1) தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி தன் கருத்துக்களை ஐரோப்பிய ஒன்றியம் மாற்றிக் கொண்டால் கண்காணிப்புக் குழு தொடர்பில்

தமது நிலையை மறுபரிசீலனை செய்ய முடியும் என்று அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீது இராணுவச் செயற்பாடுகள் போர்க் காலத்தை நினைவூட்டுகின்றன. தற்போதைய வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு

வர யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

ஐரோப்பியத் தடை நடைமுறையில் இருக்கும் போது அந்நாட்டினரும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றால் அமைதி முயற்சிகளில்

குழப்பமான நிலை ஏற்படும் என்று தமிழ்ச்செல்வன் கூறினார்.

2) மன்னாரில் கைது செய்யப்பட்ட மீனவரை கடற்படை கடலில் மூழ்கடித்துக் கொன்றது. பேசாலை கரிசல்பாடு கடலோரக் கிராமத்தைச்

சேர்ந்தவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.

மீனவர்கள் தங்கள் அனுமதிப் பத்திரத்தை காண்பித்த போதும் கடற்படையினர் அவர்களைத் தாக்கினர். இப்ராகிம் அசீக், மொகமெட்

பாகிம் ஆகிய இருவரையும் கடலில் தூக்கி வீசினர். அதில் அசீக் கட்டாயமாக நீருக்குள் மூழ்கடிக்கப்பட்டார். நீச்சல் தெரிந்ததால் பாகிம்

மட்டும் உயிர் தப்பினார். மேலும் இரு முஸ்லிம் மீனவர்களை கடற்படையினர் கைது செய்தனர்.கடற்படையின் அட்டூழியத் தாக்குதலால்

400-க்கும் மேற்பட்ட படகுகளை கடலில் விட்டுவிட்டு மீனவர்கள் கரையேறித் தப்பினர்.

இதனிடையே, யாழ். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களைக் காணவில்லை என்று போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம்

புகார் செய்யப்பட்டுள்ளது.

3) தமிழ் ஊடகத்துறை வளர்ச்சிக்கு தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி பெரும் பங்காற்றும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின்

அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் கற்கை நெறி ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

இந்த நூற்றாண்டில் மனித வாழ்வு உன்னத நிலை அடைந்து விட்டது. இருப்பினும் நாம் இணைந்து பயணிக்க முடியாத நிலையில்

உள்ளோம். அனைத்து துறைகளிலும் நாம் முன்னேற வேண்டும். அதில் ஊடகத்துறை முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று

தமிழ்ச்செல்வன் கூறினார். இன்று ஊடக உலகம் பலம் வாய்ந்தது.அது எல்லாவற்றையும் சாதிக்கும். உலகத்தின் எல்லா வல்லமைகளும்

அந்தத் துறைக்குள் தான் புதைந்துள்ளது என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.

4) ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாபெரும்

அமைதிப் பேரணி நடைபெற்றது. அதில் அமெரிக்க வாழ் தமிழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஈழத்தமிழர்கள் மீது அரசுப்படைகளின்

வன்முறையை உலகுக்கு உணர்த்தும் விதத்தில் அந்தப் பேரணி நடத்தப்பட்டது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்கள்

அதற்கு ஏற்பாடு செய்திருந்தன.

மனித உரிமைகளின் சட்டத்தரணி திருமதி கரன் பாஸ்கர் கலிபோர்னியாவில் இருந்து வந்து சிறப்புரையாற்றினார். அமெரிக்க, கனேடிய

தேவாலயங்களின் பாதிரியார்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.

தமிழீழ விடுதலை புலிகளின் சட்ட ஆலோசகர் வி.உருத்திரகுமார் தலைமையில், சட்டத்தரணி திருமதி. கரன் பாஸ்கர் உள்ளிட்ட ஐவர்

அடங்கிய குழு ஐ.நா. செயலாளர் கொபி அனானின் பிரதிநிதிகளிடம் மனுக் கொடுத்தனர்.

5) ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றைக் கைவிட்டு விட்டு தங்களோடு இணையுமாறு மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய தேசியக்

கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

ஜே.வி.பி. ஜாதிக ஹெல உறுமயவை திருமணம் செய்து கொண்ட மகிந்த அரசாங்கம் ஊனமுற்ற குழந்தையைப் பெற்றுள்ளது.

ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க மகிந்த அரசு ஐக்கிய தேசியக் கட்சியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்

குறிப்பிட்டார்.


கருணா குழுவின் ஆயுதங்களைப் பறித்தால் விடுதலைப் புலிகள் பேச்சுக்கு வருவார்களா? என்று மகிந்த கேட்டுள்ளார். அதன் மூலம்

அரசாங்கத்துக்கும் கருணா குழுவுக்கும் இடையிலான உறவை சர்வதேசத்தின் முன் மகிந்த ஒப்புக்கொண்டார் என்றார் அவர்.