கடத்தலுக்கு கெட்டிக்காரன் (ஐந்து வாரத் தொடர் - வாரம்:3) by ஆர். தர்மராஜன்

hypergraph

New member
ஐந்து வாரத் தொடர் - வாரம் மூன்று

கடத்தலுக்கு கெட்டிக்காரன்​

ஆர். தர்மராஜன்​

__________________________________________________________________________________________
முன்கதை சுருக்கம்: கடத்தப்பட்ட லைலாவை மீட்க... பணத்துடன் அவள் காதலன் கௌதம்...
பொழுது சாயும் வேளையில் ஒரு பாழடைந்த மண்டபத்திற்கு வருகிறான்.

__________________________________________________________________________________________

“கேஷ் கொண்டு வந்திருக்கேன்! லைலாவை ரிலீஸ் பண்ணுங்க!” என்றான் கெளதம், உரத்த குரலில்.​

மண்டபத்தின் ஒரு சுவற்றின் பின்னால் இருந்து இரண்டு டார்ச் லைட் ஒளி வட்டங்கள் பளிச்சென்று​

தலைகாட்டின. உயரமான இரண்டு உருவங்கள்... டார்ச்களைப் பிடித்தபடி நிதானமாக நடந்து...

கௌதமின் முன் வந்து நின்றன.

“இதோ... பணம்,” என்றான் கௌதம், பையை உயர்த்திக் காட்டியபடி. “லைலா எங்க?“​

ஒரு உருவம் மற்ற உருவத்திடம் சொன்னது, “சைமன்... பணத்தை செக் பண்ணு.”

சைமன் செயல்பட்டான். பையைப் பிடுங்காத குறையாய் வாங்கி... டார்ச் வெளிச்சத்தில்​

பணத்தை எண்ணி... நிமிர்ந்து பார்த்து, “இருக்கு, செல்வா,” என்றான்.

“லைலா எங்க?” என்றான் கௌதம்.

பாதி திரும்பினான் செல்வா. “அவளைக் கூட்டிட்டு வா... ஜெனி,” என்று குரல் கொடுத்தான்.

இரண்டு இளம் பெண்கள் ஒரு சுவற்றின் பின்னாலிருந்து வந்தனர். ஒருத்தியின் கண்கள்

துணியால் மூடப்பட்டு... கைகள் பின்வாக்கில் கட்டப்பட்டிருந்தன. மற்றொருத்தி தன்

வலக்கையில் ஒரு டார்ச்சைப் பிடித்து... அதன் வெளிச்சத்தை இடம் வலமாக அசைத்தபடி

வந்தாள். இடக்கையில் மற்ற பெண்ணின் தலைமுடியைப் பிடித்திருந்தாள்.

“லைலா, உன் மஜ்னு வந்திருக்கான்,” என்றான் செல்வா.

“கௌதம்! எங்க இருக்கீங்க கௌதம்?” லைலா கத்தினாள். கட்டப்பட்ட கைகளை

பலம்கொண்ட மட்டும் உதறினாள்.

செல்வா ஒரு ஜாடை காட்ட... “இங்கதான் லைலா,” என்றான் கௌதம். “டோன்ட் ஒர்ரி...

நான் உன்னைக் கூட்டிட்டுப் போய் உங்கப்பாகிட்ட சேர்த்துடறேன்.”

“ப்ளீஸ்! பக்கத்துல வாங்க கௌதம்...”​

“போதும்!” செல்வா இடைமறித்தான். “லைலா... உங்கப்பா பணத்தை அனுப்பிட்டார்...​

ஸோ, ஜெனியும் சைமனும் உன்னைக் கொண்டு போய் அவர்கிட்ட சேர்த்திடுவாங்க.

ஜெனி, சைமன்... புறப்படுங்க. பைக்கை எடுத்துக்குங்க. லைலாவோட அப்பாவை

மெயின் ரோட்டுல கார்ல வெய்ட் பண்ண சொல்லியிருக்கேன்... வெய்ட் பண்ணுவார்.

பொண்ணை காரிலிருந்து கொஞ்ச தூரத்துல விட்டுட்டு... கட்டை அவிழ்த்திடுங்க...

உடனேயே பைக்கைக் கிளப்பிட்டு நம்ம எடத்துக்குப் போயிடுங்க.” சொன்னவன்

சைமனிடம் சாவியைக் கொடுத்தான்.

“என்னை கௌதம் கூட்டிட்டுப் போவார்!” லைலா கத்தினாள்.

“ஷட் அப்!” சைமன் சீறினான். அவனும் ஜெனியும் லைலாவைத் தள்ளிக்கொண்டு​

சற்று தள்ளி நிறுத்திவைக்கப்பட்டிருந்த செல்வாவின் பைக்கிற்கு வந்தனர்.

“ஏய்! உயிரோட அப்பாகிட்ட போய் சேரணும்னா... முரண்டு பண்ணாம வாடி!” ஜெனி​

மிரட்டினாள்.

பைக்கில் முதலில் சைமன் உட்கார்ந்தான். அவனுக்குப் பின்னால் லைலாவை பலவந்தமாக​

அழுத்திவிட்டு... மூன்றாவதாக ஜெனி உட்காந்தாள். ஹெட்லைட் வெளிச்சத்தை வீசியபடி பைக்

மண்பாதையில் சீறிகொண்டு போனது.

ஒரு நிமிடம் சென்றது...​

மீண்டும் நிசப்தம்.​

(... தொடரும்)​
___________________________________________________________________________
 
Back
Top