சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய்யின் அபத்த அவஸ்தையும் !

அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக் குழந்தையை அருகே அமர்த்திப் பாடச் சொன்னார். 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' எனத் தன் மழலைக் குரலில் பாடத் தொடங்கியது அது.

மேடையில் வைத்து இன்னுமொரு குழந்தையிடம் தொகுப்பாளினி கேட்கிறார்.
' நீங்க கண்டிப்பா செலக்ட் ஆகிடுவீங்களா?'
'ஆமாம். ஆவேன். கண்டிப்பாக'
'அப்படி ஒரு வேளை ஆகலைன்னா நடுவர்களை என்ன செய்வீங்க?'
'ஆவேன்' எனக் கோபமாகவும் உறுதியாகவும் சொல்கிறது அந்தக் குழந்தை. அதைத் தொடர்ந்த தொகுப்பாளினியின் சமாதானப் பேச்சில் சிரிக்கிறது குழந்தை. அதுதான் குழந்தை. குழந்தைகள்.

இன்னுமொரு பெண்குழந்தை, தனக்குத் தரப்பட்ட வாய்ப்பில் சரியாகப் பாடவில்லை. அவர் அடுத்த சுற்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லையென நடுவர் சொன்னதும் உதடுகள் பிதுக்கிக் கண்ணீர் வழிய அழத் தொடங்குகிறது. நடுவருக்குத் தாங்க முடியவில்லை. 'இன்னுமொரு வாய்ப்புத் தருகிறேன். அழாமல் பாடிக் காட்டுகிறாயா?' எனக் கேட்டு, அந்தக் குழந்தையைச் சிரிக்கச் செய்து திரும்ப பாடவைக்கிறார். அதுவும் பாதிப் பாட்டில் மீளவும் அழத் தொடங்குகிறது. நடுவர் அவரை அழைத்து, 'அழாதே' என அன்பாகச் சொல்லச் சொல்லக் கண்ணீர் வழிகிறது குழந்தைக்கு. 'அழக் கூடாது. வெளியேயும் போய் அழக் கூடாது. அம்மாப்பாக்கிட்டப் போய் அழக் கூடாது' என்ற நடுவரின் குரலுக்குச் சரியெனச் சொல்லிவிட்டு வந்த குழந்தை திரும்ப வாசலில் வந்து அழுகிறது. நடுவரும், இன்னுமொரு பெண்ணும் வந்து சமாதானப்படுத்துகிறார்கள்.

இன்னும் இரட்டைக்குழந்தைகள் இருவர் ஒன்றன் பின் ஒன்றாகப் பாட வருகின்றனர். முதல் குழந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. இரண்டாவது தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒரே மாதிரி இருக்கும் இருவரும் இரட்டையர்கள் என்பது நடுவருக்கு பின்னர்தான் புரிகிறது. இருவரில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்படக் கூடாது என இறுதியில் இருவரையுமே தேர்வு செய்துவிடுகிறார் நடுவர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என் நேரத்தைத் திருடுவது குறைவு. நேரம் கிடைக்கும்போது குழந்தைகளின், சிறுவர்களின் நிகழ்ச்சிகளை மட்டும் விரும்பிப் பார்ப்பேன். அப்படித்தான் நேற்று விஜய் டீவியின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்' போட்டிக்கான தேர்வு நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. அதிலிருந்த சில அபத்தக் காட்சிகள் சில தான் நான் மேற்சொன்னவை.

தேர்வு நடக்கும் முன்பு தொகுப்பாளினி ஒரு வண்டியில், குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கே போய் அவர்களை அழைத்துக் கொண்டு எல்லோருடனும் வெகு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் தேர்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துவருகிறார். அது விஜய் தொலைக்காட்சியின் விளம்பர யுக்தியாக இருக்கும். எனினும் போட்டிக்காக உற்சாகத்துடன் கூக்குரலிட்டபடியும், பாடியபடியும் தொகுப்பாளினியுடன் வரும் குழந்தைகள் அப் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி வாடிப்போவார்களென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் உணரவேயில்லையா? வீட்டுக்கு வந்து எல்லாக் குழந்தைகளோடும் சேர்த்து அழைத்துப் போகும்போது இருக்கும் மகிழ்ச்சி, தேர்வில் தோற்றுத் தனது பெற்றோருடன் திரும்பத் தனியே வரும்போது கண்ணீராக மாறியிருக்கும்.

போட்டித்தேர்வில் தோற்று அழுத அந்தப் பெண்குழந்தைக்கு அருகில் போய் முகத்தை சமீபமாக பதிவு செய்து உலகம் முழுக்கக் காட்டியாயிற்று. இந்தச் சாதாரண தோல்வியையே தாங்கிக் கொள்ளமுடியாத குழந்தை , நாளை அதன் வகுப்பறையில் 'டீவியில் அழுதவள்' எனக் கேலி, கிண்டலுக்காளாக்கப்படும்போது எந்தளவுக்கு மனம் உடைந்து போகும்? இன்னும் அந்தத் தாங்கமுடியாத வடு அதன் மனதில் முழு வாழ்நாளுக்கும் நீடித்திருக்கும். தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு மனதுக்குள் ஒளிந்திருக்கும். இன்னும் ஏதேனும் போட்டிகளில் கலந்துகொள்ள முனையும்போது ஒரு பெரும் சுவர் போல இந்த வடு கண்முன்னே வந்து நிற்கும். எதற்காக அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன? அவசியமென்ன?

'இத் தேர்வில் இவர் தோற்றுவிட்டார். தோற்று விம்மி விம்மி அழுதார்' என உலகுக்கே பிரசித்தப்படுத்தத் தேவையில்லையே. நீங்கள் நடத்திய போட்டியில் கலந்துகொள்ள அந்தக் குழந்தை வந்தது. கலந்துகொண்டது. தேர்ந்தெடுக்கப்படவில்லை. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குமவமறியாக் குழந்தை அழுதது. அது குழந்தை. அழத்தான் செய்யும். அந் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர்களே, இயக்குனர்களே.. நீங்கள் குழந்தைகள் அல்லவே? அந்த அழுகையின் நிகழ்வைக் காட்சிப்படுத்தி எல்லோருக்கும் ஒளிபரப்பிக் காட்டவேண்டியதன் அவசியம் என்ன? அதனால் நீங்கள் எதிர்பார்த்தது என்ன? ஏதோ குற்றவாளியைக் காட்டுவது போல அதன் முகத்துக்கு அருகாமையில் கேமராவை வைத்தும், அதன் அழுகையையும் ஒவ்வொரு அசைவையும் மெதுவான இயக்கத்தில் (ஸ்லோமோஷன்) படம்பிடித்தும், பிண்ணனிக் குரலொன்று அது பற்றி விபரித்தும் காட்டச் செய்ததால் உங்களுக்குக் கிடைத்தது என்ன? ஏன் இந்த மனவிகாரம் உங்களுக்கு ?

போட்டிகள் நடத்தலாம். சிறுவர்களை ஊக்குவிக்க அவை அவசியம்தான். ஆனால் அதன் வயதெல்லையை பத்திலிருந்து பதினான்கு என்பது போல அதிகரித்திருக்கலாம். தற்பொழுது பத்தாம் வகுப்புத் தேர்வையே மாணவர்களுக்குச் சுமையெனக் கருதி, அது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது இது போன்ற போட்டிகள் சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு அவசியமா? இந்தப் போட்டிக்கான வயதெல்லை ஆறு முதல் பதினான்கு என்கிறார்கள். பத்துவயதுக்குக் குறைந்த பல குழந்தைகளுக்கு 'போட்டி ஏன்? எதற்காக நடத்தப்படுகிறது? இதில் வென்றால் என்ன பரிசு கிடைக்கும்?' போன்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் சொல்லக் கூடத் தெரிந்திருக்காது. பெற்றோரின் தூண்டுதலால் ஒரு விளையாட்டுக்குச் செல்வதைப் போல பாடவந்திருக்கக் கூடும். முதல் தோல்வி முற்றும் தோல்வியல்ல எனப் பக்குவமாக உணரும் பருவம், சின்னஞ் சிறு குழந்தைகளுக்கானதல்ல. பிரபலமான முதல் தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

