கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 20
‘’ தினந்தோறும் செய்திகளைப் பார்க்கும் போதும் நடப்பினைக் கூர்ந்து கவனிக்கும் போதும் எந்த ஒரு சராசரி இந்தியன் மனதில் எழும் கேள்விகளை நானும் கேட்டுக்கொண்டதுண்டு விக்னேஷ்.
அம்பானிகளும் விஜய் மல்லையாக்களும் இன்னும் பல தொழில் முதலைகளும் இந்திய வங்கிகளில் கடனைப்பெற்றுக்கொண்டு நட்டக்கணக்கைக் காட்டி அந்த கடன்களில் இருந்து தப்பிக்க அரசியல் வாதிகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை அபேஸ் செய்வதை கவனிக்கலையா நீங்க..?
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் பத்தாயிரம் இருபதாயிரம் கடன் இருந்தால் அவனை வங்கிகள் கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்துகின்றனதானே..? ஏன் மேற்சொன்ன பணமுதலைகளைக் கண்டுக்காம இருக்காங்க..?
இன்றைய தேதிக்கு உலக வங்கியின் இந்தியக்கடன் லட்சக்கணக்கான கோடிகள்..!
அதேசமயம் இந்திய பணம் வெளிநாட்டுவங்கிகளில் பல லட்சக்கணக்கான கோடிகளில் முடங்கிக்கிடங்கின்றன.. இது வினோதமாக இல்லையா..?
அரசாங்கம் * அது ஆண்ட அரசாங்கமா இருந்தாலும் ஆளும் அரசாங்கமா இருந்தாலும் ஆளப்போகும் அரசாங்கமா இருந்தாலும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஏன் ..? திருடர்கள் ... அனைவருமே திருடர்கள்..
இதோ ஆற்காடு ஆறுமுகம் மந்திரி ஆவதற்கு முன் அல்லது எம் எல் ஏ ஆவதற்கு முன் எத்தனை கோடிகளுக்கு அதிபதியாக இருந்தார்..?
இப்போது நமக்கு தெரிய வந்த ஒரே கணக்கில் மட்டும் 3300 கோடிரூபாய்கள்.. !
இவை எல்லாம் யாருடையது..? அந்த ஆளுடைய பரம்பரைசொத்தா..? உழைத்து ரத்தமாய் வியர்வை சிந்தி உண்டாக்கிய பணமா..?
இல்லை விக்னேஷ்,, இவை எல்லாம் நம் உழைப்பு..
ஒருபக்கம் விவசாயிங்க எலிகளை சாப்பிட்டு உயிரைக் கையில் பிடிச்சு வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.. இன்னொரு பக்கம் இந்த கொள்ளையர்களின் ஆர்ப்பாட்டம்..கேட்கவே வேதனையா இல்லையா..? ‘’
ராகவன் சொல்ல சொல்ல விக்னேஷின் மனம் அவன் பால் கொண்டிருந்த மதிப்பை பலமடங்காக்கியது.
ராகவனுக்கு சில ஆயிரங்கள் கடன் இருப்பதை ஓரளவுக்கு அறிவான் விக்னேஷ். ஆயினும் தனக்காக அந்த பெரும் தொகையில் இருந்து ஒற்றை பைசாகூட பயன்படுத்திக்கொள்ளாத அசாத்திய நேர்மை ராகவனை ஒரு தேவதை ரேஞ்சுக்கு உயர்த்தி இருந்தது. இப்போது அவன் சொன்ன ஒவ்வொரு உண்மையும் பொட்டில் அறைந்தாற்போல இருந்ததால் அமைதியாக அவன் சொன்னவற்றை ஆமோதிக்கும் விதமாக கேட்டுக்கொண்டிருந்தான்.
ராகவன் தொடர்ந்தான்.
‘’ விக்னேஷ், நானாக எதையும் தேடிப்பிடித்து திட்டமிட்டு இறங்கவில்லை. எனது பைக் பார்க்கிங்கிலிருந்து பைக்கை எடுக்கும்போது இடையில் சிக்கிய ஒரு பழைய கொரியர் பாக்கெட் என் சிந்தனைகளை தீவிரமாக்கி இறங்க வைத்தது.
அந்த பாக்கெட்டில் நீலமேகம் என்பவர் அமைச்சகம் ஒன்றின் விழாக் காட்சியை பதிய வைத்து அதில் சில கோடிங் மூலம் ஆற்காடு ஆறுமுகத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்கு விவரங்களையும் அதை அணுகும் அனைத்து விதங்களையும் குறித்து வைத்திருந்தார்.
முதலில் ஒன்றும் புரியாமல் விழித்த நான் இதற்காக நிறைய வாசித்தேன். ஒரு கவிதை எழுத பல நாள் சிந்தித்து பலமுறை திருத்தி எழுதி பதிப்பிக்கும் கலைவேந்தன் என்பவரை நான் இணையத்தில் அறிவேன். அந்த அக்கறையும் கவனமும் என்னை இந்த சிடியில் ஈடுபடுத்த ஊக்கிகளாய் உதவின. நிறைய கண்டுபிடிச்சேன்.
நான் நினைத்திருந்தால் எனக்கும் ஒரு வெளிநாட்டு கணக்கை உருவாக்கி அனைத்து கோடிகளையும் என் கணக்கில் பெற்றுக்கொண்டிருக்க முடியும். அந்த அளவுக்கு விவரங்கள் கிடைத்தன. ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஏன்..?
பிறகு எனக்கும் இந்த திருடர்களுக்கும் என்ன வித்தியாசம்..?
ஆம் நானும் திருடனாய் மாறினேன். ராபின் ஹூடைப்பற்றி படிச்சிருப்பீங்க.. யெஸ். நானும் தமிழக ராபின் ஹுட் ஆக என்னை நினைத்துக்கொண்டேன்.
ஒரே நாளில் அனைத்து பணத்தையும் தொண்டு நிறுவனங்களுக்கு மாற்ற முடிந்தாலும் அதற்கு என் உழைப்பு கடந்த 20 நாட்கள்..!
இந்தாங்க விக்னேஷ்.. இந்த சிடியில் நான் செய்த அனைத்துமே பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
என்னைக்காவது நான் மாட்டுவேன் என்பது தெரியும். அதிலும் ஆறுமுகம் போன்ற முதலை வெளிப்படையா இறங்காவிட்டாலும் மறைமுகமா இறங்கி விசாரிப்பார்னு தெரியும். அவர் உங்களை அணுகியது அறிந்து கொண்டேன். எப்படின்னு கேக்கறீங்களா..?
ரெண்டு நாள் முன்பு உங்க லேப்டாப்பிலிருந்து அக்சஸைப் பார்த்தேன். உங்க ஐபி முகவரி தேடி நீங்க இதில் விசாரிக்க இறங்கி இருப்பதையும் அறிந்தேன்.
உங்களையும் ஃபோலோ செய்து பாத்து நிலைமையைக் கண்டறிந்தேன்.
இனி தப்பிக்க இயலாதுன்னு தெரிஞ்சு உங்களை எதிர்பார்த்தேன். நேற்று நீங்கள் கீழே இருக்கும் கொரியர் கடையில் விசாரித்ததையும் பார்த்தேன்.
நேற்று இரவு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க முழுவிவரம் தெரிஞ்சுக்காம வரவிரும்பலைன்னு புரிஞ்சுகிட்டேன்.
காலிப்பானையைச் சுரண்டிப்பார்ப்பது போல் நேற்று இரவு நீங்க ஆறுமுகம் அக்கவுண்ட்டை அக்செஸ் செய்து முயன்றதையும் கண்டுபிடிச்சு இதோ இப்ப உங்களை எதிர்பார்த்து தான் காத்திருந்தேன்.
என்னை நீங்க போலீஸில் ஒப்படைக்கலாம் விக்னேஷ்.
அட்லீஸ்ட் என் செயல்கள் இந்தியா முழுக்க வெளிவந்தா... என்னைப்போல பல ராகவன்கள் உருவாகலாம். எல்லா கறுப்புப்பணங்களும் அம்பலமாகலாம். நான் ரெடி விக்னேஷ். ‘’
கொஞ்ச நேரம் ராகவனையே உற்றுப்பார்த்த விக்னேஷ்..
அமைதியாக ‘’ என்னை உங்க நெருங்கிய நண்பரா ஏற்பதில் உங்களுக்கு மறுபரிசீலனை இருக்குமா ..? ‘’ என்று துல்லியமான ஆங்கிலத்தில் கேட்டான் ..
துடிப்புகள் விரைவில் அடங்கும்..!