இனியவர்களே!

எப்போதும் சல சல என சங்கீதம் பாடி ஓடிக்கொண்டிருக்கும் மன்றம் கொஞ்ச நாட்களாக சலசலப்பைக் கண்டுள்ளது. அதனைத் தவிர்க்கும் பொருட்டு உங்களுடன் மனம் திறந்து...

எல்லா வகைப் பறவைகளும் களிக்கும் இடமாக இருக்க வேண்டும் என்பதே மன்றத்தின் விருப்பம். அதே நேரம் தனித்தன்மையுடன் திகழவேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது நமது மன்றம்.

அந்த வகையில் மன்றம் ஒரு பல்பொருள் வழங்கியாக மிளிர வேண்டும் எனும் நல் நோக்கத்துடன் இணையத்தில் சேகரித்ததை மன்றத்துடன் பகிர்வோரை மன்றம் மகிழ்ச்சியுடன் உற்சாகப்படுத்துகிறது.

அவ்வெண்ணம் அழகியல் கலந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்போரை மன்றம் மகிழ்ச்சியுடன் மெச்சுகிறது.

நகலெடுத்துப் பதிதல்...

வெட்டி ஒட்டுதல்...

இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

நகலெடுத்தல் என்றால் ஈயடிச்சான் காப்பி்.

வெட்டி ஒட்டல் அப்படி அல்ல.

பெரிய மரங்களிலிருந்து ஒரு சிறு கிளையை வெட்டி வேறிடத்தில் நாடுவதைப் போன்றது வெட்டும் ஒட்டும் பதிவு.

விதையை எடுத்து மனதில் பதியன் போட்டு நிலத்தில் விதைப்பதைப் போன்றது ஒட்டும் பதிவு.

ஒட்டுமரங்களைப் போன்றும் இருக்கலாம் ஒட்டும் பதிவு.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மன்ற மக்களின் கருத்தாடல்களைக் கவனித்ததில் மன்றம் அனுமதிக்காத எதனையும் எவரும் செய்யவில்லை என்பது புலனாகிறது.

ஒட்டுப் பதிவுகள் பற்றிய தெளிவின்மை பலரைப் பிடித்திருப்பது தெளிவாகிறது.

தெளிவுகளைக் கொடுக்க வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு. அதனை மன்றப் பிரிவுகள் வாரியாகச் செய்யத் துவங்கியுள்ளோம்.

ஒவ்வொரு மன்றப் பிரிவிலும் எப்படியான பதிவுகள் இடப்பட்டல் வேண்டும் என்ற வரையறை கொடுக்கப்படும். அனைவரும் அதனைக் கடைப்பிடிப்போம்.

தவறுகள் காணுமிடத்து தவறாமல் உணர்த்துவோம்.

நன்றி.