Results 1 to 12 of 12

Thread: என் இனிய ஹைக்கூவே ....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1

    என் இனிய ஹைக்கூவே ....

    நன்றி: மரவண்டு

    இந்த பதிவு மரவண்டின் வலைபூவில் இருந்து எடுக்கபட்டது.....


    என் இனிய ஹைக்கூவே ....


    தமிழில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று ஹைக்கூ கவிதைகள் என இந்த மூன்று கவிதைகளைச் சொல்வேன் .







    ஹைக்கூ கவிதைகள் என்றால் எனக்கு உயிர். தேடித் தேடிப் படிப்பேன் . படித்த கவிதைகளை நண்பர்களிடம் கூறி மகிழ்வேன். இதனால் நண்பர்கள் சிலர் என்னை ஹைக்கூ- கணேஷ் என்றழைக்கத் தொடங்கினார்கள் . சென்னையில் வேலை கிடைத்தவுடன் , இணையத்திலும் ஹைக்கூவைப் பற்றி எழுத ஆரம்பித்தேன் . நண்பர் சோகம் சஃபீக்கின் துணையுடன் "தமிழ் ஹைக்கூ" என்றொரு மின்-குழுமத்தை நடத்தி வந்தேன். பிறகு நண்பர் கணேஷ் சந்திரா அவர்கள் நடத்தி வரும் தழிழ் ஓவியம் இணைய தளத்தில் ஹைக்கூவைப் பற்றித் தொடர் கட்டுரை ஒன்று எழுதினேன். சமீபகாலமாக ஹைக்கூ கவிதைகள் படிப்பது குறைந்து விட்டது என்றே நினைக்கிறேன் . கடந்த மாதம் கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் அவர்கள் ஹைக்கூ குறும்படம் ஒன்றைத் தயாரித்து அதைச் சென்னையில் திரையிட்டிருக்கிறார். நிகழ்ச்சிக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள் . ஆனால் என்னால் செல்ல முடியவில்லை.
    0

    நான் இதுவரை ஹைக்கூ கவிதையைப் பற்றி பல்வேறு இடங்களில் எழுதியவற்றை இங்கே தொகுத்தளிக்கிறேன். பிழை இருப்பின் தெரியப்படுத்தவும்.



    1. ஹைக்கூவின் தோற்றம்

    ஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய மண்ணில் தான். சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ், மற்றொன்று ப்ரெஞ்ச். தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள். ஆனால் ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலைநகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.
    பிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை)
    இக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த அடிகள் 5,7 என்ற அசை அமைப்பிலும், கடைசி இரண்டு அடிகள் 7,7 என்ற அசை அமைப்பிலும் இருந்தது சோக்கா கவிதை. சோக்கா கவிதைக்கு வரி வரம்பு எதுவும் கிடையாது. மக்கள் இந்தக் கவிதையை விரும்பி ரசிக்கவில்லை.
    பிரிவு 2 : ஹூயன் காலம் (கி.பி 794 முதல் 1192 வரை)
    இக்காலத்தில் சோக்கா என்ற நீண்ட கவிதை தன்கா என்ற 5 வரிப் பாடலாகசுருங்கியுள்ளது. 5,7,57,7 என்ற அசை அமைப்பில் அமைந்த ஐந்து வரிப் பாடலே தன்கா கவிதை.
    பிரிவு 3 : காமெக்கூரா காலம் (கி.பி 1192 முதல் 1332 வரை)
    இக்காலத்தில் ஜாக்கின்சூ என்ற செய்யுள் தொகை வடிவம் பிறந்திருக்கிறது கடுமையான இலக்கணங்கள். இந்தக் கவிதையும் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.
    பிரிவு 4 : நான்போக்குச்சாக் காலம் (கி.பி 1332 முதல் 1603 வரை)
    இக்காலத்தில் "நோஹ்" என்ற இசை நாடக சமய சமுதாயக் கவிதைகள்வெளிவந்தன.
    பிரிவு 5 : எடோ காலம் (கி.பி 1603 முதல் 1863 வரை)
    இக்காலத்தில்தான் சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.
    பிரிவு 6 : டோக்கியோ காலம் (கி.பி 1863 க்கு அடுத்தது)
    ஹைக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு ப்ரெஞ்ச், ஆங்கிலம் என கொடிகட்டிப் பறந்து தமிழுக்கும் வந்துவிட்டது.

    2. ஹைக்கூ பெயர்க் காரணம்
    ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர். தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.
    தமிழக ஹைக்கூ கவிஞர் ஓவியர் அமுத பாரதி ஹைக்கூவிற்கு அருமையான விளக்கம் அளித்திருகிறார்.

    ஐ + கூ = ஐக்கூ (ககர ஒற்று மிகுந்துள்ளது)
    ஐ என்றால் கடுகு, கூ என்றால் பூமி, கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை. பெண்கவி மித்ரா அவர்கள் ஹைக்கூவிற்கு நுண்மான் நுழைபுலம் என்று பொருள் தருகிறார்.
    3. ஹைக்கூ கவிதையின் அளவு வரையறை
    ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக்கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சில்லபிள் என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ஒஞ்சி என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது . தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.ஜப்பானிய மொழியின் ஒஞ்ஜி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் பொருந்தி வரும் விதி!) .ஆரம்ப காலத்தில் இந்த 5,7,5 என்ற அசை அமைப்பு முறையாக கடை பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5,7,5 என்ற அளவு கோலைத் தூற எறிந்து விட்டார்கள்.
    ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் , தமிழ் அசை மரபின் 5,7,5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த ஹைக்கூ கவிதைகளை காற்றின் கைகள் என்ற ஹைக்கூ நூலில் படைத்திருக்கிறார்.
    4. ஜென் பெயர்க்காரணம்
    புத்த மதத்தின் கிளைப் பிரிவான ஜென் தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல ஊடகமாக ஹைக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது. "த்யான்" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஆழ் நிலை தியானம் என்று பொருள். இந்த "த்யான்" என்ற ஆன்மீக விதையை தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மர் (Bodhi Daruma) என்பவர் சீனாவிற்கு எடுத்துச் சென்று பெளத்த மதத்தைப் பரப்பினார்.சீனாவில் இந்த தியான் என்ற பதம் சான் என்று மருவிற்று. சீனாவில் பெளத்த மதத்திற்கு ஆரம்பகாலத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் காலப்போக்கில் பெளத்த மதத்திற்கு சீனாவில் எதிர்ப்பலை கிளம்பியது . உடனே போதிதர்மர் இந்த சான் என்ற ஆன்மீக விதையை எடுத்துக் கொண்டு ஜப்பானுக்குச் சென்றார். ஜப்பானில் சான் என்ற பதம் ஜென் என்று மருவிற்று. ஜப்பானிய மக்களிடையே பெளத்த மத ஜென் தத்துவத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
    ஜென் என்பது ஒரு சூட்சுமமான விடயம் . யாராவது ஒருவர் ஜென் என்றால் என்ன என்று விளக்கம் அளித்தால் அது பொய்யாகத் தான் இருக்கும் ."Zen Teaches Nothing" ஜென் சொல்லித் தருவது எதுவுமில்லை அப்படியென்றால் ஜென் என்பதை எப்படி உணர்வது ? இதற்கு ஒரு சிறிய கதை உண்டு.

    ஒரு பெரிய கடலில் மீன்கள் உலவிக் கொண்டு இருந்தன . ஒரு சிறிய மீன் தனது தாய் மீனிடம் "அம்மா அம்மா கடல் என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன? அது எங்கே இருக்கிறது ? " என்று கேட்டது.

    உடனே தாய் மீன் "கடல் என்பது உனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது" என்று பதிலளித்தது .

    அந்தக் குட்டி மீன் "என்னால் அதைக் காணமுடியவில்லையே அதை உணர முடியவில்லையே என்று கேட்டது .

    உடனே தாய் மீன் , "நீ பிறந்தது இங்கே தான். ஒரு வேளை உன் இறப்பும் இங்கேயே நிச்சயிக்கப்பட்டிருக்கலாம் அதனால் தான் உன்னால் உணரமுடியவில்லை " என்று பதிலளித்தது.

    இதைப் போல் தான் மனிதர்களாகிய நாமும் ஜென் என்ற தத்துவக் கடலுக்குள்தான் இருக்கிறோம். ஆனால் அதை உணர முடியாது.

    5. ஹைக்கூ கவிதையின் வளர்ச்சி

    ஜப்பானிய கவிஞர்கள் மோரிடேகே (1473-1549) மற்றும் சோகன் (1465-1553)ஆகியோர் ஹைக்கூ கவிதையின் முன்னோடி என்றழைக்கப்படுகிறார்கள்.
    உதிர்ந்த மலர் / கிளைக்குத் திரும்புகிறதோ ? / வண்ணத்துப் பூச்சி (மோரிடேகே)
    நிலவிற்கு ஒரு / கைப்பிடி வைத்தால் / எத்துனை அழகான கைவிசிறி (சோகன்)
    ஹைக்கூ முன்னோடிகளை அடுத்து ஹைக்கூ நால்வர்கள் தோன்றினார்கள் .
    1. மட்சுவோ பாஸோ (1644 - 1694)
    2. யோசா பூசன் (1716-1784)
    3. இஸ்ஸா (1763-1827)
    4. ஷிகி (1867-1902)

    1. மட்சுவோ பாஸோ (1644 - 1694)


    ஹைக்கூவின் கம்பர் என்றழைக்கப் படும் இவர் அருமையான ரெங்கா கவிஞர் ஆவார்.பாஸோ என்றால் வாழை மரம் என்று பொருள் . இவர் தங்கியிருந்த குடிசை அருகே வாழைமரம் இருந்ததால் இவர் பாஸோ என்றழைக்கப் பட்டார் . பாஸோ தன் கவிதை சீடர்களுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார்.
    "எழுதும் பொழுது உனக்கும் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது , உன் உள்மனதை நேரடியாகப் பேசு , எண்ணங்களைக் கலையவிடாதே , நேரடியாகச் சொல் " இது தான் ஹைக்கூ சீடர்களுக்கு பாஸோ கூறும் அறிவுரை .
    பாஸோ சாமுராய் என்ற போர் வீரன் இனத்தைச் சார்ந்தவர் . இந்த இனத்தவர்கள் தன் நாட்டு மன்னருக்காக உயிரைக் கூட இழப்பதற்குத் தயாராக இருப்பார்களாம் .ஒரு வேளை மட்டுமே உண்பார்களாம் . தனது சொந்த நாட்டிற்கே துரோகம் செய்ய நேர்ந்தாலோ , எதிரியிடம் சிக்கிக் கொண்டாலோ , தங்களது போர் வாளை எடுத்துத் தங்கள் வயிற்றைக் கிழித்து வீரமரணம் அடைவார்களாம் .இந்த வீர மரணத்திற்கு ஹராஹிரி (Harakiri) என்று பெயர் .
    ஜப்பானியர்கள் தவளையைப் பாட்டுப் பறவை என்று செல்லமாக அழைக்கிறார்கள் .பாஸோவின் கவிதைகளில் தவளை தான் கதாநாயகன்.

    பழைய குளம் / தவளை குதிக்கையில் / தண்ணீரில் சப்தம்
    0
    எந்தப் பூ மரத்திலிருந்தோ ? /எனக்குத் தெரியவில்லை /ஆனால் ஆஹா நறுமணம்
    0
    மேகம் சில நேரங்களில் / நிலவை ரசிப்பவனுக்கு /ஓய்வு தருகிறது

    2. யோஸா பூசன் (1716-1784)


    சீன ஓவியத்தை ஜப்பானுக்கு அறிமுகப் படுத்தியவர் இவரே. தனது தூரிகையால் பாஸோவின் கவிதைகளை மெருகூட்டினார் .


    குழந்தையின் முகத்தில் / மகிழ்ச்சி / கொசு வலைக்குள் !
    0
    ஆலய மணியின் மீது / ஓய்ந்து உறங்குகிறது /வண்ணத்துப் பூச்சி !
    0
    பனி வீழ்ந்த முள் செடி / அற்புத அழகு / ஒவ்வொரு முள்ளிலும் துளி
    3. இஸ்ஸா (1763-1827)

    இவர் கிராமப் புறத்தில் பிறந்ததால் இவரை நாட்டுப் புறப் பூசணி என்று செல்லமாக அழைப்பார்கள் . இவரது வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது. இளம் வயதிலேயே தாயாரை இழந்து , மாற்றாந்தாயின் கொடுமைக்கு உட்பட்டு வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார் சிறு சிறு பூட்சிகளின் பால் மிகுந்த பரிவு காட்டினார்.


    0
    அரிசியைத் தூவினேன் / இதுவும் பாவச் செயலே / கோழிகளுக்குள் சண்டை
    0
    பெட்டிக்கு வந்த பின் / எல்லாக் காய்களும் சமம்தான் /சதுரங்கக் காய்கள்
    0
    பனியை உருக்கக் கூட /காசு தேவை / நகரத்து வாழ்க்கை

    4. ஷிகி (1867 - 1902)

    இவர் ஹைக்கூ நால்வரில் இறுதியாவனவர் . இவர் ஹைக்கூவின் புரட்சிக்குயில் என்றழைக்கப்படுகிறார். பாஸோவின் கவிதைகள் வீரியமற்ற மந்தமான (Prasoic) கவிதைகள் என்று சாடினார் இவர்.
    சிதைந்த மாளிகை/தளிர் விடும் மரம்/போரின் முடிவில்
    வெப்பக் காற்று/ப்ளம் மலர்கள் உதிரும்/கல்லின் மீது
    தத்தித் தத்தி நடக்கும் சிட்டுக்குருவி /தாழ்வார ஓரங்கள் /ஈரப் பாதங்கள்

    6) ஹைக்கூ அயல் நாடுகளில் பரவியது எப்படி . ?

    மேற்கத்திய ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் என சேம்பர்லின், R.H பிளித், ஹெரால்ட் ஹெண்டெர்சன், கென்னத் யசூதா, எஸ்ட்ரா பவுண்ட் ஆகியோரைக் குறிப்ப்பிடலாம். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !என்று சொன்ன நம் பாட்டுப் பாட்டன் பாரதி தான் ஹைக்கூ விதையை தமிழ் மண்ணில் தூவினார்.

    ஜப்பானியக் கவிதை (பாரதியார் கட்டுரை) 16-10-1916 (சுதேசமித்திரன் பத்திரிக்கை)

    சமீபத்தில் மார்டன் ரிவியூ என்ற கல்கத்தா பத்திரிக்கையில் உயானோ நோக்குச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதி இருந்தார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால் மேற்குக் கவிதையில் சொல் மிகுதி எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் கவிதையிலே இல்லை. எதுகைச் சத்தம் முதலியவற்றைக் கருதியும் சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல சொற்களைச் சேர்த்து வெறுமனே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகம் இருக்கிறது. தம்முடைய மனதிலுள்ள கருத்தை வெளியிடுவதில் மேற்குப் புலவர்கள் கதைகள் எழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள். ஜப்பானில் அப்படியில்லை வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது." கூடை கூடையாய் பாட்டெழுதி அச்சிட வேண்டும் " என்று ஒரே ஆவலுடன் எப்பொழுதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதையெழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையை கவிதையாகச் செய்தோன். அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம் மலர்களின் பேச்சு - இவற்றிலே ஈடுபட்டுப் போய் இயற்கையுடன் ஒன்றாக வாழ்பவனே கவி.
    கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே ஒரு சீடன் "பாஷோ மட்சுவோ என்னும் புலவரிடம் மூன்று ரியோ [அதாவது ஏற்க்குறைய முப்பது வராகன்] காணிக்கையாகக் கொடுத்தானாம் . இவர் ஒரு நாளுமில்லாத புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தொல்லையாதலால் "வேண்டியதில்லை" என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம். இவருக்கு காகா [kaga] என்ற ஊரில் ஹொகுஷி என்றொரு மாணாக்கர் இருந்தார். இந்த ஹொகுசியின் வீடு தீப் பட்டெரிந்து போய்விட்டது . அந்தச் செய்தியை ஹொகுஷிப் புலவர் தமது குருவாகிய பாஸோ மட்சுவோ புலவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதி அனுப்பினார் .

    "தீப்பட்டெரிந்தது , வீழு மலரின் அமைதியென்னே !"

    மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும் பொழுது எத்தனை அமைதியுடன் இருக்கிறதோ அத்தனை அமைதியுடன் ஞானி தனக்கு வருந்துன்பங்களை நோக்குகிறான். வீடு தீப்பட்டெரிந்தது ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போக வில்லையென்ற விஷயத்தை ஹொகுஷி இந்தப் பாடலின் வழியாகத் தெரிவித்தார். "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" ஜப்பானியக் கவிதையின் விஷேசத் தன்மையென்று நோக்குச்சிப் புலவர் சொல்வதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது."கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" . கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரசம் அதிகந்தான் . தமிழ் நாட்டில் முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது .ஆனாலும் ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று ஜப்பானிலே எல்லாப் பாடலும் "ஹொகுசி" பாட்டன்று. "நோக்குச்சி" சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.
    " எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பதறிவு "
    000000000000000000000000000000000000000000000000000000000000000000000
    இந்தக் கட்டுரைதான் ஹைக்கூ குறித்தான அறிமுகத்தை தமிழுக்கு முதன் முதலில் தந்தது.
    ஆனால் இந்தக் கட்டுரையில் சில பிழைகள் இருக்கின்றன.

    பிழை 1 : பாஷோவின் (Basho Matsuo) மாணாக்கர் ஹொகுசி என்று குறிப்பிட்டிருக்கிறார் பாரதி. பாஷோவின் வாழ்க்கை 1644 க்கும் 1694 க்கும் இடைப்பட்டது ஹொகுசியின் வாழ்க்கை 1760 க்கும் 1849 க்கும் இடைப்பட்டது . இப்படியிருக்க ஹொகுசி (Katsushika Hokusai) எப்படி பாஷோவின் மாணாக்கராக இருந்திருக்க சாத்தியம் ?

    பிழை 2 : ஹொகுசியைப் புலவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் ஹொகுசி ஒரு தலைசிறந்த ஓவியர் . ஆறுவயதிலேயே தூரிகை பிடிக்கத் தொடங்கியவர். "எனது ஒவ்வொரு புள்ளியும் இயற்கையின் ஒரு வீரியமுள்ள நுண்மையான கதிர் வீச்சு" என்று குரல் கொடுத்தவர் .

    பிழை 3 : "தீப்பட்டெரிந்தது , வீழு மலரின் அமைதியென்னே !" it has burned down ! how serene the flowers in their falling இந்தப் பாடலைப் பாடியது ஹொகுஷி என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பாடலை உண்மையில் எழுதியது யார் என்று தெரியாது. இந்தக் கவிதையை யோனா நோக்குச்சி (Yone Noguchi) எழுதிய ஜப்பானியக் கவிதையின் உயிர் (The Sprit of Japanese Poems p.27) என்ற நூலில் மேற்க் கோள்காட்டி எழுதப் பட்டது. மொழி பெயர்ப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்கலாம் , அல்லது நோக்குச்சி புலவர் தவறாக எழுதி இருக்கலாம்.
    0
    முண்டாசுக் கவிஞன் பாரதி ஹைக்கூ கவிதையை அறிமுகம் செய்த பின்பு பல ஆண்டுகளுக்குப் பிறகே தமிழ்க் கவிஞர்களுக்கு ஹைக்கூவை பற்றித் தெரிய வந்தது.
    புதுக் கவிதையாளர்களே உஷார் ! வருகிறது ஹைக்கூ கவிதை என்ற எச்சரிக்கையுடன் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. ஒளவைப் பாட்டி எழுதிய ஒற்றை வரி ஆத்திச்சூடி இருக்கிறது திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இருக்கிறது. இதில் இல்லாதது என்ன இருந்துவிடப் போகிறது என்ற ஒரு கேள்வியை புதுக்கவிதையாளர்கள் முன்வைத்தார்கள். இதற்கு ஹைக்கூ கவிஞர் அன்பாதவன் " திருக்குறளும், ஆத்திசூடியும் இதைச் செய், அதைச் செய்யாதே என்று சிக்னல் வாசங்களைப் போல் ஒரு அறிவுறுத்தும் பாங்கில் தான்இருக்கிறது. கவிதை நடையில் அவைகள் இல்லை.ஆனால் ஹைக்கூ கவிதை கவிதை நடையில் வாசகனை அறிவுறுத்துகிறது " என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
    ஹைக்கூ கவிதையில் உணர்ச்சி இல்லை, தமிழில் இதுவரை ஒரு ஹைக்கூ கவிதை கூட எழுதப்படவில்லை ,ஹைக்கூ என்பது புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு பெருச்சாளி ,ஜப்பானிய கவிதைகளில் இருக்கும் ஜென் தத்துவங்கள் தமிழ்க் கவிதைகளில் இல்லை , இப்படிப் பலவாறான குற்றச் சாட்டுகளை புதுக் கவிதையாளர்கள் முன்வைத்தார்கள். எனினும் ஒரு சிலர் ஹைக்கூ கவிதையை ஆதரித்தே வந்தார்கள்.

    சுஜாதா


    ஜனவரி 1966 இல் கணையாழி இதழில் சில ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தொடர்ந்து ஜுனியர் விகடன் மற்றும் சில பத்திரிக்கைகளில் ஹைக்கூ குறித்து கட்டுரை வரைந்தார். ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் என்ற நுலை வெளியிட்டார். இந்த நூலில் ஹைக்கூ எழுதுவதற்கான சில வரைமுறைகளை மிகவும் எளிமையாக எடுத்துக் காட்டுடன் விளக்கியுள்ளார்.ஹைக்கூ கவிதையானது புரிதல் இல்லாமல் எழுதப்படுவதைக் கண்டு " ஹைக்கூ என்றொரு மூன்று வரி பாவச்செயல் " என்று சுஜாதா சமீபத்தில் ஆனந்தவிகடனில் எழுதியிருந்தார்.

    கவிக்கோ அப்துல்ரகுமான்



    பால்வீதி என்னும் கவிதைத் தொகுப்பில் சிந்தர் என்ற தலைப்பில் ஐந்து ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் எழுதினார். இதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ கவிதைகள் ஆகும் எண்பதுகளின் துவக்கத்தில் பத்திரிக்கை மூலமாகவும் இலக்கிய கூட்டங்களிலும் ஹைக்கூ பிரச்சாரம் செய்தார். 1984 ஆம் அண்டு ஜூனியர் விகடனில் மின்மினிகள் என்ற தலைப்பில் ஹைக்கூவைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை வரைந்தார் . கவிக்கோ அப்துல் ரகுமான் உதவியுடன் டாகடர் லீலாவதி அவர்கள் சில ஆங்கில கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார். பிறகு இவரது உதவியுடன் டாகடர் லீலாவதி அவர்கள் இதுதான் ஹைக்கூ என்ற நூலை வெளியிட்டார். இது ஆங்கில கவிஞர் R.H. பிளித் அவர்கள் எழுதிய நூலின் தமிழாக்கம் ஆகும்.

    தமிழ் ஹைக்கூ நூல்கள்



    தமிழில் முதல் புத்தகத்தை அமுதபாரதி வெளியிட்டாரா ? இல்லை அறிவுமதி வெளியிட்டாரா ?என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது . பரவலான மக்களின் கருத்துப் படி ஓவியக் கவிஞர் அமுத பாரதி அவர்களே புள்ளிப் பூக்கள் என்ற நூலை முதன் முதலில் வெளியிட்டார். (ஆகஸ்ட் - 1984) , பாடலாசிரியர் அறிவுமதி அவர்களை ஹைக்கூவின் சிறிய வடிவம் பெரிதும் கவர்ந்தது. அவர் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புல்லின் நுனியில் பனித்துளி என்ற நூலை வெளியிட்டார்.இதைத் தொடர்ந்து சில நாவல் மற்றும் வாராந்திரி பத்திரிக்கைகள் ஹைக்கூ கவிதைகளை வெளியிடத் தொடங்கின. கவிஞர் தமிழ் நாடன் ஜப்பானியக் கவிதை என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். பெண்கவிஞர் நிர்மலா சுரேஷ் அவர்கள் ஹைக்கூவைப் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். கவிஞர் இறையன்பு ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன் மறைபொருளை அழகாய் விளக்கி "முகத்தில் தெளித்த சாரல்" என்னும் நூலை வெளியிட்டார். கவிஞர் செல்லம்மாள் கண்ணன் அவர்கள் தமிழ் ஹைக்கூவில் மொழி வீச்சு , ஹைக்கூ மனோபாவம் ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். இதுகாறும் தமிழில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஹைக்கூ புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சிறிது காலத்திற்கு முன்பு குமுதம் இதழில் ஹைக்கூ கவிதைகள் பிரசுரித்து வந்தார்கள். நான் அறிந்த வரையில் ( சிற்றிதழ்கள் தவிர்த்து ) பாக்யா வார இதழில் மட்டுமே தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளைப் பிரசுரித்து வருகிறார்கள் .
    கடந்த வார பாக்யாவில் படித்த ஹைக்கூ ஒன்று

    குளியல் அறை / ஆடை களையும் / புது சோப்பு !

    0

    குறிப்பு நூல்கள்

    1) என்னுள் யார் யாரோ - சுப்ரபாரதிமணியன்
    2) ஹைக்கூ கவிதைகள் - நிர்மலா சுரேஷ்
    3) ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா
    4) இதுதான் ஹைக்கூ - லீலாவதி
    5) பாரதியார் கட்டுரைகள் தொகுப்பு
    6) ஜப்பானியக்கவிதை - தமிழ்நாடன்
    7) புல்லின் மேலே பனித்துளியாயிரு - ஓஷோ
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சின்னத் தும்பி, சில்வண்டு, மின்மினி
    ரசிக்காதவர் யார்?

    ஹைக்கூவின் அழகே அதன் சின்ன வடிவமும்
    அது சுமக்கும் அழகிய காட்சியும்தான்..

    மிக நீண்ட விளக்கமான கட்டுரைக்கு நன்றி மரவண்டுக்கும் பென்ஸூக்கும்..


    நண்பன் தொடங்கி ,நம் நண்பர்கள் விரிவாக அலசிய
    ஹைக்கூ பற்றிய திரி திஸ்கியில் இங்கே-
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=1066
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    ஹக்கூக்கு பின்னால் இத்தனை பெரிய கதை இருக்கிறதா? ஹைக்கூவை ஆரம்ப காலத்தில் அதிகம் விரும்பாதவன் நான். இலக்கணம் இல்லாமல் கவிதை எழுதுவதா என்று நினைத்தேன்.

    ஆனால் பல விஷயங்கள் எளிதாக புரியவைக்ககூடியதும், யார் வேண்டுமானாலும் எண்ணங்களை வெளிப்படத்தக்கூடியதுமாக இருப்பதால் ஹக்கூவுக்கு எதிர்ப்பில்லை.

    எல்லாரும் ஹக்கூ எழுதலாம், எது வெகுநாளைக்கு நினைவில் நிற்கிறது என்பதை பொருத்தே அதன் பெருமையும்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இந்த தகவலை என் நண்பர் ஒருவர் மூலமாய் படித்திருக்கிறேன்.. நன்றி பெஞ்சமின்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அழகான ஹைக்கூ கட்டுரை படிக்க தந்தமைக்கு நன்றி பென்ஸ்..

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    பல விஷயங்கள் உள்ளன. கொஞ்சம் நேரம் ஒதுக்கி படிக்கவேண்டும்.

    இந்தமாதிரி நல்ல விஷயங்களை நம் மன்றத்திற்கு கொண்டுவரும் பெஞ்சமின் அவர்களுக்கு என் நன்றிகள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    தகவல்களுக்கு நன்றி பென்ஸ்..!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ஹைக்கூவின் சிறப்பு அந்த எளிமை. முதல் இரண்டு வரிகளையும் தனித்தனியே படிக்கும்போது அவ்வளவு சிறப்பாயிராது. கடைசி வரி இரண்டு முதல் வரிகளுக்கும் ஒரு தொடர்பைக் கொடுத்து ஒரு "நச்" நிகழ்வையோ கருத்தையோ சொல்லும்...
    பென்ஸூ.
    அப்படியே நீங்களும் உங்க ஹைக்குக்களை எடுத்து விடுங்கள்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    இந்த பதிவே அடுத்த ஹைக்கு கவிதை போட்டிக்குதானே....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அருமையான தகவல்கள், ஹைக்கு கவிதைகளை எழுத எத்தனிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    ஆஹா ஹைக்கூ கவிதைகளில் இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா.. நன்றி பெண்ஸ்

  12. #12
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இவ்வளவு விடையம் அடங்கி உள்ளதா?
    நன்றி.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •