இராணுவ ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்துவரும் நிலையில் சிறிலங்கா அரசு, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறோம் என்பதை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சிறிலங்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் உருவானால்,

திருமலையில் இந்திய கடற்படை தளம் அமைப்பது

பலாலி விமான தளத்தை இந்தியப் படையினரே மட்டும் பாவனைக்கு உட்படுத்துவது என்றும்

மேலும் இந்தியாவின் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு சிறிலங்கா எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பது என்றும் சிறிலங்கா தரப்பில் இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்திய மத்தியரசில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டுக் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இருநாடுகள் வழமையாக மேற்கொள்கிற இராணுவ பரிவர்த்தனைகள், பயிற்சி நடவடிக்கைகளை இந்திய-சிறிலங்கா அரசுகள் மேற்கொண்டுதான் வருகின்றன.

இந்தியாவின் இந்த காலதாமதத்தையடுத்து சிறிலங்காவின் பார்வை உற்ற நண்பர்களான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசாக உள்ள இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க விரும்புகிற சீனா, ஏற்கனவே சிறிலங்காவுக்கு பாரிய இராணுவ உதவிகளை அளித்து வருகிறது.

இந்தியாவின் சேதுக்கால்வாய் திட்டத்தால் சிறிலங்காவுக்கு ஏற்படும் இழப்பீடுகளை சரிக்கட்டும் வகையில் சிறிலங்கா துறைமுகங்களை புனரமைக்கும் பணியிலும் சீனா ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ஐந்து நாள் சீனப் பயணம் மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க, சீனாவுடனான புதிய இராணுவ ஒப்பந்தத்தை உருவாக்கிடக் கூடும்.

இந்தியாவிற்கு சலுகை அளிப்பதாகக் கூறிய விடயங்களைவிட சீனாவிற்கு கூடுதல் பிரதிபலன்களை செய்து தருகிறோம் என்றும் சந்திரிகா குமாரதுங்க உறுதியளிக்கக் கூடும். சீனாவும் இதை ஏற்கக் கூடும் என்று கொழும்பு ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தியத் தரப்பை மகிழ்விப்பதற்காக தான் அமைச்சுப் பதவியேற்ற உடனே அந்நாட்டுக்குச் சென்றார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க.

ஆனால் இராணுவ ஒப்பந்தம் போன்ற விடயத்தில் பாரிய நகர்த்தலை அவர் இப்பயணத்தில் மேற்கொள்ளாதது அவரது பயணம் வீண் என்ற கருத்தை சிறிலங்கா கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அனுராவின் அவசரமான இந்தியப் பயணம் தவறானது என்றும் சிறிலங்கா தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நாடாக வெளிப்படுத்த இந்தியா விரும்பியதை அனுரா செயல்படுத்திவிட்டார் என்றும் அவர்கள் விசனங்களை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இந்தியாவின் தயவை எதிர்பார்க்காமல் சீனா மற்றும் பாகிஸ்தானின் ஒத்துழைப்பை சிறிலங்கா பெற வேண்டும் என்றும் சிறிலங்கா கொள்கை வகுப்பாளர்களில் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு அவசரப் பயணம் மேற்கொண்ட அனுரா பண்டாரநாயக்க, பாகிஸ்தானுக்கும் உடனே பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியா கையொப்பமிட இழுத்தடிப்பு செய்து வரும் இராணுவ ஒப்பந்தம் போல் பாகிஸ்தானுடன் உடனடி இராணுவ ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இப்படி சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவுகளை உருவாக்குவதாக தோற்றமளிப்பதன் மூலம் இந்தியாவை நெருக்கடிக்குள்ளாக்க முடியும் என்றும் சிங்கள கொள்கை வகுப்புக் குழுவினர் சிறிலங்கா அரசுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளனர்.

இந்தியாவை இலங்கைத் தீவகத்தின் அமைதி நடவடிக்கையில் ஈடுபட வைக்கிறார்களோ இல்லையோ மீண்டும் ஒரு இராணுவ ரீதியான சிக்கலை இந்தியாவுக்கு உருவாக்க சிறிலங்கா தீவிரம் காட்டுகிறது.

ஆனால் வலிமையான அரசாக இருந்தபோதே வலியைப் பெற்ற இந்திய மத்தியரசு, பலவீனமான கூட்டாட்சி நிலையில் இருக்கும் போது முன்வலியை மீளவும் பெற முன்வராது என்றே சிறிலங்கா கொள்கை வகுப்பாளர்களின் ஒருபிரிவினர் கூறி வருகின்றனர்.

நன்றி: புதினம்