தூத்துக்குடியில புதுக்கிராமம்னு சொன்னா எத்தன பேருக்குத் தெரியுமோ இல்லையோ New Colonyன்னு சொன்னா பெரும்பாலும் தெரிஞ்சிருக்கும். பழைய பஸ்டாண்டுக்கு ரொம்பப் பக்கம். மொத்தத்துல ஊருக்கு நடுவுல இருக்குற இருக்குற ஒரு தெரு. அந்தத் தெருவுக்குப் பக்கத்துல இருக்குறது சுப்பையா வித்யாலயப் பள்ளிக்கூடங்க இருக்கு. பள்ளிக்கூடங்கன்ன...மூனு பள்ளிக்கூட்டம் அந்த எடத்துல இருக்கு. ஒன்னு பெண்களுக்கானது. இன்னொன்னு ஆண்களுக்கானது. இன்னொன்னு சின்னப் பசங்களுக்கானது.
இதுல பொண்ணுங்க பள்ளிக்கூடம் மட்டும் இப்பவும் நல்லா போய்க்கிட்டு இருக்கு. அதுல அப்ப பேபி கிளாஸ் இருந்துச்சு. சின்னப்பசங்களுக்கு bun fun runன்னு சொல்லிக் குடுக்குற எடம்.

அதுக்கு நான் தெனமும் ரிச்சாவுல போயிட்டிருந்தேன். காலைல கொஞ்சம் படிப்பு. சாப்பாடு. அப்புறம் தூக்கம். மாலையில் உடற்பயிற்சி. அப்புறம் வீட்டுக்குப் போயிர வேண்டியதுதான். ஒரு நாள் வழக்கமா வர்ர ரிச்சா வரலை. சண்முகவேல்னு ஒரு ரிச்சாக்காரர் இருந்தாரு. அவருதான் அப்பக் குடும்ப ரிச்சாக்காரர். அவரக் கூப்புட்டு அத்த சுப்பையா வித்யாலயத்துல என்னைய எறக்கி விடச் சொன்னாங்க. அவரும் எறக்கி விட்டாரு. ஆனா சாந்தரமா வழக்கமா வர்ர ரிச்சாவுல நான் வீட்டுக்கு வரலை. கேட்டா நான் பள்ளிக்கூடத்துலயே இல்லைன்னு ரிச்சாக்காரர் சொல்லீட்டாரு. அத்த பதறியடிச்சிக்கிட்டு சண்முகவேல் கிட்ட ஓடீருக்காங்க. அவரும் பள்ளிக்கூடத்துலதான் விட்டேன்னு அழுத்திச் சொல்லவும் ரிச்சாவ பள்ளிக்கூடத்துக்கு விடச் சொன்னாங்க.

சண்முகவேல் ரிச்சாவ சின்னப்பசங்க பள்ளிக்கூடத்துக்குக் கூட்டீட்டுப் போயிருக்காரு. அங்க என்னைய யாருன்னு தெரியாம கண்டுபிடிக்க முடியாம...விழாமேடைல ஏத்தி உக்கார வெச்சிருந்திருக்காங்க. நானும் பேசாம டிபன் பாக்ஸ்ல இருந்ததச் சாப்பிட்டு ஜம்முன்னு தூங்கி எந்திரிச்சி முழிச்சிக்கிட்டு உக்காந்திருக்கேன். அப்பத்தான் அத்தைக்கு உயிரே திரும்ப வந்திருக்கு. பொம்பளப் பிள்ளைங்க பள்ளிக்கூடத்துல பேபி கிளாஸ் இருக்குன்னு சண்முகவேலுக்குத் தெரியலை. இப்ப அந்த பேபி கிளாஸ் இல்ல.

இப்படியெல்லாம் நடந்த புதுக்கிராமம் முக்குதான் புதுக்கிராமம் பஸ்ஸ்டாப். புதுக்கிராமத்துல ரெண்டு பஸ்ஸ்டாப். ஒன்னு பெருமாள் கோயில் ஸ்டாப். அடுத்தது புதுக்கிராமம் பஸ்ஸ்டாப். பெருமாள் கோயிலு வீட்டுப் பக்கத்துல. அதுல பஸ் ஏறி சேவியர்ஸ் பள்ளிக்கூடம் போகனும். நாப்பது காசு டிக்கெட்டு. ஆனா புத்துக்கிராம முக்குக்குப் போனா முப்பது காசுதான். பத்துகாசு மிச்சம் பிடிக்க முக்கு வரைக்கும் நடந்து போவேன். அப்ப 3A பஸ்சும் கட்டபொம்மன் பஸ்சுந்தான் வரும். 3A தனியார் பஸ். கட்டபொம்மன் செவப்பு பஸ்சு.

அந்த பஸ்ஸ்டாப்புலதான் ராதாக்காவும் ஏறுவாங்க. எனக்கு கணக்குப் பாடம் ஒழுங்கா வரலைன்னு அவங்க சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க வீட்டுல இருந்து நைட்டு கெளம்புறப்போ மணி பாக்கச் சொன்னாங்க. எனக்கு நின்ன எடத்துல இருந்து கண்ணு சரியாத் தெரியலை. ஆனாலும் தெரியலைன்னு சொல்லக் கூடாதுன்னு என்னவோ ஒளறுனேன். ஒடனே அவங்க என்னைய இன்னமும் ரெண்டு மூனு படிக்கச் சொன்னாங்க. அப்புறம் என்னோட கண்ணுல பவர் இருக்கு...அதுனாலதான் ஒழுங்கா படிக்க முடியலைன்னு சொன்னாங்க. நம்மதான் அறிவாளியாச்சே. பவர் இருந்தா நல்லா தெரியனுமேன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்டேன்.

இப்படியெல்லாம் கேக்குற அறிவைக் குடுத்த புதுக்கிராமத்துல பையத் தூக்கீட்டு நடக்குறப்போ மொதல்ல கண்ணுல பட்டது சிவசாமி கடை. அந்தக் கடையில ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்தது. ஆண்டாள் டீச்சர்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க ரொம்ப ஸ்டிரிக்ட்டான டீச்சராம். அவங்களப் பாத்தாலே பயங்க பயப்படுவாங்களாம். எனக்கும் பயம்தான். கடையில இருந்த பலகைல என்னைய அத்த ஏத்தி உக்கார வெச்சிருந்தாங்க. அப்ப அந்த ஆண்டாள் டீச்சரும் கடைக்கு வந்து, "என்ன ராகவா எப்படியிருக்க"ன்னு கேட்டாங்க. எனக்கு என்ன தோணுச்சோ தெரியலை....பட்டுன்னு அவங்க கன்னத்துல அடிச்சிட்டேன். அவங்களுக்குக் கண்டிப்பா அதிர்ச்சியாத்தான் இருந்திருக்கனும். ஆனா காட்டிக்கலை. நல்லவேளை அத்தை அதுக்குக் கோவிச்சுக்கலை.

எங்களுக்கு சொந்தமில்லைன்னாலும் வேண்டப்பட்டவங்க அந்தத் தெருவுல இருந்தாங்க. அவங்க வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் அடிக்கடி பண்டமாற்று நடக்கும். நாந்தான் தூதுவர். எப்படிப் போவேன் தெரியுமா? வீட்டுக்குப் கொஞ்சம் பக்கத்துலயே பிள்ளையார் கோயில். அப்புறம் தள்ளிப் போனா எண்ணக் கட. அங்கிருந்து கொஞ்ச தூரத்துல அவங்க வீடு. நான் வீட்டிலிருந்து பிள்ளையார் கோயில் வரைக்கும் மெதுவாப் போவேன். பிள்ளையார் கோயில்ல இருந்து எண்ணக் கட வரைக்கும் நடுத்தர வேகம். எண்ணக் கடையில இருந்து அவங்க வீடு வரைக்கும் படுவேகம். ஏன் தெரியுமா?

அப்பல்லாம் தூத்துக்குடியில இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் சென்னைக்குப் போகும். தூத்துக்குடியிலிருந்து கரி எஞ்சின். மணியாச்சி வரைக்கும். அங்க தூத்துக்குடி பெட்டிகளையும் திருநவேலி பெட்டிகளையும் இணைச்சு டீசல் எஞ்சின் போடுவாங்க. அடுத்து விழுப்புரத்துல மின்சார எஞ்சின் மாத்துவாங்க. சென்னை வரைக்கும் அது சர்ர்ர்ருன்னு ஓடும். இதத்தாங்க நான் அவங்க வீட்டுக்குப் போறப்பச் செய்றது. திரும்பி வரும் போது...போனதுக்கு நேர்மாறா வருவேன். மொதல்ல வேகம். அப்புறம் நடுத்தரம். அப்புறம் மெதுவா!

அன்புடன்,
கோ.இராகவன்