Results 1 to 6 of 6

Thread: நினைவலைகள்-அலிபாபாவும் நா(ன்)லு திருடர்கī

                  
   
   
  1. #1
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0

    நினைவலைகள்-அலிபாபாவும் நா(ன்)லு திருடர்கī

    நான் முன்பு சொன்னது போல் என் தம்பி ரொம்பவும் அன்பானவன், இரக்கம் குணத்திற்கு கர்ணனை எடுத்துக்காட்டாக சொல்லலாம். கையில் இருப்பதை யார் கேட்டாலும் கொடுத்து விடுவான். தம்பி வள்ளல் கர்ணனாக இருந்ததால் நான் எப்படி? திருட்டு கண்ணனாக இருந்து விட்டேன், ஆமாம், அவனிடம் நான் தினமும் திருவிளையாடல் நடத்துவேன். அவனுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போவதால் அம்மா மாலை நேரத்தில் இனிப்பு போன்ற திண்பண்டங்களை அவனுக்கு கொடுக்காமல் எனக்கு மட்டுமெ கொடுப்பார்கள், அவன் பங்கை தனியாக எடுத்து வைத்திருப்பார்கள். நான் என் பங்கை ஈ, காக்கைக்கு கூட தெரியாமல் தின்று விடுவேன். அடுத்த நாள் காலையில் என் தம்பி தன் பங்கை அம்மாவிடம் வாங்கி சாப்பிட, நானோ ஒன்றுமே தெரியாத அம்மாஞ்சி (நன்றி இனியன்) மாதிரி நிற்பேன், தம்பி என்னைப் பார்த்து அண்ணா, அம்மா உனக்கு தரவில்லையா? என்று கேட்பான், நானோ இல்லையே என்பேன், உடனே அவன் தன் பங்கை பாதியாக்கி எனக்கு கொடுப்பான், நான் அம்மா எங்கே பார்க்கிறார்களா என்று பார்த்து, தின்று இடத்தை விட்டு நகர்ந்துவிடுவேன், சில நேரம் அம்மா பார்த்தால் எனக்கு அர்ச்சனை (சாப்பாட்டு ராமா என்ற பட்டம்) கிடைக்கும். சில சமயம் தம்பி முன்னாலேயே எனக்கு கொடுத்து, அவன் எடுத்து வைத்திருந்தால் திருட்டு பூனையாகி விடுவேன், அடுத்த நாள் தம்பி பார்த்து, சரி நம்ம அண்ணன் தானே என்று விட்டு விடுவான்.

    வீட்டில் பனங்கிழங்கு அவித்தால் உடனே, பெரிய பெரிய கிழங்குகளை எடுத்து ஒளித்து வைத்து விடுவேன். வீட்டில் முருக்கு சுட்டால், காலையில் இரண்டு, மாலையில் இரண்டு என்று அம்மா கணக்கு போட, நானோ அம்மா இல்லாத நேரம் எல்லாமே முருக்கு தான் என்று தனிக்கணக்கு போட்டு வைத்திருப்பேன், என்னால் கடுப்படிக்கப்பட்டிருந்தால் அன்று தம்பி என்னை அம்மாவிடம் போட்டு கொடுத்து விடுவான்.

    சாப்பாட்டு விசயத்தில் மட்டும் நான் செய்யும் தவறுகள், திருட்டு என்ற வராது என்று எனக்கு நானே ஒரு நியதி வைத்திருந்தேன். எங்க வீட்டு தோட்டத்தில் சிவப்பு கொய்யா மரங்கள் 5 இருந்தது, ஒவ்வொரு மரமும் வித்தியாசமான சுவை, அளவு, கொய்யா பழங்களை கொடுக்கும். எங்க இருபக்க வீடுகளும் எங்கள் முன்னோர் முதற்க் கொண்டு பகையாளிகள். யாரும் யாருடனும் பேச மாட்டோம். ஆனால் என் தம்பி மட்டுமே இருவீட்டிற்கும் சென்று விருந்து சாப்பிட்டு வருவான்.

