1) சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாம் நிலை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க பலியானார். பன்னிப்பிட்டியவில் நடந்த குண்டுத்தாக்குதல் அவர் உயிரைப் பறித்தது. மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலையாளி தாக்குதலை நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வழக்கமான பணிக்காக பரமி குலதுங்க அலுவலகம் சென்றபோது அச்சம்பவம் நடந்தது. அதில் மேலும் மூன்று இராணுவத்தினர் உட்பட நால்வர் கொல்லப்பட எட்டுப் பேர் காயமடைந்தனர்.

விடுதலைப் புலிகள் தான் அந்தத் தாக்குதலை நடத்தியதாக இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க குற்றம் சாட்டினார்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா செயலிழந்த பின்னர் இரண்டாம் நிலையில் இருந்த மல்லவராட்சி முதல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து மூன்றாம் நிலையில் இருந்த பரமி குலதுங்க இரண்டாம் நிலையை எட்டினார்.

திருகோணமலை, வவுனியா மன்னார் மாவட்டங்களின் கட்டளை தளபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். 1951 ஆம் ஆண்டு பிறந்த பரமி குலதுங்க இந்த ஆண்டு ஒக்டோபரில் ஓய்வுபெறவிருந்தார்.

இந்நிலையில் பரமியின் கொலை தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது. பிரதி காவல்துறை மா அதிபர் எம்.கே.இலங்ககோன், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எச்.ஏ. இலவங்கம ஆகியோர் அவ்விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

2) இலங்கை அரசாங்க நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிக்க இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சிலர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்தது. அதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி அநத்க் குழுவை நியமித்துள்ளது.

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்ன ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

முறைகேடுகள் பற்றிய விசாரணை அறிக்கையை அவர்கள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிப்பர். அதன் பின்னர் மக்களுக்கு அதை விளக்கும் விதத்தில் நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

அரசு முறைகேடுகள் பற்றிய தகவல் அறிந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

3)இலங்கை இரகசிய காவல்துறையும், நீர்கொழும்பு காவல்துறையும் நெடுந்தூரப் படகு ஒன்றைக் கைப்பற்றினர். அதை கடற்புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய உறவு கொண்டு அவர்களுக்கு உதவியதாக நீர்கொழும்பு வர்த்தகர் கிறிஸ்டி அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அநத்ப் படகு கைப்பற்றப்பட்டது.

அது கிறிஸ்டியின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை வாங்க விடுதலைப் புலிகள் கிறிஸ்டிக்கு நிதி உதவி செய்ததாக காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.

40 அடி நீளமுள்ள அந்தப் படகு நீண்ட நாட்கள் கடலில் இருந்த பிறகு நீர்கொழும்பு களப்பிற்குத் திரும்பியுள்ளது. அதிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என இரகசிய காவல்துறை தெரிவித்தது.

கிறிஸ்டியின் மகள் மன்னாரில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளரை திருமணம் செய்துள்ளார். எனவே அவரும் கைது செய்யப்பட்டார்.
மன்னாரைச் சார்ந்த விடுதலைப்புலி முக்கியஸ்தர் நிக்சன், கிறிஸ்டி படகை வாங்க பணம் கொடுத்ததாக தெரியவந்துள்ளது.

4) யாழ். தீவகம் வேலணையில் மர்ம நபர்களின் தாக்குதலில் குடும்பஸ்தர் சுட்டுக்கொல்லப்பட்டார். வங்களாவடியில் அச்சம்பவம் நடந்தது.
கொல்லப்பட்டவர் நாயன்மார்கட்டு நல்லூரைச் சேர்ந்த கந்தையா யோகேஸ்வரன் தெரியவந்துள்ளது. அவர் ஈ.பி.டி.பியுடன் சேர்ந்து தேசவிரோதச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே மட்டக்களப்பு ஒந்தாச்சிமடத்திலும் அது போன்ற சம்பவம் நடந்துள்ளது. அதில் கொல்லப்பட்டவர், துரைராசா யோகராசா என்று அடையாளம் காணப்பட்டது. உந்துருளியில் வந்தவர்கள் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் யாழ். குடாநாட்டில் குடும்பஸ்தர் இருவரைக் காணவில்லை என்று புகார் கூறப்பட்டது. அவர்களில் ஒருவரை ராணுவம் விசாரணையின் பேரில் அழைத்துச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.