பொதிகையின் எதிரொலி

06 மே 2012

சாப்பிடும் போது மட்டுமே தொலைக்காட்சி சேனல்களை நோண்டும் பழக்கம் உடையவன் நான். (மீதி நேரத்தில் தொலைக்காட்சியில் வீட்டிலுள்ளவர்கள் ராஜ்ஜியம் தான் என்பதால், அங்கு அமர்வதே இல்லை)

ஞாயிறு அன்று இரவு சன் டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" என்று ஓடிக்கொண்டிருந்தது. 'வர வர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே சூதாட்டம் போல் ஆகி விட்டன' என்று சொல்லிக் கொண்டே ரிமோட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தேன்.

அப்போது தான் "பொதிகை தொலைக்காட்சி" வந்தது.

முன்பு DD5 ஆக இருந்த காலத்தில், தொலைக்காட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்று வாசகர்களிடம் ஆலோசனை கேட்டு, வாக்கெடுப்பு நடத்தி 'பொதிகை' என்ற அழகான பெயரைத் தொலைக்காட்சிக்கு சூட்டினர் நிலையத்தார். கேபிள் டிவி வருவதற்கு முன் அரசனாக கோலோச்சிய பொதிகையைத் தற்போது பார்ப்பவர்கள் அரிது.

இந்த பதிவினை எழுதத் தூண்டியதே அவர்கள் தொன்று தொட்டு செய்து வரும் ஒரு செயல் தான்.


அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா?

தங்களுக்கு நேயர்கள் எழுதிய கடிதங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் பெயர் "எதிரொலி".


தாங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளுக்கு வரும் எதிரொலிகளைத் தான் அவர்கள் படித்தனர். தபால் அட்டைகள், உள்நாட்டு அஞ்சல்கள் மற்றும் பொது அஞ்சல்கள் முதலியவற்றில் தங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிய நேயர்களின் கருத்துகளைப் படித்தனர். நிகழ்ச்சிகளைப் பார்த்து பதில் எழுதும் மக்கள் இதனைப் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்?

நிகழ்ச்சியில் இருந்து சில துளிகள்:


  • ஒரு நிகழ்ச்சியைப் பாராட்டி பலர் எழுதியிருந்தால், அனைவரது பெயரையும் வாசித்து நன்றி கூறினர். அதுமட்டுமல்லாது, பிறரது மடல்களைப் படித்துக் காட்டததற்கு வருத்தமும் தெரிவித்தனர்.
  • தங்களுக்கு வந்த பாராட்டுகளை மட்டும் அவர்கள் வாசிக்கவில்லை!! வசவுகளையும் வாசித்தனர். வசவுகளை வாசித்த பின்னர், அதற்கு மன்னிப்பு கோரி பிற்காலத்தில் குறைகள் எழாமல் பார்த்து கொள்வதாக கூறினர்.
  • நிகழ்ச்சிகளின் நேரம் குறித்த கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளித்தனர்.
  • நிகழ்ச்சிகளுக்கு வந்த ஆலோசனைகளையும் செயல்படுத்த முனைவதாக கூறினர்.


எதிரொலிக்கு எதிரொலி:

  • நிகழ்ச்சியில் இயன்ற அளவு தமிழை மட்டுமே பயன்படுத்தினர் (நேயர்கள் எழுதியதைத் தவிர்த்து). அதுவும் அழகு தான்!
  • ஒரு நிகழ்ச்சியைப் பாராட்டி சில நேயர்கள் கவிதை எழுதி அனுப்பினர். தொகுப்பாளர்கள் அனைத்து கவிதைகளையும் பொறுமையாக படித்துக் காட்டி எழுதியவர்களுக்கு நன்றியும் சொன்னார்கள் .
  • ஒரு நேயர் பாட்டு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் பெண்ணின் தொடர்பு எண்ணைக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு நாசூக்காக அவர்கள் மறுத்த விதம் அழகு!!
  • ஒரு நேயர் பொதிகையில் போடுவதாய் சொல்லும் படம் ஒன்று; ஆனால், திரையிடும் படம் ஒன்று என்று குறை கூறியிருந்தார். தொகுப்பாளர்கள் பொதிகையில் என்றுமே ஒளிபரப்பாகும் படம் பற்றி விளம்பரப்படுத்துவதில்லை என்று தெரிவித்தனர். நேயர்கள் பல சேனல்களைப் பார்ப்பதால் தவறாக எண்ணியிருக்கலாம் என்றனர்.
  • ஒரு நேயர் பொதிகையில் வெளிவரும் இசை நிகழ்ச்சிகள் பற்றி கேட்டு எழுதியிருந்தார். அனைத்தையும் அவர்கள் தங்கு தடையின்றி சொன்ன விதம் அருமை.
  • நிகழ்ச்சியின் இறுதியில் கடிதம் எழுதிய பிற நேயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் கடிதத்தைப் படிக்கமல் விட்டதற்கு வருத்தம் தெரிவித்தனர்.
முன்பு ஒரு காலத்தில் (நான் சிறுவனாக இருந்த போது) 'வயலும் வாழ்வும் நிகழ்ச்சி' பற்றி ஒரு நேயர் எழுதி இருந்தார். பேட்டிகளை வயல் வரம்புகளில் எடுக்கும் போது பறவைகளின் சத்தம் கேட்பதால், சில நேரங்களில் பேட்டியைத் தெளிவாக கேட்க முடியவில்லை என்று எழுதியிருந்தார். அடுத்த வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் இருந்து வயல் வரப்பைப் பிண்ணணிப்படமாகக் கொண்ட அறையில் பேட்டி எடுத்தனர்!!! இதை இன்று நினைத்தாலும் பொதிகையின் மீது ஒரு மதிப்பு ஏற்படுகிறது.

இன்று நேயர்களை வைத்து சூதாட்டம் நடத்தி, அதன் மூலம் பல சேனல்களும் கோடிகளில் சம்பாதிக்கிறன. அவற்றையெல்லாம் நாம் அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறோம். அவற்றில் ஒன்று கூட நேயர்கள் தங்களுக்கு எழுதும் கடிதங்களைப் படிப்பதில்லை. நிகழ்ச்சியைப் பற்றி எழுதும் நேயர் ஒருவருக்குத் தன் கருத்து சென்றடைந்ததா என்று எப்படி தெரியும்?

சூதாட்டங்கள் எதிலும் ஈடுபடாத பொதிகை மட்டுமே தங்கள் நேயர்கள் (குறைவான அளவாக இருப்பினும்) எழுதுவதை வாசித்து காட்டுகிறது. இது நேயர்களின் கருத்துகளுக்குக் கொடுக்கப்படும் மதிப்பு அல்லவா?

இன்று எத்தனை சேனல்கள் தங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிய நேயர்களின் கருத்துகளை இப்படி படிக்கிறார்கள்?



எனது வலைப்பூவில் இருந்து மறு பதிப்பு செய்யப்பட்டது!
 
அரிதாய் வரும் போது அதன் சுவை அதிகம் தான். முன்பு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 க்கு வரும் திரைப்படங்களுக்கும் வெள்ளி மாலையில் வரும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்கும் இருந்த மவுசே தனி. முன்பு தொலைக்காட்சி சேவை என்பார்கள். பின் வந்த பல தொலைக்காட்சி ஒலிபரப்புக்களால் அது வியாபாரமானது. பார்வையாளர்கள் குன்றியிருக்கும். இரண்டும் கெட்டா நிலையில் வந்தது மக்கள் தொலைக்காட்சி.

யாழ்ப்பாணத்தில் 2005 இல் கூட வயலும் வாழ்வும் நிகழ்ச்சி பார்த்து பயனடையும் விவசாயிகள் எனக்கு தெரிந்து பலர் உள்ளனர்.

தமிழ் போட்டிகளில் அவர்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் தனித்துவம் வாய்ந்தவை. நான் விரும்பி பார்த்த தொலைக்காட்சி பொதிகை மற்றும் மக்கள் தொலைக்காட்சி. (மக்கள் தொ.கா நான் பார்த்தது 2009 ல் தான்)

என்ன ஒன்று. நமக்கு பொதிகையை முழுமையாக பார்க்க முடிவதில்லை. சில நேரங்களில் மண்டல ஒலிபரப்பு இத்துடன் நிறைவு பெறுகிறது. என்றுவிட்டு DD2 அல்லது DD National என்று இந்தியில் ஆரம்பித்துவிடும். நான் முன்பு இந்தியில் ஒரு துப்பறியும் நிகழ்வுத்தொடர் பார்ப்பேன். இரவு 10 மணிக்கு பின்னர் வரும். இந்தி துப்பரவுக்கும் விளங்காது. ஆனால் விளங்கும். :D
 
கேபிள் டிவி வருவதற்கு முன் அரசனாக கோலோச்சிய பொதிகையைத் தற்போது பார்ப்பவர்கள் அரிது.

உண்மைதான். நீங்கள் சொன்னது அனைத்தும் மிகவும் சரி. பாராட்டுக்கள்.
 
பொதிகைத் தொலைக்காட்சியைப் போல, மக்கள் தொலைக்காட்சி, டிஸ்கவரி சேனல் போன்றவை மிகவும் பயனுள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் வைத்தால், வீட்டில் ஒருபெரிய யுத்தமே நடக்கும்.
 
என் பள்ளி நண்பன் ஒருவனின் தந்தை பொதிகையில்தான் வேலை செய்தார், அவங்க வீட்டிலையே பொதிகை பார்க்க மட்டாங்களாம், நான் சொல்வது 1997 நிலை, எங்கள் வீட்டில் அந்த காலத்தில் எல்லாம் கேபிள் டீவி இணைப்பு கிடையாது பொதிகை மட்டும்தான்

வெள்ளி சனி ஞாயிறு இரவுகளில் இந்திப்படங்கள் தான் பார்ப்போம்

பொதிகையை அழித்தவர்கள் மக்கள் மட்டுமில்லை ஆளுங்க, அதில் வேலை செய்கிறவர்களும்/செய்தவர்களும், அரசாங்கமும் தான்

பொதிகைக்கு தேவையான கவனத்தையும், பண ஒதுக்கீட்டையும், பொதிகையை தனித்தும் கூட அவர்கள் செயல் படவில்லை

பொதிகை அழிந்ததற்கு அதன் கர்வமும் ஒரு காரணம்

ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி எவ்வளவு பிரபலம், அந்த சூழலில் புதுப்பட பாடல்களை ஒளிப்பரப்ப பொதிகை ஏக மேனிக்கு காசு கேட்டது, இதில் கடுப்பான தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும், எங்கள் படத்தின் பாடலை ஒளிப்பரப்ப நீங்கள்தான் எங்களுக்கு காசுத்தரனும் என்று சண்டைக்கு போக, இனி புதுப்பட பாடல்கள் ஒளிப்பரப்ப மாட்டோம் என்று பொதிகையும், உங்களுக்கு தர மாட்டோம் என்று தாயாரிப்பாளர் இயக்குனரும் சொல்ல, புதுப்பட பாடல்கள் விளம்பரம் சன் டிவிக்கு கைமாறியது

இங்குதான் சன்னின் வளர்ச்சியும், பொதிகையின் வீழ்ச்சியும் ஆரம்பித்தது, பொதிகை தன் தலை மண்ணை வாரி போட்டுக் கொண்ட கதை பல*
 
எது எப்படியிருப்பினும் பொதிகையை அதாவது அதன் பழைய முகத்தை மறக்க மனம் கூடுதில்லையே.... ஆனா இப்பல்லாம் சாதிவாரி ஒதுக்கீடுகளால் காண சகிக்காதவர்களை திரையில் காணும்போது (முக அழகு பிரச்சனையில்லை....அது திராவிட முகம்...ஆனால்...நாற்பது சதவீத தேர்ச்சியில் அரசாங்க வேலை கிடைத்த அந்த அலப்பறைகளின் சொதப்பலைக் கேடக காதுகள் கூசுகிறது) கைகள் தானாகவே ரிமோட்டின் பட்டன்களை அழுத்துகிறது. அரசாங்கம் மாற வேண்டும். ரிசர்வேஷன் எல்லா இடத்திலும் தேவையில்லை. ஏற்கனவே ஏர் இண்டியாவில் பாட்டிகளை ஏர்ஹோஸ்டஸ்களாகப் பார்த்து நொந்து நூடுல்ஸானவனை பொதிகையில்...அதையே பார்க்க வைத்தால்...என்னைப் போன்றவரின் இளமைக்கு கேடல்லவா...??
 
பொதிகையை அழித்தவர்கள் மக்கள் மட்டுமில்லை ஆளுங்க, அதில் வேலை செய்கிறவர்களும்/செய்தவர்களும், அரசாங்கமும் தான்

பொதிகைக்கு தேவையான கவனத்தையும், பண ஒதுக்கீட்டையும், பொதிகையை தனித்தும் கூட அவர்கள் செயல் படவில்லை

உண்மை தான்!!
 
பொதிகைத் தொலைக்காட்சியைப் போல, மக்கள் தொலைக்காட்சி, டிஸ்கவரி சேனல் போன்றவை மிகவும் பயனுள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் வைத்தால், வீட்டில் ஒருபெரிய யுத்தமே நடக்கும்.

நான் சாப்பிடும் போதும் சில நேரங்களில் ஒரு உலக மகா யுத்தம் நடக்கும்!!
அதைப் பார்த்தா நடக்குமா?
 
ஒருகாலத்துல நாங்க இந்த தொலக்காட்சியில் காட்டப்படும் ஒலியும் ஒலியும் (20 காசு) மற்றும் சனிக்கிழமை இந்தி படம் (10 காசு) பார்க்க மற்றும் ஞாயிறு தமிழ்படம் (30 காசு).... செவ்வாய் நாடகம் (10 காசு) என அப்பாக்கிட்ட வாங்கிட்டு போயி பக்கத்து வீட்டு வசூல் ராஜா வீட்டுல பார்ப்போம். பழைய நினைவுகள் வந்தது நண்பரே
 
பொதிகையில் சனிக்கிழமை இரவு 10:10 முதல் 11:00 மணி வரையில் விளையாட்டு வினாடிவினா நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகின்றது. பயனுள்ள ஒரு நிகழ்ச்சி.

நான் இந்நிகழ்ச்சியை 2006ம் ஆண்டு தொடங்கி கண்டுவருகின்றேன். எனக்குப்பிடித்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

http://ddsportsquiz.hpage.com/


எங்கள் வீட்டில் கேபிள் கனெக்*ஷன் 2008ம் ஆண்டு தான் எடுத்தோம். அதுவரையில் பொதிகை தான்...
 
Last edited:
எங்கள் வீட்டில் கேபிள் கனெக்*ஷன் 2008ம் ஆண்டு தான் எடுத்தோம். அதுவரையில் பொதிகை தான்...

எங்கள் வீட்டிலும் தான்
 
எங்கள் வீட்டில் கேபிள் எடுத்தது 2009 இறுதியில் என்று நினைக்கிறேன்...

கருத்திற்கு நன்றி ஆதன் மற்றும் சர்சரண்!
 
விற்பனைத் திறன் இல்லாமல் பல சேனல்களும் ஏன் பல இணையத் தளங்களும்கூட வெறிச்சோடிக் கொண்டிருப்பது காணக்கூடியதே!!
 
காலத்துக்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு முன்னேறாதவற்றில் பொதிகையும் ஒன்று..!
 
சமேபத்தில் "பட்டிமன்றமும் பாப்பையாவும்" என்ற நூலை படித்தேன்.
அதில் கூட அவர் முதலில் பொதிகைக்கு நடத்திய பட்டிமன்றத்திற்க்கு பணம் வாங்க சென்ற போது கண்ட அவமனத்தை அதில் பதிவு செய்திருக்கிறார்.
பொதிகை தொலைக்காட்சியின் அழிவுப்பாதைக்கு நிர்வாகிகளும் ஒரு காரணம் அதை சன் தொலைக்காட்சி நன்றாக பயன்படுத்திக்கொன்டது. எந்த நிகழ்ச்சிக்கு யாரை போடவென்டும் என்பதில் நிறைய அரசியல் இருக்கிறது பொதிகையில்.
 
Back
Top