1) இலங்கை அமைதி முயற்சிகளில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இரட்டை வேடமிடுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின்
அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார்.

தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆராய 12 பேர் கொண்ட பல்லின குழு அமைக்கப்பட்டதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
அது தொடர்பில் கருத்துச் சொன்ன சு.ப.தமிழ்ச்செல்வன், இலங்கை ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வுப் பேச்சுக்கள் நடக்காது என்று
மகிந்த கூறியிருப்பது அவருடைய உண்மை முகத்தைப் புலப்படுத்துகிறது என்றார்.

யுத்த நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் நடைமுறைக்குச் சாத்தியமான அம்சங்களை நிறைவேற்ற வேண்டும். அதை விடுத்து சர்வதேச
சமூகத்தை ஏமாற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள சூழ்ச்சி இது என்றும் தமிழ்ச் செல்வன் கூறினார்.

அமைதி முயற்சிகளில் மகிந்தவுக்கு உண்மையான அக்கறை இருந்தால் தமிழர்கள் மீதான படுகொலைகளை உடனே நிறுத்த வேண்டும்.
வடக்கு - கிழக்கில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அகற்ற வேண்டும். அனுசரணையாளர்கள் உதவியுடன் அமைதிப் பேச்சுக்கு
உகந்த சூழலை உருவாக்க வேண்டும். அதுதான் அவசரமான தேவை என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.


2) தமிழீழத் தாயக விடுதலைப் போரில் கரும்புலிகளுக்குத் தனி இடம் உண்டு. தங்களையே உயிராயுதங்களாக்கிய கரும்புலிகள் நினைவு
நாள் நிகழ்வுகள் தாயகத்தில் உணர்வு எழுச்சியுடன் நடைபெற்றது.

கிளிநொச்சி, மன்னார், வவுனியா, புளியங்குளம், மதியாமடு, நயினாமடு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அஞ்சலிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. ஈகைச்சுடறேற்றம், கொடி ஏற்றுதல் உட்பட பல நிகழ்வுகள் எழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன. புலிகளின்

முன்னணித் தளபதிகளும், பொதுமக்களும் நிகழ்வில் திரளாகக் கலந்து கரும்புலிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.

3) வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் உள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக
இலங்கை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மாகாண மேன்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்கும் அரசியலமைப்புத் திருத்தம் மீது
நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர்
அலுவலகத்தின் மூலம் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் அந்த 18 ஆவது திருத்தம் நிறைவேற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்புடத்தக்கது.

4) இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி முத்தலிப் படுகொலை தொடரபில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சந்தேக
நபரான ஐஸ் மஞ்சுவின் சகோதரர் உதயகுமார என்று தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் 7 ஆம் தேதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

5) மின்சார சபையை மறுசீரமைக்கும் யோசனை தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்து அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றத்திற்கு
சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அது பற்றி அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. எனவே சட்டமூலம் பற்றிய உயர்நீதிமன்றத்தின் கருத்து தற்போதைக்கு தேவையில்லை என்று சட்டமா அதிபர் தெரிவித்தார்.

இதனிடையே, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அந்த இரு சட்டமூலங்களையும் ஆராயுமாறு உயர்நீதிமன்றத்துக்குக் கோரிக்கை
வைக்கப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி சரத் என் சில்வா, சிறிராணி திலக்கவர்த்தன, சலிம் மர்சூக் ஆகிய மூன்று நீதிபதிகள் அச்
சட்டமூலங்களை ஆராய்ந்தனர். அது பற்றிய முடிவை மகிந்தவுக்கும்,சபாநாயகருக்கும் தெரியப்படுத்துவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.