    பக்கத்து வீட்டில் வெள்ளை கொய்யா மரம் இருந்தது, அதன் கிளைகள் எங்க வீட்டில் தொங்கும், அப்போ அடுத்த வீட்டில் யாருமே இல்லாத நேரம் எங்க வீட்டிலிருந்து அந்த பழங்களை திருட்டுத்தனமாக பறித்து சாப்பிடுவேன், சில சமயம் எத்தனை பழம் பறித்தெனோ அத்தனை சிவப்பு பழங்களை அங்கே தூக்கி போட்டு விடுவேன், திருட்டு கணக்கு சரியாகுது இல்லையா.

    அது மாதிரி இந்த பக்க பாட்டி வீட்டில் நாவல் பழம் மரம் இருந்தது, தினமும் காலையில் விழித்ததும் ஓடி போய் தோட்டம் சென்று பார்ப்போம், அங்கே நாவல் பழங்கள், வாதுமை கொட்டை, சிவப்பு கொய்யா எல்லாம் கிடக்கும், அவை எல்லாம் இரவில் வவ்வால் கொண்டு வந்து போட்டவை. அவை தனிச் சுவையாக இருக்கும்.

    அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், ரஜினி படங்கள் பார்த்து கெட்டு போயிருந்தேன், ஆமாம் இருப்பவர்களிடம் இருந்து எடுத்து, இல்லாதவர்களுக்கு கொடுப்பது தவறு கிடையாது, அது திருட்டு கிடையாது என்ற எண்ணம் மனதில் பதிந்து விட்டது. அதனாலேயே தெருவில் யார் யார் வீட்டில் நாவல், நெல்லிக்காய், கொய்யா, நாக்கு ஒட்டி பழம், இனிப்பு புளியம்பழம், சீத்தாப்பழம், போன்ற அதிகமாக இருக்கிறதோ அங்கே எல்லாம் மதியம் 3, 4 மணி அளவில், எல்லோரும் உண்ட மயக்கத்தில் உறங்க, நாங்களோ எங்க வேட்டையை ஆரம்பிப்போம். நிறைய முறை மாட்டி திட்டு, உதை வாங்கியிருக்கிறேன், போன்ஸாக எங்க அம்மாவிடமிருந்து கிடைக்கும்.

    இப்படி சின்ன சின்ன திருட்டுகளோடு வாழ்க்கை சென்றது. கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதும், எங்களுக்கு ஒரு பாஸ்/குரு கிடைத்தார், பெயர் : அலிபாபா உண்மையான சொல்ல வேண்டாம். என்னை விட 8 வயது கூடியவர், அவர் நல்ல விசயத்தை விட கெட்ட விசயங்களைத் தான் அதிகம் எங்களிடம் பேசுவார், ஏனென்றால் கெட்டதை எல்லாம் கேட்டு உலகம் அறிந்து கெட்டு போகாமல் இருக்க, ஆனால் ஒரு சிலர் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் ஆனதும் உண்டு.

    ஒருவர் குருவாக வேண்டும் என்றால் பலவித்தைகளுக்கு சொந்தக்காரராக இருக்க வேண்டும், எங்க குரு, நன்றாக கிரிக்கெட் ஆடுவார், வாலிபால், கபாடி, அழகாக இருப்பார், திறமைச்சாலி, எல்லாத்தையும் விட பனைமரம் கூட ஏறுவார். பனை மரம் ஏறுவது சாதாரண விசயமில்லை மிகவும் கடினம்.

    நாங்க எல்லோரும் கிரிக்கெட் ஆடி முடித்து இருட்டியதும் விட்டிற்கு திரும்புவோம், ஆனால் எங்க குரு மற்றும் சில மூத்த வீரர்கள் அங்கேயே தங்கிவிடுவார்கள், கேட்டால் நீங்க போங்க, பின்னாடி வருகிறோம் என்று சொல்லி அனுப்பிவிடுவாங்க. அடுத்த நாள் முந்தைய நாள் வீரபிரதாபங்களை சொல்லச் சொல்ல எனக்கும் அதில் பங்கேற்ற ஆசையாக இருக்கும்.

    எங்க ஊரில் இருக்கும் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை இருக்கும், ஒவ்வொரு பூஜைக்கும் ஒரு வீட்டார் பொறுப்பேற்க வேண்டும், பச்சரிசி, தேங்காய், பழம் மற்றும் அனைத்தும் வாங்கிக் கொடுத்தால் போதும், பூசாரி பெரிய பாத்திரத்தில் பாயாசம் தயார் செய்து, பூஜைக்கான ஏற்பாடு செய்து, மணி அடித்து அழைப்பு கொடுப்பார், உடனே அனைவரும் கிளம்பி கோயிலுக்கு வருவோம், அங்கே இருக்கும் மைதானத்தில் பெரிய கூட்டமே விளையாடிக் கொண்டிருக்கும். பலவகை விளையாட்டு இருக்கும். நான், தம்பி என் அம்மாவுடனே இருக்க வேண்டும். பூஜை தொடங்கினால் குறைந்தது 1 மணி முதல் 1:30 மணி நேரம் நடக்கும். பின்னர் அனைவரும் கோயில் வரண்டாவில் அமர்ந்தால் பாயாசம், பழம், தேங்காய் துண்டு என்று அனைவருக்கும் கொடுப்பார்கள். பாயாசம் சாப்பிட்டால் இரவு சாப்பிடத்தேவை இல்லை, அவ்வளவு அளவு கொடுப்பார்கள்.

    இதற்காகவே நிறைய பேர் கடைசி பூஜை மணி அடிக்கும் போது (சிறுவர்கள் பாயாசம் கிடைக்க போகுது என்ற ஆர்வத்தில் கோயில் மணியை வேகமாக அடிப்பாங்க) நிறைய பேர் வந்து விடுவாங்க. நான் பலமுறை பார்த்திருக்கிறேன், பூஜை தொடங்கியதும் எங்க குரு மற்றும் சிலர் காணாமல் போய் விடுவாங்க, அப்புறம் கடைசி மணி அடிக்கும் போது வந்து சேர்ந்துக் கொள்வார்கள்.

    ஒருநாள் நான் குருவிடம், அண்ணா, நானும் உங்க கூட வருகிறேனே

    அலிபாபா உங்க அம்மா, உன்னைத் தேடினா
    அது ஒன்னும் பிரச்சனை இல்லை, கடைசி மணி அடிக்கும் போது தான் நீங்க வந்து விடுவீங்களே!

    நாங்க கோயிலுக்கு பின்பக்கம் இருக்கும் பனை மரக்காட்டில் இறங்கி நடக்க நடக்க, நேரா எங்க சின்னப்பாட்டி தோட்டத்திற்கு அருகே போய் நின்றோம், எனக்கோ ஒரு ஆர்வம், என்ன செய்யப்போறாங்க, அதே நேரம் சீக்கிரமா அம்மா தேடுவதற்குள் கோயிலுக்கு போகணுமே.

    எங்க குரு, ஒரு பெரிய கம்பை எடுத்து பாட்டி வீட்டு வேலியை விலக்கி, பாதை உண்டாக்கினார், பின்னர் உள்ளே சென்றதும், பெரிய பெரிய தென்னை மட்டைகளை வேலியின் மேல் போட்டு, நடக்க வழி செய்தார். எனக்கு ஒன்னுமே புரியலை. அருகில் இருந்த ஒரு அண்ணனிடம் ஏன் இங்கே வந்திருக்கிறோம், இங்கே என்ன இருக்குது

    ஏலே, சும்ம இரு, இங்கே எளநீ குடிக்க வந்திருக்கிறோம், கொஞ்ச நேரத்தில் பாஸ் மரம் ஏறி பறித்து போடுவார்:

    எனக்கு சப்பென்று ஆகிவிட்டது, எளநீ குடிக்கவா இங்கே வந்தீங்க, அதான் எங்க வீட்டிலேயே நிறைய இருக்குதே.

    எங்க வீட்டில் மட்டும் இல்லையா என்ன, இப்படி குடித்தால் அதில் ஒரு திரில் கிடைக்கும்.

    கொஞ்ச நேரத்தில் எங்க பாஸ் சர் சர் என்று நன்கு வளர்ந்த மரத்தில் ஏறினார், குறைந்தது 20 எளநீ வெட்டிப் போட்டார். இருக்கிறது 5 பேர் இத்தனை எளநீயா என்று யோசித்தேன்.

    விழுந்த எளநீயை எல்லாம் கிணறு அருகே கொண்டு சென்று தண்ணீர் தொட்டியில் அமர்ந்து, ஓவ்வொரு எளநீயா வெட்டிக் கொடுக்க, ஒரு அண்ணன் மட்டும் 5 எளநீ தண்ணீர் குடித்தார், எனக்கு இரண்டுக்கே வயிறு ரொம்பி விட்டது. கடைசியில் பார்த்தால் 6, 7 எளநீ மீதி இருக்குது, இதை என்ன செய்வாங்கனு யோசித்தா, எங்க பாஸ் அந்த எளநீ எல்லாம் எடுத்து மோட்டார் ரூம் மேலேயே வைத்து விட்டு, பின்னர் நாங்க நடந்து வந்த பாதையில் கடைசியில் வந்தார், கையில் ஒரு தென்னை ஓலையை வைத்து, பின்பக்கமாக திரும்பி, நாங்க நடந்து வந்த பாதையின் தடங்களை அழித்துக் கொண்டே வந்தார்.

    அங்கே கோயிலில் கடைசி மணி அடிக்கும் சப்தம் கேட்டதும், குடித்த எளநீ தண்ணீர் எல்லாம் பயத்தில் வேர்வையாக வரத் தொடங்கி விட்டது. வந்த காரியம் முடிந்ததும் ஆர்வம் எல்லாம் போய் பயம் பிடிக்கத் தொடங்கியாச்சு, எங்கே அம்மா, நான் கோயிலில் இல்லாததை கண்டுபிடித்து, எங்கே போனாய் என்று கேட்பாங்களா, என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.
    மத்தவங்க எல்லாம் சிரித்துக் கொண்டு வந்தார்கள். ஒருவழியாக வந்து பூஜையில் கலந்துக் கொண்டு, விபூதி, சந்தனம், குங்குமம் வாங்கி வைத்துக் கொண்டேன், திருடியதற்கு கடவுளிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன்.

    அடுத்த நாள் காலையில் எங்க பாட்டி வீட்டிற்கு முன்னால் பெரிய கூட்டம், எங்க பாட்டி, கன்னாபின்னா என்று திட்டுறாங்க, குடும்பத்தையே திட்டுறாங்க, வயித்தால போகும், பேதியில் போகும், நாசமாக போவாங்க என்று திட்டுறாங்க. எனக்கோ பயம், எங்கே பாட்டி கண்டுபிடிச்சிருப்பாங்களோன்னு. எங்க பாட்டி என்னைப் பார்த்ததும் வாப்பா, வந்து பாரு, இப்படி களவாணிப்பயலுக எளநீ வெட்டி போட்டிருக்கானுக
    அப்படியா, யாரு ஆச்சி, இப்படி செய்தாங்க?
    தெரியலையப்பா, பின்னாடி போய் பாரு, எல்லோரும் தடம் பார்க்கிறாங்க
    அவ்வளவு தான் பயம் பிடித்துக் கொண்டது, மொகம் வெளிரிப்போய், பின்னாடி கிணத்துமேட்டு பக்கம் போனால், எனக்கு ஆச்சரியம்.
    அங்கே தடம் கண்டுபிடிப்பது யார் என்றால் அவர் எங்க குரு தான்.
    திருடனிடமே திருட்டை கண்டுபிடிக்கச் சொன்ன கதை தான்.

    ஆச்சி, இது தெக்கூர்க்காரன் மாதிரி தான் தெரியும், தடத்தை அழிச்சுப்புட்டானுக, அடுத்த வாட்டி வந்தால் விடக்கூடாது, பேசாம போலிசுக்கு சொல்லலாமாகுரு

    போலிசா, வேண்டாமய்ய்யா, அவனுங்க வந்தால் எல்லாத்தையும் போட்டு கொடைவானுங்க, எளநீ திண்ணவங்க நாசமா போவானுங்க, பேதியில் போவானுங்க ஆச்சி

    ஆச்சி, அப்படி விடக்கூடாது, அடுத்தவாட்டி வந்தால் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தோலை உரிக்க வேண்டும் குரு.

    நானும் என் பங்கிற்கு கொஞ்சம் திட்டு விட்டு, இடத்தை காலி செய்தேன். இது தான் முதல் திருட்டு. அப்புறம் வாரம் ஒருவர் வீடு என்று போவோம், அதன் பின்னர் திருடியது தெரியாமல் இருக்க எளநீயை கயிறு கட்டு இறக்குவோம், வேற இடம் போய் வெட்டி சாப்பிடுவோம். சில சமயம் எங்க வீட்டிலேயே இந்த வாட்டி எளநீ வெட்டலாம் என்று உறுப்பினர்களே அன்பு வேண்டுகோள் விடுவாங்க.

    அப்புறம் மாலைப்பயிநீ (பதநீர்) குடிக்க ஆசையா இருந்தால், குருவிடம் சொன்னால் போதும், எவ்வளவு பெரிய பனமரம் என்றாலும் ஏறி கலயத்தை கொண்டு வருவார், குடித்து முடித்தது, அங்கேயே போட்டு உடைத்து விடுவோம். அடுத்த நாள் பனமரம் ஏறுபவரிடம் இருந்து அர்ச்சனை கிடைக்கும்.

    அப்புறம் எங்க கையில் எப்போவும் உண்டிவில் இருக்கும், அதில் வட்ட வட்ட கல்லை வைத்து தெருவிளக்கு முதல் பாட்டிகளின் மண்டை வரை அடித்திருக்கிறேன். அதை உபயோகித்து அணில், குருவிகள் அடிப்போம், அதுவே போர் அடிக்க, ஒரு நாள் நண்பனிடம் பந்தயம் கட்டி, அங்கே மேய்ந்த கோழி ஒன்றை குறி வைக்க, அது சரியாகப்பட்டு துடிதுடித்து இறந்து போனது, அய்யோ என்ன செய்வது என்று தெரியலை. நல்லவேளை அது காட்டுப்பக்கம் என்பதால் யாரும் இல்லை.

    கொஞ்ச நேரத்தில் எங்க குரு அங்கே வர, நிலைமையை சொல்ல, அவரோ இதுக்கு போய் பயப்படலாமா, என்று சொல்லி, அந்த செத்த கோழியை எடுத்து லுங்கிக்குள் போட்டுக் கொண்டார். உடனே எல்லோரையும் தன்னுடன் வரச் சொல்லி, அவரது தோட்டத்திற்கு போனோம். அங்கே போனதும் அந்த கோழியை தீயில் சுட்டு, மிளகாய் பொடி, உப்பை தடவி சாப்பிட்டோம், ஆகா என்னா ருசி, என்னா ருசி. அதன் பின்னர் வாரம் ஒரு கோழி என்று தீர்மானம் போட்டோம்.

    ஒருமுறை எளநீ திருடப் போய், அப்போ இரவில் தான் கரண்டு விடுவாங்க, அதனாலே தோட்டத்திற்கு தண்ணீ பாய்க்க வந்தவர், எங்க சப்தம் கேட்டு, அரிவாளைத் தூக்கிக் கொண்டு விரட்ட, ஓவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குப் போக நானோ ஒரு ஒடை மரத்தின் கீழ் ஒளிந்துக் கொண்டேன், ஒரு மணி நேரம் கழித்து எங்க கூட்டம் கூடும் இடத்திற்கு வந்தேன், எனக்கு கால், முட்டு எல்லாம் முள் ஏறி ரத்தம் வந்து விட்டது. அதே போல் வீரத்தளும்போடு மத்தவங்க இருந்தாங்க. அத்தோட சரி, இருட்டு, திருட்டு எல்லாமே விட்டு விட்டேன்.

    ஆடுகள் மேயும் இடத்தில் போய் திருட்டுத்தனமாக ஆட்டுப்பால் கறந்து குடித்தது, நிலக்கடலைத் தோட்டம், வள்ளிக்கிழங்கு, சீனிக்கிழங்கு தோட்டங்களில் யாருக்கும் தெரியாமல் பிடுங்கி, தீயில் வாட்டி சாப்பிட்ட அனுபவங்களும் உண்டு.

    (நினைவலைகள் ஓய்வதில்லை)
    Last edited by பரஞ்சோதி; 10-11-2005 at 08:41 AM.
    பரஞ்சோதி


  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    அட பரஞ்சோதி............இத்தன வம்பு செஞ்சிருக்கியா....களவும் கற்று மறன்னு சொல்லுவாங்க. உன் கதை. களவும் கற்று மறைன்னு இருந்திருக்கே. அதெல்லாம் இன்னைக்கு வாய் விட்டுச் சொல்லீட்டியே.

    பனங்கெழங்குன்னா எனக்கும் உயிரு. தூத்துக்குடிப் பக்கம் இருக்குற எல்லாருக்கும் பனங்கெழங்கு உயிருன்னுதான் நெனைக்கிறேன். அதச் சுட்டும் திம்பாங்க. சுடாமலும் திம்பாங்க.

    அப்புறம் ஒரு விஷயம். தூத்துக்குடிப் பக்கம் சுட்ட பழமும் உண்டு தெரியுமா? ஔவையாரு தூத்துக்குடியில பொறந்திருந்தா முருகனையே வாங்கு வாங்கீருக்கலாம். பரஞ்சோதி நீயே அந்தச் சுட்ட பழத்தப் பத்திச் சொல்லேன்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அருமை பரஞ்சோதி. சிறு வயது நினைவுகள் எப்போதுமே பசுமையானவைதான். தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளவும் ஒரு பெரிய மனம் வேண்டும்தான். அதற்காகவும், சுவையாக நினைவலைகளை சொல்வதற்காகவும் என் மனங்கனிந்த பாராட்டுக்கள்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இளந்தமிழ்ச்செல்வன்'s Avatar
    Join Date
    12 Aug 2003
    Posts
    1,319
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    8
    Uploads
    0
    பரஞ்சோதி நிறைய வீர தீர பிரதாபங்கள் செய்து விட்டு கடைசியில் பாரதி கூறியது போல் தைரியமாக சொல்லவும் செய்திருக்கிறீர்கள்.

    பனங்கிழங்கை வேக வைத்து என்னை உயிரோடு உண்டு இல்லை என்று செய்துவிடுகிறார்கள் (எனக்கு சாப்பிடத் தெரியவில்லை). எப்படி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்று கூறவும்.
    வாழ்வது ஒருமுறை
    வாழ்த்தட்டும் நம் தலைமுறை
    ----------------------------------
    அன்புடன்
    இ.த.செ

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மெய்மறந்து படித்தேன் பரம்ஸ்..

    தம்பிதான் கர்ணன் -- இனிய முரண்.
    குருவென்றால் யார்? -- உண்மையான (விடலைப்பருவ) விளக்கம்.
    கொய்யாபழ நேர்மை -- எனக்கு நானே நல்லவன்
    இருப்பவரிடம் எடு -- கிராமத்து ராபின் ஹூட்
    திருட்டு இளநி, பதநி -- த்ரில்தான் ருசி

    எல்லாமே சொகமான நினைவலைகள்..

    பாரதி சொன்னதுபோல் நேர்மைத்திறம் சொல்லும் அலைகள்..

    பலவகைப்பழங்களும் பனங்கிழங்கும் ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டன.

    எனக்கு பனங்கிழங்கு மிக மிக மிக..பிடிக்கும்.

    (சின்ன தம்பி - எதுதான் சாப்பிடுவதில் பிடிக்காது உங்களுக்கு???!!!!)


    இராகவன் சொல்லும் சுட்டபழம் என்ன கதை????


    அருமையான பதிவுக்கு முழுமையான என பாராட்டுகள் பரம்ஸ்...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    சுட்டபழம் ஒன்னும் பெரிய கதை இல்ல. பனம்பழத்தை அப்படியே திங்குறதும் உண்டு. சுட்டுத் திங்குறதும் உண்டு. நாங்கள்ளாம் அப்படியே சாப்பிடுவோம். பக்கத்து வீட்டுல அத நெருப்புல வாட்டித் திம்பாங்க. ரெண்டுமே டேஸ்ட்டு. நெருப்புல வாட்டுனதும் ஒரு வாட வருமே....அடடா!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •