இந்த 2006ல் இருந்து மயிலார் நம்ம கூடவே இருந்து பாத்து காப்பாத்தப் போறதால, இனிமே நம்ம வாழ்க்கைல மயிலார் இல்லாம பதிவு போட முடியுமா? நம்ம மயிலார் முருகன் அனுப்பிச்ச ரத்னக் கலாப மயிலார்தான்.

இன்னைக்கு ஜனவரி ஒன்னு. ஊரெல்லாம் கோலகலமா இருக்கே. நாமளும் forum வரைக்கும் போயிட்டு வரலாமுன்னு நெனச்சேன். அதாவது ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு. ஒடனே கெளம்பீட்டாரு மயிலாரு. சொல்லச் சொல்ல கேக்கவேயில்லை. அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் போனதில்லைன்னு தோகைய விரிச்சிக்கிட்டு ஒத்தக்கால்ல நிக்குறாரு. வேற வழியில்லாம கூட வரச் சொன்னேன்.

நான் பைக்குல போகும் போது அவரு மட்டும் ஜிவ்வுன்னு வானத்துல எம்பி சர்ருன்னு பறந்தாரு. டிராஃபிக்காவது! சிக்னலாவது! சட்டுன்னு பொறாமையா இருந்துச்சு. சரி. அதையெல்லாம் பாத்தா முடியுமா? மால்ல போய் வண்டிய நிப்பாட்டுனேன். ஒரே கூட்டம். நெரிசக்காடு.

"ஏம்ப்பா ராகவா! இங்க என்ன திருவிழா நடக்குதா? பெரிய கோயிலா இருக்கும் போல!"

"ஐயா சாமி. இது கோயில் இல்ல. கடை. பெரீஈஈஈஈஈஈஈய்ய கடை. விக்கிரமாதித்தன் கதைல வர்ர கதைக்குள்ள கதை மாதிரி கடைக்குள்ள கடை. ஒரு கடைக்குள்ள பல கடை. ஒவ்வொன்னும் ஒரு கடை." முடிஞ்ச வரைக்கும் விளக்குனேன்.

நீட்டமான கழுத்தைத் தூக்கி நாலு பக்கமும் பாத்தாரு. மேலையும் கீழயும் கழுத்து ரெண்டு வாட்டி ஏறி எறங்குச்சு. நான் நடக்கத் தொடங்குனதும் கூடவே வந்தாரு. வர்ரவங்க மேல இடிக்கக் கூடாதுன்னு தோகையை இறுக்கி நெருக்கி வெச்சுக்கிட்டே நடந்தாரு.

ஒரு எடத்துல போனதும் கமகமன்னு வாட வந்துச்சு. மயிலார் கண்ணு பெரிசா விரிஞ்சது.

"ராகவா! என்னவோ வாட வருது பாரு. ஜம்முன்னு இருக்கு."

"மயிலாரே! அது மக்காச்சோளம். நல்லதா உதுத்து வேக வெச்சி கூட உப்பும் மெளகாப் பொடியும் வெண்ணெய்யும் போட்டுத் தர்ராங்க."

"அட அப்படியா! நமக்கும் கொஞ்சம் வாங்கி எரச்சு விட்டா கொத்தித் திம்போமுல்ல."

பாவம் பறந்து வந்ததுல மயிலாருக்குப் பசிச்சிருக்கும் போல. ஒரு பெரிய கப்பு வாங்குனேன். கீழ பல பேரு நடக்குற எடங்குறதால கைல போட்டுக் காட்டுனேன். ஒவ்வொன்னாக் கொத்திக் கொத்திச் சொகமாத் தின்னாரு. தலையக் குனிஞ்சு ஒன்னக் கொத்துறதும்....அதையே வானத்தப் பாத்துக்கிட்டு முழுங்குறதும்....அது தொண்டைல ஜில்ல்லுன்னு போறதும்...அடடா! என்ன அழகு தெரியுமா!

"ராகவா! இந்த மக்காச்சோளம் எவ்வளவு?"

"முப்பது ரூவா ஒரு கப்பு."

மயிலாருக்கு சடக்குன்னு ஒரு சோளம் குறுக்க விழுந்திருச்சு. "என்னது? முப்பது ரூவாயா? கைப்பிடிதான இருந்துச்சு. அதுக்கே முப்பது ரூவாயா?"

"மயிலாரே, இது மக்காச்சோளமாயிருந்தா நாலஞ்சு ரூவாய்க்கு விக்கலாம். அத வெளிய தெருவுல விக்குறாங்களே. நீளமா நெருப்புல வாட்டி. இது கார்ன். பேரே வெளிநாட்டுப் பேரு. பெறகு வெல இருக்காதா?" நான் சொன்ன வெளக்கம் மயிலாருக்குத் திருப்தியாயில்லைன்னு அவரு நடையிலேயே தெரிஞ்சது.

அப்புறம் அப்படியே தானா மேல ஏறும் படீல ஏறி லேண்டு மார்க்குங்குற புத்தகக் கடைக்குப் போனோம். வரிசையா இருந்த புத்தகங்கள ஒரு நோட்டம் விட்டுட்டு மாடிக்குப் போயி தமிழ் சினிமா வீசீடி ஒரிஜினல் வாங்கலாமுன்னு போனோம். ஒவ்வொன்னா எடுத்துப் பாத்தேன். பழசு புதுசுன்னா எல்லாம் இருந்துச்சு. மயிலாரும் பார்வைய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. திடீருன்னு தலையக் குனிஞ்சி குனிஞ்சி என்னவோ பண்ணுனாரு. உக்காந்து உக்காந்து எந்திரிச்ச மாதிரி இருந்தது. படக்குன்னு தோகைய வேற விரிச்சிட்டாரு. எனக்கு மானமே போன மாதிரி ஆயிருச்சி.

"என்னாச்சு...ஏன் இப்பிடி பண்றீங்க? எல்லாரும் பாக்குறாங்க...கொஞ்சம் நிப்பாட்டுங்க." கட்டக் குரல்ல அழுத்திச் சொன்னேன்.

படக்குன்னு என்னய கோவமா ஒரு பார்வ பாத்தாரு. ஏதாவது தப்பாச் சொல்லீட்டமோன்னு கம்முன்னு நின்னேன். அங்கயிருந்த வீசீடிய சைக காட்டுனாரு. அது கந்தன் கருணை படத்தோட சீடி. அடக் கடவுளே!

"ஐயா! இது சினிமா. அதப் பாத்து இந்தப் போடு போடுறீங்க. படிக்காதவங்கதான் சினிமா பாத்து சாமியாடி கன்னத்துல போட்டுக் கிட்டா நீங்களுமாய்யா? ஒரு படத்தப் பாத்து...சரி. சரி....வாங்க எல்லாரும் பாக்குறதுக்குள்ள போயிருவோம்." கிடுகிடுன்னு நடந்து வெளிய வந்துட்டோம். மயிலார் செஞ்ச கூத்துல நா கையில எடுத்த வீசீடியக் கூட கீழ வெச்சுட்டு வந்துட்டேன். ச்ச!

எனக்கு இன்னும் மனசு கேக்கலை. இப்பிடிச் சின்னப்புள்ளத் தனமா பண்ணீட்டாரே. பாக்குறவங்கள்ளாம் இனிமே மயிலாரப் பாத்துச் சிரிப்பாங்களேன்னு நெனப்பு ஓடுது. மயிலாரும் தோகையத் தொங்கப் போட்டுக்கிட்டு அமைதியா தலையக் குனிஞ்சிக்கிட்டு பின்னாடியே வந்தாரு.

"எக்ஸ்கியூஸ் மீ" ஒரு நல்ல அழகான பொண்ணு. நல்ல பிரமாதமா இருக்கு. நானும் பதிலுக்கு இங்கிலீஸ்ல "யெஸ்"ன்னு சொன்னேன்.

ஆனா பாருங்க. "நாட் யூ"ன்னு சொல்லீட்டு அந்தப் பொண்ணு மயிலார் கிட்டப் போயிருச்சு.

"கேன் ஐ ஹேவ் அ ஃபோட்டோ வித் யூ?"ன்னு கூட்டீட்டுப் போயி போட்டோவும் எடுத்துச்சு அந்தப் பொண்ணு. மயிலார் நல்லா தொகைய பப்பரப்பாங்குன்னு விரிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு கொண்டைய சிலுப்பிக்கிட்டு நின்னாரு. ஃபோட்டோ எடுத்து அத அப்பிடியே வெள்ளைச் சட்டைல போட்டுக் குடுத்தாங்க. அந்தப் பொண்ணு சட்டய வாங்கிக் கிட்டு "தேங்க்ஸ்" சொல்லி மயிலார் கழுத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போயிருச்சு.

நான் ஃபியூஸ் போயி "வீட்டுக்குப் போகலாம். இல்லைன்னா லேட் ஆயிரும்"ன்னு சொன்னேன். இல்லைன்னா எத்தன பேரு இந்த மாதிரி ஃபோட்டோவுக்கு வருவாங்களோ!

சரீன்னு சொல்லீட்டு மயிலாரு கம்பீரமா தோகைய அசைச்சுக்கிட்டு விறுவிறுன்னு துள்ளலோட முன்னாடி போனாரு. நான் பின்னாடியே வேகமா ஓடுனேன்.

அன்புடன்,
கோ.இராகவன்