பட்டிமன்றம் - வாழ்க்கை.

ஒருவரின் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் சூழ்நிலைகளே முக்கிய பாங்காற்றுகிறது என்பதை சொல்ல நான் நினைக்கிறேன்.

எனக்கு முன்னர் பேசிய பெரியவர்களின் பேச்சை மறுத்து பேசவோ, எதிர்த்து பேசவோ நான் வரவில்லை. என் வாதத்தை வைக்கிறேன், நடுவர் அவர்கள் நல்ல தீர்ப்பை சொல்லட்டும்.

வாழ்க்கை என்பது பல்வேறு சம்பவங்களை கொண்டது, அதில் தினம் தினம் வெற்றிகள், தோல்விகள் கிடைக்கின்றன. காலையில் நினைத்த நேரத்தில் எழுந்திருக்க நினைத்து சரியாக எழுந்தால் அது வெற்றி, இல்லை என்றால் தோல்வி, அதை நிர்ணயிப்பது புறச்சூழ்நிலை, உடல் நலமாக இருக்க வேண்டும், கோழி கூவ வேண்டும், பக்கத்து கோவிலில் பாட்டு பாட வேண்டும், அலாரம் அடிக்க வேண்டும், இல்லையெனில் அடிவயிறு முட்ட வேண்டும்.

ஒரு சாதாரண காலை விழிப்பிற்கே சூழ்நிலைகள் இப்படி கட்டம் கட்டி ஆடுதுன்னா, மனித வாழ்க்கையில் எவ்வளவோ இருக்குதே.

இப்போ பிறப்பால் யாருமே சாதனையாளர் இல்லை, அவரவர் பிறக்கும் சூழ்நிலையே அவரது வாழ்க்கையை எதிரொலிக்கிறது. அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதனிலும் அரிது கூன், குருடு இல்லாமல் பிறப்பது அரிது. அப்படி அரிதாக பிறந்த மனிதனின் வெற்றிக்கண்டவராக திகழ வேண்டும் என்றால் தன்னை சுற்றியிருக்கும் சூழ்நிலையை தனக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்தது முதல் வளர்ந்து பெரியவன் ஆகி, இறுதியில் மறையும் வரை அவனை வழிநடத்தி செல்வது சூழ்நிலைகள், ஆக சூழ்நிலைகளே ஒருவனின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது.

குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் ஒரே நாளில் எத்தனையோ அதிகம் படித்தவர்களின் பிள்ளைகள், பணக்காரர்களின் பிள்ளைகள், திறமையான பிள்ளைகள் பிச்சைக்காரர்களாகி, நடுத்தெருவில் வாழ்க்கையை தொலைத்தார்கள் தானே, அந்த பூகம்பம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் அந்த குழந்தைகளில் எத்தனையோ பணக்காரர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் உருவாகியிருப்பாங்க, அவர்களின் வெற்றி ஒரே ஒரு பூகம்பம் புரட்டி போட்டு விட்டதே.

புராணத்தில் கூட பாருங்க, அர்ஜூனன், கர்ணன், ஏகலைவன், இந்த மூவருமே சமகால வீரர்கள்.

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை, ஆனால் அதில் சாதித்தவர் யார், அர்ஜூனன் தானே, இன்றும் வில்லுக்கு விஜயன் என்று தானே சொல்கிறோம்.

துரோணாச்சாரியாரின் சிஷ்யனான அர்ஜூனனை விட ஏகலைவன் உயர்ந்து விடுவானோ என்ற பயத்தில் தானே துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை கத்தரித்தார். ஏகலைவன் ஏமாளி வேடன் என்பதாலே தானே அவன் வீரம் உலகிற்கு தெரியாமல் போச்சுது.

கர்ணனை விட அர்ஜூனனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது, எத்தனை எத்தனையோ சூழ்நிலைகள் அவனை சூழ்ந்து போராட வைத்து, புடம் போட்டது, அத்தகைய சூழ்நிலைகளை அவன் சந்திருக்காவிட்டால் அவர் இத்தனை பெரிய மாவீரனாக மாறியிருக்க மாட்டான்.

பரசுராமரிடமே போர்க்கலைகள் கற்ற கர்ணன் ஏன் தோற்று போனான், அவனை சுற்றி வளைத்த சூழ்ச்சி சூழ்நிலைகள் தானே.

அதே கர்ணனை நாம் கொடை வள்ளல் என்று போற்றுகிறோம், அவர் குதிரை ஓட்டியின் மகனாகவே இருந்திருந்தால் கொடை வள்ளல் என்ற பட்டம் பெற்றிருப்பாரா? அவற்கான வாய்ப்பு தான் கிடைத்திருக்குமா? அர்ஜூனனை எதிர்க்க ஒரு நல்ல வீரன் கிடைத்தான் என்ற எண்ணத்தில் தானே துரியோதனன் அவனுக்கு மகுடம் சூடினான், இவனும் அள்ளி அள்ளி கொடுத்து வள்ளல் ஆனான்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் வெற்றி தோல்விக்கும் சூழ்நிலைகளே காரணம் என்பதற்கு பல காரணங்கள் உண்டு, கதைகளும் உண்டு.

இப்படி தான் அமெரிக்காவில் ஒருத்தர் பில் கேட்ஸின் கம்பெனியில் சுத்தப்படுத்தும் வேலைக்கு சேர்ந்திருக்கிறார், வேலைக்கு தேர்வும் செய்யப்பட்டார், ஆனால் அவருக்கு இமெயில் இல்லை என்ற ஒரு காரணத்தை காட்டி வேலைக்கான நிராகரிக்கப்பட்டது.

அவரும் மன வருத்தத்தோடு வெளியே வந்தார், கையில் 10 டாலர் மட்டுமே என்ன இருக்குது. என்ன செய்வது என்று யோசிக்கிறார், அப்போ மனதில் பளீச் என்று பல்ப் எரியுது, அந்த நேரத்தில் தக்காளி பழங்கள் விலை குறைவு, உடனே பக்கத்தில் இருந்த விளை நிலத்திற்கு சென்று 10 டாலருக்கு பழங்கள் வாங்கி வந்தார், ரோட்டின் ஓரத்தில் நின்று விற்கத் தொடங்கினார், எல்லாம் விற்று முடித்த பின்னர் அவர் கையில் 50 டாலருக்கும் மேல் காசு நின்றதாம். அடுத்த நாள் அந்த 50 டாலருக்கு அதே போல் தக்காளி பழங்கள் வாங்கினார் அதை விற்று பலமடங்கு பணமாக்கினார், இப்படியாக ஒவ்வொன்றாக செய்து செய்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இன்று அவரிடம் பல்லாயிரம் கணினி கற்றவர்கள் பணி செய்கிறார்கள், அன்றோ ஒரு இமெயில் ஐடி இல்லை என்பதால் அவருக்கு வேலை கிடைக்கலை, ஒருவேளை அவருக்கு இமெயில் ஐடி இருந்திருந்தால் இன்றும் அவர் அங்கே கழிப்பறைகள் சுத்தப்படுத்துக் கொண்டிருப்பார்.

இவரது வாழ்க்கையை பாருங்க, இவர் பிறப்பால் திறமைச்சாலியா? வளர்ப்பால் பணக்காரரா? இல்லை, தனக்கு கிடைச்ச ஒரு சூழ்நிலையை திறமையாக பயன்படுத்தியதே, அவரே கூட நினைச்சி பார்த்திருக்க மாட்டார், இப்படி தான் ஓவ்வொரு மனிதனின் வெற்றி தோல்விகளில் சூழ்நிலைகள் முக்கிய பங்காற்றுகிறது.

அய்யா பாடிய வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை, புத்திசாலி மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை. இப்பாடலை சூழ்நிலை தான் ஒருவனை வெற்றி, தோல்விக்கு எடுத்து செல்கிறது என்பதை தெளிவாக சொல்கிறது தானே.

கடைசியாக ஒரு செய்தியை சொல்லிட்டு என் பேச்சை முடிச்சிக்க விரும்புகிறேன்.

குளோனிங் குளோனிங் என்று பேசும் போது சச்சின் டெண்டுல்கரை போலவே குளோனிங் மூலமாக அவரது உருவம், அறிவு, எல்லாமே இருப்பது போல் 100 பேரை உருவாக்கி, அவர்களை கிரிக்கெட் ஆட வைத்தாலும், தற்போதைய சச்சின் அளவுக்கு அவர்களால் பிரகாசிக்க முடியுமா என்பது சந்தேகமாம், காரணம் சூழ்நிலைகள் தான்.

தற்போதைய சச்சின் வளர்ந்த, விளையாடிய சூழ்நிலைகள் வேற, அதே மாதிரியான சூழ்நிலைகள் குளோனிங் சச்சின்களுக்கு அமையுமா என்பது சந்தேகமாம்.

ஆக ஒரு மனிதனின் வெற்றியில் அவனது தனித்திறமை இருந்தாலும், அதை வெளிப்படுத்து, ஊக்கப்படுத்தி, அவனை வெற்றியாளராக அடையாளம் காட்ட பயன்படுவது சூழ்நிலைகளே, சூழ்நிலைகளே என்று கூறி வாய்ப்பு கொடுத்த நல்லவர்களுக்கு நன்றி சொல்லி, எனக்கு முன்னர் பேசிய பெரியவர்களை வணங்கி இருக்கையில் அமர்கிறேன். நன்றி வணக்கம்.
 
நன்றி அண்ணா..

மத்தவங்களோட எனக்குக் கதை இல்லை. என் கதையைக் கேட்டு தீர்ப்புச் சொல்லாட்டா உங்க கதை உங்க கிட்ட இல்லை என்று அன்பு வழிய என்னைப் பாத்து சொல்லிட்டு வெடிக்கத் தொடங்கி அடிச்சு ஓய்ஞ்சுட்டு உட்காந்து இருக்காரு.

இதுல ஒரு விசயம் என்னன்னா காலைலை எழும்புறதுக்கு என்னென்ன தேவை என்று பட்டியல் போட்டிருக்கார் பாருங்க. கோழி கூவணுமாம்.. காகம் கரையனுமாம்.. கோயில் மணி அடிக்க வேணுமாம்.. அலாரம் அடிக்க வேணுமாம்.. அடிவயிறு முட்ட வேணுமாம்.. இத்தனைக்கும் அண்ணன் கல்யாணம் ஆனவரு. விடுங்க.. அவரு பாடு அவருக்கு..

தான் சொல்ல வந்ததை அவியல், அறிவியியல், புராணம், புஸ்வானம், அன்றாடம் சகிதம் அழகாக சொல்லி இருக்கார். முதலில் வாய்ப்பு.. பிறகு நிலைப்பு.. பிறகு உயர்வு. .. உலகில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளைப் பாருங்கள். அதுக்கெல்லாம் காரணம் ஒவ்வொருவனின் தனிப்பட்ட முயற்சியா. பலகோடி கடின உழைப்பாழிகள் எங்கோ பள்ளத்தில் இருக்க.. சிபாரிசு, இலஞ்சம், சூழ்ச்சி, சீதோஷ்ணம், பித்தலாட்டம் என்று தகிடுதத்தம் செய்வங்க உச்சத்தில இருக்காங்க.

இந்தளவு ஏன்.. கிரிக்கெட்டை எடுத்துக்கோங்க.. உலகப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வந்த தகுதியான தென்னாபிரிக்கா அணி இரு தடவைகள் இலக்கை எட்ட முடியாமல் போனமைக்கு என்ன காரணம். மழைதானே.. சூழல்தானே.. இது போலத்தான் வாழ்க்கையில் ஒருவன் முன்னேற்றமும்.. என்று எடுத்துக்காட்டுடன் முழங்கி இருக்கிறார். இப்படி ஆளாளுக்கு நேரடியாகாவும் மறைமுகமாகவும் பயமுறுத்தினால் என் நிலைமை என்னாவது..
என் நிலைமையை விடுங்க.. நம்ம செல்வா நிலமை.. முக்கோண முற்றுகையை உடைக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கார். எப்படின்னு பார்க்கலாம்..

வாங்க செல்வா..
 
அம்மாடி....!:sprachlos020::sprachlos020:

மண்ணின் மைந்தன் அவர்களின் வாதமும் அதுக்கு பதிலடி கொடுத்த பால்ராஜ் அண்ணாவின் வாதமும் சரி சும்மா பிச்சு உதறுறீங்க....:icon_b:

நேரில் பார்க்கும் பட்டிமன்ற சண்டையை விட இது சுவாரசியமா இருக்கு.....:D

ம.மை. அவர்கள் கூறிய வாதம் ஒவ்வொன்றுக்கும் பொறுமையா பதில் சொல்லி பால்ராஜ் அவரின் வாதத்திறமையை அருமையா காட்டி இருக்கார்...

இடை இடையே நடுவர் வேற வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார்...:lachen001:

எனக்கு திண்டுக்கல் ஐ. லியோனியை நினைவூட்டுகிறார்..:rolleyes: வாழ்த்துக்கள் அமர் அண்ணா...:aetsch013:

கடைசியா பரம்ஸ் அண்ணாவின் வாதத்தில் ஒரு தன்னம்பிக்கை கதை சொல்லி அசத்தி இருக்கிறார்...:icon_b:

பட்டிமன்றத்தில் ஜெயிக்க அனைவருக்கும் ஒரு யோசனை.. பெரும்பான்மையாக உதாரணங்களையோ அல்லது குட்டி குட்டி கதைகளையோ, வெற்றியாளரையோ முன்னிறுத்தி வாதிடுங்கள்.... சுவாரசியமாக இருப்பதுடன், வெற்றி வாய்ப்பும் கிட்டும்...

அது சரி மண்ணின் மைந்தன் அவர்கள் வாதத்தில் வென்றால் எப்படி அறிவிப்பீர்கள் அமர் அண்ணா? (மாட்டுனீங்களா? மாட்டுனீங்களா?:icon_rollout::icon_rollout::icon_rollout:)

அவர்தான் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை என்கிறார்?

சரி அடுத்து வாதம் செய்கிறவுங்க யாரு?:smilie_abcfra:

முதல் சுற்று முடிஞ்சதும் வாதத் திறமையாளருக்கு 100 இ-பணம் தருவேன்...:sprachlos020::sprachlos020: அதனால நல்ல நல்ல முயற்சி பண்ணி சண்டை போடுங்க...:p
 
வாதங்கள் அருமை. அமரருக்குத் தலைவலி. நமக்கு ஒரு பிரச்சனையில்லை. தெரிஞ்சதைச் சொல்லப் போறோம் அவ்வளவுதானே..

பரிசுத் தொகையை ஆயிரமாக உயர்த்த வேண்டி சகோதரியை வேண்டுகிறேன். நிஜமாகவே அவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது.

அமரன் தீர்ப்பே சொல்லாம எஸ்கேப் ஆனால், வெற்றி தோல்வி இல்லை என தீர்ப்பளித்திருக்கிறார் என சூழ்நிலையைப் பொறுத்து வெற்றியை அவருக்குத் தள்ளி விட்டு அதனால நாங்க ஜெயிச்சுருவோம். ஜாக்கிரதை.
 
கேட்காத பெயராக இருக்கிறதே...!!:lachen001::lachen001:
மதுரையில் மட்டும் அல்ல.... கோவை.. நெல்லை... ஏன் சென்னையில் கூடத்தான் மண் உள்ளது.... :D:D:D
மண்ணின் மைந்தன் அவர்களின் வாதமும் ............அது சரி மண்ணின் மைந்தன் அவர்கள் ....

கற்பனை ஒலி பெருக்கியை காதில் செருகி விட்டால், சாலமான் பாப்பையாவின் குரல் வந்து செவிகளில் நடனம் ஆடுவது உண்மையே.....!! (இது நடுவர் பற்றிய கருத்து...)
 
Last edited:
கலக்குறாய்ங்கப்பா....:aktion033:

முதல் சுற்றில் மூவரும் மிக அருமையாக வாதாடியிருக்கிறார்கள்.... வாழ்த்துக்கள்...!!:icon_b:

அடுத்த சுற்று செல்வா, விக்ரம் மாமா மற்றும் கண்மணியக்கா.... ம்ம்ம்ம்... என்ன நடக்க போகுதோ...?! சரி பார்க்கத்தானே வந்தோம்.... முழுசா இருந்து பார்த்துட்டே போயிடுறோம்... ஆரம்பிங்க நீங்க உங்க அடிதடியை...!!:sport-smiley-002:
 
கேட்காத பெயராக இருக்கிறதே...!!:lachen001::lachen001:
மதுரையில் மட்டும் அல்ல.... கோவை.. நெல்லை... ஏன் சென்னையில் கூடத்தான் மண் உள்ளது.... :D:D:D

கற்பனை ஒலி பெருக்கியை காதில் செருகி விட்டால், சாலமான் பாப்பையா வந்து நடனம் ஆடுவது உண்மையே.....!!

ஐயா ராசா...! மதுரைக்காரங்க அவிக மண்ணையும் அவிக சாதி சனத்தோட ஒத்துமையும் ரொம்ப மதிக்கிறவிக....

நாம்ம மைந்தன் அவிக பேரோடையே அவிக உசிரா மதிக்கிற ஊரு பேரையும் சேர்த்து வச்சிருக்கிறதுனாலதே நா அப்படி சொல்லிப்புட்டே....

அதுல என்ன ராசா தப்பு...?:wuerg019: இப்படி என்னியவே கலாச்சா அப்புறம் எப்படி ராசா நா உங்களுக்கு இ-பணம் கொடுப்பேன்?:aetsch013:

நம்ம கண்மணி வேற இ-பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டு வச்சிருக்காக...:icon_ush:

போட்டி போட்டுட்டு போட்டியாளரை கலைக்காம பரிசு கொடுக்க போற என்னிய கலாய்க்கிறது நல்லாவா இருக்கு?:icon_nono::icon_nono:

அப்படி இல்லையின்ன நம்ம நடுவர் அமர் அண்ணா இருக்காக அவர கலாயிங்க... யாரு வேணான்னு சொன்னாங்க.....:icon_tongue::icon_tongue:

போங்க போய் சோலியப்பாத்து சுகமா இ-பணம் பரிசா வாங்குங்க...:music-smiley-012::music-smiley-012:
 
அருமையான ஒரு கருத்தை மையமாகக் கொண்டு வாதங்கள் இடம்பெறும் இந்தப் பட்டிமன்றத்தை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் நடுவர் அவர்களுக்கும்...

என்னோடு இயைந்து அல்லது எதிர்த்து வாதிடும் வாதி(தை)களுக்கும்…

எங்கள் வாதங்களை நேரடியாகவும் மறைந்தும் வந்து வாசித்து கலாய்த்து ஊக்கமூட்டி மகிழும் மகிழ்விக்கும் மன்ற உறவுகள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.(சோடா இல்லியாப்பா…? )

என்னோட வாழ்க்கையில இதற்குமுன்னால ஒரே ஒரு தடவைதான் பட்டிமன்றத்தில பேசியிருக்கேன்.

முதல் முறை பேசுறதால நிறையபேருகிட்ட கேட்டு குறிப்புகள் எல்லாம் எடுத்துட்டு போய் உக்காந்திருந்தேன்.

நடுவர் அழைத்ததுதான் தாமதம் மைக்கப் புடிச்சிட்டு நான் பேசுறத கேட்ட மக்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க…

எனக்கும் ரொம்ப சந்தோசம் அடடா…
நாம நல்லா நகைச்சுவையாப் பேசுறோம் போலருக்கு அதான் மக்கள் எல்லாரும் நல்லா இரசிச்சுச் சிரிக்கிறாங்க…

இது கூட பரவால்ல… என்னோட எதிர்கட்சியில இருந்தவங்க கூட கைதட்டி பாராட்டுறதப் பார்த்து உச்சி குளிர்ந்து போச்சு…

அடடே சூப்பராப் பேசுறோம் போலருக்கு.. அதான் எதிரின்னு கூடப் பார்க்காமப் பாராட்டுறாய்ங்க…

அப்படின்னு நெனச்சு பெருமிதமாப் பேசிட்டு நெஞ்ச நிமிர்த்திட்டு வந்து உக்காந்து ‘எப்படி நம்ம பேச்சு’ அப்படின்னு ஒரு கெத்தாப்பு பார்வை நம்ம அணிக்காரங்களைப் பார்த்து விட்டா.

திரும்ப அவங்க என்னப் பார்த்த பார்வை இருக்கே…

அப்போ மட்டும் அவங்க கையில நான் தனியா மாட்டிருந்தேன்னா கருடபுராணத்தில சொல்ற எல்லாதண்டனையும் ஒட்டுமொத்தமாக் கொடுத்து முடிச்சிருப்பாங்க… அப்படி ஒரு வெறி தெரிஞ்சிது கண்ணுல…

என்னாண்ணு விசாரிச்சுப் பார்த்தா… என்னோடத் தலைப்பைப் பேசுறதுக்குப் பதிலா எதிர் அணியோட தலைப்பில பேசிருக்கேன்..

இப்படிப் பட்ட பெருமைமிகு பட்டிமன்ற வரலாற்றைக் கொண்டிருக்கும் என்னப் போயி பட்டிமன்றத்தில பேச அழைச்சதப் பார்த்தா…. “இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிட்டுருக்கு…”னு தான் சொல்லத்தோணுது..

என்னடா வந்ததுமே இப்படிப் பேசுறானே பட்டிமன்றத்தில வெற்றியடையணுமா வேண்டாமா? னு கேப்பீங்க…

வாழ்க்கையிலேயே வெற்றி தோல்விங்கிறது கிடையாது…

பட்டிமன்றமும் வாழ்க்கையில ஒரு பகுதி தானே அப்படின்னா அதில மட்டும் வெற்றிதோல்வி எங்கருந்து வந்துச்சு?

பட்டிமன்றத்தில வெற்றி பெற்றா பரிசு கொடுக்கிறதாச் சொல்லிருக்காங்களே ஒரு அக்கா… அவங்க ஏன் பரிசு கொடுக்கிறதாச் சொல்லியிருக்காங்க தெரியுமா...?

வெற்றி தோல்வி அப்படிங்கிறதே இல்ல அப்படின்னு அவங்க தீவிரமா நம்புறாங்க… அதனாலதான் வெற்றி தோல்வியே இல்லாத ஒன்றில் வெற்றி பெற்றா பரிசு கொடுக்கப் போறதாச் சொல்லியிருக்காங்க.. அப்படின்னா என்ன அர்த்தம்

அவங்க பரிசு கொடுக்கப் போறதே இல்ல. ஆனால் நான் பரிசு கொடுக்கிறேன் அப்படின்னு ஒரு உணர்ச்சியைத் தூண்டுறாங்க…

அந்தப் பரிசுக்காக நாலுபேரு கோதாவில இறங்குறாங்க…
தங்களுக்குள்ள அடிச்சுக்கிறாங்க ஆனால் உண்மையில் இங்கே வெற்றி என்றோ தோல்வி என்றோ எதுவுமே இல்லை.

வெற்றி என்பது பேர் வாங்குவதற்காகவும் தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் தான் செய்யும் அயோக்கியத்தனங்களை மறைக்கவும் கட்டிக் கொள்ளும், காட்டிக் கொள்ளும் மாயத்தோற்றமேயன்றி வேறு எதுவும் இல்லை.

இந்த உலகில் பெரிய வீரனென்றுப் பேரெடுத்த அலக்சான்டரைப் பெருவெற்றிகள் பெற்றவன் என்று சொல்கிறோம் அல்லவா… மாவீரன் என்று போற்றுகிறோம் ஆனால் அவன் பெற்றது வெற்றியா என்றுச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

அவனால் அழிக்கப்பட்ட நாடுகள் எத்தனை?

அவனால் அழிக்கப் பட்ட குடும்பங்கள் எத்தனை?

அவனால் கொல்லப்பட்ட உயிர்கள் எத்தனை?

இதை வெற்றி என்று எப்படிக் கொள்கிறீர்கள்?

ஆக தனது அகங்காரத்தை… தனது கர்வத்தை… தனது பேராசையை அதிகார வெறியை மறைத்துக் கொள்ள அவன் போட்ட வேடமே வெற்றி… என்பது.

ஒரு நாட்டைப் பிடித்ததோடு நில்லாமல் மீண்டும் மீண்டும் அடுத்த அடுத்த நாடுகளைக் கைப்பற்ற அவனது வீரர்களைத் தூண்ட, வெறி மங்காமல் இருக்கச் செய்ய அவனுக்குப் பயன் பட்டதே வெற்றி என்ற வார்த்தை…

அந்த வார்த்தை எத்தனையோ ஆடவர்களின் உயிரையும் மகளிரின் மானத்தையும் பறித்ததைத் தவிர வேறு எந்த நல்லதையும் செய்யவில்லை.

வாழ்க்கையில் வெற்றிபெறுவது எப்படி என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் பல புத்தகங்களின் அட்டையில் பார்த்தீர்கள் என்றால் அங்கே இடப்பட்டிருக்கும் பலருடைய படங்களும் பிரபல தொழிலதிபர்கள் அல்லது அரசியல்வாதிகள்.

வெற்றி என்ற இவர்களது கணிப்பு ஒன்றில் பணக்காரனாக வேண்டும் அல்லது அதிகாரத்திற்கு வரவேண்டும்.

சரி இவர்கள் கூற்றுப்படி இப்படிப் பெரும் வெற்றி பெற்ற நிறுவனங்கள் என்று நமது காலத்திலே கூறப்படும் பெப்சி மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களைப் பாருங்கள்…

இவர்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க எத்தனையோ சிறு சிறு நிறுவனங்கள் பலவற்றையும் அழித்து அல்லது விலைக்கு வாங்கி…

குறைந்தத் தயாரிப்புச் செலவு கொண்ட பொருட்களுக்கு விளம்பரம் என்ற பெயரிலும் இவர்கள் செய்யும் ஆடம்பரச் செலவுகளுக்கும் சேர்த்து அதிக விலை விதித்து அதை மக்கள் தலையில் கட்டி பெரும் பணம் சம்பாதிப்பதற்குச் சொல்லிக் கொள்ளும் சப்பைக் கட்டு தான் வெற்றி, முன்னணி என்ற வார்த்தைகள்.

என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையை வெற்றி கொண்டான் என்றால் அதன் பொருள் இறந்து விட்டான் என்பதே.

நண்பர் பா.ரா. அவர்கள் பல இடங்களில் சாதனை என்ற பதத்தையும் வெற்றி என்ற பதத்தையும் இணைத்துக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க்கையில் சாதித்தவர்கள் இருக்கிறார்கள் ஆனால் வாழ்வில் வெற்றி என்பது இல்லை.

சாதனை என்பது வேறு வெற்றி என்பது வேறு.

மனித வாழ்க்கை இத்தனை வசதிகளைப் பெறுவதற்கு பல்வேறு வழிகளில் முயன்றவர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளைச் செய்தவர்கள் செய்தது சாதனை அவை வெற்றியல்ல.

சாதனை செய்யும் மனிதர்கள் காலம் தோறும் இருப்பார்கள். அவர்கள் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா? பணம் வருகிறதா? பாராட்டு வருகிறதா? என்பதைப் பற்றிக் கவலைப் படுபவர்களல்ல தங்கள் நோக்கத்தை தங்கள் சிந்தனையை ஒருங்கமைத்துச் சாதித்தவர்கள்.

சாதனையாளர்கள் பலரும் தங்கள் வாழ்நாளில் அதன் பலனை அனுபவித்ததில்லை.. ஆனால் வெற்றியளர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அப்படியல்ல அதன் பலனை அனுபவிப்பதற்காகவே அவர்கள் தங்களை வெற்றியாளர்கள என்று கூறிக் கொள்கின்றனர்.

வெற்றி என்ற மாயத் தோற்றத்தை தங்களைச் சுற்றி உருவாக்கிக் கொள்கின்றனர்.

வெற்றி என்றச் சொல் ஆரோக்கியமானச் சமூகத்திற்கு அவசியமற்றது. அது போலி மரியாதையையும் போலி கெளரவத்தையும் போலியான வாழ்க்கையையும் கொடுக்கக் கூடியது.

இன்றைக்கு எந்தவழி என்றாலும் கூட பணம் சேர்த்து மக்கள் மத்தியில் பெரியவனாக நடித்தால் போதும் வாழ்வில் வெற்றி பெற்றதாகச் சொல்கிறார்கள் ஆனால் அந்த மாயைக்குப் பின்னால் இருப்பது பலரது கண்ணீரும்… பலரது உழைப்பை ஒருவனே உண்ணும் கேவலமான பிழைப்பும்.

இன்னும் வெற்றி என்ற மாயை இன்னும் பலரை என்ன செய்தாலும் பரவாயில்லை பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியை உருவாக்குகிறது.

ஒன்றம் வகுப்புக் குழந்தை முதுகில் பெரிய அளவில் புத்தக மூட்டையைத் தூக்கிவைத்ததும்.
குழந்தை அம்மா என்று தெளிவாக உச்சரிக்கும் முன்பே z for zebra சொல்ல வைப்பதும்... இந்தப் பணம் மற்றும் வெற்றி என்ற மாயையும் தான்.

தனது அரசியல் வாழ்க்கையை, தான் பெரியவன் என்பதை நிலை நிறுத்திக் கொள்ள இராஜபக்சே வுக்கு ஈழப்போர் வெற்றி தேவைப் பட்டது.

அமெரிக்காவுக்குத் தனது கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஈராக் போர் வெற்றி தேவைப் பட்டது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தங்கள் தங்கள் சுயகெளரவங்களைகாத்துக் கொள்ளவும் அரசியல் வாதிகளின் பிரச்சனைகளையும் திசைதிருப்பவும் கார்கில் மற்றும் காஷ்மீர் போர்களின் வெற்றிகள் தேவைப்பட்டது(படுகிறது).

ஆக வெற்றி என்ற ஒன்று வாழ்வில் இல்லை என்பது இங்கேத் தெளிவாக விளங்குகிறது. அது ஒரு மாயை மாயத்திரை, இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு அதை நிறுவ பலவழிகளையும் மேல்தட்டு மனிதர்கள் செய்து கொண்டு அதைநோக்கி அனைவரையும் ஓடச் செய்து தங்களது நிலையை பணபலத்தை இன்னும் இன்னும் பெருக்கிக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு நீங்களே உண்மையாச் சொல்லுங்கள். எத்தனைபேர் போலி கொளரவத்திற்காக பல பொருட்களையும் வாங்கி வீட்டை நிறைத்துக் கொள்கிறோம்.

வீட்டிற்கு விளக்கு தேவை ஆனால் பலப்பல வடிவங்களில் வடிவமைப்புகளில் விலை உயர்ந்த விளக்குகளின் பயன் என்ன? வெறும் அலங்காரத்தை மட்டும் கொடுக்குமானால் அது ஒரு போலி என்று நமக்குத் தெரியும் ஆனால் அவற்றைப் பெற்று விட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டு... போலியான வெற்றியை நோக்கி போலியான வாழ்வில் பயணிக்கிறோம்.

வீட்டைச் சுற்றி இருந்த இயற்கையான மணம் தரும் மலர்களையும் மரங்களையும் அழித்துவிட்டு போலியான பூக்களால் மற்றும் மரங்களால் அறைகளையும் வீடுகளையும் அலங்கரித்து... மணம் என்றால் என்ன என்பதையே மறந்து கொண்டிருக்கிறோம்.

காலடியில் இருக்கும் நீரை மறந்து விட்டு கானலைத் தேடி ஓடுவதைப் போன்று… இருக்கும் வாழ்க்கையை விட்டுவிட்டு இல்லாத வெற்றியை இருப்பதாக நினைத்துக் கொண்டு அந்த மாயையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

நிழலான வெற்றியை வாழ்க்கையில் தேடிக் கொண்டிருப்பதால் நிஜமான நமது வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

வாழ்க்கையில் வெற்றி என்ற ஒன்று இல்லவே இல்லை…
இருப்பதாகச் சொல்லுவது அது ஒரு மாயத்தோற்றமே தவிர உண்மையல்ல.

வாய்ப்புக்கு நன்றி…
 
நாங்கள் யாருக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது ஒவ்வொருவரின் வாதமும் அருமையாக இருக்கிறது.வாழ்த்துகள் போட்டியாளர்களே
இந்த பட்டிமன்றத்தை பல மேடை கண்ட நடுவர் போல் அமரன் நடத்தி செல்லுவது அழகாக இருக்கிறது.பாரட்டுகள் அமரன்
 
வெற்றிகளின் முகமூடிகளைக் கிழித்தெறிந்து அங்கே ஒளிந்திருக்கும் அதிபயங்கர மிருகங்களை அடையாளம் காட்டி இருக்கிறார் செல்வா. இதைச் செய்ததையா புகழ்கிறீர்கள்? இதுவா வெற்றி? என்று தட்டிக் கேட்டிருக்கிறார்.

இந்தப் புயலை விக்ரமும் கண்மணியும் எப்படித்தான் சமாளிக்கப் போறாங்களோ தெரியலை.

நல்லாவே சூடு பிடிக்குது பட்டி மன்றம்,
 
:aktion033::aktion033::aktion033:

இதுவரை நான்கு வாதங்களுமே அவர்களின் கருத்தை அபாரமாய் சொல்லி இருக்கின்றன.

:icon_good:

இன்னும் இருவர் + மீண்டும் மறுசுற்று....

இதன் நடுவில் நடுவர் இப்படி ஒண்ணுமே சொல்லாம அமைதியா இருக்கலாமா?

அமரரே! வந்து அமருங்கள். செல்வாவின் வாதம் பற்றிய கருத்தை அறிவித்து விட்டு அடுத்த வாதியை அழையுங்கள்
 
வருவார்ய்யா...! சீக்கிரமே வருவார்..
அவருக்கு எத்தனை வேலை இருக்கும்...
வரும்வரை காத்திருப்போம்ய்யா....
 
நன்றி செல்வா..

மிதிவெடிகள் இருக்கின்றன என்ற மிதிக்கும் வரை தெரியாது. மிதித்து விட்டு காலை எடுக்கும் போது பனையளவு உயரத்துக்கு தூக்கி அடிக்கும். அந்த மாதிரியான ஒரு வெடியாக அதிரடியாக அட்டகாசம் செஞ்சு அமர்களப்படுத்தி இருக்கார் செல்வா.

இன்னொறு சொன்னார் பாருங்க. எவன் ஒருவன் மரணிக்கிறானோ அவனே வெற்றி கொண்டான் என்கிறார். இதைப் படிச்சப்போ கவுண்டர் செந்தில் காமெடி ஒண்ணு நினைவுக்கு வருது. நிகழ்வுகளுக்கு ஏற்றபடி வாழ்த்துகள், ஆறுதல்கள் சொல்லும் பெரிய மனுஷனான* கவுண்டமணி ஒரு சாவு வீட்டுக்கு செந்திலை அனுப்புவார். செந்தில் யோசிப்பார். முன்பொரு முறை கவுண்டமணி ஒரு மூதாட்டியின் சாவுச்சடங்கில் "உனக்கு மட்டுமா அம்மா.. ஊருக்கே அம்மா" என்றது சொன்னது நினைவுக்கு வர "உனக்கு மட்டுமா பொண்டாட்டி.. ஊருக்கே பொண்டாட்டி" என்பார். அப்புறம் என்ன சுத்தி நின்ற எல்லாரும் கவுண்டமணியாகி செந்திலை உதைப்பாங்க. அந்தமாதிரி செல்வாவின் இந்தக் கருத்தை கேட்டுட்டு நம்ம பயலுக சாவு வீட்டுக்கு போய் "நம்மாளு வாழ்க்கையில செயிச்சுட்டான்டா" என்று கொக்கட்டம் விட்டு சிரிச்சு கொண்டாடினால்... நிலமையை யோசிச்சுப் பாருங்க.


வாழ்க்கையில் ஒவ்வொருவனும் பெற்ற வெற்றி என்பது எத்தனையோ பேரின் கண்களைப் பிடுங்கி ஒன்றப் மேல் ஒன்றாக அவற்றை அடுக்கி அதன் மேல் நின்று கொண்டு எக்காளமிடும் வேடர்களின் அகங்காரக் கூச்சல் ஆகும். கண்ணீரையும் செந்நீரையும் எந்நேரமும் தின்று செரிக்காமல் திமிலெடுக்கும் இவர்களைப் பார்த்தா வெற்றியாளர்கள் என்பது. ஆக்ரோசமாகவே கேட்டார்.

அவருக்குப் பதில் சொல்ல கண்மணியை அழைக்கிறேன்..


விக்ரம் விடுப்பு முடிந்து வராததால், அவருக்குப் பதிலாக வாதாட விரும்புவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.
 
Last edited:
வாழ்க்கையில் வெற்றி தோல்வி சூழலில்தான் உள்ளது.

கண்ணதாசனின் அற்புதமான வரிகளோடு என் வாதத்தைத் தொடங்குகிறேன்.

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது – கருடா சௌக்யமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே
கருடன் சொன்னது - அதில் அர்த்தம் உள்ளது.



“சேற்றில் முளைத்த செந்தாமரை”

பழமொழியைச் சொன்ன உடனே ஆர்வமாய் எழும்பும் சுய முயற்சி நண்பர்களே அமைதி அமைதி… பாறையில் செந்தாமரை என்ன முயற்சி செய்தாலும் வளராது.. அதனால அமைதியா இருங்க.

கண்ணதாசன் சொன்னதைப் பார்த்தோம். கண்ணன் என்ன சொல்றார்?

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!

மதுரை மைந்தன் அவர்களும் செல்வாவும் உடனடியா குதிக்க ஆரம்பிக்காதீங்க. வெற்றி தோல்வி இல்லைன்னு கண்ணன் சொல்லலை. ஆதாரம் வேணுமா? கீதை சொல்றதை முழுசா கேளுங்க

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகிறது

இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

இதை மேலோட்டமாகப் பார்த்தால் வெற்றி தோல்வி இல்லை என்பது போலத் தோன்றும். சற்றே ஆழமாகப் பார்த்தால் அவர் இங்கே இங்கே என அழுத்திச் சொல்வது சூழலை அல்லவா?

சூழலை சூட்சுமமாக விளக்குகிறார் கண்ணன். நம் கையில் எதுவும் இல்லை. சூழல்தான் எல்லாம். அதுதான் படைப்பின் சாராம்சம்.

அதாவது வெற்றி தோல்விகள் சூழலால் நிர்ணயிக்கப் படுபவை. நாம் எடுத்துக் கொண்டது சூழலில் இருந்தது. கொடுத்ததும் சூழலுக்கு. நமது கடமை செயலாற்றல் மட்டுமே. சூழலுக்கு அது ஒப்புடையது என்றால் வெற்றி பெறுகிறது. இல்லை என்றால் தோல்வி அடைகிறது.

இந்த மாற்றத்தைக் சூழல் காலத்தால் செய்கிறது. அதனால் சரி எனப்படுவதைச் செய் என்கிறார் கண்ணன். வெற்றி தோல்வி

இல்லை என்றால் எதையும் செய்யாதே என்றல்லவா சொல்லி இருப்பார்?

அது மட்டுமல்லாமல், விசுவரூபம் எடுத்து, அனைத்தும் தன்னுள் அடக்கம் என்று காட்டுகிறார், அதாவது சூழல்தாங்க ஆண்டவன். பின்ன, நாம் உள்பட நம்மைச் சுற்றி உள்ளது எல்லாம் அவனில் அடக்கம் என்றால் அப்படித்தானே அர்த்தம்.


ஆன்மீகம் இப்படிச் சொல்லுதுன்னா அறிவியல் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.

பரிணாம வளர்ச்சி தத்துவம் என்ற ஒரு விஷயத்தில் உயிரினங்களின் வரலாற்றை அடக்குகிறார் சார்லஸ் டார்வின். அது என்ன சொல்கிறது?

சர்வைவல் ஆஃப் ஃபிட்டஸ்ட் – அதாவது தகுதி வாய்ந்ததே மண்ணில் வாழ்கிறது,

அதாவது சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் தம்மை மாற்றிக் கொள்கின்றன. அதனாலேயே அவற்றின் இனம் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. சூழலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளாதவை அழிந்து விடுகின்றன.

ஆக ஆன்மீகம் என்று பார்த்தாலும் சரி அறிவியல் என்று பார்த்தாலும் சரி.. சூழல்தான் அனைத்தும்.

(“ஆஹா, இப்பவே கண்ணைக் கட்டுதே!” என்கிறார் நடுவர் அமரன்)


முதலில் வாழ்க்கையில் வெற்றி தோல்வி இல்லை என்று சொல்பவர்களுக்கு…

ஆமாம், இங்கே எதற்காக வாதாடுகிறோம்?

வெற்றி தோல்வி இல்லை என்ற கருத்து வெற்றி பெறணும் என்று நினைத்துதானே வாதங்களையே வைத்திருக்கிறீர்கள்.. அப்புறம் வாழ்க்கையில் வெற்றி தோல்வியே இல்லை என்று எப்படிங்க சொல்வது?

மதுரை மைந்தன் ஐயா அவர்கள் வெற்றி தோல்வி இருப்பதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் அதை நாம் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும் எனச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.

செல்வாவோ வெற்றி தோல்வி என்பவை தவறான அர்த்தத்தில் இருக்கின்றன, திசை திருப்புகின்றன. வெற்றிகள் என்பவை அர்த்தமற்றவை என்று சொல்லி இருக்கிறார். தோல்வியைப் பற்றி மூச்சே விடலை.

ஒரு செயல் ஏன் செய்யப்படுகிறது? அதுக்கு ஒரு இலக்கு இருக்கு, உதாரணமாகச் சாப்பிடுகிறோம் ஏன்? பசியாற..

வெற்றி என்பது பசி ஆறுவது, தோல்வி என்பது நம்ம உடம்புச் சூடே ஆறுவது (விஷத்தைத் தின்னா என்ன ஆகும்.) இலக்கு இல்லாத செயலே இல்லை,

இலக்கை அடைந்தோமா என்பதுதான் வெற்றி தோல்வியே தவிர, அந்த இலக்கு நல்லதா? கெட்டதா? அவசியமா? இல்லையா? என்பதல்ல.

நல்ல இலக்குகளை நிர்ணயிப்பது எப்படி என்று தெரியாத சூழலில் இருப்பதால் தான் இந்த பிரச்சனைன்னு நினைக்கிறேன்,

செயலின் முடிவு அதன் விளைவுகளால் அறியப்படுகிறது. அதாங்க வெற்றி, தோல்வி, செயல் நல்லதா, கெட்டதா என்பதைப் பொறுத்து வெற்றி தோல்விகள் முடிவாவதில்லை, செயல் அதன் இலக்கை எட்டியதா என்பதுதான் வெற்றி தோல்வி. நல்லது கெட்டதையும் வெற்றி தோல்வியையும் போட்டுக் குழப்பிக்காதீங்க.


வெற்றி தோல்வியின் அவசியம் என்ன?

வரலாறு என்பதே வெற்றி தோல்விகளின் பட்டியல்தான்

எப்படின்னு கேட்பீங்கன்னு தெரியும். மேல படிங்க.

வெற்றி தோல்வி எனப்படும் முடிவுகளை எப்படி எடுக்கிறோம் என்பதை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. சுய மதிப்பீடு
2. அப்போதைய சமூக மதிப்பீடு
3. காலம் செய்யும் சரியான மதிப்பீடு – சூழலில் ஏற்படும் தாக்கம்.


சுய மதிப்பீடு என்பது தன் செயலைப் பற்றி தானே கொள்ளும் அபிப்பராயம் ஆகும். இதைத்தான் அர்த்தமற்றது என்று செல்வா மற்றும் மதுரை மைந்தன் ஆகியோர் வாதாடிக் கொண்டிருக்கின்றனர். மற்ற வகை முடிவுகள் இல்லை என்ற சூழலில் இது சரி. ரஜினி படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்தல் போன்ற பல அர்த்தமற்ற வெற்றி தோல்விகள் இந்த வகைப்படும்.

சினிமா பார்த்தலை ஒரு சாதனையாக கருதும் சமூகம் இதைப் போற்றலாம். ஆக என்ன சமூகத்தில் இது நடந்ததோ அந்த சமூகத்திற்கு ஏற்புடையது என்றால் அவர்கள் இதை வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் சில நூறு ஆண்டுகளுக்கு பின்னால் காலம் செய்யும் மதிப்பீடு இருக்கிறதே அது மிகச் சரியாக இருக்கும்.

சுய மதிப்பீட்டில் வெற்றிகரமாக இருப்பது, மகிழ்ச்சியான வாழ்வை வாழ உதவுகிறது.

சமூக மதிப்பீட்டில் வெற்றிகரமாக இருப்பது அந்தஸ்து கௌரவத்துடன் வாழ உதவுகிறது.

காலம் செய்யும் மதிப்பீட்டில் வெற்றிகரமாக இருப்பது சரித்திரத்தில் இடம் பெற்று காலம் காலமாக வாழ உதவுகிறது.



செல்வா சொன்ன அனைத்து உதாரணங்களுமே இதில் அடங்கி விடுகிறது இல்லையா? அலெக்ஸாண்டர், மைக்ரோசாஃப்ட், புத்தகங்கள், பலப்பல நிறுவனங்கள், எல்லாமே இதில் அடங்கி விடுகிறது.

இறைவன் அமைதியாக என்னவோ செய்திருக்கலாம். இப்படிப் பலப்பல உலகங்களை உண்டாக்கி அதில் உயிர்கள் வாழும் சூழலை உண்டாக்கி அவற்றிக்கு பல நியதிகளை வகுத்து ஒரு உயிர்ப்பான சூழலை உண்டாக்கி இருக்கிறார். அதனால்தான் இன்று பலர் எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்கிறோம். ஏன்னா இந்தச் சூழ்நிலையை உண்டாக்கியவர் அவர்தானே. அதாவது கடவுளுக்கே புகழ் சூழலினால்தான். (இது ரொம்பத்தான் ஓவர்னு நடுவர் முனகுவது கேட்கிறது.).

ஒண்ணுமே செய்யாம சும்மா இரு என்பதற்காக இறைவன் நம்மைப் படைத்ததாக நான் கருதவில்லை. ஒரு பெரிய புதிர்போட்டு அதை அவிழ்க்கச் சொல்லி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நாமும் ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்துக் கொண்டே வருகிறோம். அதற்காக பல செயல்களைச் செய்கிறோம். அந்தச் செயல்களை விருப்பத்துடனும் ஊக்கத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் செய்ய ஊக்கிகளாக இருப்பவை வெற்றிகள்.

உதாரணமாக, உதாரணத்திற்காக இங்கே எல்லோரும் சொல்வது சில வெற்றிகளையும் தோல்விகளையுமே. வெற்றி தோல்வி இல்லாத ஒரு வாழ்க்கை கூட உதாரணத்திற்குச் சொல்லப்படவில்லை. அதாங்க வெற்றி தோல்விகளின் முக்கியத்துவம்.

வெற்றி எனத் தவறாகக் கொள்ளப்படுகிறது என்றுதான் செல்வா சொல்லி இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதாவது இது உண்மை வெற்றியல்ல என்றுதான் சொல்கிறார். வெற்றி தோல்வி பற்றி மனதைக் குழப்பிக் கொள்ளவேண்டாம் என்கிறார். அதை நான் மறுக்கப் போவதில்லை நான்.

அதாவது வெற்றி என நாம் கருதுவது எல்லாமே உண்மையில் வெற்றிகளா என்பது கேள்விக்குறிதான்
தோல்விகள் என நாம் கருதுவது எல்லாமே உண்மையில் தோல்விகளா என்பதும் கேள்விக்குறிதான்
ஆனால் வெற்றி தோல்விகள் உண்டு என்பதும், அது சூழலால், சூழல் மாற்றத்தால், காலத்தால் அளக்கப்படுகின்றன என்பதும் மறுக்க முடியாத ஒன்று. ஏனென்றால் ஒவ்வொரு செயலுக்கும் விளைவுகள் மட்டுமல்ல, பக்கவிளைவுகள், பின்விளைவுகள் எல்லாம் உண்டு.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
.

வெற்றி பெற புத்தி மட்டுமே தேவை என்பதுதான் தவறு. வெற்றியில் இன்னும் பலவற்றின் பங்குகள் இருக்கின்றன. புத்தி இல்லாமல் கூட உழைப்பு, நல்லெண்ணம், அன்பு போன்றவற்றினால் வெற்றி பெறலாம் என்றுதான் அதற்கு சரியான பொருள். இதற்கு புத்தியில்லாதவன் மட்டுமே ஜெயிக்கிறான் என்று அர்த்தம் எடுப்பது தவறு. புத்தியில்லாதவனும் வெற்றி பெறுகிறான். புத்தி உள்ளவனும் வெற்றி பெறுகிறான் என்றுதான் பொருள்.

வெற்றி படைத்தான் அப்படின்னு சொல்லலை.. வெற்றி பெறுகிறான் என்றுதான் சொல்கிறார்கள். அதாவது வெற்றி என்பது சூழலால் கொடுக்கப்படுவது. அவன் பெறுவது இதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இப்போ முதலில் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்வதில் சூழலின் பங்கு என்ன என்று சில சின்ன உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

மதி, “என்னை மன்னிச்சுடுங்க” என்று ஒரு பெற்றோரின் காலில் விழுகிறார். இது வெற்றியா தோல்வியா?

மதி ஒரு பெண்ணை காதலித்து அவசர அவசரமாய் கல்யாணம் செய்து கொண்டு அந்தப் பெண்ணின் அப்பா அம்மா காலில் விழுந்து இதைச் சொன்னால் வெற்றி. (ஹி ஹி…)

அதுவே தெரியாம உங்க பொண்ணுக்கு காதல் கடுதாசி குடுத்திட்டேன் என அந்தப் பெண்ணின் அப்பா அம்மா காலில் விழுந்தால் தோல்வி. (ஹா.. ஹா..)

காந்தியடிகள் 22 நாள் சாப்பிடவில்லை. இது தனி மனித முயற்சி. இது வெற்றியா தோல்வியா?

எதுவுமே இல்லை. ஆனால்

ஒத்துழையாமை இயக்கத்தில் வன்முறை நுழைந்தது - காந்தியடிகள் 22 நாள் சாப்பிடவில்லை - வன்முறை நின்றது.

இப்படிச் சூழலுடன் சேர்த்தால் காந்தியடிகள் வெற்றிகரமான உண்ணாவிரதம் மேற்கொண்டார் என்று வெற்றி தோல்வி நிர்ணயம் ஆகிறது.

100 மீட்டர் தூரத்தை 10 நொடியில் கடந்தார். இது வெற்றியா தோல்வியா?

எதுவுமே இல்லை. ஆனால்
அவருடன் ஓடியவர்கள் யாரும் 10 வினாடிக்குள் ஓட வில்லை என்றால் அவர் வெற்றி அடைந்தவராகிறார்.
சிலர் 9 வினாடிகளில் ஓடி இருந்தால் அவர் தோற்றவர் ஆகிறார்.

ஒருவன் பந்தய மைதானத்தில் 100 மீட்டர் தூரத்தை 9.56 வினாடிகளில் கடந்தது உலக சாதனை.
அதை விட வேகமாக யாருக்கும் தெரியாத சூழலில் ஒருவன் ஓடி இருக்கலாம். ஆனால்
அவன் வேகமான மனிதனாக அறியப்படுவதில்லை.

ஆமையுடன் ஓடும் பொழுது வெற்றி பெறுபவன் குதிரையோடு போட்டிப் போடும் பொழுது தோற்றுப் போகலாம். இரண்டிலும் ஓடியது அவன்தான். ஓடிய வேகமும் அதேதான். ஆனால் அது வெற்றியா தோல்வியா என நிர்ணயித்தது சூழல்தானே.

ஆகவே ஒரு செயல் செய்யப்படுகிறது. தனியே அந்தச் செயலுக்கு வெற்றி தோல்வி இல்லை. ஆனால் சூழல் அங்கே இணைக்கப் படும் பொழுது மட்டுமே வெற்றியா தோல்வியா என்பது நிர்ணயம் ஆகிறது. அதனால் சூழலில்லாமல் வெற்றி தோல்வி இல்லை. (பரம்ஸ் அண்ணா மனம் நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் விடறார் பாருங்க)


மூன்றாம் வகை வெற்றியைப் பார்ப்போம்.

உலகத்தில் பலகோடி மக்கள் பிறந்து வாழ்ந்து மறைந்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களில் பலரின் பெயர் இன்னும் நிலைத்திருக்கிறது.
ஆனால் பலகோடி மக்கள் மறக்கப்பட்டு விட்டார்கள்.
காரணம் அந்தப் பலபேர் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டார்கள்.
பல கோடிப்பேர் வெற்றி தோல்வி பெரிதாக இல்லா வாழ்வை வாழ்ந்திருக்கின்றார்கள்.
காலத்திடம் தோற்றிருக்கிறார்கள்.

வெற்றி தோல்வி இல்லாவிட்டால் சரித்திரத்தில் அந்த மனிதனின் வாழ்க்கை மறக்கப்பட்டு விடுகிறது.
இதனால்தான் வெற்றி தோல்வி அவசியமாகிறது.

ஒரு கதை சொல்வார்கள். பரீட்சித்து மஹாராஜா சொர்க்கத்தில் ஆயிரம் ஆண்டுகளாய் இருந்தாராம். அவர் புண்ணியம் எல்லாம் தீர்ந்து விட்டது பூமியில் மீண்டும் ஜென்மம் எடுக்கவேண்டும் என்று இந்திரன் சொன்னாராம்..

அப்போ நாரதர் குறுக்கிட்டு, இவன் புண்ணியம் தீர்ந்து விட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி என்று கேட்க, பூலோக மக்கள் இவர் பெயரையே மறந்திருப்பார்கள். இவர் செய்த நல்ல காரியங்கள் இப்பொழுது யாருக்கும் நினைவிருக்காது என்றாராம் இந்திரன்.

சரி அதைச் சோதித்துப் பார்ப்போம் என நாரதர், இந்திரன், பரீட்சித்து ஆகியோர் பூலோகம் வந்தனராம். அங்கு ஒரு சத்திரத்தில் இளைபபாற, நாரதர் இந்திரனுக்கு பரீட்சித்து மஹாராஜா கதையைச் சொல்ல…

சத்திரத்தில் இருந்த பெரியவர், பரீட்சித்து மஹாராஜாவா? மிகப் பெரிய கொடையாளியாயிற்றே என்றாராம்..

மூவரும் சொர்க்கம் திரும்பி விட்டார்களாம். அதன் பின்பு ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் பூலோகம் வந்தார்கள்..

இம்முறை 1000 பேரைக் கேட்டதில் ஒரே ஒருவனுக்கு பரீட்சித்து மஹாராஜாவைத் தெரிந்திருந்தது. மீண்டும் சொர்க்கம் திரும்பினர்.

இப்படி பலமுறை முயன்ற பிறகு ஒரே ஒருமுறை எல்லோருமே பரீட்சித்து மன்னரை மறந்திருந்தார்களாம்.

இதோடு ப்ரீட்சித்து மஹாராஜாவின் சொர்க்க வாசம் முடிந்தது என்று முடிவெடுத்து வரும் வழியில் ஒரு குளக்கரையில் இருந்த மண்டபத்தில் ஓய்வெடுக்க அமர்ந்தார்களாம்.

அப்பொழுது அங்கே ஒருவன் அங்கிருந்த ஒரு கல்வெட்டைப் படித்துக் கொண்டிருந்தானாம். இக்குளம் பஞ்சம் தீர்க்க பரீட்சித்து மன்னனால் வெட்டப்பட்டது என்று.. ஏமாற்றத்துடன் திரும்புகிறான் இந்திரன்.. குறுநகை செய்யும் நாரதர் மற்றும் கண்ணில் நீர் வடிய உணர்ச்சி வசப்படும் ப்ரீட்சித்துடன்.



இப்படி மறைந்தாலும் பல்லாண்டு காலம் வாழும் வாழ்க்கையைத்தான் வெற்றிகரமான வாழ்க்கை என்கிறோம்.

நம் வெற்றி / தோல்வி எவ்வளவு பெரியது என்பது, அது எவ்வளவு காலம் நினைவில் கொள்ளப்படுகிறது என்பதைப் பொருத்து அமைகிறது.

மைக்கேல் ஜாக்சன் இறந்தாலும் அவர் புகழ் பல்லாண்டு காலம் வாழும். காரணம் அவரின் வெற்றி.
இதன் காரணமாகவே அவர் வாழ்க்கையில் பட்டத் துன்பங்களும் தோல்விகளும் கூட நினைவு கொள்ளப்படும். ஆனால் பாட்டு, நடனம் என்பதே தெரியாத சமூகத்தைப் பொறுத்த வரை அவர் யாரோதான்.

மதுரை மைந்தன் ஐயா எங்களுடைய வாதத்தை ஒப்புக் கொண்ட மாதிரி போட்ட குறுங்கதை

ப்ளஸ் டூ தேர்வில் 98 விழக்காடுகளை பெற்ற மாணவி அழுது கொண்டிருந்தாள். ஆனால் அதே தேர்வில் 10 விழுக்காடுகளைப் பெற்று தேற தவறிய மாணவர் சிரித்துக் கொண்டிருந்தார். மாணவி அழுதது ஒரு மதிப்பெண்ணில் முதன்மை இடம் தவறிவிட்டதற்காக. மாணவர் சிரித்தது தான் அப்படி என்ன எழுதினோம் அதற்கு 10 விழுக்காடுகள் கிடைத்ததே என்று.

அதாவது மாணவி தோற்று விட்டதாக அழுவதற்கும், மாணவன் சிரிப்பதற்கும் காரணம் என்ன?
சூழல்.

அவர்களைப் பொறுத்தவரை
இலக்கை விட 10 விழுக்காடு குறைவாக பெற்றவள் அழுகிறாள்.
இலக்கை விட 10 விழுக்காடு அதிகம் பெற்றவன் சிரிக்கிறான்.

ஆனால் சமூகத்தைப் பொருத்தவரை அதன் இலக்கு பாஸ் மார்க். (இப்போ நடுவரின் இலக்கு டாஸ்மாக் ஆகாம இருந்தாச் சரி) ஆக இரண்டாவது வகையைப் பொறுத்தவரை மாணவி வென்றாள். மாணவன் தோற்றாள்..

காலத்தைப் பொறுத்தவரை இவை ஒன்றும் முக்கியமில்லை. ஏனென்றால் சமூகச் சூழலில் இதனால் மட்டுமே எந்த மாற்றமும் நடக்கவில்லை.

இலக்குகள் வெவ்வேறா இருப்பதால் வெற்றிதோல்விகள் மாறுகின்றன. அதைத்தானே ஐயா சூழல் என்கிறோம்!


ஒருவன் தினம் ஆண்டவனைப் பிரார்த்தித்தானாம். ஆண்டவா எனக்கு லாட்டரியில் பத்து கோடி ரூபாய் பரிசு விழவேண்டும் என..

பரிசு விழவில்லை. தினம் தினம் ஆண்டவனைப் பிரார்த்தித்தானாம்.

ஒருநாள் ஆண்டவன் பொறுமை இழந்து அசரீரியாக சொன்னாராம்..
முதலில் ஒரு லாட்டரி டிக்கட் வாங்கித் தொலை என்று…


இது முயற்சியே வெற்றிக்குக் காரணம் என்று சொல்பவர்கள் சொல்லும் கதை…

ஆனால், அந்த சோம்பேறி கொஞ்சம் கண்மணியா இருந்திருந்தா..

சரியாச் சொன்னீங்க.. யாராவது வாங்கியதை தொலைக்க வைத்து
என் கையில் அந்த டிக்கெட் கிடைக்கும்படி செய்யுங்களேன்
என ஆண்டவனை கேட்பான்.


கதையின் முதல் பாதியில் தோற்றது யார்?.
இரண்டாம் பகுதியில் தோற்றது யார்?
இதுதாங்க சூழ்நிலை.

மரணத்திற்குப் பின் நமக்குத் தெரியவா போகிறது என்றால்…

அது எப்படி என்று தெரியாதுதான். ஆனால் மரணிக்கும்பொழுது திருப்தியாய் மரணத்தை அரவணைக்கலாம். மாண்ட பின்னும் மக்கள் மனதில் வாழலாம்.

புத்தர், மஹாவீரர், கரிகாலன், இராஜராஜ சோழன், அசோகன், அலெக்ஸாண்டர், அரிஸ்டாட்டில், கம்பர், இளங்கோ, காளிதாசன், சாணக்யன், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஹிட்லர், முசொலினி, நியூட்டன், ஐன்ஸ்டீன், பிராட்மேன், பீலே, மரடோனா, லிங்கன், பிரபாகரன், தலாய்லாமா, லெனின், டென்சிங், ஆர்ம்ஸ்ட்ராங், காமராஜர், சங்கீத மும்மூர்த்திகள், பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர், இந்திராகாந்தி, இடி அமீன், ஒபாமா, ஒசாமா, ஹர்ஷத் மேத்தா, அன்னை தெரசா, இப்படி பல தரப்பட்டவர்கள் இன்றும் புகழ் – இகழுடன் நினைக்கப்படுவதற்கு வெற்றி இலக்கை அடைய அவர்கள் செய்த முயற்சிகளே காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆக முயற்சி என்பதும் வெற்றி தோல்விகளுக்கு ஒரு காரணிதான்.

பரம்ஸ் அண்ணா சொன்னக் கதையைக் கூட பாருங்க.. தக்காளி விளை நிலங்களில் குறைந்த விலைக்கு கிடைத்து, அதிக விலைக்கு வாங்க ஆட்கள் இருந்தார்கள். அவர்களுக்கு எங்கே வாங்குவது எனப் புரியவில்லை. அன்றைய சூழலில் அது சூழ்நிலைத் தேவை.

ஆனால் இன்று ரிலையென்ஸ், ஃபுட் வேர்ல்ட் போன்றவர்கள் விவசாயிகளிடம் போய் ஒட்டு மொத்தமாக வாங்கி விடுகிறார்கள். மக்களும் இதுபோன்ற கடைகளில் வாங்குகிறார்கள். இன்று அதையே செய்தால் தக்காளியும் அழுகி விடும். அவரும்தான். காரணம் சூழ்நிலை. இதே போல் சர்ச்சில் மணியடிப்பவர் பெரிய சுருட்டுக் கம்பெனி முதலாளி ஆன கதையும் உண்டு.

ஆக வெற்றி தோல்வி உண்டு, எது அர்த்தமுள்ளது எது அர்த்தமில்லாதது எனப் பார்த்த நாம் வெற்றி தோல்விக்குக் காரணம் யார் என்பதையும் பார்ப்போம்.

வெற்றி – தோல்வி ஒருவனுக்குள்தான் இருக்கிறது என்றுச் சொல்ல முடியாது..

புத்தன் ஞானியாக காரணம் தியானம் என்று நினைக்கிறோம். அந்த தியானத்தைத் தூண்டியது என்ன? நோய், மூப்பு, மரணம் என்ற சூழல்தானே. அவன் அரண்மனையில் இருந்த பொழுது ஞானம் பிறக்கவில்லை. இம்மூன்றும் இல்லா இடத்தில் புத்தர் யோசித்தும் இருக்க மாட்டார் அப்படியே அவர் ஞானம் பெற்றுச் சொன்னாலும் யாரும் சட்டை செய்யவும் மாட்டார்கள்.

காந்தி அவமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அவரின் சூழலில் இருந்த அடிமைத்தனம் அவருக்குத் தெரியாமல் இருந்திருந்தால் அவரும் சாதாரணமாக இருந்து இறந்திருக்கலாம். அடிமைப்பாடு இல்லையென்றால் சுதந்திரப் போராட்டம் எதுக்கு?.

ஆப்பிள் கீழே விழுந்திருக்காவிட்டால் நியூட்டன் ஈர்ப்பு விசையைப் பற்றிச் சிந்தித்து இருக்கவே மாட்டார்.

சமூகச் சூழல் என்று ஒன்று உருவாகாமல் இருந்திருந்தால், மனிதனும் விலங்குதான்.
வெற்றிகளும் தோல்விகளும் அர்த்தமற்றுதான் போயிருக்கும்.


இங்கே பதிவு போட எல்லாம் முடிஞ்சிருக்காது.

இலக்கு என்பது சூழலாலே நிர்ணயிக்கப் படுகிறது.
பணம், பலம், புகழ், அதிகாரம், நிம்மதி, நீண்ட வாழ்வு, இன்பம் எப்படி சூழலில் எது முக்கியமாய் கொண்டாடப்படுகிறதோ அதுவே இலக்காகிறது. சூழ்நிலையில் இல்லாத ஒன்று இலக்கு ஆவது இல்லை.
வெற்றி தோல்வி என்பதும் சூழலாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதுவும் எப்படி? ஒப்பீடு மூலம்.
ஒருவர் பெறும் வெற்றியின் அளவு மட்டும்தான் தனிமனிதனின் உள்ளுக்குள் இருக்கிறது.

சூழலுக்குச் சம்பந்தமில்லா காரியத்தில் வெற்றி பெற்றால் அதை கணக்கிலேயே எடுத்துக்கறதில்லை.. கின்னஸ் சாதனைகள் செய்தவங்க பலரை நாம் கண்டுக்காம இருப்பதற்கு இதுதானுங்களே காரணம். .

அதனால்தான் ஒருவனுடைய வெற்றி தோல்வியின் மிக அதிகமான பங்கு சூழலில் இருக்கிறது என்கிறோம்.
சூழல்தான் ஒருவனுக்கு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வாய்ப்பளிக்கிறது.

ஆதி மனிதன் குழுவாக மாறி சமூக அமைப்பாக மாறிய பின்னர்தானே வெற்றி தோல்வியின் மகத்துவமே புரிய ஆரம்பித்தது.

ஊர் தோன்றி சமூகம் அமைந்த பின்னால்தானே பல சாதனையாளர்கள் தோன்ற ஆரம்பித்தனர்.

உயிருக்காக தினம்தினம் போராடிய ஆதி மனிதனால் சூழலின் தேவைக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட அறிவியல் வளர்ச்சி,. அரிஸ்டாட்டிலால், ஐன்ஸ்டீனால், ஆல்வா எடிஸனால் இப்படி பலரால் சூழலுக்குத் தகுந்த மாதிரிதான் வளர்ந்தது இல்லையா?

மின்சாரம் கண்டுபிடிக்கும் முன்பாக டி.வி கண்டு பிடிக்க முடிஞ்சதா? அட இப்ப கூட மின்சாரம் இல்லாம கண்டு பிடிக்கத்தான் முடியுமா? தொலைஞ்சா வேணும்னா மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தேடிக் கண்டுபிடிக்கலாம். ஆனால் அதை உருவாக்குது அப்புறம் பயன்படுத்துவது என்பது தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும்தான் முடியுமா?

பிரபஞ்ச முடிச்சுகள் ஒன்னொன்னாதான் அவிழ்க்கப்படுது… அதற்கு ஒரு வரிசை முறை உள்ளது. அந்த வரிசையில்தான் பிரபஞ்ச உண்மைகளும் வெளிப்படுது. அதாவது சூழலின் கையில்தான் எல்லாம்.

இனி சூழல் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஏனென்றால் அது தெரியாததால் தான் இந்தப் பட்டிமன்றமே உருவானது.

அட நம்ம பட்டர்ஃபிளை எஃபெக்ட் தியரி சொல்லப்படுதே ஞாபகம் இருக்கா? இல்லையின்னா தசாவதாரம் ஒருமுறை பாருங்க.

எந்த ஒரு செயலும் அந்தச் சூழலில் அளக்கவியலா தொடர் நிகழ்வுகளை தோற்றுவிக்கின்றன. இந்த நிகழ்வுகள் ஒழுங்கற்ற முறையில் அமைந்தவை. அதனால் இந்த ஒரு செயலால் இந்த ஒரு நிகழ்வை உண்டாக்கலாம் என ஒரு எல்லை வரைதான் நம்மால் அனுமானிக்க முடியுது.

ஆனால் இதைச் சொன்னவரே பின் வருவதை யோசிக்க மறந்திட்டாரு.

பலரும் / பலதும் ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்கிறார்கள். இதனால் பல விளைவுகள்., அவற்றின் தொடர் விளைவுகள், அதனால் தூண்டப்பட்ட பின்விளவுகள, பின்விளைவுகளின் பின்விளைவுகள் இப்படிப்பட்ட விளைவுகள் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு அதனால் விளையும் விளைவுகள் நாம் எண்ணியும் பார்க்காத பல ஒழுங்கற்ற விளைவுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இதுதான் அந்த ஒழுங்கற்ற கற்பனையிலும் அடங்காத அளவில்லாத பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. (பட்டர் ஃபிளை எஃபெக்டை சொன்னவருக்கே இவ்வளவு தெளிவா தெரியுமான்னு தெரியலை. நான் தான் விளக்கு விளக்குன்னு விளக்கிகிட்டு இருக்கேன்.)

நாம் செய்யும் செயலைத் தவிர மிச்சமிருப்பதெல்லாம் சூழல். அதாவது 600 கோடி மனிதர்களும், பல்லாயிரங்கோடிக் கணக்கான இன்ன பிறவும் அவை செய்யும் செயல்களும், அவற்றின் பலப்பல மடங்கான பின் விளைவுகளும் நமது சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அப்படின்னா ஒரு செயலின் பலனில் சூழலின் பங்கு எவ்வளவு என்பதை அளக்கத்தான் முடியுமா?

சூழல் என்பது சின்ன விஷயம் என்று நினைத்தவர்களுக்கு சூழல் எவ்வளவு பிரம்மாண்டமானது என்று இப்ப புரிந்திருக்கும் என நினைக்கிறேன். சூழல் பிரம்மாண்டம். சூழலில் நாம் ஒர் அணு…

ஒவ்வொரு செயலும் சூழலின் தேவையைப் பொறுத்தே அமைந்தன.
சூழலின் தன்மையாலேயே வெற்றி தோல்வி முடிவையும் அடைந்தன.
சூழலில் ஏற்படுத்திய மாற்றத்தாலேயே நிலைத்தன. மாறின.. அல்லது அழிந்தொழிந்தன..


இந்த உண்மையை உணர்ந்தால் – அதற்கடுத்து மதுரை மைந்தன்-செல்வா போன்றவர்கள் சொல்லிய வெற்றி தோல்வி தனிமனிதனைப் பொறுத்தவரை அர்த்தமில்லாதது எனத் தானே புரியும். அதாவது செயலைச் செய்வது மட்டுமே நமது கடமை என்பது புரியும்.

வெற்றி என்பது வெற்றி மட்டுமே அல்ல என்பதும் தோல்வி என்பது தோல்வி மட்டுமே அல்ல என்பதும் புரியும். அதனால்தான் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படக் கூடாதே தவிர..

வெற்றி தோல்வி என்பது இல்லவே இல்லை என்பது தவறு.

சூழல் இல்லாமல் வெற்றி தோல்வியே இல்லை எனும் பொழுது, ஒருவனின் வெற்றி தோல்வியை சூழல்தான் நிர்ணயிக்கிறது என்று சொல்வதே சாலப் பொருத்தமாகும்.

எல்லோருக்கும் அதே சூழல்தானே இருக்கிறது. அப்புறம் சிலர் மட்டுமே சாதிக்கும் காரணம் என்ன? இதுதான் வெற்றி தோல்வி உள்ளே இருக்கிறது எனச் சொல்பவர்களின் வாதம்.

முக்கால் கிண்று தாண்டினா பிழைக்க முடியாது.. முழுக்கிணறையும் தாண்ட வேண்டும்.. அப்பதான் ஜெயிக்க முடியும். முயற்சியே இல்லாத வெற்றி தோல்விகள் உண்டு. ஆனால் சூழல் இல்லாத வெற்றி தோல்விகளே இல்லை.

வள்ளுவர் இதை அழகாச் சொல்லி இருக்காரு

செயதக்க அல்ல செயக்கெடும் செயதக்க
செய்யாமை யானும் கெடும்


அதாவது சூழலுக்கு தகுதியானவற்றை செய்யா விட்டால் அதாவது ஒண்ணுமே செய்யாம இருந்தா கூட தோல்வி உறுதி. சூழலுக்குத் தகுதியற்றதை செய்தாலும் என்ன முயற்சி செய்தாலும் வெற்றி என்பது எட்டாக்கனிதான். நான் சொல்லலீங்க. வள்ளுவரே சொல்லி இருக்கார்.

செயதக்க என்றால் நல்லதுதானே என்கிறீர்களா? இல்லை. சூழல் தான் எது செயதக்கது என அடையாளம் காட்டுகிறது… எது செயத்தகாதது என அடையாளம் காட்டுது. இடம் பொருள் காலம் அறிந்து செய்தல் வேண்டும் என்பது அப்படித்தான்.


அந்நியன் படத்தோட 5 பைசா ஏமாத்தினா தப்பா? 5 பேரு அஞ்சஞ்சு பைசா ஏமாத்தினா தப்பா? அஞ்சு கோடி பேர் அஞ்சு கோடி முறை அஞ்சஞ்சு பைசா தப்பா? என்ற கேள்வி பதில் சூழலின் தன்மையை அருமையா விளக்கும் ஒன்று.

சூழலுக்குத் தகுந்த காரியம் என்றால் அதில் சிறு வெற்றியில் இருந்து முழுவெற்றி வரை பல நிலைகள் உண்டு. தோல்வி கிடையாது.

எதையோ செய்து வெற்றி கிடைப்பதை அதிர்ஷ்டம் என்கிறோம். அதாவது என்னன்னே தெரியாமல் சரியான காரியத்தைச் செய்வது.

ஒண்ணுமே செய்யாம வெற்றி கிடைப்பதை குருட்டு அதிர்ஷ்டம் என்கிறோம். அதாங்க சூழ்நிலை.

மிகப் பெரிய முயற்சி செய்தும் தோற்றுப் போவதை துரதிர்ஷ்டம் என்கிறோம்.

ஆனால் இந்த வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் அடிப்படையே, சூழல்தான் வெற்றி தோல்விக்குக் காரணம் என்பதே ஆகும்.

அடுத்தவர் வெற்றிக்கு நாம் சொல்லும் காரணமாகவும்,
நம் தோல்விக்கு நாம் சொல்லும் சமாதானமாகவும்
இருக்கும் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்ற இரு வார்த்தைகளும்
உண்மையில் வெற்றி தோல்வி என்பது சூழலில் தான் உள்ளது என நிரூபிக்கின்ற அடிப்படை ஆதாரங்கள் ஆகும்.



இந்த அடிப்படை உண்மையை நாம புரிஞ்சுகிட்டு, சூழலை அறிந்து, அதில் உள்ள வாய்ப்புகளை அறிந்து சுழலுக்கு ஏற்ப சரியான செயல்களை மட்டும் செய்ய முயற்சிப்பது, வெற்றிகளை அதிகமாகவும், போற்றப்படக்கூடிய தோல்விகளையும் தரும்.

நல்லது கெட்டதை தீர்மானிப்பது சூழல். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது சூழல். சில செயல்களில் தோல்வியே இல்லை,, சின்ன வெற்றி, சுமாரான வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி அப்படித்தான். காரணம் சூழல்….

அப்ப அறிவு, திறமை, பலம் இத்யாதி இத்யாதிகள் அர்த்தமற்றவையா என விகரம் புலம்புவார்.

ஒருவன் வெற்றி பெற அவனை வெல்லும் ஒன்று சூழலில் இல்லாதது கூட ஒரு காரணம்.
ஒருவன் தோற்க அவனை வெல்லும் ஒன்று சூழலில் இருந்தது கூட ஒரு காரணம்.
(ஹையோ ஹையோ)


நம் உள்ளுக்குள் இருப்பதும் வெளியில் இருந்து நாம் சம்பாதித்ததுதானே. கல்வி, அறிவு, மன உறுதி இப்படி அனைத்தும் சமூகம் நமக்கு கொடுத்தவை. சூழல் கொடுத்ததே அறிவும் திறமையும்.

தாமரை அண்ணாவின் சமூகத்திலிருந்து சமூகத்திற்கு கட்டுரையை இங்கே அவருக்கு நன்றி சொல்லி உதாரணமாக கொடுக்க விரும்புகிறேன். http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6081

இதன் சாராம்சம் என்ன? நல்ல சூழல் மட்டுமே நல்ல சமூகத்தை வளர்க்கும் என்பதுதானே!

மனிதனாய் பிறப்பதே அன்னை தந்தை தந்த குரோம்சோம்களில்தானே! (அதுவும் ஒரு சூழல்தான்.. உன்னை ஏன் தான் பெத்தோமோ என்று பல பேர் பின்னால் வருத்தப்படுவதும் சூழல்தான்) அந்தக் குரோமோசோம்கள் பண்பினைக் கொண்டு வந்துச் சேர்த்தன, உடல் பலம், நலம் எல்லாம் எங்கிருந்து வருகிறது? சூழலில் இருந்து.

வளர்ந்த சூழல் அறிவையும், தெளிவையும் மனத்திடத்தையும் கொடுத்தது.

மனிதனின் வாழ்வில் அன்னை, தந்தை, சொந்தங்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், அவர்களின் சமூகம், அவர்கள் படித்த புத்தகங்கள், அவர்கள் தங்கள் புலன்களால் பெற்ற அறிவுகள் தானே எல்லாவற்றிற்கும் அடிப்படை..

ஒன்றுமே தெரியாத குழந்தை உலகம் அறிந்து கொள்வது உள்ளிருந்தா வெளியில் இருந்தா? மனதிற்குள் ஆழ்ந்த அலசல் தேவை.. என்பதைக் கூட மனிதன் வெளியில் இருந்துதான் கற்றுக் கொள்கிறான்.

நமக்குள் இருக்கும் நம் மனதைக் கூட சூழல் செதுக்குகிறது. சிந்திக்கும் திறனை வளர்ப்பதும் சூழல்தான்.

தன்னை ஒருவன் வளர்த்துக் கொள்வதே சூழல் மூலம்தான். ஆக பிரச்சனைகளும் ஒருவனுக்கு சூழலில் இருந்துதான் வருகின்றன. தீர்வுகளும் சுழலில் இருந்துதான் வருகின்றன. அதை செய்யும் வல்லமையும் சூழலில் இருந்தே வருகிறது.


இதைத்தான் கீதையின் சாராம்சமாக

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.


என்று கண்ணன் சூழல்தான் எல்லாம் என்று சொல்லுகிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் பெரும் வெற்றி கண்ட காந்தி, இந்து முஸ்லீம் ஒற்றுமை விஷயத்தில் கண்டது என்ன? அதற்குக் காரணம் என்ன? காந்தியில் வெற்றி தோல்வி இல்லை. அந்தச் சூழலில்தான் இருந்தது..

காந்தி மட்டும் விடுதலை விரும்பவில்லை. இந்திய நாடே விடுதலையை விரும்பியது, அந்தச் சூழலை சரியாக உபயோகித்ததால் காந்தி வென்றார். அதற்கும் அவருக்கு அவர் சூழல் தந்த அறிவே உதவியது. அடுத்த விஷயத்தில் சூழலில் அந்த மனநிலை இல்லை.

உண்மை, அஹிம்சை என்பவைகளை காந்தி பெற்றது தன்னுள் இருந்தல்ல.. சூழலில் இருந்து. சிரவணன் நாடகம் கண்டு உண்மையை பேச முடிவெடுத்ததாக அவர் சொல்லி இருக்கிறார்.

இங்கே வந்து தமிழறிவை வளர்த்துக் கொண்டவர்கள் யார் யார் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். சூழல் புரியும்.

இராகுல் காந்தி அடுத்த பிரதமரா ஆக வாய்ப்பு தருவதில் சூழலுக்குத் தானே முதலிடம்.

நாம் நம்முடைய சூழலை உயர்த்தினால் நமக்குள் பல வெற்றியாளர்கள் உருவாகி வளர்வார்கள், அதுதான் வழியே தவிர,

பள்ளி வேண்டாம் கல்லூரி வேண்டாம்.. உடற்பயிற்சி வேண்டாம், திட்டங்கள் வேண்டாம் தனிமனிதன் எல்லாவற்றையும் சாதிக்கட்டும் என்று விட்டால் சாதனையாளர்கள் உருவாவது எப்படி?

ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கங்கள் குவிக்க முடியாமைக்கு காரணம் தனி மனிதனா? சமுதாயச் சூழலா?

இன்றும் நாம் நல்ல சமுதாயச் சூழலை அமைப்பதில் வெற்றி கண்டால்தான் சாதனையாளர்கள் உருவாகுவார்கள். தனிமனித முயற்சியில் இது பலிக்காது.


நெசஸிட்டி ஈஸ் மதர் ஆஃப் இன்வென்ஷன் என்பார்கள். தேவைதான் கண்டு பிடிப்புகளின் தாய். அந்தத் தேவை சூழலினால்தான் உருவாகிறது.

அதேபோல் சூழலில் ஒரு செயல் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவே வெற்றி/தோல்வியின் அளவையும் நிர்ணயிக்கிறது.

பால்ராஜ் சந்திராயன் பற்றி பேசினார். அது வெற்றி என்று சொல்கிறார்களே. 100 சதவிகித இலக்கை எட்டவில்லையே என்கிறார். ஆனாலும் முன்பு இருந்த சூழலை விட இப்பொது இருக்கும் சூழலில் நமது நம்பிக்கை அதிகரித்து இருக்கு இல்லையா? அதைத்தானே வெற்றியின் படிகள் என்கிறோம்.

முதலில் நம் சூழலில் சந்திரன் என்று ஒன்று இருந்ததால்தான் இந்த முயற்சியே இல்லையா?
சந்திரனை ஏன் ஆராயவேண்டும்?

1. பூமிக்கு ஆபத்து வந்தால் பிழைக்க,
2. இன்னும் பல கிரகங்களை ஆராய தளமமைக்க.

இந்தத் தேவைகள் எல்லாம் எதனால் வந்தது.. விண்வெளியில உள்ள ஆபத்துகள், நிலவில் உள்ள கனிமங்கள், உலகம் பிறந்தது எப்படி, இதே போல் உலகங்கள் உள்ளனவா என அறிய ஆவல் காட்டும் சமுதாயச் சூழல்,

மக்கா! முயற்சிக்கு உதவி செய்வது மட்டும் சூழல் இல்லை. முயற்சியை செய்ய வைப்பதே சூழல்தான்.

ஆனால் மாபெரும் வெற்றி என்பது பல சிறு சிறு வெற்றிகளின் தொகுப்பு என்ற அறியாமையே அதைத் தோல்வி எனக் கூறும்.

ராக்கெட் செலுத்தப்பட்ட கட்டம் வெற்றி, பூமியைச் சுற்றி சந்திரனை நோக்கிப் பாய்ந்ததில் வெற்றி.. சந்திரனைச் சுற்றி வருவதில் வெற்றி.. சந்திரனை படமெடுத்து அனுப்பியதில் வெற்றி.

சந்திராயன் ஆறு மாதங்களுக்கு முன்பே பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்து விட்டது. காரணம், நிலவில் நிலவும் வெப்ப நிலையை தவறாக கணித்ததுதான். சந்திராயனோட வெப்பநிலை கடந்த ஆறு மாதங்களாக வரையறுக்கப் பட்ட வெப்ப நிலையை விட 10 டிகிரி அதிகம் இருந்திருக்கு. இந்தச் சூழ்நிலையில் இவ்வளவு நாள் தாக்குப் பிடிச்சதே மிகப் பெரிய வெற்றிதான்.

இதன் நோக்கம் சந்திரனின் சுற்றுப் பாதையில் ஒரு செயற்கைக்கோளை இந்தியாவில் நிறுத்த முடியும் என்ற உறுதிப்பாடு. அதனால் இது வெற்றி. இதைத்தான் காலம் மனதில் வைக்கும்.

இதுவே சந்திரனுக்கு டவுன்பஸ் போயிட்டு வர்ர மாதிரி சூழ்நிலை இருந்திருந்தா சந்திராயன் தோல்விதான்.

அப்போலோ 13 தோல்வி என்பதற்கும், சந்திராயன் வெற்றி என்பதற்கும் இதுதாங்க வித்தியாசம்.

ஆக வெற்றி தோல்வி இங்கும் சூழ்நிலையால் தான்.

வெற்றி தோல்வி என்பது சூழ்நிலையால் நிர்ணயிக்கப் படுவது என்பதால்தான்.

மதுரை மைந்தன் அண்ணா சொன்ன மாதிரி வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படக் கூடாது.
அடுத்து பால்ராஜ் அண்ணா சொன்ன மாதிரி உழைப்பதையும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால் ஒன்றே ஒன்று கண்டிப்பாக செய்ய வேண்டும்.

எந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும். எந்த அளவு செய்ய வேண்டும் எனப் புரிந்து செயலாற்ற வேண்டும்.

அது வெற்றியில் முடிந்தாலும் சரி தோல்வியில் முடிந்தாலும் வரலாற்றில் இடமுண்டு,

இதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கை!.

இனிச் சுருக்கமாக கன்பியூஷியஸ் மாதிரி சொல்கிறேன்…

சுற்றுச் சூழலின் காரணமாக பல வாய்ப்புகள் உருவாகின்றன. இலக்குகள் நிர்ணயிக்கப் படுகின்றன்

அந்த வாய்ப்புகளை சூழலின் காரணமாக பெற்ற அறிவு, பலம், பணம் போன்றவைக் கொண்டு போராடுகிறான் மனிதன்.

இதில் வெற்றியோ தோல்வியோ அவனுக்கு புகழ் உண்டாகி அவன் வாழ்க்கை வெல்கிறது.

அதனால் வெற்றி தோல்வி என்பதைச் சூழல்தான் தீர்மானிக்கிறது. அது மட்டுமில்லாமல் எந்த ஒரு செயலிலும் சூழலை நீக்கி விட்டால் செயல் அர்த்தமிழந்து போகிறது. வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை.


இப்பொழுது வாதத்தைத் தொகுத்துத் தருகிறேன்.

ஒரு செயலைச் செய்ய அவசியத்தையும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவது சூழல்.
அதில் எது வெற்றி எது தோல்வி என நிர்ணயம் செய்வது சூழல்
அந்தச் செயலைச் செய்ய அறிவு, துணிவு, பலம், பணம் இன்னபிறவற்றை ஒருவனுக்கு அளிப்பதும் சூழல்.
தனிமனிதன் செய்வது இந்தச் சூழலை சரியாக உணர்ந்து செயல்படுதல் மட்டுமே.
வெற்றியும் தோல்வியும் சூழலில் அவன் ஏற்படுத்தும் மாற்றத்தால் அளக்கப்படுகிறது.


ஆக வெற்றி தோல்விகளுக்கு 80 சதவிகிதம் சூழலும் 20 சதவிகிதம் தனிமனிதனும் காரணம் எனச் சொல்லலாம். காரணம் தனிமனிதனின் உழைப்பிற்கு நாம் வேண்டிய மரியாதை அது.

என்ன செய்யவேண்டும் என அறிதல், எப்படி, எப்போது, எதைக் கொண்டு, என அறிவது முதல் நாம் சரியான பாதையில் செல்கிறோமா என சூழலை அறிவது வரை தனிமனிதனின் உழைப்பு இருக்கிறதே.. அதுக்கும் அவரது மன உறுதிக்கும்தான் அந்த 20 சதவிகிதம்.

-----------------------------------------------------------------------------------------------------
இனி எஞ்சி இருப்பது ஒரே ஒரு வாதம்.
கண்மணியின் மிகச் சிறந்த வாதம்தான் இந்தத் தலைப்பில் நடுவர் சூழலே வெற்றி, தோல்விக்கு அடிப்படை என தீர்ப்பளிப்பதற்குக் காரணம் என்று யாராவது சொல்லக் கூடும்.

ஆனால் இதிலும் சூழல் எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது என உணர வேண்டும்.

முதலில் இவ்வாதத்தை நான் இங்கு எழுப்பக் காரணம்,

செல்வா பட்டிமன்றம் போடலாம் என்ற சூழலை உருவாக்க
அமரன் இந்தத் தலைப்பு என்னும் சூழலை உருவாக்க,
வெட்டியாய் இருத்தல் என்னும் சூழல் காரணமாகவும்,
கடைசியாய் வாதாடுதல் என்ற சூழல் காரணமாகவும்
எனக்கு கிடைத்த நேரத்தால்,
தமிழ்மன்றம் என்ற சூழலால் நான் கற்ற தமிழ் வித்தைகள் என்னும் அறிவைப் பயன்படுத்தி இதை எழுதி
ஒரு சூழலை உண்டாக்கி இருக்கிறேன்.


எழுதியது நான் என்றாலும், எப்படி எழுதி இருக்கிறேன் என்பதோடு
எங்கே எழுதி இருக்கிறேன் என்பதைப் பொறுத்தே இந்த வாதத்தின் வெற்றியே.

லொள்ளு வாத்தியார், பென்ஸ், பிரதீப், சிவா.ஜி, இதயம், ஆரென், இளசு, தாமரை, போன்ற விவாதப் புலிகள் இல்லா இடம்,

பரஞ்சோதி என்னுடன் ஒத்து வாதாடுகிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை சாதாரணமாக ஒரு விவாதப் பகுதியில் பதிந்திருந்தால் வாதம் பிரதி வாதம் என போய்க்கொண்டு தானே இருக்கும். வெற்றி என ஒரு முடிவு வராது.

அதே இன்னும் யாரும் அதிகம் புரட்டாத பக்கங்களில் பதிந்தால்? அங்கும் வெற்றி என்ற வார்த்தை வந்திராது.

ஒரு போட்டிச் சூழலில் பதிப்பதால் மட்டுமே வெற்றி அல்லது தோல்வி என நிர்ணயம் ஆகிறது. ஆக சூழல் 80 சதவிகிதம். தனிமனித முயற்சி 20 சதவிகிதம். இங்கே எனக்காக திருவள்ளுவர், கண்ணன், கண்ணதாசன், கமலஹாசன் முதல், மற்ற வாதிகள் வரை பலர் காரணம். எனது ஒரே வேலை சூழலில் இருந்தவைகளை இடம் மாற்றி ஒரு வரிசையில் தொகுத்து அதைச் சூழலிலிட்டு புதுச் சூழலை உண்டாக்கியது, அவ்வளவுதான்.

செயலில்லாதன் செத்துப் போனவன். விலங்குகள், தாவரங்களை கூட தனது ஜீன்களை மண்ணில் வெகுகாலம் வாழவைக்க செயல்படுகின்றன. செயல் ஒரு நோக்கு கருதி செய்யப்படுகிறது. அந்த நோக்கை உருவாக்குவதும் சூழலே. வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதும் சூழலே.

சூழல் என்றால் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். சூழல் என்பது என்ன என்று புரியாத வரைக்கும்தான் நான் பெரியவன் நீ பெரியவன் நான் சாதித்தேன் நீ சாதித்தாய் என்னும் கர்வமெல்லாம்.

------------------------------------------------------------------------------------------------------

இங்கு நான் எழுப்பிய வாதங்கள் மக்களைக் குழப்போ குழப்பு என்று குழப்பி இருக்கும்.

இந்தக் குழம்பியச் சூழ்நிலையில் வாதங்களுக்கு விடை கிடைக்காத காரணத்தினால் ஏற்படும் சூழல் பட்டிமன்ற நடுவரை இதுதான் சரி என தீர்ப்பு அளிக்க வைக்கும்.

அப்படி குழப்ப நான் உபயோகித்தது நான் என்னுடைய சூழலில் பெற்ற அறிவு!

அப்படி இல்லாவிட்டாலும் என் வாதங்களுக்கு எல்லாம் பதில் கிடைத்து நடுவர் வேறு முடிவு கொடுக்கலாம். அப்படி என்றாலும் வேறு வாதம்தான் சரி என்ற சூழல் உண்டாவதால்தான் நடுவர் அந்தத் தீர்ப்பை அளிப்பார்.

அப்படி நான் உண்டாக்கிய சூழலை மாற்ற நீங்கள் உபயோகிப்பதும் உங்கள் சூழலில் நீங்கள் பெற்ற அறிவைத்தான்.

ஆக தன்னைச் சுற்றி உண்டாக்கப்பட்ட சூழலைப் பொறுத்து,
தன் சூழலில் இருந்து பெற்ற அறிவைப் பயன்படுத்தி
எந்த வாதம் வெற்றிப் பெறுகிறது என நடுவர் தீர்ப்பு அளிக்கப் போகிறார்.


ஆக நடுவர் தீர்ப்பு அளிப்பதே எங்கள் அணிக்கு வெற்றிதான் என்பதையும் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படியே ஒரு ஸ்திரமான தீர்ப்பை அளிக்காவிட்டாலும் அதற்கும் காரணம் இப்பதிவுகள் ஏற்படுத்தியச் சூழலாகத்தான் இருக்க முடியும்..

எனவே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகுப்பது சூழலே என இன்னொரு முறை அழுத்தமாகக் கூறி என் வாதத்தை முடித்து,

நல்வாதம் வெல்ல நல்லதொரு சூழல் அமையப் பிரார்தித்து அமைகிறேன்.

நன்றி. வணக்கம்,

------------------------------------------------------------------------------------------------------

பின் குறிப்பு : என் வாதத்தின் சாராம்சம்.(சூழல் சூழல் என்ற வார்த்தை நடுவர் தலையைச் சுற்ற வைத்திருப்பதால் நடுவர் சரியாகப் புரிந்து கொள்ளும் சூழலை ஏற்படுத்தும் பொருட்டு..)

சூழலுக்கு தேவையில்லாத செயல் வெட்டிச் செயல்.
சூழலின் தேவையே மனிதனின் என்ன செய்யவேண்டும் என்பதை அடையளப்படுத்துகிறது.
தனிமனிதன் பொருத்தவரை அவன் ஒரு செயலை, ஒரு சூழலில் முயற்சித்து செய்கிறான் அவ்வளவுதான்.
அச்செயலின் வெற்றி தோல்வி என்பது சூழலால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.
சூழல் இல்லா விட்டால் அது வெறும் செயல்தான். காலத்தால் அது அழிந்துவிடும்.
சூழல் என்பது மாற்றத்திற்கு உட்பட்டது. எனவே வெற்றி என எண்ணியது தோல்வியும் ஆகலாம் தோல்வி என எண்ணியது வெற்றியும் ஆகலாம். சூழலில் காலம் தாண்டி வாழும் மாற்றத்தை விளைவிக்கும் செயல்களே நிலைக்கின்றன, மற்றவை அர்த்தமற்றவை ஆகின்றன.

எனவே வாழ்க்கையில் வெற்றி தோல்வி உண்டு. அவை முக்கியமும் கூட.
வெற்றி தோல்விக்கு சூழல்தான் மிக முக்கிய காரணம்..
 
அம்மாடி இவங்களை சன் டி.வி. பட்டிமனறத்தில் பேச அழைத்தால் தீபாவளிக்கு ஆரம்பிச்சு பொங்கல் வரை பேசிக்கிட்டே இருப்பாங்க. :lachen001:
 
சூழலை வச்சி இப்படியா நடுவரை சுழல்ல சுத்தவிடுறது...??:medium-smiley-088::medium-smiley-089:

ஆனாலும் நீங்க ரொம்பப்ப்ப்ப்ப்ப் நல்லவங்க... அமருக்கு இந்த சூழல்ல வேலையே இல்லன்னு தெரிஞ்சி அவரோட வேலையையும் நீங்களே செஞ்சுவச்சிருக்கிங்களே...!!
 
கண்மனி அக்கா இவ்வளவு பொறுமையாக உங்களது வாதத்தை தந்து உள்ளிர்கள்.அதற்கான சூழல் அமைந்துள்ளது.அடுத்த ரவுண்ட்க்கு சூழல் எப்படி அமையுதுன்னு பார்ப்போம்
 
ஆகா நல்லா கொடுத்து இருக்காங்கய்யா டீடெய்லூ தலைய சுத்துது எல்லாம் சூழல் தான் காரணம் போல :medium-smiley-100::medium-smiley-100:

எல்லாரும் தங்களது தரப்பு கருத்துக்களை சொல்லி உள்ளார்கள் சூப்பர் ம் நடுவரே ஒழுங்கா மட்டும் தீர்ப்பு சொல்ல உமக்கு இருக்குய்யா ஆப்பு... :D :D :D
 
யம்மடியொவ்....என்ன வாதம்.. :icon_rollout:

நான் இப்போ எங்கே இருக்கேன்...? அப்படி னு எதிர்தரப்பு சூழல் தெரியாம ஓடினா கண்மனி அவர்கள் காரணம்னு யாரும் சூழல் தெரியாம சொல்லிடதீங்க.... :D:D:fragend005:
 
Back
Top