வரு'வாய்'
--------
முப்பது நாட்கள் காத்திருந்தேன் ..உன் வரவிற்கு ..
இன்று நீ வருவாய் என்பதால் காலை முதலே மனதுக்குள் மழை ..
துணி தோய்த்து ..பின் தேய்த்து, சட்டை பிடிப்புகளில் மடிப்பு ஏற்றி
படியாத முடி சீவி ...முடியாமல் படி ஏறி ...இணைய கபேயில் காத்திருந்து
காத்திருந்து ..காலங்கள் போன பின்னர் ...
வந்தாள் மகாலஷ்மி ...வாயெல்லாம் பல்லாக திறந்தேன் ...என்
மடிக்கணினியில் வங்கியின் வலைக் கதவை ...
அடடா ..எனக்கு முன்னமே உனக்காக இத்தனை போட்டியா ..
வீட்டுக் கடன், சேட்டுக் கடன், கடன் பதிவு அட்டை கடன், உடன் முடியா வாகனக் கடன்
அங்காடி மளிகை கடன், பங்காளி கொடுத்த கடன் ...
உடன் சென்று விட்டாயே ..கடன் தந்த திசையெல்லாம் ...என் செய்வேன் ..
இடிந்து விழுந்து விட, பொடிந்து நலிந்து விட ..போக்கில்லை பேரழகே ..
இதோ உழைக்க தொடங்கி விட்டேன் , நீ வரும் வரை பிழைக்க ..
அடுத்த மாதம் நீ மீண்டும் வருவாய், என் "வருவாயே ",
அப்போதாவது என்னுடன் சற்று இரு..சேமித்துக் கொள்கிறேன் ..உன்னை
அது வரை என் இருப்பை காத்து, காத்திருக்கிறேன் !!
உன் வரவை எண்ணி ...எண்ணி ...

..நதிநேசன்