Results 1 to 6 of 6

Thread: மார்கழியில் ஒரு காலை...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17

    மார்கழியில் ஒரு காலை...

    மார்கழியின் காலை பொழுதை ரசித்தவரா நீங்கள். இப்போது அதை பார்க்காமல் ஏங்குபவரா நீங்கள்.......... கட்டாயம் படியுங்கள்.

    நன்றாக கம்பளியை போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் போது அப்பா எழுப்பி போய் பால் வாங்கிட்டு வா என்று மார்கழியில் ஒரு காலையில் எழுப்ப மார்கழியின் காலை எத்தனை ரம்மியமானது என்று உணர ஒரு வாய்ப்பு கிடைத்தது.


    ஆனால் எழுந்திரிக்க மனம் இல்லாமல் குளிருக்கு இதமாக போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றும்.



    இத்தனை ரம்மியமான அழகான உணர்ச்சிப் பூர்வமான மார்கழியை இத்தனை ஆண்டுகாலமாக ரசிக்காமல் விட்டுவிட்ட இந்த சோம்பேறித்தனை உதைக்கத் தோன்றியது.



    இது அறிந்தும் அதை போற்றாமல் தூங்கிக் கொண்டிருக்கும் மடையர்களை இனிமேல் நீங்கள் வாழ தகுதியற்றவர்கள் என்று கூறி அவர்களை தூக்கிலிடத் தோன்றியது.



    வாயைய் மட்டும் கழுவிவிட்டு பல் தேய்க்காமல் மஃப்ளரை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டு குரங்கு குல்லாயை தலையில் மாட்டிக் கொண்டு எவர்சில்வர் கூஜாவை கையில் வைத்துக் கொண்டு வெளிய வந்தேன்.



    ஆஹா நம் தெருவில் இத்தனை அழகான பெண்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம் வந்தது. அந்த அதிகாலை குளிரிலும் செப்பு பாய்லரில் சுள்ளி கரி போட்டு சுடு தண்ணி வைத்து மஞ்சள் போட்டு குளித்து தலை துவட்டியும் தலையில் ஈரம் போகாததால் வெள்ளை துண்டை எடுத்து கட்டி முடித்து அதிலும் ஈரம் போகாமல் அந்த கூந்தலின் ஓரத்திலிருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக கொட்ட முகத்தில் அந்த மஞ்சளை எடுத்துத்தானோ மஞ்சள் நிறமாக ஆதவன் வருகிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்த இன்னும் பல பெண்கள் வருவதற்கே காத்திருக்கிறானோ அந்த ரவி என்று தோன்றவைக்க இதன் நடுவில் கோலப் பொடியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து மாடத்தில் வைத்து விட்டு சாணியை எடுத்து துருப்பிடித்த இரும்பு வாளியில் போட்டு தண்ணீர் ஊற்றி சின்ன சொம்பை எடுத்து அதை வீட்டு வாசலில் முன் ஊற்றும் போது அது அந்த தாய் மண்ணை அடைந்து ஒரு இன்பமான மணத்தை வீச தென்னங்குச்சி தொடப்பத்தை எடுத்து தாவணியை எடுத்து முடித்து இடுப்பில் சொருகி அந்த சிறிய உள்ளங்கைகளால் தொடப்பத்தை தட்டிச் சேர்த்து சில நேரம் சனல் கயிறை இறுக்கி த்தசர் த்தசர் என்று பெருக்கும் அழுகு...........



    பேப்பர் போடும் பையனோ இனி ஏழேழு ஜென்மமும் பேப்பர் போடும் பையனாகவே பிறக்க வேண்டும் என்று பிரும்மாவிடம் வேண்டிக் கொண்டே அந்த தாவணிகளை ரசித்துக் கொண்டு பேப்பரை சில பேரிடம் வண்டியை நிறுத்தி கொடுத்துவிட்டு வீட்டு பெரியவர்கள் இருக்கும் வீட்டில் பேப்பர் என்று கூவி தூக்கி எரிந்துவிட்டு போய்க் கொண்டிருந்தான்.



    அழகாக புள்ளிகள் வைத்து கோலம் போட்டு சிறிய சாணி உருண்டையாக கோலத்தின் நடுவில் வைத்து அதன் நடுவில் பூசணிப்பூவை அழகாக சொருகி செர்ரி ஆன் டாப் என்ற ஆங்கிலப் பழமொழி இதைப்பார்த்தால் தோற்றுப்போகும் எனும் அளவுக்கு ஒரு அழகு.



