Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 46

Thread: கவிதா : மரபுக் கவிதை எழுதுவது எப்படி?.

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    5.5. அளபெடைத் தொடை
    ஒரு பாடலின் அடியில் உயிர் எழுத்தோ அல்லது ஒற்றெழுத்தோ
    அளபெடுத்து வருவது அளபெடைத் தொடையாகும். இதுவும் முன்னர்க் கூறப்பட்ட
    தொடைகளைப் போன்று,
    1. இணை அளபெடைத் தொடை
    2. பொழிப்பு அளபெடைத் தொடை
    3. ஒரூஉ அளபெடைத் தொடை
    4. கூழை அளபெடைத் தொடை
    5. மேற்கதுவாய் அளபெடைத் தொடை
    6. கீழ்க்கதுவாய் அளபெடைத் தொடை
    7. முற்றளபெடைத் தொடை
    என ஏழு வகையாகும்.

    உயிர் அளபெடை
    எ.டு:-
    யானை வெரூஉ புலிதாக் குறின்.
    இங்கே 'உ' என்ற உயிர் எழுத்தானது 'ரூ' எனும் 2 மாத்திரை அளவுடைய நெடிலுடன் இணைந்து
    3 மாத்திரை அளவாக ஒலித்து உயிர் அளபெடை ஆயிற்று.
    குறிப்பு:-
    இதை 'வெரூ' 'உ' என்று பிரித்து வாசிக்கக்கூடாது. வேரூஉ என்பது ஒரே சீர் ஆகையால்
    'உ' என்பதை மட்டும் இன்னும் சற்று நீட்டித்து வாசிக்க வேண்டும்.

    ஒற்றெளபெடை:-
    எ.டு:
    எங்ங்கே, அம்ம்பு
    உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் உயிர் அளபெடையை உருவாக்க இயலுவதைப் போல மெய் எழுத்துக்கள்
    பதினெட்டும் தத்தம் ஒலியில் நீட்டித்து வருவதை ஒற்றெளபெடை என்கிறோம். இவை பொதுவாக தளை
    கணக்கிற்காக மிக அரிதாகவே எடுத்துக்கொள்ளப்படுவதாலும் தற்கால வழக்கத்தில் அவ்வளவாக இல்லாததாலும்
    அடுத்த தொடையினைப் பற்றிப் பார்ப்போம்.

    5.5. இரட்டைத் தொடை:-
    ஓரடியில் வந்த சொல்லே மீண்டும் அடுத்து வரும் அடியில் வருவது இரட்டைத் தொடையாகும்.
    எ.டு:-
    பல்சான் றீரே! பல்சான் றீரே!
    பயன்இல் மூப்பிற் பல்சான் றீரே!

    இத்தகைய தொடை நாடக நடையில் பெரிதும் கையாளப் படுகிறது.
    குறிப்பு: ஒரே அசை சேர்ந்தார்ப்போல் வருவது இரட்டைக்கிளவி ஆகும்.
    ஒரே சொல் சேர்ந்தார்ப் போல் வருவது அடுக்குத்தொடர் ஆகும்.
    ஒரே சொல் வெவ்வேறு இடங்களில் மேற்கூறிய ஏழுவகைகளில்
    (இணை, பொழிப்பு... இப்படியாக)வருவது இரட்டைத்தொடை ஆகும்.
    ஒரே சொல் அல்லது அசை ஈற்றில்(கடைசியில்) மேற்கூறிய
    ஏழுவகைகளில் வருவது இயைபுத் தொடை ஆகும்.
    இயைபு பொருள் தரவேண்டிய அவசியம் இல்லை. தந்தாலும் தவறில்லை.
    இரட்டைத்தொடை இரட்டையாக வந்து பிற அடிகளிலும் மீண்டும் வரும்.
    இது பொருள் தரும் சொல்லாகவே இருக்கும்.

    இரட்டைக்கிளவி ஒலி நயம் மட்டுமே தரும். பொருள் தராது.
    அடுக்குத்தொடர் பிரித்தாலும் பொருள் தரும்.

    (...தொடரும்)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    5.7. அந்தாதித் தொடை
    ஓரடியின் ஈற்றுச் சீர் அடுத்த அடியின் முதற்சீராக வருது அந்தாதித்
    தொடையாகும். ஒரு பாடலின் ஈற்றுச் சீர் அடுத்த பாடலின் முதற்சீராக வரும்
    நூல்கள் பல உள்ளன. கந்தர் அந்தாதி, அபிராமி அந்தாதி, சிவபெருமான் திருவந்தாதி,
    நான்முகன் திருவந்தாதி முதலான பல நூல்கள் உள்ளன.
    எ.டு:-
    மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே
    தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே
    வாங்கும் கதிரோனைத் தாங்கும் எளியோனே
    தாங்கும் எளியோரால் வாழும் புவியோரே

    இதில் முதலடியின் ஈற்றுச்சீர் அடுத்த அடியின் முதற்சீராக வந்ததைக் காணலாம். இது
    அந்தாதித் தொடையாகும்.
    எ.டு:-
    ஆன்ற நற் காலைக் கதிரவன் தோன்றினான்
    தோன்றிய காலைத் தூங்கிருள் அகன்றது
    அகன்ற இருளால் கடிமலர் மலர்ந்தது
    மலர்ந்ததா மரையை மங்கை கண்டனள்
    கண்டநன் மங்கையின் கவின்முகம் பூக்க
    பூத்தது முகமோ புதுமலர் மன்னோ!


    இதில் முதலடியில் வந்த ஈற்றுச் சீர் இரண்டாம் அடியில் முதற் சீர் கொண்டு வந்தது.
    இத்தன்மையில் மூன்றாம் அடியும், நான்காம் அடியும், ஐந்தாம் அடியும் ஆறாம் அடியும் வந்து
    அந்தாதித் தொடயாயிற்று.

    5.8. செந்தொடை
    இதுவரை நாம் கண்ட தொடைகளான மோனை, எதுகை, இயைபு, அளபெடை, இரட்டை,
    முரண், அந்தாதி இவை யாவும் இன்றி ஒரு கவிதை அமையுமானால் அது செந்தொடையின் பாற்படுவதாகும்.
    எ.டு:-
    வாகை சூடிய இளைஞர்கள் எல்லாம்
    அவரவர் சால்பு தோன்றச்
    செம்பொருள் கண்டு மகிழ்ந்தனர் நன்றே.
    இப்பாடலில் எதுகை இல்லை. மோனையும் இல்லை. மற்றும் மொழியப்பட்ட வேறு தொடைகளும் இல்லை.
    எனவே இத்தன்மையில் முற்கூறிய ஏழு தொடைகளில் எதுவும் வராது செந்தொடை ஆனது.
    இதன் நோக்கமானது ஒரு கவிதையில் கூறப்படும் கருத்துக்களை எவ்வாறேனும் எடுத்துக் கொள்ளவேண்டும்
    என்பதும் அத்தகைய கவிதைகளை யாப்பு இலக்கணத்தைக் காட்டித் தள்ளிவிடக் கூடாது என்பதும் ஆகும்.

    இதனையே யாப்பருங்கலக் காரிகை ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுறுத்தியுள்ளார். தற்போது வழங்கி வரும் பெரும்பாலான புதுக்கவிதைகள் இத்தகைய தொடையழகுடன்
    விளங்குகின்றது எனில் மிகையாகாது.

    இதுவரை யாப்பின் உறுப்புக்களைப் பற்றிப் படித்தோம். அதில் மிக முக்கியமாக அறிந்துக் கொள்ளவேண்டிய எழுத்தின்
    வகையான குற்றியலுகரத்தைப் பற்றி அடுத்த பாகத்தில் விரிவாகப் பார்ப்போம்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாகம் - 6

    அளபெடை மாத்திரை நீட்டிக்கச்செய்யும்.
    குற்றியலுகரமும், குற்றியலிகரமும் மாத்திரை குறையச்செய்யும்.

    மாத்திரை நீட்டல் அளபெடை வேலை
    குற்றிய லுகரமும் குற்றிய லிகரமும்
    அவ்வாறு மாத்திரை குறைக்கும்
    இப்பாகத்தின் விளக்கம் இதுவே

    - (நேரிசை ஆசிரியப்பாவில் எழுதியது)
    ------------------------------------------------------------------

    குற்றியலுகரம்

    'உ' கரம் என்ற உயிர் எழுத்து ஏனைய மெய்யெழுத்துக்களோடு சேர்ந்து வரும்போது அதனை நிலைமொழியாகக் கொண்டு வருமொழி உயிரெழுத்தை
    முதலாகக் கொண்டு வந்தால் ஏற்படும் மாறுதலை உரைப்பதாகும்.
    அத்தன்மையில் நிலைமொழியின் ஈற்றில் உள்ள உகரம் கெடுகிறது. வருமொழியில்
    உள்ள உகரம் நிலை மொழியில் உள்ள மெய்யெழுத்தோடு சேர்கிறது. இதனால்
    உகர எழுத்தின் ஒரு மாத்திரை குறைந்து ஒலிக்கிறது. இதுவே குற்றியல் உகரம்
    எனப்படும். இதற்கு 1/2 மாத்திரை என்க.

    இதனை உரை நடையில் எழுதும்போது எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. ஆனால்
    கவிதைகளில் வரும்போது இத்தகைய குற்றியலுகரத்தால் ஒரு மாத்திரையானது
    குறைந்து ஒலிப்பதால் தளை தட்டும். ஆதலாம் அத்தகைய குறைபாடு உண்டாகாதவாறு
    காத்துக் கொள்ள இதைப்பற்றி விரிவாக உரைக்கவேண்டியதாயிற்று.
    நன்கு தேர்ந்தவர்களுக் இத்தகைய குற்றியலுகரத்தைக் கையாளும்போது கவனமாகவே
    இருப்பர். இத்தகைய குற்றியலுகரத்தைப் பற்றித் தொல்காப்பியமும் உரைக்கிறது. நன்னூலும்
    உரைக்கிறது.
    எனவே, குற்றியலுகரத்தைப்பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் பார்ப்போம்.

    உகரம் எப்போது குறுகுகிறது?
    க், ச், ட், த், ப், ற் என்கிற மெய் எழுத்துக்கள் உகரத்தோடு சேர்ந்து முறையே
    கு, சு, டு, து, பு, று என ஆகிறது. இவ்வெழுத்துக்களைக் கொண்டு முடியும் உயிர் எழுத்துக்கள்
    வரும்போது உண்டாகும் குற்றியலுகரப் புணர்ச்சியால் உகரம் குறுகி ஒலிக்கிறது. இதனால்
    கவிதையில் தளை தட்டும்.

    குற்றியலுகரத்தின் வகைகள்:-
    குற்றியலுகரம் ஆனது புணரும் நிலைமொழியின் ஈற்றயல் எழுத்தின் தன்மையைப் பொறுத்து
    1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
    2. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
    3. வன் தொடர்க் குற்றியலுகரம்
    4. மென் தொடர்க் குற்றியலுகரம்
    5. இடைத் தொடர்க் குற்றியலுகரம்
    6. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
    என வகைப்படுத்தப் பட்டுள்ளது.

    6.1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்:-
    இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
    எ.டு:-
    'நா'கு, 'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, த'ரா'சு
    இங்கே நா, கா, மா, மா, பே, ரா என்ற நெடில் எழுத்துக்களை அடுத்து முறையே
    கு, சு, டு, து, பு, று என்ற உகர எழுத்துக்கள் வந்துள்ளன. இனி இவை எப்படி
    குற்றியலுகரமாகின்றன என்று பார்ப்போம்.
    எ.டு 1:-
    'காசு' என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இது 'இல்லை' என்ற சொல்லுடன்
    இணைந்து 'காசில்லை' என்ற குற்றியலுகரத்தைத் தருகிறது.
    கா | சு + இல்லை = காசில்லை
    க்+ஆ | ச்+உ + இ ல்லை = கா ச்+இ ல்லை ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)
    குறிப்பு:-
    'காசு' என்பது 'காசி' என்று மாறியதால் அதை இகரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
    உகரம் கெட்டு தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்ததால் குற்றியலுகரமே ஆகும்.
    மேலும் குற்றியலுகரமானது நிலை மொழி திரிவதால் மட்டுமே உண்டாகிறது;
    வரும் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
    குற்றியலுகரத்திற்கும் குற்றியலிகரத்திற்கும் உள்ள வேறுபாட்டை பின் வரும் பகுதிகளில்
    ஆய்வு செய்வோம்.
    எ.டு 2:-
    மா | டு +அல்ல = மாடல்ல
    ம்+ஆ | ட்+உ +'அ' ல்ல = மா ட் + அ ல்ல ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)
    'மாடு' என்ற சொல் 'அல்ல' என்ற சொல்லுடன் இணைந்து நெடில் தொடர் குற்றியலுகரம் ஆயிற்று.
    அதாவது டு என்ற உகர எழுத்தானது 'மா' என்ற நெடிலுக்கு அடுத்து வந்ததாலும் வரும் மொழியின்
    முதல் எழுத்தான 'அ' உடன் நிலைமொழியின் ஈற்றிலுள்ள உகரம் திரிந்து ட்+உ= டு ஆனது ட்+அ=ட
    என்று குறுகியதால் நெடில் தொடர் குற்றியலுகரம் ஆனது. அதாவது நெடிலைத்தொடர்ந்த
    குற்றியலுகரம்.

    6.2. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:-
    இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
    எ.டு: வி'ற'கு, அ'ர'சு, கு'ற'டு, அ'ரி'து, ம'ர'பு, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு, அ'ட'கு போன்றவை.
    அரசு + ஆட்சி = அரசாட்சி
    நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து ர்+அ என்பதில் 'அ' என்னும் உயிரெழுத்தை அடுத்து 'சு' என்ற
    உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி' எனும் வரும் மொழியின் முதலெழுத்து
    'ஆ' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து அரசாட்சி என்று புணர்ந்ததால்
    உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

    6.3. வன் தொடர்க் குற்றியலுகரம் :-
    இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
    எ.டு: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.
    பட்டு + ஆடை = பட்டாடை
    இங்கே நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ட்' என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து 'டு' என்ற உகர எழுத்து வந்ததாலும், அது 'ஆடை' என்ற வரும்மொழியுடன் இணைந்து தனது ட்+உ=டு விலுள்ள உகரத்தைத் திரிந்து ட்+ஆ=டா ஆனதாலும் வன் தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

    (...தொடரும்)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    (தொடர்ச்சி..)

    6.4. மென் தொடர்க் குற்றியலுகரம்:-
    இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
    எ.டு: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.
    சங்கு + ஊதினான் = சங்கூதினான்
    இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும் வரும்மொழியுடன்
    இணைந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன் இணைந்து சங்கூதினான் என்று
    ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.

    6.5. இடைத் தொடர்க் குற்றியலுகரம்:-
    இதில் இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
    எ.டு: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு
    பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்.
    இங்கே நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம் வந்ததாலும்
    அது வரும்மொழி 'உ' உடன் இணைந்து நிலைமொழி உகரம்கெட்டு பெய்துடுத்தான் என்று
    குறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று.

    6.6. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
    இ'து' - ஆய்த எழுத்தை அடுத்து உகரம் ஆகும்.
    அது, இது, எது, கசு, எகு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி முதலில்
    உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.
    அது + இல்லை = அதில்லை
    இங்கே நிலைமொழியில் '' என்ற ஆய்த எழுத்தை அடுத்து 'து' வந்ததாலும்
    வருமொழி 'இ' உடன் இணைந்ததால் உகரம் போய் அதில்லை என்று ஆனதாலும்
    ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.

    மீள் பார்வை:-
    இப்பாகத்தில் குற்றியலுகரமானது நிலை மொழி ஈற்றில் கு,சு, டு, து, பு, று என்ற உகர எழுத்துக்கள்
    வந்து அவை நிலைமொழியின் முதல் எழுத்தில் உள்ள உயிருடன் இணைவதால் 'உ' கரம் ஓடி தனது
    இயல்பான ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம் என்றும்
    அவற்றில் நெடில் தொடர்க் குற்றியலுகரம், வன், மென், இடைத்தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்
    குற்றியலுகரம் ஆகியன வரும் என்றும் பார்த்தோம்.

    குறிப்பு:-
    நெடில் தொடர்க்குற்றியலுகரம் போல குறில் தொடர்க்குற்றியலுகரம் ஏன் வரக்கூடாது என்ற ஐயம்
    ஏற்படக்கூடும். கீழே உள்ள எடுத்துக்காட்டுகளை கவனிக்கவும்.
    மிகு, பசு, மடு, மது, தபு, மறு - இவையெல்லாம் குறிலை அடுத்து உகரம் வரும் சொற்களுக்கு உதாரணங்கள்.
    ஆனால் இவை குற்றியலுகரமாகாது.
    ஆனால் உயிர்த்தொடர்க்குற்றியலுகரத்தில் விறகு, மரபு போன்ற சொற்களுடன் ற, ர அடுத்து முறையே 'கு',
    'பு' வந்த போதும் அவற்றை குறில் தொடர்க்குற்றியலுகரமாகக் கருதுவதில்லை. உயிர்த் தொடர்க்
    குற்றியலுகரமாகவே கருதுகிறோம்.

    குற்றியலிகரம்

    உகரம் திரிந்து இகர முறும்
    யாகாரம் சேர்ந்து வந்து
    (வெண்பாவில் எழுதியது)
    -----------------------------
    உகர எழுத்துக்களின் முன்னே வருமொழியின் முதலில் 'யா' எழுத்தானது வந்தால்
    நிலைமொழியின் உகரம் திரிந்து இகரமாகும். இதுவும் குற்றியலுகரத்தைப் போன்று
    தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
    எ.டு:-
    நாடு + யாது = நாடியாது
    இங்கே நிலை மொழியின் ஈற்றில் 'டு' விலுள்ள 'ட்+உ' உகரமானது வருமொழி
    'யா' உடன் இணைந்ததால் 'ட்+இ' என்று திரிந்து "நாடியாது" ஆனது.
    எனவே தனது மாத்திரையிலிருந்து குறைந்து ஒலித்து குற்றியலிகரம் எனப்பட்டது.
    எ.டு:-

    வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
    தீமை யிலாத சொலல்
    .
    இங்கே உள்ள வெண்பா பாடலை நோக்குக.
    மா முன் நிரையும், விளம் முன் நேரும், காய் முன் நேரும்
    ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய்
    கடைசிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என முடிதல்
    வெண்பாவின் இலக்கணம் ஆகும்.
    ஆனால்
    எனப் படு வ = நிரை நிரை நேர் = கருவிளங்காய்
    தியா தெனின் = நிரை நிரை
    எனவே காய் முன் நிரை வந்து தளை தட்டியது எனல் கூடாது.
    இங்கே எனப்படுவது + யாதெனின் = எனப்படுவதியாதெனின் = எனப்படுவ தியாதெனின்
    என்று குற்றியலிகரம் வந்ததால், அதாவது நிலைமொழியின் (எனப்படுவ'து') ஈற்றிலுள்ள
    உகரமானது வருமொழி('யா'தெனின்) 'யா' உடன் இணைந்து உகரம் கெட்டு இகரம்
    ('தி'யாதெனின்) என்று குறைந்து ஒலித்ததால் 'தி' ஆனது தனது ஒரு மாத்திரை அளவில்
    இருந்து 1/2 மாத்திரையே பெற்றது. ஆகவே
    'தி'யா தெனின் = நேர் நிரை என்றே கொளல் வேண்டும். எனவே இலக்கணப்படி
    கருவிளங்காய் முன் நேர் வந்து தளை அமைந்தது.
    இதிலிருந்து, குற்றியலிகரம் எப்போது வரும் என்பதும்,
    குற்றியல் உகரத்திற்கும் - இகரத்திற்கும் உள்ள வேறுபாடும் புரிந்திருக்கும்
    என்று நம்புகிறேன்.
    அடுத்த பாகத்தில் பா வகைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கவிதாவின் இச்சாதனைப்பதிவுக்கு வாழ்த்தும் பாராட்டும் நன்றியும்..

    பாவகைகள் பற்றிய கவிதாவின் கட்டுரைகளை தனித்திரியாய்த் தருவேன்..

    (ஷீ-நிசி எங்கேப்பா?)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    சொல்லுங்க இளசு.... இங்கேதான் இருக்கேன்.....

    பக்கம் பக்கமா தாக்கிட்டீங்க... அருமையான முயற்சி
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0
    வணங்கதக்க சாதனை. வணங்குகிறேன் கவிதா.
    (இளசு அண்ணா இதை மீண்டும் தந்ததற்கு நன்றி அண்ணா)

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    கவி...

    நன்றி...

    வாசித்தேன்... ஆனாலும் இந்த மரமண்டைக்கு பலதும் விளங்கலை... மீண்டும் ஒரு முறை தமிழ் இலக்கணம் படிக்கனும் என்ற ஒரு சிந்தனையை தூண்டிவிட்டிருக்கிறது இந்த பதிவுகள்....

    கொஞ்சம் கொஞ்சமாய்...பதிவு பதிவாய் வாசிக்கிறென்... சந்தேகம் இருந்தா கேட்டு இம்சை படுத்துவேன் ... சொல்லிபுட்டேன்...

    இளசு...
    டாங்ஸ்... (சந்தேகம் இருந்தா கேட்டு இம்சை படுத்துவேனே..!!)
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அருமையான தொடர் இளசு அவர்களே!! நான் மீண்டும் அசை போடுகிறேன்.. ஆசையும் போடுகிறேன்ன். (இரண்டு ன்ன் இருக்கிறதா? ஒற்றெளபடை )

    மரபுக் கவிதைகள் பழங்காலத்துப் பொக்கிஷங்களாய் பூட்டி வைக்கக் கூடாது. சுருங்கச் சொல்லும் வித்தை மரபுக் கவிதைக்கு உண்டு.. நன்றாக படித்தால் மரபுக் கவிதை எழுதலாம் என்பதற்கு நானொருவன் சாட்சி., எனக்கு ஆரம்பத்திலிருந்து மரபுக் கவிதைகளில் ஆர்வம். தூண்டியவர் பாரதியார்.

    பாரதியாரை புதுக்கவிததயின் தந்தை என்று பார்த்திருப்பீர்கள்... மிக சிக்கலான பாவகைகளை சிரமமின்றி அவர் கையாண்டிருப்பது எனக்கு ஆச்சரியமூட்டும் விஷயம்.. எல்லா பாக்களையும்ம் எழுதுவார்,. அவர் பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம்..
    *---------------------------------------------------------------*

    இந்த பதிவைப் படித்த பின் நான் எழுதியது.... தவறுகள் திருத்தியதோடு சேர்த்து இடுகிறேன்..

    பா: குறள்வெண்பா/

    வெண்பா இலக்கணம் :
    சீர்களில் மாமுன்நிரையும் காய்முன்நேரும் விளமுன்நேரும் வரவேண்டும்.. (குழப்புகிறதென்றால் பாடம் படிக்க...)

    முதன்முதலில் எழுதிய வரிகள்:

    இளசு கொடுத்தாரே இன்பத் திரியிது
    தளையின் றியெழுது வீரே!

    இதில் உள்ள தவறுகள் : கரு சரியாக அமையவில்லை என்பது எழுதியதும் தெரிந்தது.

    இன்பத் திரியிது தளையின் - இன்-தே, பத்-மா (மாமுன் நிரையாக) திரி-கரு, யிது-விளம் , விளமுன் நேராக வரவேண்டும்.. ஆனால் வந்ததோ நிரை (தளையின் = தளை - நிரை, யின்-நேர் )-

    ஆக அடுத்து வரும் றியெழுது உம் தவறுதான்... சரி... இந்த தவறை நிவர்த்தி செய்து அடுத்து எழுதியது....

    இளசு கொடுத்தாரே இன்பத் திரியாய்
    தளைதப்பா மல்லெ ழுது.

    இது சரியென்று நினைக்கிறேன்.

    இள சு - நிரைநேர் - புளிமா - மாமுன்நிரையாக
    கொடுத் தா ரே - நிரைநேர்நேர்- புளிமாங்காய் - காய்முன்நேராக,
    இன் பத் - நேர்நேர் - தேமா - மாமுன்நிரையாக
    திரி யாய் - நிரைநேர் - புளிமா - மாமுன்நிரையாக
    தளை தப் பா - நிரைநேர்நேர் - புளிமாங்காய் - காய்முன்நேராக
    மல் லெ - நேர்நேர் - தேமா - மாமுன்நிரையாக
    ழுது - இருகுறிளிணைந்த நிரைபு..

    இவ்ளொதாம்பா!!!....

    முயன்றால் முடியாததுண்டோ!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஆஹா, ஆதவா

    திரியைத் தந்தவர் கவிதா அல்லவா..?

    கவிதா பெயரை வைத்து புதிய வெண்பா புனைய வேண்டுகிறேன்..

    உன் அசாத்திய மொழித்திறனுக்கு வாழ்த்தும் பாராட்டும்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    முயற்சி செய்கிறேன் இளசு அண்ணா
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கவிதா கவிதா எனக்கேட்டே தந்தார்
    கவிபல, நானும் எடுத்து எழுதினேன்
    ஓர்கவி யிங்கே சரியா தவறா?
    விழிமுழிக் கின்றேனே அண்ணே!
    Last edited by ஆதவா; 13-04-2007 at 04:40 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •