1) யாழ். மருத்துவனைப் பகுதியில் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் திருகோணமலை வெள்ளை மணல்

பகுதியைச் சேர்ந்த மொகமட் பசீர் என்று தெரியவந்துள்ளது. அவர் புளொட் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் என்றும் கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

2) கருணா குழுவின் தாக்குதல்களை முழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை நிறுத்த
முன்வருவார்களா என்று இரகசியமாக வினவியதாக சண்டே லீடர் தகவல் வெளியிட்டுள்ளது.

உதயன் நாளிதழ் ஆசிரியர் என்.வித்யாதரன்,அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம் மகிந்த செவ்வாய்க்கிழமை
ஆலோசித்தார். அப்போது புலிகள் தரப்பிலிருந்து தமது கருத்துக்கு ஆதரவு பெற்றுத் தர மகிந்த கோரினார்.

போர் தொடங்கினால் சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்படும் என்று குறிப்பிட்ட மகிந்த, நோர்வேயின் அனுசரணையை
விலக்கிவிட்டு, நேரடிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டார்.

அத்தகைய நேரடிப் பேச்சுக்களில் காணும் இணக்கத்தை அமுல்படுத்த இரு வாரங்கள் முயற்சித்து, அதில் வெற்றி பெற்றால் தொடர்ந்து
நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாம் என்றும் அவர் விளக்கினார்.

மகிந்தவின் அந்தக் கோரிக்கையை, உதயன் நாளேட்டைச் சேர்ந்த இவ்விருவரும் கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனிடம்
விளக்கியதாகவும், அதற்கான பதிலை விடுதலைப் புலிகள் பின்னர் தெரிவிப்பர் என்றும் சண்டே லீடர் தெரிவித்துள்ளது.

3) வெலி ஓயா கல்யாணபுர இராணுவ முகாமுடன் இணைந்து பணியாற்றி விடுதலைப் புலிகளுக்கு உளவுப் பார்த்ததாக கூறப்படும்

சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலைப் புலிகளுக்கு உளவு பார்த்த இராணுவத்தினர்

மற்றும் அதிகாரிகள் 28 பேரின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதையடுத்து மேலும் 5 பேரைக் கைது செய்து விசாரணைகள்
நடத்தப்பட்டு வருகின்றன.

4) கிளிநொச்சி விசுவமடுவில் புலிகளின்குரலின் மாதாந்த முத்தமிழ் கலையரங்கம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

விசுவமடு மகா வித்தியாலய மாணவர்களின் நாடகம், மாணவிகளின் கும்மி-கோலாட்டம், ஆசிரியர்கள் மாணவர்களின் கவியரங்கம்,
"எனது ஊர்ப்பேச்சு" காசி மணியத்தின் தனிநடிப்பு, விசுவமடு இளைஞர் மன்றத்தின் "விளிம்பில்" நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இந்நிகழ்வில் அரங்கேற்றப்பட்டன. சிறப்பு நிகழ்ச்சியாக சங்கநாதம் அரங்கேற்றப்பட்டது. நிகழ்ச்சிகளில் பங்காற்றிய கலைஞர்களுக்கு
பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

5) மட்டக்களப்பு வாழைச்சேனையில் புளொட் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வாழைச்சேனை புதுக்குடியிருப்பில் அச்சம்பவம் நடைபெற்றது. கொல்லப்பட்டவர் அண்மையில் தான் வெளிநாட்டிலிருந்து திரும்பியதாக
காவல்துறையினர் தெரிவித்தனர்.

6) பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமா என்பது பற்றி இரகசிய கருத்துக் கணிப்பு நடத்த அரசாங்கம் முடிவுசெய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

புதிய தேர்தலை நடத்துவதா அல்லது அமைச்சரவையை மாற்றியமைக்கலாமா என்பது பற்றிய கேள்விகளின் அடிப்படையில் அந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசு பற்றி மக்களின் கருத்தை அறிவதே அதன் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.