1) இலங்கை அரசாங்கத்தோடு பேச்சு நடத்தத் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வர வேண்டும் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச

வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் NDTV க்கு வழங்கிய பேட்டியில் அவர் அவ்வாறு கூறினார்.

அமைதித் தீர்வுக்கான வரைவை கொடுக்கத் தயாராக உள்ளோம். விடுதலைப் புலிகளும் உட்கார்ந்து பேசி அவர்களுக்கு என்ன தேவையோ

அதைக் கூறட்டும் என்றார் அவர்.

நான், பிரபாகரன் உள்ளிட்ட அனைவருமே இலங்கையர்தான். நீங்கள் இதைத்தான் ஏற்கவேண்டும் என்று புலிகளிடம் எதையும் திணிக்க

நான் விரும்பவில்லை. எனவே ஒன்றாய் அமர்ந்து விவாதிப்போம். அனைத்து அமைதி முயற்சிகளிலும் விடுதலைப் புலிகளும்

பங்கேற்கட்டும் என்றார் மகிந்த ராஜபக்ச.

2) இலங்கையின் மூன்றாம் நிலை தளபதி பாரமி குலதுங்க கொலை பற்றிய முக்கியத் தகவல் கிடைத்துள்ளது. அவரைக் கொல்ல

பயன்படுத்தப்பட்ட உந்துருளியை கொள்வனவு செய்தவரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

வத்தளை மாபோல பிரதேச முஸ்லிம் ஒருவரிடமிருந்து அந்த உந்துருளி வாங்கப்பட்டது. கொள்முதல் செய்தவர் வன்னியில்

விடுவிக்கப்படாத பிரதேசத்தை சேர்ந்தவர். அவர் வன்னியிலிருந்து அடிக்கடி கொழும்பிற்கு வந்து செல்லும் வழக்கமுடையவர். மேஜர்

ஜெனரல் பாரமி குலதுங்கவை அவர் கொலை செய்திருக்கலாம் என்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு சந்தேகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய பெண் தற்கொலையாளியை வழிநடத்திய

பலரின் விவரங்களை இரகசியப் பிரிவினர் திரட்டியுள்ளனர்.

அவர்களில் சிலரைக் கைது செய்து விசாரணை நடந்து வருவதால் மேல் விவரங்களை வெளியிடமுடியாது என்று இரகசியப் பிரிவு

தெரிவித்துள்ளது.

3) மொனராகல பலாருவ கிராம மரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் செருப்பு

வடிவத்தில் இருந்த அந்த வெடிபொருளை மொனராகல காவல்துறைக் கைப்பற்றியது. அதில் 50 கிராம் சி-04 ரக வெடிப்பொருட்கள்

இருந்ததாக தியத்தலாவ இராணுவ முகாமைச் சேர்ந்த குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் தெரிவித்தனர்.

4) சிறிலங்கா மின்சார சபையை மறு சீரமைக்கும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் அந்த

முடிவு பற்றி மகிந்தவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.

மின்சார சபையைக் கலைக்கக் கூடாது என்று தொடக்கத்திலிருந்தே அரசுக்கு யோசனை தெரிவித்தோம். அரசாங்க சட்டமூலத்தில்

மின்சாரசபை நேரடியாக தனியார் மயமாக்கப்படவில்லை. இருப்பினும் அதைச் செய்வதற்கான வசதிகள் அந்தச் சட்டமூலத்தில் உள்ளன.

எனவே தான் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று லால்காந்த விளக்கினார்.

இந்நிலையில் அந்த சட்டமூலத்தை ஆதரிப்பதா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக்

குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

5) தமிழீழ தாயக விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த கரும்புலிகள் நாளுக்காக தாயக தேசம் உணர்வெழுச்சியுடன் தயாராகிறது.

அந்த எழுச்சி மிக்க நாள் யூலை 5. அதை முன்னிட்டு தாயகத்தில் கரும்புலி மாவீர்களின் திருவுருவப்பட ஊர்திகளின் பவனி

வருகின்றன. கரும்புலி மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வுகளும் தொடருகின்றன. தாயகத் தமிழர்கள் நல்வாழ்வுக்காக தம்

இன்னுயிர் விதைத்த மாவீரர்களுக்கு பல்லாயிரக் கணக்கானோர் மரியாதை செய்து வருகின்றனர்.