குழந்தைகள் எப்பொழுதும் தேடல்மிக்கவர்கள். தங்களது ஒவ்வொரு கணப்பொழுதிலும் வாழ்வு பற்றிய தேடலைக் கொண்டவர்கள் அவர்கள். அக் கணங்களில் மனதில் பதிபவற்றைக் கொண்டே அவர்களது வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. குழந்தைகளை வேலைக்கமர்த்திப் பணம் சம்பாதிப்பது எப்படிக் குற்றமோ, அது போலவே தானே அவர்களை வைத்து நீங்கள் பணம் சம்பாதிப்பதுவும்? குழந்தைகள் வெகு இயல்பாக 'வாடா மாப்பிளே.. வாழப்பழத் தோப்புல..வாலிபால் ஆடலாமா' எனப் பாடுவதுவும், உங்கள் விளம்பர யுத்திகளும், குழந்தைகளுக்கான அபத்தப் போட்டிகளும் உங்கள் பணப்பெட்டியை நிரப்பக் கூடும். எனினும் குழந்தைகளின் வாழ்வின் வேரில் விஷத்தினைப் பாய்ச்சுவதைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - உயிர்மை
 
ஆமாம் நானும் நேரம் கிடைக்கும் நாட்களில் இந்த ப்ரோக்ராமை பார்க்கிறேன். சிறிய குழந்தைகள் என்னமாதிரி பாடுகிறார்கள். அதிலும் ச்ரிகாந்த் என்ற பையன் என்ன அருமையாக சுருதி குறையாமல் பாடுகிறான்.
 
சிறுவயதில் தோல்வியே காணாதவர்கள் வளர்ந்த பின் தோல்விகளை ஜீரணிக்க முடியாமல் தற்கொலை முடிவு எடுப்பவர்களாக மாறுகிறார்கள். இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறது.

அதற்காக போட்டியிடும் வயதை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை...

அழுகையைக் காட்சிப் படுத்தி காசு பார்ப்பது தவறுதான்,

அதுவே அந்தக் குழந்தையைத் தேற்றி.. அடுத்த கட்டத்திற்கு செல்லாவிட்டாலும் இத்தனை நாள் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஒரு சின்ன நினைவுப் பரிசை கொடுத்து நிமிர்ந்த நடையுடன் வருவதைக் காட்டினால்...

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்பதற்கு உதாரணமாய் இருக்குமல்லவா!!!

யோசிக்க வேண்டிய கோணம்தான்...
 
சில மழலைகளின் திறமை கண்டு களித்தாலும், இந்த கட்ட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்து எனக்கு வந்து இருக்கிறது.குழந்தைகள் நிகழ்ச்சிகள் மட்டுமில்லை அனைத்து பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு பின்னால்
நடப்பதை படம் பிடித்து காட்டுவது அவர்களின் யுக்தியாக இருக்கிறது
 
நடத்துவோரும் பிறரும் இல்லையென்று சொன்னாலும், இந்நிகழ்ச்சி, பங்கேற்கும் குழந்தைகளுக்கிடையே ஒரு ஒப்பீடாகத்தான் தோற்றமளிக்கிறது.

வளரும் பருவத்தில் நிகழும் இதுபோன்ற பெரும் எதிர்பார்ப்பும், விளம்பரமும் கொண்ட ஒப்பீடுகள், பிஞ்சுமனங்களைப் பாதிக்கச் செய்யவல்லவை.

திறமையைப் பளிச்சிடச் செய்வது நல்ல விடயமே.. ஆனால் திறமையாளருக்கான அங்கீகாரம் எண்ணற்ற இளம் மனங்களை மிதித்து மேடை போட்டு வழங்கப்படலாகாது.

போட்டியாளர்களது பெற்றோரின் ஈடுபாடும், எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக உள்ளது.அவர்கள் ஆரம்பச் சுற்று வெற்றிகளில் கொண்டாட்டமிடுவதும், தோல்வியில் சுருள்வதும் பிஞ்சு மனங்களில் அழத்தத்தை அதிகரித்து பாதிக்கச் செய்யும்.

நான் பயின்ற பள்ளியில், குழந்தைகளுக்கான போட்டிகளில், பங்கேற்றவர் எல்லோருக்கும் பரிசு உண்டு.
 
அருமையான கருத்தை தெரிவித்து இருக்கிறீர்கள்.

சமீபத்தில் என்னுடைய நண்பனின் 6 வயது மகன்... ஒரு கேள்வி தவறாக சொல்லிவிட்டானாம். அதற்காக அழுது ரகளை செய்துவிட்டான்.. தோல்வியை தாங்கிக்கொள்ள மனப்பக்குவம் இல்லாதிருந்தது.

பெற்றோர் அவர்களை சரியாக வழிநடத்தும்பொழுது.. அதை அவர்கள் சரியாக எடுத்துக்கொளவர்.

வீட்டில் விளையாடினாலும் சில நேரம் அவர்களுக்கு வெற்றி கொடுக்க வேண்டும். சில நேரம் தோற்கடிக்கவேண்டும்.. அது அவர்களுக்கு நல்ல பலனை தரும்.
------------
டிவியில் பொதுவில் காட்டுவது சிலருக்கு வில்லங்கமாக மாறும். டிவியில் நான் வந்தேனே.. அதுவே போதும் என்ற நிலையை பிள்ளைகளுக்கு உருவாக்க வேண்டும்.
 
நன்றாக கூறினீர்கள் ரிஷான்.பல முறை நானும் ஆதங்கபட்டிருக்கிறேன்.ஆறுதல் பரிசு கொடுக்கலாம்.இல்லை என்றால் தனியாக பெற்றோரிடதத்தில் அறிவிக்கலாம்.
 
ஊடகங்களுக்கு ஒரு நல்ல வினா..

ரிஷானின் பதிவெழுப்பும் கேள்விக்கு
கண்மணி, அறிஞர் பதிவுகளில் பதில் இருக்கிறது..


பாராட்டுகள் அலசிய அனைவருக்கும்..
 
தோல்வியை விளம்பரத்திற்காக வெளிச்சம் போட்டு காட்டுவதை தவிர்க்க வேண்டும், தோல்வியை நாசூக்காக கூற வேண்டும்...

மற்றபடி இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தேவை எனத்தான் படுகிறது.என்னதான் குழந்தைகளுக்கு சுமைகள் என நாம் நினைத்தாலும் அவர்கள் சந்தோசமாகவே பாடுகிறார்கள் தங்களது திறமைக்கு கிடைத்த வாய்ப்பாகவே பயன்படுத்துகிறார்கள் ,என்ன தோல்வி என வரும்போது கொஞ்சம் மனம் உடைந்து போகிறார்கள் ஊடகமும் கொஞ்சம் பெரிது படுத்தி காண்பிக்கிறது.மற்றபடி சிறு வயதிலேயெ புத்தக மூட்டையை சுமக்க செய்து ஆங்கில கல்வியை படிக்க சொல்லும் நம் மக்கள் தனி திறமைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில் தவறொன்றும் இல்லை...

இவற்றை குழந்தைகள் பயன் படுத்தும் முறைகளை பொறுத்து இருக்கின்றது,பெற்றோர்களின் வழிகாட்டுதலை பொறுத்து இருக்கிறது...

உண்மையிலே அனைத்து குழந்தைகளும் அருமையாக பாடுகிறார்கள் எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று இது...
 
Last edited:
முதலாவது இந்த மின்னணு ஊடகங்களைக் கட்டுப் படுத்த ஏதாவது செய்ய வேண்டும்..

கோடிக்கணக்கான பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு என்னனவோ செயல் படுகிறார்கள்...

இங்கு 5 அல்லது 10 லட்சம் கொடுக்கும்போது 50 அல்லது 100 லட்சம் கொடுக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வழக்கம்...

ஆனால் எல்லாமே "ஸெட் அப்" என்ற தோன்றுதல் அடிக்கடி அடி மனதில் தோன்றி மறைவது வழக்கம்....

பெற்றோர்கள் கொஞ்சம் பொறுப்புடன் இருப்பது வெகு அவசியம்....
 