    அரசு பால் பூத்தில் கிடைப்பது பாக்கெட் பால். விலை அதிகம். தண்ணீர் அதிகம். ஒரு நாளுக்கு மேல் தாங்காது. அம்மாவின் கட்டளை பால் வாங்கினால் கோனாரிடம் இல்லையென்றால் நீ போகவேண்டாம் நானே போயிட்டு வர்றேன். அம்மாவை தொந்தரவு செய்யவேண்டாம் என்று பல நாள் சோம்பலை விடுத்து இந்த சாகசங்கள்.



    ஒரு கிலோ மீட்டர் தொலைவு. இன்னும் சூரியன் தென்படவில்லை. மூடு பனி. தெருவில் மின்மினி பூச்சிகள். விளக்கு பூச்சி என்று சொல்வோம். அதன் வாலில் வரும் பச்சை நிற விளக்கை பார்த்துத்தான் ரேடியம் விளக்கை கண்டுபிடித்தாரோ?



    பிறகு அந்த பட்டுப்பூச்சிகள். இது நிஜ பட்டுப்பூச்சிகள் இல்லை. இதிலிருந்து பட்டு எடுக்க முடியாது. ஆனால் இதன் நிஜ பெயர் எங்களுக்கு தெரியாது. சிவப்பு நிறம். கையில் எடுத்துக் கொண்டால் மெதுவாக ஊர்ந்துச் செல்லும். அதன் மேல்புறத்தை தொட்டால் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும். அதனால் இந்த பெயர். எங்கே அலட்ச்சியமாக சென்றால் கால் பட்டு அவை கொல்லப்படுமோ என்று பார்த்துப் பார்த்து செல்வோம்.



    மணம் குணம் திடம் வேண்டாத சோம்பேறிகளுக்கு வீட்டு வாசலிலே பால்காரன். ஈயத்தட்டினால் ஆன பீப்பாயை சைக்கிள் காரியரில் மரப்பலகை வைத்து நன்றாக கட்டி அந்த பீப்பாயின் கீழே ஒரு குழாய். அலுமினிய அரை லிட்டர் கால் லிட்டர் குடுவைகளை எடுத்துக் கொண்டு சின்ன மணியை வைத்துக் கயிற்றால் டிங் டிங் என்று அடித்தும் விட்டு அம்மா பால் என்று கூவுவான்.



    பழகின கூஜாவாக இருந்தால் நேராக குழாயை திறந்துவிட்டு விளிம்பு வரை பால் ஊற்றுவான். புதிய கூஜாவாகவோ பாத்திரமாகவோ இருந்தால் அந்த அலமினிய அளவை வெளியே எடுத்து ஒரு லிட்டராக இருந்தால் இரு முறை நிரப்பி ஊற்றுவான். மாட்டின் மடியிலிருந்து பால் கறப்பதைப் பார்ப்பது ஒரு அழகு என்றால் பீப்பாய் குழாயிலிருந்து பால் வருவது ஒரு அழகு. எதாவது பேசிக் கொண்டே பால்காரன் பாத்திரத்தின் விளிம்பையும் தாண்டி ஊற்றிவிற்றால் கொள்ளை சந்தோஷம். ஒரு லட்சம் லாட்டரி அடித்தது போல.



    இதையெல்லாம் மங்கி கேப்பின் நடுவிலிருந்து கண்களால் நோட்டம் விட்டுக் கொண்டே பொடி நடையாக கோனாரின் வீட்டை நோக்கி. எதிர் தெருவிலிருந்த அந்த தென்றல். ஆஹா பல நாளாக சைட் அடித்து வரும் பெண். இவள் பால் வாங்க தினமும் வருகிறாள் என்றால் அம்மாவிடம் பரிவாக பேசி தினமும் பால் வாங்கி வரும் அந்த அரும்பணியை நாமே ஆற்றவேண்டும். அவளை பார்த்து ஒரு புன்னகை. தான் தான் விழுப்புரத்தின் பேரழகி என்று ஒரு நினைப்பு அவளுக்கு. புன்னகையை அலட்ச்சியம் செய்துவிட்டு வேகமாக முன்னே நடந்து செல்வாள். பெண்களை முன்னே நடக்கவிட்டு பின்னே செல்லும் சுகத்தை என்போன்ற இளவட்டத்திடம் விவரமாக கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள் பிறகு.



    சிம்மேந்திர மத்யமம் ராகத்தில் அசைந்தாடும் மயிலொன்று காணும் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் என்று பாட்டுக் கற்றுக் கொள்ளும் கலைஆர்வ குழந்தைகளின் இனிமையான குரல்கள். பாட்டு வாத்தியாரும் கறிகாய் நறுக்கிக் கொண்டே தாளம் போடுவாள். ஒரு வேளை கர்நாடக சங்கீதம் இல்லையென்றால் தென்னிந்தியாவே அழிந்து விட்டிருக்குமோ என்று எண்ணத்தோன்றும்.



    இதைக் கேட்டுக் கொண்டே பெருமாள் கோவிலை கடந்து சென்றால் மார்கழி மாத பஜனை பேஷாக நடந்துக் கொண்டிருக்கும். டாக்டர் இன்ஜினியர் என்று பல நல்ல வேலைகளில் இருப்பவர்களும் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு செந்நிற நாமத்தை இட்டுக் கொண்டு அந்த குளிரிலும் சட்டை எதுவும் போட்டுக் கொள்ளாமல் சின்ன துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு பெருமாளை சேவிக்க வந்துவிடுவார்கள்.



    இசை ஞானம் உள்ளவர்கள் பட்டை வைத்த ஹார்மோனியத்தை தோளில் போட்டுக் கொண்டு இறைவன் துதியில் இசைஞானத்தை கலந்து அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.



    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் என்று திருப்பாவை காதில் கேட்டுக்கொண்டே பக்தர்கள் சுடச்சுட பிரசாதம் தயாராக்கிக் கொண்டிருந்தார்கள். முந்திரிப் பருப்பு மிளகு சீரகம் நெய் போட்டு பொங்கல் பிரசாதமாக தயாராகிக் கொண்டிருந்தது. நான் பல முறை யோசித்து அசந்து போன விஷயங்களில் இதுவும் ஒன்று. பிராசதம் என்பதால் இத்தனை சுவையாக இருக்கிறதா இல்லை கோவில்களில் மட்டும் ஏதாவது தனிப்பாணி கையாள்கிறார்களா? எப்படி? ஓட்டலில் இந்த சுவை வருவதில்லையே?



    பல யோசனைகளுடன் நடந்து கோனார் வீட்டைச் சென்றடையும் போது லேசாக விடிந்திருக்கும். பல மாடுகள். எருமை பசு. சாணம் கோமூத்திரம் கலந்து புல் வைக்கோல் பரந்து கிடக்கும் மாட்டுக் கொட்டகையின் அழகை என்னவென்று சொல்வது?



    கிருஷ்ணன் வாழ ஏசு அவதரிக்க மாட்டுத் தொழுவத்தை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்று அங்கு போனால்தான் தெரியும். கொடுக்கவே பிறப்பெடுக்கும் மாடுகள். இருக்கும் போது பாலாய் மருந்தாய் இறந்தப் பிறகும் தோலாய்.



    மனிதர்கள் மாட்டிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியது பலப்பல. கன்றுகளை காட்டி அன்பாக கையால் பால் கறக்கும் காலம். இயந்திரங்களை வைத்து பாலை ரத்தத்துடன் உரியும் காலம் இல்லை அது.



    லட்சுமிக்கு என்ன கோபம் இன்னைக்கு என்று மாடுகளுக்கும் பெயர் வைத்து அவைகளை தன் குடும்பத்தில் ஒரு அங்கமாக நினைத்து கோனார் மனித-மிருக அன்பிற்கு ஒரு எடுத்துக் காட்டாய் விளங்கினார்.



    அவர்கள் வீட்டில் மனிதர்கள் இறந்தாலும் மாடுகள் இறந்தாலும் ஒரே அளவு சோகத்தை பார்த்திருக்கிறேன். அவர் பெண் என் அம்மாவை கூப்பிடுவதும் ஒரு அழகுதான். இழுத்துப் பேசும் பழக்கம் உள்ள அவள் டீச்சருஹ்ஹு என்று மூச்சை இழுத்துப் பேசுவாள். அம்மா தையல் சொல்லித்தருவதால் டீச்சர் மிஸ் என்று பல பெயர்கள்.

    எப்படி இருக்கே தம்பி? என்ற கேட்டுவிட்டு கூஜாவை எடுத்து செல்வார். பிறகு லட்சுமியிடம் அன்பாக பால் தரச்சொல்லி நிரப்புவார். அலட்ச்சியம் செய்துவிட்டுச் சென்ற எதிர் தெரு மிஸ் விழுப்புரம் முன்பே வந்து நின்றாலும் டீச்சர் பையன் என்ற அந்தஸ்து இல்லாததால் நிற்கத்தான் வேண்டும். அப்போது அவளைப் பார்த்து நான் விடுவேன் ஒரு அலட்ச்சியப் பார்வை. பார்த்தாயா கோனாரிடம் எனக்கு உள்ள செல்வாக்கை என்று அந்தப் பார்வைக்கு ஒரு அர்த்தம்.

