தினசரி தியானம்

ஜானகி

New member
சித்த நினைவும் செய்யும் செயலும் நீ யென வாழ்
உத்தமர்க்கான உறவே பராபரமே

தாயுமானவர்

இடையறாது உழைத்தலும், மன அமைதி காத்தலும், நல்ல வழிபாடு ஆகும்.
 
அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே
சொல்லும் பொருளும் சுமை காண் பராபரமே

தாயுமானவர்
 
சற்றே விரிவுரையும் தந்தால் மகிழ்வோடு படிப்போம்..

இதை இப்படி நான் பொருள் கொள்கிறேன்.

அல்லும் பகலும் அறிவாகி நிற்பவன் அந்த தாயுமானவனன்றி வேறு யாராக இருக்க முடியும்.

அறிதல், அனுபவம் எல்லாமே இறைவனன்றோ. அப்படியெனில் நம்முள் அறிவாகி நிற்பவனும் இறைவனே.. எதையறிந்தாலும் அதன் மூலம் நாம் அறிவது இறைவனை அன்றி வேறொன்றில்லையே..

ஒன்றை பல கோணங்களில் காண்கிறீர்களே எப்படி என்று அவ்வப்பொழுது மன்ற நண்பர்கள் கேட்பதுண்டு. இன்று இப்பராபரக் கண்ணியைக் கண்ட பொழுது நான் கண்டது அதுதான். ஒன்றைத்தான் நாம் எப்பொழுதுமே பல கோணங்களில் கண்டு கொண்டிருக்கிறோம். எல்லாம் இறைவன் என்னும் பொழுது, நாம் எங்கு எதை எப்போது எப்படிக் காணினும் அந்த அறிதல் என்ற அறிவாகி இருப்பவன் இறைவனே..

அப்படிப் பட்ட அறிவினை எந்தச் சொல்லால் பாடுவது, எந்தப் பொருளை அதற்கு அர்ப்பணிப்பது? சொல்லும் பொருளுமே இப்பொழுது சுமையாகிப் போகின்றன. அறிவினை அமைதியாய் தியானித்து அனுபவித்தலே இஷ்டமாகிப் போகிறது,

அப்படி ஆழ்ந்து அனுபவித்தலை தியானம் என்கிறோம்..

தெய்வம் நமக்குள் அறிவாக, உணர்வாக இருத்தலினால் வார்த்தைகள் பொருட்கள் ஆகியவை இறைவனை அறிதலில் சுமையாகி விடுகின்றன. (அந்தச் சுமையை நான் கொஞ்சம் அதிகமாகவே சுமக்கிறேன் போல.. :sprachlos020::sprachlos020::sprachlos020:)

தியானம் பழகிப் பார்க்கணும் போல..

பழகுகிறேன்.!!!
 
நண்பா ஒரு சிறு விண்ணப்பம் தினமும் ஒரு திரி வேண்டாமே..
ஒரே திரியில் தந்தால் நலமே!!
இல்லையெல் உன் மேல் கலகமே!!
 
சித்த நினைவும் செய்யும் செயலும் நீ யென வாழ்
உத்தமர்க்கான உறவே பராபரமே

தாயுமானவர்

இடையறாது உழைத்தலும், மன அமைதி காத்தலும், நல்ல வழிபாடு ஆகும்.

சித்த நினைவு, சித்தர்களெல்லாம் சித்தனாகிய முதல் சித்தன் சிவனின் நினைவு.. மாறாத ஒரே திட நினைவு. கைவசமாகும் என்ற நம்பிக்கையும் உறுதியும் கொண்டு நீங்காத மாறாத நினைவு...

சென்ற பராபரக் கண்ணியின் விளக்கத்தை இங்குக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்


அறிதல், அனுபவம் எல்லாமே இறைவனன்றோ. அப்படியெனில் நம்முள் அறிவாகி நிற்பவனும் இறைவனே.. எதையறிந்தாலும் அதன் மூலம் நாம் அறிவது இறைவனை அன்றி வேறொன்றில்லையே.


சென்ற கண்ணியில் அறிவாகி நின்றவம் என்று சொன்ன தாயுமானவர். இப்பொழுது சொல்கிறார்... அறிவாகி நின்றவன் இறைவன். அந்த அறிவிலிருந்து நல் திட சிந்தனையாகவும் நற்செய்ல்களாகும் வெளிப்படுகிறான்.

உறுதியான எண்ணமும், அதே போன்ற உறுதியான செயலும்... இறைவனை நோக்கியே இருக்கும். மற்றவை மாறிக் கொண்டே இருக்கும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்.

இவை மட்டுமே உத்தமர்களின் உறவுகள். உத்தமர்கள் என்றுமே இவற்றைப் பேணி இவற்றுடனே வாழ்வார்கள்.


அறிவும், சிந்தனையும் செயலும் இறைவனே!!! உத்தமர்க்கு அவனே உறவு!!!


அம்மா, அனு சொல்வதைப் போல இக்கண்ணிகள் ஒரே திரியில் தொடருமாயின் மீள் பார்வைக்கு மிக வசதியாக இருக்கும். எனவே தாங்கள் ஒரே திரியில் தொடருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
Last edited:
தங்களது விளக்கம் அருமையாகவும், ஆழமாகவும் இருக்கிறது,
தொடருங்கள்
 
தினசரி தியானம்

முக்குணத்தைச் சீவனெனும் மூடத்தை விட்டருளால்

அக்கணமே எம்மை அறிந்துகொள்வ தெந்நாளோ ?

தாயுமானவர்
 
தினசரி தியானம்

முக்குணத்தைச் சீவனெனும் மூடத்தை விட்டருளால்

அக்கணமே எம்மை அறிந்துகொள்வ தெந்நாளோ ?

தாயுமானவர்

சாத்வ, ரஜா, தாமஸ என்னும் குணங்களும்
உயிர் உடல் உலகம் பசி துன்பம் இன்பம் வ்லி போதை எல்லாமே மாயை என்பதும் அறிவுக்குத் தெரிகிறது.

ஆனால் அந்த அறிவு அதை ஏற்பதாயில்லை.. ஆயிரமாயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது..

அது எப்படி? இது என்ன? எது உண்மை? எது பொய்?

தீராத தேடலில் ஆன்மாக்களை சீவன்களில் நுழைத்துத் தள்ளிவிடுகிறது.

ஒவ்வொரு யுகங்களிலும் தேடலின் திசை மாறிக் கொண்டே இருக்கிறது.

தேடலின் திசை தொலைந்து போகும்பொழுதெல்லாம் ஊழியென்று எழுதியதை அழித்து மீண்டும் எழுதத் தொடங்குகிறான் இறைவன்.

எத்தனையோ யுகங்கள்,எத்தனையோ கல்பங்கள், எத்தனையோ பிரம்மங்கள் கழிந்துபோயின..

இன்னும் பொருட்கள் குணங்கள் என்று தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த மூடத்தனங்கள் எல்லாம் ஒழிந்து, மாயை மறந்து சீவன் ஒழிந்து எல்லாம் சிவன் ஆவது அருளால் மாத்திரமே சாத்தியம் என்று தோன்றுகிறது. அது நடக்க ஒரு கணம்தான் ஆகும். கணநேரத்தில் எல்லாம் புரிந்து விடும். ஆனால் அப்படி ஆகும் நாள் எப்பொழுது வருமோ?
 
Last edited:
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

தாயுமானவர்
 
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

தாயுமானவர்

யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் என்று சொல்பவர் யார் என்று தேடுகிறேன்.. தன்னை வினை என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறார் அவர்.

வினையேன் அழுதால் உனைப் பெறலாமே..

பொய்யான பூஜைகள்
பொய்யான உபதேசங்கள்
பொய்யான பக்தி

இப்படிப் பொய்யாய்ச் செய்யும் வினைகள் எத்தனையோ இருக்கின்றன. இப்பொய்களும் கூட இறைவனைச் சிலசமயம் அடைந்து விடுகின்றது. எப்பொழுது தெரியுமா? மனம் வருந்தி அழும்பொழுது...

அதாவது இத்தனைக் காலம் பொய்யாய் எத்தனையோ வினைகளைப் புரிந்திருக்கலாம். ஆனால் அவற்றிற்காக வருந்தி அழுதால் அவை மெய்யான வினைகள் செய்த பலனைக் கொடுத்து அவன் அருளையும் அன்பையும் பெற்றுத்தரும்.


மன்னிப்பது கடவுள் குணம். எந்த ஒரு வினாடியிலும் திருந்துவதற்கு கடவுள் வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கிறார்.

பொய்களுக்கும் அருளும் மெய்ப்பொருள் தாயும் ஆனவனாக இன்றி யாராக இருக்க முடியும்..

:icon_b:
 
Last edited:
தாயுமானவர் பாடல்களை அறியத்தரும் ஜானகி அவர்களுக்கும் எளிய விளக்கங்கள் தந்து புரிந்துகொள்ள உதவும் தாமரை அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
 
உள்ளுறையில் என்னாவி நைவேத்யம் ப்ராணன் ஓங்குமதி தூபதீபம்

ஒருகாலமன்றிது சதாகால பூசையாய் ஒப்புவித்தேன் பராபரமே

தாயுமானவர்
 
உள்ளுறையில் என்னாவி நைவேத்யம் ப்ராணன் ஓங்குமதி தூபதீபம்

ஒருகாலமன்றிது சதாகால பூசையாய் ஒப்புவித்தேன் பராபரமே

தாயுமானவர்

சதா சர்வ காலமும் பூசை நடந்து கொண்டே இருக்க என்ன செய்ய வேண்டும்?

சதாசர்வ காலமும் பூசை செய்வது இயலுகிற காரியமா? தூங்குவதற்கு நேரம் வேண்டாமா?

தூக்கத்தில் கனவு வரும், கனவில் பூசை செய்வேன் என்று சொல்ல முடியுமா?

உறக்கம் என்பது தன்னை மறந்த நிலை. அதில் எப்படி பூசை செய்ய முடியும்?

இயலும் என்கிறார் தாயுமானவர்..

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பூசை என்பது இச்சை செயலன்றி அனிச்சை செயலாக வேண்டும்.

நம் உடலில் சில காரியங்கள் மட்டும் நிற்பதே இல்லை.. இதயம் துடிப்பது. மூச்சு விடுவது..

உள்ளுறையில்... கோவிலில் கருவறை போல இறைவன் இருக்கும் கருவறை ஆக மனம் மாற வேண்டும்.

அவனுக்கு நாம் இழுத்து விடும் மூச்சே தூப தீபம் ஆக வேண்டும். ஆக மூச்சைச் சீராக்க வேண்டும்


ஓங்கும் அதி தூப தீபம். மூச்சுதான் தூப தீபமும். அனைத்து மூச்சும் ஒரே போல் இருப்பதில்லை, சில சமயங்கள் ஆழ்ந்த மூச்சும், சில சமயம் சீரான் மூச்சும் சில சமயம் மெல்லிய சுவாசமும் இருக்கும். ஒவ்வொரு மூச்சும் ஒவ்வொரு வகை ஆராதனை.. இறை ஆராதனையாக சுவாசம் மாறினால்.. அதை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று புரிகிறதல்லவா?

தூப தீபம் சரி. நைவேத்யம் என்ன?

படியளக்கிற பெருமானுக்கு அளந்தா கொடுக்கமுடியும். என்ன கொடுத்தாலும் அது அவன் கொடுத்ததே அல்லவா? அவன் கொடுத்ததில் உயர்ந்த ஒன்றை அவனுக்கே படைத்தல் வேண்டுமல்லவா?

அப்படிப்பட்ட ஒன்று நமது உயிர் மாத்திரமே.. நம் உயிரையே அவனுக்கு நைவேத்யமாய் படைப்போம். அதன் பொருள் தற்கொலை செய்து கொள்ளுதல் அல்ல. நம் உயிர் அவனுடையதாகும் பொழுது அவன் சேவை மாத்திரமே நம் கடமை ஆகிவிடுகிறது.

இப்படி அவனது சேவை மட்டுமே நம் கடமையாகக் கருதி, அவனை மனதில் இருத்தி, முச்சுவிடுதலைக் கூட பூசையாகிக் கருதிச் செய்தோமானால் அதுதான் நித்திய / சத்திய பூசை.

அதற்காக தம்மை ஒப்புவிக்கிறார் தாயுமானவர் பெருமான்.

மறுபடி யோசிப்போம்.

இப்படி ஒரு பூசை செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

மனம் வேறு எண்ணங்கள், வருத்தங்கள் ஆசைகள் இப்படி எதுவும் வந்து அடைந்து போகாமல் சுத்தமாக இருத்தல் வேண்டும்.

சுற்றுப் புறத் தூய்மையும் வேண்டும்.

நம்மையே நாம் அவனிடம் ஒப்புவித்து விட வேண்டும். வேண்டுதல் எதுவுமே இருக்கக் கூடாது...

மனம் என்ன சொல்கிறதோ அதை மறுபேச்சின்றி செய்தல் வேண்டும். இதுதான் இறைவனை நித்ய பூசை செய்யும் ஒரே வழி..
 
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

தாயுமானவர்

இவ்வரிகளைப் பாடியவர் மாணிக்கவாசகர்."ஆனந்த பரவசம்"என்ற தலைப்பிலே கடைசியாக உள்ள பாடல் இது.
 
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

ஆண்டாள்
 
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

ஆண்டாள்

தமிழிலே உன், உந்தன் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்.

உன் என்று சொல்லும்போது சாதாரணமாக இது உன்னுடையது என்று நாம் மட்டுமே சொல்கிறோம். உந்தன் - உன் - தன் என்று சொல்லும்பொழுது நீ என்னுடைய என்று நினைக்கிற உன்னுடைய பொருள் என்று அர்த்தப்படும்.

அழகாக அந்த வார்த்தையைப் பிரித்துக் காட்டியிருக்கிறீர்கள்.

எற்றைக்கும் - என்றும், ஏழேழ் பிறவிக்கும்...

இனிப்பிறவாமை வேண்டும் என்பதே பலரின் வேண்டுதலாய் இருக்கும்.
சிலர்

இனிப்பிறவாமை வேண்டும் அப்படிப் பிறந்தாலும் உன்னை மறவாமை வேண்டும் என வேண்டுவர்.

ஆனால் ஆண்டாளுக்கு அந்தச் சந்தேகமெல்லாம் இல்லை. உறுதியாகச் சொல்கிறாள்.

எத்தனை பிறவிகள் ஆனாலும் எத்தனைக் காலங்கள் ஆனாலும் நாங்களும் உன்னை மறக்க மாட்டோம். நீயும் எங்களை மறக்க மாட்டாய் என்பதைத் தான் உந்தன் என்ற ஒரு வார்த்தையில் சொல்லி விடுகிறார். தன்மேலும் நம்பிக்கை.. தன் ஆண்டவன் மீதும் நம்பிக்கை, இரண்டையும் ஒன்றாக்கி ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறார்.

நாங்கள் உங்களுக்கு உற்றவர்கள், அதாவது சாதாரண உறவினர் அல்ல, பொருத்தமான, உங்களுக்காகவே உள்ள உறவினர்கள்.. உங்களுக்கேற்ற உறவாக இருப்போம்..

யாரை நோக்கி இதைப் பாடுகிறாரோ அவரின் கல்யாண குணங்களுக்கு ஏற்றவராக இருப்போம் என்றல்லவா பொருள். காக்கும் கடவுள், அரிதுயில் கொண்டவன் அவன். அவனுக்கு ஏற்றவராய் இருக்க வேண்டுமானால் காக்கும் எண்ணம் தனக்குள் இருக்க வேண்டும் அல்லவா.

அதனால் அல்லவா தோழியரையும் உடனெழுப்பி கண்ணனை எழுப்பப் போகிறாள் ஆண்டாள். எனக்கு மட்டுமே இறைவன் என்ற சுயநலம் அவளிடம் இல்லை. பாவை நோம்பின் மகிமையைத் தோழியற்குக் கூறுகிறாள். அனைவரையும் சேர்த்துக் கொள்கிறாள். அரவணைத்துச் செல்கிறாள். அப்படி இருப்பதால்தானோ என்னவோ அவருக்கு உற்றவள் தான் என்று உறுதியாக அவள் சொல்கிறாள் நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

பெருமாளின் மனைவியான திருவோ பாரபட்சம் பார்க்கிறாள். சிலருக்கு அருளுகிறாள், சிலரை அரட்டுகிறாள், சிலருக்கு எட்டவே மாட்டேன் என்கிறாள். ஆனால் ஆண்டாள் அப்படிப் பாரபட்சம் காட்டுவதில்லை, அதனாலேயே தானே காக்கும் கடவுளுக்கு உற்றவள் என அவள் எண்ணுவதில் தவறேதும் உளதோ?

ஆக ஏழேழு பிறவி எடுத்தாலும் இப்படி எல்லோரையும் அரவணைத்து உமக்கு உற்றவளாய் இருப்பேன் என்கிறார் ஆண்டாள். அப்பிறவிகளில் என்ன செய்வாளாம். அவருக்கு ஆட்செய்வாளாம்.

ஆட்கொள்ளுதல் தெரியும். ஒன்றைத் தன் ஆளுமையின் கீழ் கொண்டுவருதல். ஆட்செய்தல் என்றால்?

அவனுக்கு பலரை தாமே வழிய வந்து ஆட்படுத்திக் கொள்ளச் செய்யுதல். அவன் புகழைப் பாடிப் பரப்பி, அவனை அறியாதவரையும் அவனை எண்ண வைத்து வியக்க வைத்து தம்மை அவனிடம் ஆட்படுத்திக் கொள்ளச் செய்வது..

தனக்காக மட்டும் பாராமல் இன்னும் பலருக்கும் அவன் அனுக்கிரகம் பெற்றுத் தருவேன் பல பிறவிகள் எடுத்துழன்றும் இப்படிப் பலருக்கு நற்கதிப் பெற்றுத் தருவேன் என்று சொல்லும் ஆண்டாள் அவனுக்கு உற்றவள்தானே..


பக்தியில் பலவகை உண்டு.. ஆண்டவனை எப்படி வேண்டுமானாலும் காணலாம். ஆனால் அதில் ஒரு முழுமை வேண்டும். அம்முழுமையைப் பெற்ற ஒரு சிலரில் ஆண்டாளும் ஒருத்தி..

முழுமையான அர்ப்பணிப்பு. முழுமையான நம்பிக்கை... இரண்டையும் காட்டும் இந்த வரிகள்.

ஆண்டாளை தரிசிக்கும் ஆவலைத் தூண்டிய இரு வரிகள்...

திருமகளைக் கவலை கொள்ள வைக்கலாம். அப்படியாவது அவள் பரந்தாமனுக்கு உரியவளாய் காக்கும் கடவுளின் உற்ற துணையாய் வாழ முயற்சிக்கட்டும். :D:D:D:D
 
எடுக்கவோ ? கோர்க்கவோ ?

நான் எடுப்பதை, நீங்கள் கோர்க்கும் விதமே அலாதிதான்,

நன்றி
 
Back
Top