)

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
தலையில் காக்கை எச்சம் இட்டிட
நிலைதடு மாறி நின்றார் துறவி!

நேற்றுவரையில் இத்துறவி
ஆற்றோரம் இருந்தநிலையின்
மாற்றத்தினைச் சாற்றினாலே
பாடல்
இப்படி யோர்நல்ல முடிவினைப் பெற்றுச்
செப்படி வித்தையாய் ஜொலிக்கக் காண்பீர்.

ஆதவத் துறவி!
(குறளடி வஞ்சிப்பா)

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
ஆதவன் ஆற்றின் அக்கரை யுதிக்க
மாதவத் துறவி ஆதவ னாவார்!

ஒரு பாட்டில் இரு முடிவு:
(குறளடி வஞ்சிப்பா)

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
ஆதவன் ஆற்றின் அக்கரை யுதிக்க
மாதவத் துறவி ஆதவ னாவார்!
இன்றோ?
தலையில் காக்கை எச்சம் இட்டிட
நிலைதடு மாறி நின்றார் துறவி!

*****
 
ரமணியின் குறள் வெண்பாக்கள்
உலகியல்

மருத்துவச் சாலையில் பெற்ற குழந்தை
மருத்துவர் சொன்ன பொழுது. ... 1

அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர். ... 2

மாலையில் அம்மாப்பா பேணும் குழந்தையைக்
காலையில் தாதி வளர்ப்பு. ... 3

ஓய்ந்திட வாரம் குழந்தை உலாவரும்
சாய்ந்தபடி தள்ளுவண்டி யில். ... 4

உடையில் கிழக்கு மனதினில் மேற்கு
தடையில்லா நம்பெண் மகள். ... 5

உடையில் மனதில் விழைவது மேற்கு
கடைதேடும் நம்மாண் மகன். ... 6

குன்றாமல் கொள்வது கொஞ்சம் கொடுப்பது
இன்றைய வர்த்தக வாழ்வு. ... 7

வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
கலிசூழ்ந்த தீய உலகு. ... 8

பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
கற்றும் உதவாக் கரை. ... 9

பொருளும் பணமும் புகழும் உவந்து
அருளும் விலைபேசும் மா. ... 10 ... [மா = உலகு]

*****
 
19. செவ்வேள் சேவடிக்கோர் செய்யுட் காவடி!

தைப்பூச நன்னாள் திருக்குமரன் நாமங்கள்
கைக்கூச்ச மின்றிக் கவனித் தெழுதுவோம்
மெய்யில் அலகிட்டு மேவினை தீர்த்தார்போல்
செய்யுள் அலகிட்டுச் செய்து. ... 1

விடியலைக் கொண்டாடி வெண்ணீ றணிந்து
அடிமேல் அடிவைத்(து) அணிகள் அணிசெய்யக்
காவடி தூக்கியாடும் கண்ணும் கருத்துடன்
பாவடிவில் நாவிசைத்துப் பாட்டு. ... 2

அம்மையப்பன் சேர்ந்துநடம் ஆடிய நன்னாளில்
இம்மைக்குத் தீர்வாய் இடைநின் றிலங்கிய
உம்மையே வேண்டிட உம்புகழ் ஓங்கியே
எம்மையும் காத்தபழம் நீ. ... 3

சிவநுதற் கண்ணுற்ற தீப்பொறிகள் சேர்ந்து
சிவஞான பண்டித னாகி - சிவனுக்கே
மூலப் பொருளுரைத்த சாலச் சிறந்தவனாம்
வேலவன் அக்கினிக் குஞ்சு. ... 4

அழியா இளமை அழகு இனிமை
வழியும் முருகுநீ மூவகை சக்திகளில்
உள்ளம் தழைத்து உவகை நிறைந்திடக்
கள்ளம் அறுப்பதுன் வேல். ... 5

சூர பதுமன் மரமான போதுனது
வீரசக்தி வேலால் பிளக்க மயிலெனச்
சேவலெனத் தோன்றியவன் தாக்க அருள்கூர்ந்துன்
சேவடியால் நீசெய்தாய் காப்பு. ... 6

உமையீசன் பிள்ளைக்கு எத்தனை நாமம்!
அமரேசன் அன்பழகன் கார்த்திகேயன் கந்தன்
குமரேசன் வேலன் சிவபாலன் செவ்வேள்
உமைபாலன் இன்னும் பல. ... 7

எத்தனையோ நாமங்கள் வித்தகன் வேலனுக்கு!
அத்தனையும் வித்தெனச் சித்தம் விழுதிட்டால்
அத்தனின் பிள்ளையவன் ஆறுமுகன் ஆசிபெற்று
நித்தமும் வாழலாம் நாம். ... 8

--ரமணி, 27/01/2013 (தைப்பூச நாள்)

*****
 
16. அனுமன் ஜெயந்தி
(வெண்பா)

விஞ்சிடும் ஞானமும் வீரமும் தாங்கிடும்
அஞ்சனை மைந்தன் அனுமனை எப்போதும்
தஞ்சம் அடைந்தால் தடைகள் விலகிட
அஞ்சுவது அஞ்சும் நமக்கு.

மார்கழி மாதத்தின் மூலவிண் மீன்குழுவில்
பார்புகழ் ராமதூதன் சீர்மிகத் தோன்றியது
கௌதமர்பெண் அஞ்சனை கேசரி மன்னனின்
மௌனத் தவத்தின் விளைவு.

விந்தைக் குழந்தையாய் விண்மணியை நாடிட
இந்திரன் ஆயுதமுன் தாடையினைத் தாக்கிவீழ்ந்து
எத்தனை ஆசிபெற்றாய் வித்தக மைந்தனே
பித்தன் உருவாய்ப் பிறந்து!

பிரம்மனின் ஆசி சிரஞ்சீவிப் பட்டம்
விரும்பும் உருவும் விரைந்திடும் ஆற்றலும்
ஆதவன் ஆசி அணுவுரு வெற்புரு
மாதொரு பாகன் அறிவு.

அரியொன்றும் ஈந்திலையோ ஆசியெனக் கேட்டால்
அரியேதான் ராமனாக ஆட்கொள்ள வந்தார்!
பிறதேவர் ஆசிதர ராமன் பலமாய்
உருவாகி நின்ற கவி!

ஹனுமன் பெயரிலேயே அர்த்தம் இரண்டு!
ஹனுவெனில் தாடையாம் மன்னே பெரிதாம்!
ஹனுவென்றால் கொல்வது மன்னென்றால் மானம்!
ஹனுமன் பெருமை இரண்டு!

எத்தனையோ சொல்லலாம் எவ்வளவோ பாடலாம்
வித்தகன் நித்தியன் வாயுவின் புத்திரன்
சத்திய மித்திரன் நாளைய நான்முகனாம்
அத்தனின் ஞான வித்து.

புத்தி பலமும் புகழும் துணிகரம்
சத்திய ஞானம் உடல்நலம் சொல்வன்மை
அத்தனையும் கைகூடும் அச்சமற்ற வாழ்க்கை
அனுமனை எண்ண வரும்.

--ரமணி, 11/01/2013

[விண்மணி=சூரியன்; அணுவுரு=அணிமா சித்தி; வெற்புரு=மலைபோல் உருவம், மஹிமா சித்தி;
மானம்=தற்பெருமை; நித்தியன்=என்றும் நிலைத்திருக்கும் கடவுள்; நாளைய நான்முகன்=அனுமனே அடுத்த பிரம்மா என்பர்.]
 
Back
Top