    திரும்பி நடந்தால் செல்லியம்மன் கோவிலில் டேப் போட்டிருப்பார்கள். தாயே கருமாரி தேவி மகமாயி என்று தெய்வப்பாடல்கள் என்றால் எல் ஆர் ஈஸ்வரிதான் என்னும் அளவுக்கு ஒரு தெய்வீகக் குரல்.

    அம்மா சொல்லூவார். அவங்க கிரிஸ்டியன்தான் தெரியுமா? இருந்தாலும் அம்மன் பாட்டு அவங்க பாடினாதான் நல்லா இருக்கும் என்று. பிறகு சரஸ்வதி சபதம் திருவிளையாடல் என்று சாமி பட கேஸட்டுகள் ஒலிக்கும்.

    சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா என்று அதிகாலையில் குளித்து கருப்பு நிற ஆடை உடுத்தி குங்கும் சந்தனம் இட்டு ஐயப்ப பக்தர்கள் 40 நாள் விரதத்துடன் இருமுடி கட்டி பஜனையில் ஈடுப்பட்டிருப்பர். இன்னொரு கிரிஸ்துவரான ஏசுதாஸ் ஐயப்ப பக்தர்களுக்காக பாடிய பாடல்கள் இந்தியனின் பரந்த மனதையும் உயர்ந்த உள்ளத்தையும் எடுத்துக் காட்டும். இவர் பாடியிருக்காவிட்டால் ஐயப்பனே வருத்தப்பட்டிருப்பானோ?


    சிறிது நேரத்தில் பக்கத்து ஊரிலிருந்து தயிர்காரி வருவாள். மண் பானையிலிருந்து தயிர் ஊற்றிவிட்டு சுவரில் ஒரு கரியால் கோடு போட்டுவிட்டுப் போவாள். நான் அம்மாவிடம் கேட்பதுண்டு அம்மா வீட்டில் வெள்ளை அடித்துவிட்டால் கோடுகளெல்லாம் அழிந்துவிடுமே? என்று அப்போது எந்த கணக்கில் அவளுக்கு பணத்தை கொடுப்பது?. அம்மாவும் பொறுமையாக 10 ரூபாய்க்கு மேலே ஒரு மாசத்திற்கு ஆகாதுடா கண்ணா என்பாள். நெய்யும் அவளிடம் தானே வாங்குகிறோம். அதில் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என்பாள்.

    வீடுகளில் பாட்டிமார்கள் மடியாக குமுட்டி அடுப்பை வைத்து தனியாக சமைக்கும் வாசனை புகை நன்றாக தெருவுக்கே தெரியும். மடிமடியாக அம்மாக்கள் உள்ளே சமையல். அப்பாக்கள் கிணத்தடியில் தண்ணீர் இறைத்துக் கொண்டோ ரேடியோவில் செய்திகள் கேட்டுக் கொண்டோ பேப்பரை படித்துக் கொண்டோ பக்கத்து வீட்டு மாமாக்களுடன் அரட்டை அடித்துக் கொண்டோ இருப்பார்கள். டிவி எனும் மாயை இன்னும் பரவாத காலம் அது. மோட்டார் போட்டு தண்ணி இறைக்க வேண்டிய கொடுமையும் இல்லை. நடுவயதினரும் ஆரோக்கியமாக தடித்த புஜங்களுடன் இருந்ததற்கு காரணம் இந்த கிணற்றடி உடற்பயிற்சிதான்.

    சிறிய நகரங்களில் எப்படி இத்தனை நேரம் கிடைக்கிறது என்று நான் வியக்கும் விஷயங்களில் இன்னொன்று. பத்து மணிக்குத் தான் பள்ளிக் கூடங்களும் அலுவலகங்களும்.

    வீட்டுக்குச் சென்று பால் கொடுப்பதற்கு முன் வீட்டில் பாய் படுக்கை சுருட்டப்பட்டிருக்கும். ஆனால் சோம்பல் போயிருக்காது. அம்மா காபி போடுவதற்குள் இன்னொரு குட்டித்தூக்கம் போடத் தோன்றும். அப்படியே சுருட்டிய படுக்கையில் உடலைச் சாய்த்தால் பத்து நிமிடத்தில் அப்பாவின் கையால் முதுகில் ஒரு அடி.

    எழுந்திரி ஹாஃப் இயர்லி எக்ஸாமுக்கு படிக்கத் தேவையில்லை? அப்பா இன்னும் 10 நிமிஷம் என்று கெஞ்ச எங்க காலத்திலே நாங்க 5 மணிக்கு எழுந்திரிச்சு.... என்று பல முறை கேட்டு புளித்தப்போன லெக்சரை ஆரம்பிப்பதற்கு முன் எழுந்து ஓடி பல் தேய்க்க பிரஷைத் தேடி பேஸ்ட் போட்டு பாத் ரூமில் நின்றப்படியே தூக்கம்.

    அம்மாவிடமிருந்து காம்ப்ளான் போட்டிருக்கு ஆறிடப்போகுது என்று ரிமைன்டர். உயரத்துள்ளும் காம்பளான் குடித்துவிட்டு குளிக்கச் சென்றால் அந்த வெந்நீரின் மனம் மனதை கலக்கும். குளிரில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.

    ஆனால் இன்னொரு அலார்ம் வருவதற்கு முன் ஓட்டம். கடவுளைக் கும்பிட்டு நெற்றியில் குங்குமமிட்டு பனியன் சட்டை போட்டுக் கொண்டு அம்மாவின் சுடச்சுட இட்லி சட்னி சாம்பார்.

    அளவில்லாமல் இட்டிலியை உள்ளே தள்ளிவிட்டு வெளியே வந்தால் சூரியன் தன் லேட் ட்யூட்டியை தொடங்கியிருப்பான். பள்ளிக்கு போவதற்கு முன் பாடங்களை ஒரு ரிவிஷன்.

    வீட்டில் விபூதி கற்பூரம் சாம்பிராணி ஊதுவத்தி மணம். பனியின் மழையால் நனைந்த சாலைகள் எங்கும் பக்தி மயம். வெயிலினால் கொடுமை இல்லை. இந்த மார்கழியில் தைப்பிறக்க போகிறது என்ற செய்தியை தாங்கி வரும் மார்கழி உழுவர்களின் நம்பிக்கை பக்திக்கும் இசைக்கும் ஒரு உகந்த நேரம் பள்ளிச்செல்லும் சிறுவர்கள் மட்டுமே பயப்படும் பரீட்சை நேரம், இப்படியாக எங்கோ ஒரு மார்கழியின் காலை இதையெல்லாம் விட்டு இங்கே வந்து இயந்திர வாழ்கையில் பணத்திற்காக பலவற்றையும் இழந்து அந்த விழுப்புரத்து தெருக்களின் சுகந்தத்தை மறந்து மிருகமாய் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த வாழ்கையின் ஓரத்தில் நினைவுகளைத் தொட்டு கண்ணோரம் நீர்துளிகளை வரவழைத்துச் சென்றது.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அழகான டைரி லியோ இது.
    உங்களைத் தொந்தரவு செய்யாமல் விட்டு விடுகிறேன், தொடர்ந்து எழுதுங்கள். நியூ ஜெர்சி பக்கத்தில்தான் நம் மன்றத்து அறிஞரும் இருக்கிறார். உங்களுக்குத் தெரியுமா?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    பல முறை படித்தாகி விட்டது என்னமோ
    அலுப்பு தட்டவே இல்லை மோகன்.....

    ஒரு சில வரிகள்...ஆழகான தமிழ்ப்பா

    அருமையான பதிவு.....
    நீங்களும் சிறந்த படைப்பாளிதான்....

    நன்றி
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    மிக்க நன்றி ப்ரதீப், ஓவியா
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ண(தாச)ன்.

    சும்மாவா அப்படி சொல்லியிருப்பான்?

    மிக அழகான, ரம்ம்பியமான, நுணுக்கமான பதிவுகள் பல....


    மிருக அன்பு, தூக்க நேசம், வாசல் தெளிக்கும் பாங்கு, மிஸ் விழுப்புரங்களின் மனவோட்டம், டீன் ஏஜ் இளைஞனின் பார்வையோட்டம்..


    மார்கழி காலை போலவே சில்லென்ற இதம் இதைப் படிக்கையில்..


    பாராட்டுகள் மோகன்... நல்ல எழுத்துத் திறமை உங்களுக்கு!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by ilasu View Post
    மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ண(தாச)ன்.

    சும்மாவா அப்படி சொல்லியிருப்பான்?

    மிக அழகான, ரம்ம்பியமான, நுணுக்கமான பதிவுகள் பல....


    மிருக அன்பு, தூக்க நேசம், வாசல் தெளிக்கும் பாங்கு, மிஸ் விழுப்புரங்களின் மனவோட்டம், டீன் ஏஜ் இளைஞனின் பார்வையோட்டம்..


    மார்கழி காலை போலவே சில்லென்ற இதம் இதைப் படிக்கையில்..


    பாராட்டுகள் மோகன்... நல்ல எழுத்துத் திறமை உங்களுக்கு!
    மிக்க நன்றி இளசு.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •