மதிப்பிற்குரியவர்களே,

எனக்கு கிடைத்த தகவல்களின் தொகுப்பை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கின்றேன்.

=====
அஜினமோட்டோ

அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது'' என்று சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, அண்மையில் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அஜினோமோட்டோ, இதன் உண்மையான பெயர் மோனோ சோடியம் க்ளூட்டாமேட்(MSG)என்பதுதான் இது ஒரு நச்சுப்பொருள் என்பது தெரியாமலேயே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அஜினோமோட்டோவை 1908ம் ஆண்டு கிகுனே இகடே. என்ற ஒரு ஜப்பானியர் கண்டுபிடித்தார். அங்கெல்லாம் இதன் பெயர் எம்.எஸ்.ஜி.,தான். ஆனால் இன்று ஜப்பானிலும் இதன் பயன்பாடு குறைந்து விட்டது. இந்த நிலையில், அஜினமோட்டோ நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன் அமர்க்களமாக இந்த மோனோ சோடியம் குளுட்மேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
பால், பால் சேர்க்கப்பட்ட பொருள்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் அஜினமோட்டோ நிறுவனம் இங்கு அடியெடுத்து வைக்க இந்திய அரசு அனுமதியளித்தது. இப்போது இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இந்தப் பொருள் விளம்பரப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை மறைத்து 'added flavours' என்று மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள். குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளான மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோமோட்டோ, தன் கரங்களை இன்னும் அதிகமாக நீட்டிக் கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.
அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கும, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும். இதனால், உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் 'ஆர்குவேட் நுக்ளியஸ்' என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.
ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக்கூடாது என்று அமெரிக்க அரசு தடை விதித்தது.
பிறப்புக் கோளாறு, உடல் உறுப்புகளில் வளர்ச்சியற்ற தன்மை, தலைவலி, வாந்தி, செரிமானச் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், கை கால் மறத்துபோதல், ஆஸ்துமா மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை அஜினோமோட்டோவை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் அண்மையில் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இன்று 2ரூபாயிலிருந்து 250ரூபாய்க்குகூட இது தரத்துக்கேற்ப விற்கப்படுகின்றது. வெளிநாடுகள் பலவற்றில் அஜினோமோட்டோ தடை செய்யப்பட, இந்திய விற்பனையாளர்கள் வருமானத்துக்குப் பயந்துபோய் இது தாவரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்று சப்பைக் கட்டு கட்டினார்கள்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட, அஜினோமோட்டோ நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் 'MSG' அதாவது மோனோ சோடியம் கலந்துள்ளது என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கை வாசகங்கள் கூட இன்று பொட்டலங்களில் இல்லாமலிருப்பது அந்த வியாபார நிறுவனங்களின் வெற்றியையும் அரசாங்கத்தின் அலட்சியத் தன்மையையுமே காட்டுகிறது.

(நன்றி : இணையதளம்)

====

உங்கள் நலம் உங்கள் கையில்.

வணக்கங்களுடன்,
செல்வம்