1) சொகுசு வாகனங்களைக் கடத்தி விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டது. அந்தக் குழு இராணுவத்திலிருந்து தப்பியோடிய
காப்டன் தலைமையில் இயங்கியதாக பேலியகொட குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

அவர்களிடமிருந்து பிராடோ ஜீப், கார்,வேன் ஆகியன கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் இரண்டு கோடி.

பத்தரமுல்லை, கேகாலை, திஸ்ஸமாறாம, இரத்மலானை ஆகிய பிரதேசங்களிலிருந்து அந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 6
பேரைக் கொண்ட அந்தக் கும்பலுடன் வங்கி அதிகாரி ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

2) சிங்கள ஊடகவியலாளர் லக்மல் சம்பத் கொலை பற்றிய பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் அவிசாவளையில் ஐந்து தமிழர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர். அச் சம்பவத்தின் குற்றவாளிகள் யார் என்று லக்மல் சம்பத்துக்குத் தெரியும். எனவே இராணுவ லெப்டினென்ட் நிலை அதிகாரி ஒருவர் லக்மலை படுகொலை செய்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

அவசரகால சட்ட நீட்டிப்பு மீது நாடாளுமன்றில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஐக்கிய தேசியக்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார அந்தத் தகவலை வெளியிட்டார்.

லக்மல் படுகொலை குறித்து முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி உள்ளன. எனவே அரசாங்கம் அது பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே லக்மல் சம்பத் படுகொலை தொடர்பில் இராணுவ புலனாய்வு அதிகாரி மற்றும் இரு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அது பற்றி உறுதிப்படுத்தப்படவில்லை.

3) இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனா செல்கிறார். அந்நாட்டின் வெளி விவகார அமைச்சர் லிசயோக் சிங் விடுத்த அழைப்பை ஏற்று மங்களவின் பயணம் அமைகிறது. எதிர்வரும் 12 ஆம் தேதி முதல் 16ஆம் நாள் தேதி வரை அவர் சீனாவில் இருப்பார்
என்று தெரியவந்துள்ளது.

4) யாழ்ப்பாண குடாநாட்டில் இன்று பல்வேறு தாக்குதல்கள் நடந்தன. அவற்றில் கடற்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இராணுவத்தினர் மூவர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர் பொன்னாலையில் பணியாற்றி வந்தார்.

துன்னாலை, வேலணை ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து அல்லைப்பிட்டி சந்தியில் நயினாதீவு, நெடுந்தீவு,
ஊர்காவற்றுறைக்குச் செல்லும் பயணிகள் சுமார் மூன்று மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனிடையே யாழ்ப்பாணம் கோண்டாவில் பேரூந்து நிலையம் அருகே 5கிலோ கண்ணிவெடியை இராணுவம் கைப்பற்றியது. யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி செல்லும் இராணுவ வாகனத்தைக் குறி வைத்து அந்தக் கண்ணிவெடி பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற
சந்தேகம் எழுந்துள்ளது.

5) மட்டக்களப்பில் நடந்த வாகன விபத்தில் 24 பேர் காயமடைந்தனர். இலுப்பையடிச்சேனை கோதியாபுரம் நாகதம்பிரான் ஆலய திருவிழா
முடிந்து வீடு திரும்பிய போது அந்த விபத்து நடந்தது. காயமடைந்தோர் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6) சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் பெண் கர்ப்பிணி அல்ல என்று காவல்துறை மா
அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்தார். ரம்புக்கனையில் சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டம்
தீட்டப்பட்டதாக அவர் கூறினார்.
அனுராதரபும் குருணாகல் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என்பவரே அந்தத் தாக்குதலை நடத்தினார். அப்பெண் கடந்த மார்ச் மாதம் ரம்புக்கனைக்கு வந்தார். அவர் தங்குவதற்காக வெலிவேரியவில் வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று அவர்
விளக்கினார். மஞ்சுளாவுக்கு உதவியதாக ரம்புக்கனவைச் சேர்ந்த தம்பதியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம்
நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அந்தத் தகவல்கள் தெரிய வந்ததாக சந்திரா பெர்னான்டோ தெரிவித்தார்.