1) முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கொக்குத்தொடுவாயில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில்இரண்டு

இராணுவத்தினர் காயமடைந்தனர். அவர்கள் முன்னரங்க நிலைப் பணிகளில் ஈடுபட்ட போது மூன்று முறை அத்தகைய தாக்குதல்கள்
நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே யாழ். குடாநாட்டிலும் அதுபோன்ற தாக்குதல் நடைபெற்றது. அதில் ஒருவர் பலியானார்.

வடமராட்சி வல்வெட்டித்துறை இராணுவ காவலரண் மீதும் மர்ம நபர்கள் கைக்குண்டுகளை வீசினர். எனினும் அதில் எவருக்கும் பாதிப்பு
இல்லை.


2) சிறிலங்கா இராணுவத்தில் புலனாய்வு எச்சரிக்கைகள் மூன்று காரணங்களால் வெற்றி அளிக்கவில்லை என்று அமெரிக்க தேசிய
பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார். புலனாய்வு எச்சரிக்கைகள் படைத்துறையின் அனைவருக்கும் சென்று சேரவில்லை. அப்படியே

சேர்ந்தாலும் அவை சீரிய கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதற்கு அதிகார நெருக்கடிகள் முக்கியக் காரணம் என்றும் அந்நிபுணர்
தெரிவித்துள்ளார்.

3) தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் உள்ள மூதூரில் 6 ஆயிரம் பேர் தற்காப்புப் பயிற்சியை நிறைவு செய்தனர். அதற்கான
நிகழ்வு சிறீ செண்பகா மகா வித்தியாலய மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை சிங்கள அரசாங்கம் புறக்கணித்து வருகிறது. எனவே நமது விடுதலைப் போராட்டத்தை முழுவீச்சுடன் முன்னெடுக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என்று நிகழ்வில் பேசிய எழிலன் கூறினார்.

4) மத்திய வங்கி விவகாரம் தொடர்பாக ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி
வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் கப்ரால் நியமிக்கப்பட்டதும், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் சுனில் மெண்டிஸ் பதவி விலகியதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. எனவே அத்தகைய யோசனையை ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பந்துல குணவர்த்தன, பீ.தயாரத்ன, றஞ்சித் அளுவிகார, தயாசிறி ஜயசேகர, டபிள்யு.பீ.ஏக்கநாயக்க, லக்ஸ்மன்
செனவிரத்ன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, தர்மதாச பண்டா, நியோமல் பெரேரா ஆகியோர் அந்த யோசனைக்கு வடிவம் கொடுக்க
வலியுறுத்தினர்.

5) சிறிலங்கா அரச வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை மீள வசூலிப்பதற்காக சிறப்பு நிறுவனம் அமைக்கப்பட உள்ளது என்று
நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்தார்.

வங்கிக் கடனை மீண்டும் வசூலிப்பதற்கு முழு அதிகாரம் கொண்ட நிறுவனமாக அந்த அமைப்பு செயற்படும். அது தொடர்பான சிறப்புச்
சட்டமூலம் அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதும் இதுவரை அரச வங்கிகளிலிருந்து 2,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாத பெரும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அவர்.

அந்தச் சட்டத்தினால் உள்நாட்டு வங்கிகளும் வாடிக்கையாளர்களும் பாதுகாக்கப்படுவர் என்று பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.