நார்வே திரைப்பட விழாவிற்கு 17 தமிழ் படங்கள்

thumbnail.aspx

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் ஏப்ரல் மாதம் 20 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நார்வே தமிழ் திரைப்பட விழாவில் 17 தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது.

சிறப்புப் பிரிவு, என்றும் பசுமை என்று பல்வேறு பிரிவிகளில் திரைப்படவுள்ள திரைப்படங்களில் ரஜினி காந்த் நடித்த எந்திரன், இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அங்காடித் தெரு, விண்ணைத்தாண்டி வருவாயா, களவாணி, ஆடுகளம் ஆகிய படங்கள் திரையிடப்படும் என்று நார்வே தமிழ் திரைப்பட விழாவின் இயக்குனர் வசீகரன் சிவலிங்கம் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வசீகரன், என்றும் பசுமை பிரிவில் எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் ஆகியன திரையிடப்படும் என்றார்.

மதராசாபட்டிணம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, என் சுவாசமே, யுத்தம் செய், பயணம், தா, தென்மேற்கு பருவக்காற்று ஆகிய படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதெனக் கூறிய வசீகரன், சிறந்த கதையமைப்பு, இயக்கம், புதுமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இவை மட்டுமின்றி, ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட எள்ளாளன், செங்காந்தல் ஆகிய படங்களும், பல குறும்படங்களும் திரையிடப்படவுள்ளதென வசீகரன் தெரிவித்துள்ளார்.
 
Back
Top