ஷீ-நிசியின் கவிதைகளுக்கு முதல் ரசிகன்..... ஆதவன்..
மன்றம் வருவதற்கு முன்பே சிறு மோதலில் உண்டான நட்பு.. மன்றம் வந்தபின்னர் இறுக்கமாகி இன்னமும் தொடர்கிறது.
ஷீ-நிசியின் கவிதைத் தரத்தை எத்தனை தூரம் சொல்லலாம்?
ஒவ்வொரு கவிதைக்கும் காலமெடுத்து செதுக்கி, ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என்று சொல்லும்படியாக வரித்து, தனக்குள்ளே கவிஞனை விட்டு உலவி, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து..... ஒரு கவிதையின் தரத்திற்கு உழைப்பு முக்கியம் என்பதை நமக்கு உணர்த்துபவர்.
காட்சியழகுக் கவிஞர் என்று இளசு அண்ணாவால் பாராட்டப்பெற்ற இவரது கவிதைகள், நம் கண்முன்னே நிறுத்துகிறது காட்சிகளை... கவிதையின் எளிமையும் புதைந்திருக்கும் எண்ணங்களும் படிக்கும் நம்மை ஒரு உயர்தளத்திற்கு உயர்த்துகின்றன.
காதல் கவிதைகள் எத்தனையோ படித்ததுண்டு.. இவரது தனிபாணி.. மெல்ல வருடிவிடும் காதலியின் கைவிரல் போல ஒவ்வொரு வார்த்தைகளையும் நமக்குள் அடுக்கி முத்தமிடுகிறார். கண்கள் அகலாமல் கவிதை பார்த்துக் கொண்டிருக்கும் காதலர்களாக வாசகர்கள்...
இவரது கவிதைகள் புத்தகமாக வெளியிட்டாலொழிய இவரைப்பற்றி மற்றவர்கள் அறிவது கடினம்.