நிகழ்ச்சி தவறல்ல. திரைக்குப்பின்னால் நிகழ்வதை முன்னால் கொண்டுவருகிறார்கள். அதற்கு சோக இசையும் கலந்து... அந்த பிஞ்சு மழலைகள் பாடசாலை போகும் போது யாராவது ஒரு வசனம் நளினமாக பேசினாலும் அந்த பிஞ்சு வெம்பிவிடும் என்று நினைக்க மறுக்கிறார்கள் இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.
 
இதை இரு கோணத்தில் பார்க்கலாம். இந்த காலத்தில் சிறுவர்களுக்கு நிறிய வாய்ப்புகள் உள்ளது.
பொட்டி என்று வந்தால் வெற்றி தோல்வி என இரண்டும் தன வரும். தோல்வியில் துவளும் குழ்ந்தைகளை காட்டி (emotional selling) பணம் பண்ணும் தந்திரம் விஜய் டிவி கு கை வந்த கலை. இது எல்லா ரியலட்டி ஷோ க்கும் பொருந்தும்.
ஆகவீ இந்த சிறு குறையை பெரிது படுத்தாமல், குழைந்தைகள் எப்படி நன்றாக படுகிறார்கள் என்று ரசித்தல் ஒரு மணி நேரம் நன்றாக செலவுஇடலாம் .
 
அன்பின் நண்பர்கள் Aren, கண்மணி, நேசம், அய்யா, அறிஞர், வானதி தேவி, இளசு, கா.ரமேஷ், பால்ராஜ், அன்பு ரசிகன், வெற்றி வாசன்,

அருமையான கருத்துக்கள் பலவற்றையும் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்.
மிகவும் நன்றி அன்பு நண்பர்களே !
 
நாம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி இது.

திரைக்கு பின்னால் நடப்பதை சிறுவர் விஷயத்திலேயாவது விட்டு வைக்கலாம்.

நல்ல அலசல் ..பாராட்டுகள் ரிஷான்.
 
ஆனால் இந்த சிறுவர் நிகழ்ச்சி போரடிக்குதுமாதிரி தெரிகிறதே.

25 லட்சம் ரொக்கப்பணம் என்று நினைத்தேன், இப்பொழுதுதான் தெரிந்தது அவர்கள் ஊருக்கு வெளியே எங்கேயோ ஒரு வீட்டைக் குடுக்கிறார்கள் என்று.

எனிவே, ஏதாவது கொடுக்கிறார்களே என்று சந்தோஷப்படவேண்டியதுதான்
 
அந்த சின்னப் பையன் ஸ்ரீகாந்த் என்று நினைக்கிறேன்.. நன்றாகத் தான் பாடுகிறான்.. நல்ல திறமை. பெற்றோர்களின் கோச்சிங் எல்லாம் அசத்தல். ஆனால் வயதுக்கு அதிமீறிய வெயிட்டேஜ் தரப்படுகிறது..

மோசமாகப் பாடும்போது கூட ஸ்பாட் செலக் ஷன் கொடுத்து விடுகிறார்கள்.

போட்டி என்று வரும்போது இவைகளைத் தவிர்ப்பது நல்லது.. ஒரே சீராக தீர்ப்பு சொல்வதே நடு நிலைமையை நிலை நாட்டுவது சிறப்பாக இருக்கும்.
 
தோற்றுப் போன குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் குறைப்பதும் தாழ்வு மனப்பாங்கை உருவாக்குவதுமே குறிக்கோளாக இருக்கும் போல :)
 
அன்பின் நண்பர்கள் பால்ராஜ், விராடன்,
கருத்துக்கு நன்றி நண்பர்களே !
 
சூப்பர் சிங்கர் ஜுனியர்-2

எல்லோரும் விரும்பும் ஒரு நிகழ்ச்சி சிறுவர்களின் திறமையை பாட்டு பாடுவதின் மூலமாக ஆராயும் ஒரு திரை பதிவு.
யாரும் குறை சொல்ல முடியாதபடி நன்றாக பாடுகிறார்கள். சமீப காலமாக திறமையை சோதிக்கும் நீதிபதிகள் ஒரு தலை பட்சமாக இருக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. இதனால் நல்ல சிறுவர்களின் தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. இதை பார்த்தவர்கள் உணருவார்கள்.
 
Back
Top