கலைவேந்தன்
New member
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 1
’’ என்னங்க, நீங்க வெளியில போயிருந்தப்ப மகேந்திரன் வந்து இருந்தான். இன்னும் எத்தனை வருஷத்துக்கு கடனை திருப்பித் தராம இழுத்து அடிப்பார்னு கத்திட்டுப் போறான். ‘’
மனைவி மங்களத்தின் வரவேற்புரையில் மனம் வெறுத்தான் ராகவன். இது ஒன்றும் புதிதில்லை அவனுக்கு. மாதம் நான்கைந்து பேர் வீடு தேடி வந்து கடனைத் திருப்பிக்கேட்டு கத்திவிட்டுப் போவதும் வட்டியை வாங்கிப்போவதும் வழக்கமாகிப்போய் விட்டது.
வெயிலில் அலைந்து திரிந்து ஞாயிற்றுக் கிழமையின் சுகத்தைக் கூட அனுபவிக்க இயலாமல் ஒரு வங்கியின் லோன் மேனேஜரை வீட்டில் சந்தித்துப் பேசிவிட்டு களைத்துப்போய் வந்திருந்தான். எப்படியாவது குறிப்பிட்ட தொகையை லோன் போட்டுத் தருவதாக நம்பிக்கை தெரிவித்து அனுப்பி இருந்தார். உபசாரத்திற்குக் கூட ஒரு காபி குடிக்க விசாரிக்க வில்லை. அதைப் பெரிது படுத்தும் மன நிலையிலும் அவன் இல்லை. ஒருவர் சம்பளத்தில் குடும்பம் ஓட்டும் பலரது நிலைமை இது தான்.
சட்டென்று வங்கிக்கணக்கின் பாஸ்புக் அப்டேட் செய்து வரவேண்டும் என்ற நினைவு வந்தது. வங்கிக்கு திங்கள் விடுமுறை என்பதால் இன்றே சென்று வருவது நல்லது என்று நினைத்தான்.
கழட்டிய சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்ட ராகவன் பேங்க் பாஸ்புக்கை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மூன்றாம் மாடியில் இருந்து கீழிறங்கினான்.மூன்றுமாதக் குடியிருப்பின் மொட்டை மாடிக்குடியிருப்பில் மாத வாடகைக்கு குடியிருக்கும் 35 வயதான ராகவன் பிசிஏ முடித்து ஒரு நல்ல கம்பெனியில் ஓரளவு சம்பளத்தில் வேலையில் இருந்தாலும் அவனது குடும்பப் பொறுப்பின் - இரண்டு தங்கைகள் ஒரு தம்பி இவர்களைக் கரையேற்றும் முயற்சிகளின் - காரணமாக அளவுக்கதிகமாக கடன் வாங்கி இன்று அவஸ்தைப் பட்டுக்கொண்டு இருக்கிறான்.
கீழே பைக் பார்க்கிங் மிகவும் நெரிசலான ஒன்று. சென்னையின் புற நகர்ப்பகுதியில் அமையும் பல அடுக்குமாடிக் கட்டடங்களின் அவதி நிலை போல் தான் இதுவும். பைக்குகள் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொண்டு குறுகலான இடத்தில் ஒழுங்கற்று இருக்கும். இதற்கிடையில் கீழ்த்தளத்தில் கொரியர் மற்றும் ஜெராக்ஸ் கடையின் பழுது பட்ட ஜெராக்ஸ் மெஷின்கள் வேறு தாறுமாறாக போடப்பட்டு பார்க்கிங்குக்கு இருக்கும் குறைந்த இடத்தையும் ஆக்கிரமித்து நின்றன.
தனது பைக்கை எடுக்க முயன்ற போது அது மிகவும் சிக்கலாக மாட்டிக்கொண்டு இருப்பதை அறிந்தான். அடுத்திருந்த ஒரு பைக்கை முக்கி முயன்று ஒதுக்கி கொஞ்சம் இடைவெளி ஏற்படுத்தி தனது பைக்கை எடுகக் முயன்ற போது பழைய ஜெராக்ஸ் மெதின்களுக்கிடையில் சிக்கி இருந்த பழுப்பு நிறக்கவரின் சிதைந்த பகுதி பைக்கின் மட்கார்டில் சிக்கிக்கொண்டு இருந்ததை கவனித்தான். மெல்ல அதை கையால் அசைத்து நீக்க முயன்றபோது அது பழைய கொரியர் ஒன்றின் அழுத்தமான உறையின் ஒரு மூலை சிதைந்து மாட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டான்.
அதை வெளியில் எடுத்து கவரைப் பரிசோதித்த போது அதற்குள் சிடி போன்று கடினமாகத் தென்பட்டது. ஈரத்தில் சிதைந்து கலைந்திருந்த கவரில் இருந்த முகவரியைக் கவனமாக ஊகித்து படிக்க முயன்ற போது முகவரி இவ்வாறு இருந்தது.
க. நீலமேகம் எண் : 3/ 19, தெற்கு வீதி, கும்பகோணம்.
தேதி முதலானவை கலைந்து போயிருந்த நிலையில் மறுபக்கம் பார்த்ததில் பலமுறை டெலிவரி செய்ய முயன்று ‘ டோர் லாக்ட் ‘ முத்திரைகள் பதியப்பட்டு இருந்தன.
கேட்பாரற்று சிதிலமடைந்து விட்ட அந்த பழுப்பு நிற கவரைப்பிரித்துப் பார்த்த போது ஒரு கடிதமும் ஒரு சிடி பிளாஸ்டிக் பாக்ஸுடன் இருந்தது தெரிந்தது.
கடிதத்தைப் பிரித்து பார்த்த போது அது மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்ககத்திலிருந்து அனுப்பப் பட்ட கடிதமென்றும் ‘’ மாற்றுத்திறனாளிகள் - மறுவாழ்வு முறைகள் ‘’ என்னும் தலைப்பிலான ஒரு சிடி அத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதாக அரசாங்க விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி அரசாங்க எந்திர வார்த்தைகளுடன் எழுதப்பட்டு இருந்தது.
ராகவனுக்கு அதில் ஏதோ வினோதம் தட்டுப்பட்டது. என்னதான் இருக்கும் அந்த சிடியில் என்ற ஆர்வம் அவனுக்குள் எழுந்தது விதியின் வினோத விளையாட்டாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
துடிப்புகள்... தொடரும்..!
Last edited: