கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 22 (நிறைவுப்பகுதி)
இருவர் தமது வீட்டுக்கு வந்து இருக்கிறார்களே, அவர்களை வரவேற்க வேண்டும் என்னும் பண்பாட்டைக் கூட இழந்துவிட்ட அமைச்சர், விக்னேஷை கையைப்பிடித்து இழுக்காத குறையாய் அழைத்துக்கொண்டு தமது அறைக்குப் போனார்.
மாணிக்கமும் வசந்தியும் சிறந்த கவிஞர்கள் பின்னால் தொடர்ந்து செல்லும் சொற்களின் கூட்டம் போல பின் தொடர்ந்தனர்.
மாணிக்கத்தை உட்கார வைத்துவிட்டு அமைச்சர் மட்டும் குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடந்துகொண்டே கேட்டார்.
‘’ சொல்லுங்க தம்பி... யாரந்த **** மகன்..? ‘’ *ஒரு பெண் உடன் இருக்கும் நினைவுகூட இழந்தவராய் அமைச்சர் ஆவேசமுடன் கேட்டார்.
‘’ சொல்றேன் ஐயா.. அதுக்கும் முன்னால எனக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக்குங்க.. இறந்து போன நீலமேகத்துக்கு மும்பய்ல தொடர்பு இருந்ததா..? ‘’ விக்னேஷ்.
ஏதோ சிந்தித்தவராய் மாணிக்கத்தை ஒருமுறை பார்த்துவிட்டு அமைச்சர் சொல்லத்தொடங்கினார்.
’’ நீலமேகம் எங்களைப் போல அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லாம மிகப்பெரிய தொழிலதிபர்கள் பணமுதலைகளுடன் கூட தொடர்பு வைச்சு இருந்தார். எல்லாருக்கும் ஹவாலா மற்றும் கறுப்புப்பண பதுக்கல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கி வந்தார். ஏன் என்னாச்சு விக்னேஷ்..? முப்பய் இல்லை இந்தியாவுல அவன் எங்கிருந்தாலும் அவனைத் தேடிப்பிடிச்சு கொல்லத்துடிக்குது என் மனசு.. சொல்லுங்க தயங்காம.. ‘’ ஆவலை அடக்க முடியாதவராய் பரபரத்தார்.
‘’ ஐயா, நான் உங்க நலன் மேல அக்கறை கொண்டவன். உங்க பாதுகாப்பை மிகவும் முக்கியமாகக் கருதிச் சொல்லுகிறேன். இந்த ஸ்விஸ் வங்கிக்கணக்கை இத்தோடு மறந்திடுங்க.. போனதொகை போகட்டும். அந்த தோகை மீண்டும் கிடைக்கவும் செய்யாது, அது மட்டுமில்லாம.. ‘’
அவனை முடிக்க விடவில்லை அமைச்சர்.
‘’ விக்னேஷ், என் பலம் உனக்கு தெரியாது. தமிழ்நாட்டுல மட்டும் இல்லை. இந்தியாவுல எங்கும் என்னால ஆளைப் பிடிச்சு காரியத்தைச் சாதிக்கமுடியும். அதைப்பத்தி கவலைப்படாம நீங்க அவன் விவரம் மட்டும் கொடுங்க.. மீதி நான் பாத்துக்கிறேன். ஒன்னு இல்லை ரெண்டு இல்லை. மூவாயிரம் கோடி ... ஹூம்..’’ அவர் கிட்டத்தட்ட சிங்கம் போலவே கர்ஜித்தார்.
‘’ ஐயா.. நான் சொல்லபோற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும். பொறுமையா கேளுங்க..’’ என்ற விக்னேஷ் தொடர்ந்தான்.
‘’ நீலமேகம் உங்கள் ஸ்விஸ் அக்கவுண்ட்டை தொடங்கி வைத்து விவரங்களைச் சொல்லியதுடன் அதை எப்பவோ மறந்தும் இருப்பார். அவருக்கு தேவை கமிஷன் தொகை மட்டுமே.. அது நாள் வரை அவர் அனைவருக்கும் செய்ததும் அதுதான்..
ஆனா உங்க விஷயத்துலமட்டும் அவர் மாறா நடந்துகிட்டார். அதுக்கு காரணம் நீங்க அவருக்குக் கொடுத்த மெண்ட்டல் டார்ச்சர். அவரை அறையில் சிறைவைத்து ஆட்டிப்படைத்த செயல்கள் அவரைக் காயபபடுத்திவிட்டது. எத்தனையோ பேருக்கு அவர் இந்த மாதிரி சேவைகளைச் செய்து கொடுத்தும் யாருமே தராத மன அழுத்தங்களை நீங்க கொடுத்ததால் உங்க மேல அவர் மிகுந்த ஆத்திரம் அடைந்தார்..உங்க அக்கவுண்ட் விவரங்களை எல்லாம் ரெககனைஸ் செய்து அதை அமைச்சகத்தின் கலைநிகழ்ச்சி சிடி மூலமாக பதிந்து கோடிங் செய்து அதை தனக்கே கொரியர் அனுப்பிக்கிட்டார். அந்த கொரியர் முகவரில அவரது மும்பை முகவரி போட்டிருந்தார். ஏன்னா நீங்க அவரை ட்ரேஸ் செய்துடுவீங்கன்னு பயந்தார். மும்பைல அவருக்கு ஒரு ஃப்ளாட் அரேஞ்ச் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே இருந்த நம்பிக்கையான வேலையாள் மூலம் கொரியரைக் கைப்பற்றுவது என்றும் பிற்பாடு அவர் மும்பை செல்லும் போது அந்த கொரியரை வைத்து உங்களுக்கு பிரச்சினை கொடுப்பது அவரது நோக்கம்.
ஆனா நீங்க ஒருவழியா அவரை விடுவித்தபின்னால் கும்பகோணம் போனவர் அங்கே ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார். கிட்டத்தட்ட அது கொலை போலதான். ஏன்னா அவர் மிகுந்த மனத்தெளிவும் ஆரோக்கியமும் கொண்டவரா இருந்தார். உங்க கஸ்டடில இருந்த பதினைந்து நாட்கள் அவரைத் தகர்த்துடுச்சு.
அவர் மும்பைக்கு அனுப்பின கொரியர் அவர் கையில் கிடைக்காமலேயே போயிடுச்சு.
ஆனா அந்த கொரியர் யார் கையில் கிடைச்சது தெரியுமா..? ‘’
சற்று நிறுத்தினான் விக்னேஷ். அவனை வியப்போடும் பயத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தாள் வசந்தி.
ஆ ஆறுமுகத்தின் ஒரே முகம் இருண்டு போயிருந்தது. உணர்வுகள் பல வந்து வட்டமடித்துச் சென்றன.
மேலே சொல்லு என்பது போல் சைகை காட்டினார். தொடர்ந்தான் விக்னேஷ்.
‘’ அவருக்கு மும்பையில் தனி ஃப்ளாட்டும் வேண்டிய வசதிகளையும் கொடுத்து வைத்திருந்தவன் மும்பையின் டான் சாவூத் சுப்ராஹீம். அவன் கையில் தான் அந்த கொரியர் கிடைத்தது. உங்க பணத்தின் சாவி கிடைத்தது. ‘’ என்று விட்டு ஆறுமுகத்தின் முகத்தை ஆராய்ந்து நோக்கினான் விக்னேஷ்.
ஆறுமுகம் மற்றும் மாணிக்கத்தின் முகம் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மரணக்களை பிராண பயம் தாண்டவமாடியது.
இதைத்தானே விக்னேஷ் எதிர்பார்த்தான்.
‘’ ஐயா.. சுப்ராஹீமுக்கு ரொம்ப உதவிசெய்த நீலமேகத்தின் அறிமுகம் சுப்ரமணிய சேகர் என்னும் ஒரு பெரிய வங்கி வல்லுனர் மூலமாக சுப்ராஹீமுக்கு கிடைத்தது. நீலமேகத்தை இழந்த கோபம் இன்னும் சுப்ராஹீமை விட்டு அகலவில்லை. உங்களைக் கொல்ல நினைத்தவன் ஏதோ காரணத்தால் விட்டுவைத்துவிட்டான். ஆனால் அந்த ஆத்திரம் அடங்காமல் உங்க கணக்கைச் சுரண்டி அவனது உலகம் முழுக்க இருக்கும் கணக்குகளில் செலுத்திக்கொண்டுவிட்டான். இந்த வகையில் சுப்ரமணியம் சேகர் மிக உதவியாக இருந்தார். இனி என்ன செய்யப்போறீங்க..? ‘’ என்று கேட்டுவிட்டு அவரைக்கூர்ந்து நோக்கினான்.
துளிக்கூட அச்சமில்லாமல் பேசும் விக்னேஷையே கூர்ந்து பார்த்த ஆறுமுகத்தின் முகம் ரத்தமிழந்த சவக்களை பெற்றது.
’’ இனி என்ன ஆகும் ..? ‘’ என்று அவனையே கேட்டார் ஆ ஆ.
‘’ இந்த விடயத்தை கண்டுக்காம விட்டுவிடுவது தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை. என்ன தான் உங்க கிட்ட பலம் இருந்தாலும் இந்த சாவூத் சுப்ராஹீமை அசைக்கக் கூட முடியாது என்பது தான் உண்மை. அவன் கில்லர்களை வெளி நாட்டில் இருந்து தருவிப்பவன். அவனைப்பத்தி நான் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.’’
ஹூம் என்று பெருமூச்செறிந்தார் ஆறுமுகம்.
’’ நான் கும்பகோணம் சென்றிருந்தப்ப என்னை சிலர் கண்காணித்தாங்க.. முதலில் அது நீங்களாக இருக்கும்னு நினைச்சேன். பிறகுதான் தெரிந்தது. உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் சுப்ராஹீம் ஆளுங்க தான் என்னையும் ஃபாலோ செய்தது. இனி நீங்க கவனமா இருப்பது நலம். ‘’ பேச்சு முடிந்தது என்பதைப்போல தலை அசைத்துவிட்டு அமைதியானான் விக்னேஷ்.
ஆறுமுகத்தின் இல்லத்திலிருந்து வெளியேறிய விக்னேஷும் வசந்தியும் பைக்கில் மௌனமாகப் பயணித்தனர்.
சட்டென்று யாருமில்லாத சாலையில் நிறுத்தச் சொன்னாள் வசந்தி.
‘’ விக்னேஷ்.. நீங்க பொய் சொல்லுவீங்களா..? அதுவும் இத்தனை கோர்வையாக..? ‘’ என்று அவன் முகத்தைப் பார்த்து தன் தலையைச் சாய்த்து ஸ்டைலாகக் கேட்டாள் வசந்தி.
‘’ நான் சொன்னது முழுக்க உண்மை வசந்தி, ஒரே ஒரு விடயம் தவிர. ராகவன் கையில் சிடி கிடைத்ததைத் தவிர. சுப்ராஹீம் ஆறுமுகத்தைக் கருவிக்கொண்டிருப்பது நிஜம். என்னைக்காவது ஒரு அமைச்சர் படுகொலை என்று செய்தி வந்தால் பதறாதே..’’ என்று கண்சிமிட்டினான்.
‘’ மேலும் வசந்தி... பொய்ம்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில் என்று வள்ளுவர் சொல்லி இருக்கார்.. ‘’ என்றான் விக்னேஷ்.
சட்டென்று பாய்ந்து அவனை இறுகத்தழுவி அவன் எதிர்பாராத வண்ணம் அவன் இதழில் ஆழமாக தன் இதழைப் பதித்து நீண்டதொரு முத்தம் தந்தாள் வசந்தி.
பைக் இப்போது உல்லாசமாகப் போய்க்கொண்டிருந்தது.
’’ இனி என்ன விக்னேஷ்..? ‘’ வசந்தியின் குரலில் ஆர்வம் தொனித்தது.
‘’ இப்போ நேரா ராகவன் கிட்ட போய் அவன் தப்பித்த தகவல் கொடுத்துட்டு ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் நாம் சாப்பிடப்போகிறோம். ‘’
‘’ அப்புறம்... ‘’
‘’ ஒரு முக்கியமானவரைச் சந்திக்கனும்.. ‘’
‘’ யாரை..? ‘’
’’ உங்க அப்பாவை.. ’’
வசந்தி மௌனமாக அவனை பின்னால் இறுக்கி அணைத்துக்கொண்டாள். விக்னேஷுக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டது.
நிறைவடைந்தது.