Page 106 of 232 FirstFirst ... 6 56 96 102 103 104 105 106 107 108 109 110 116 156 206 ... LastLast
Results 1,261 to 1,272 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #1261
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ஒரு மாத பரோலில் பிரேமானந்தா விடுதலை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!.....

    திருச்சி: ஒரு மாத கால பரோலில் விடுதலைப் பெற்றுள்ளார் கொலை, கற்பழிப்பு வழக்குகளில் தண்டனை பெற்ற பிரேமானந்தா.

    திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். இவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்பு இந்த வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

    இதையடுத்து கடலூர் சிறையில் சாமியார் பிரேமானந்தா அடைத்தப்பட்டுள்ளார்.

    இந் நிலையில், சாமியார் பிரேமானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனக்கு சிறுநீரக கோளாறு, கண்புரை, இதய நோய் போன்ற நோய்கள் உள்ளது. முன்பு எனக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆனால், இந்த நோய்களுக்காக கடலூர் சிறையில் உள்ள மருத்துவமனையிலும், கடலூர் அரசு மருத்துவமனையிலும் நான் சிகிச்சை பெற உரிய வசதிகள் இல்லை.

    எனவே நான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மூன்று மாதம் பரோலில் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: "இந்த வழக்கில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும் போது, பிரேமானந்தா நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரிய வருகிறது. மேலும் 08.05.08, 03.04.09 ஆகிய தேதிகளில் அவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டு உள்ளது.

    கடலூர் சிறை மருத்துவமனையில் இருதய நோய்க்கு சிகிச்சை வழங்கவும், அவசர மருத்துவ உதவிகள் வழங்கவும் வசதிகள் இல்லை. கடலூர் அரசு மருத்துவமனையிலும் அந்த வசதிகள் இல்லை. ஆனால் பிரேமானந்தாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தெரிகிறது.

    ஆயுள் தண்டனை கைதியாக இருந்தால்கூட முறையான மருத்துவ வசதி பெறுவதற்கு தகுதி உள்ளது. ஆனால் அதை உரிமையாக அவர் கோர முடியாது. சிறை விதிகள் 20ன் படி சிகிச்சைக்காக பரோலில் கைதிகளை அனுமதிப்பதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

    அவரது நோயின் தன்மையை கருத்தில் கொண்டால், அவற்றுக்கான சிகிச்சைகள், தனியார் மருத்துவமனையில்தான் கிடைக்கின்றன. எனவே தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதி கேட்டு பிரேமானந்தா கொடுத்த மனுவை இன்னும் ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்.

    அனுமதிப்பதாக முடிவு செய்தால், 30 நாட்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட வேண்டும். இதை மேலும் நீட்டிக்க வேண்டுமென்றால், மருத்துவ சான்றுகள், அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நீட்டிக்கலாம். எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகிறார் என்பதை பிரேமானந்தா முதலிலேயே குறிப்பிட வேண்டும்.

    ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருத்துவமனை என்று கேட்கக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஆசிரமத்துக்கோ, வேறு இடங்களுக்கோ செல்லக் கூடாது. மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும். அவருக்கு பாதுகாப்புக்காக அனுப்பப்படும் போலீஸ் பாதுகாப்புக்கான செலவை பிரேமானந்தாவே ஏற்க வேண்டும். சிகிச்சை செலவும் அவருடையதே என்று தீர்ப்பளி்த்தார்.

    நிபந்தனைகளை பிரேமானந்தா தரப்பு ஏற்றுக் கொண்டது.

    .........தட்ஸ் தமிழ் 26.06.2010

  2. #1262
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    "எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை வரவேண்டும்' ......

    கோவை : செம்மொழி மாநாட்டில் நேற்று நடந்த கருத்தரங்கில், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை வரவேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

    செம்மொழி மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று மாலை, முதல்வர் கருணாநிதி தலைமையில் "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற பொருளமைந்த கருத்தரங்கு நடந்தது. பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், தமிழ் பல்வேறு துறைகளில் கோலோச்சி நிற்பது பற்றிப் பேசினர். கருத்தரங்கில் முதலில் பேச உடுமலை லியாகத் அலிகான் அழைக்கப்பட்டார். அவர் தொடங்கியது முதலே முதல்வரை அடுக்குமொழியில் புகழத் துவங்கினார். ஐந்து நிமிடங்கள் வரை புகழாரம் ஓயாததால், உதவியாளரை சைகையில் அழைத்த முதல்வர், மைக்கை வாங்கி, ""லியாகத் அலிகானுக்கு ஒரு கோரிக்கை. கருத்தரங்கில் நான் பேசுவதாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆயினும் பலரும் பேச இருப்பதால் இறுதியாக என் கருத்துரையை தொகுத்து வழங்கலாம் என்ற உள்ளேன். தேவைப்படும் போது, இடையில் சில வார்த்தைகளும் சொல்வேன். இங்கு என்னைப் பற்றி புகழ வேண்டாம். கருத்தரங்க தலைவரே என்று மட்டும் அழைத்தால் போதும். யார் அதிகமாக புகழ்வது என்று மனதில் நினைத்துக் கொண்டு போட்டி போட வேண்டாம். வாழ்த்த வேண்டியது தமிழின் பெருமை பற்றித்தான். இடையில் குறுக்கிட்டதற்காக லியாகத் அலிகான் என்னை மன்னிக்க வேண்டும்,'' என வேண்டுகோளும் விடுத்தார். இதையடுத்துப் பேசிய லியாகத் அலிகான் ""உங்களைப் பாராட்டாமல் பூமியில் யாரும் இருக்க முடியாது. காயிதே மில்லத்தை தேசத்துரோகி என்று சிலர் சொன்னபோது, "அரசியல் நிர்ணய சபைக்கூட்டத்தில் தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என வாதாடியவர் காயிதே மில்லத், அவரை தேசத்துரோகி என சொல்லாதீர்கள்' என, அவருக்காக பரிந்து பேசியவர் நீங்கள். அதனால் உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது நன்றி வணக்கம்,'' என்று கூறி அமர்ந்து விட்டார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற தலைப்பு பற்றி அவர் எதுவும் பேசவில்லை.

    வலசை ராஜேந்திரன், அருந்ததியர் மக்கள் கட்சி: கோவில்களில் சமஸ்கிருதம், இசையில் தெலுங்கு, எல்லையில் இந்தி என பிறமொழி ஆதிக்கம் இருந்த போது, அவற்றை மாற்றி, தமிழில் அர்ச்சனை, தமிழில் கீர்த்தனை, தமிழுக்கு முன்னுரிமை எனக் கொண்டு வந்தது தி.மு.க., அரசு. தற்போது தமிழ் எல்லாத்துறையிலும் வளர்ந்து வருகிறது, என்றார்.
    பொன்குமார்: தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை பரிதிமாற்கலைஞர் துவக்கி வைக்க, கருணாநிதி முடித்து வைத்தார். எந்த இனம் ஒன்று கூடி கலாச்சாரம், பண்பாட்டை பகிர்ந்து கொள்கிறதோ அந்த இனத்தில் ஒற்றுமை ஓங்கி நிற்கும். மனவளம் சிறப்பாக இருக்க வேண்டும் எனில், கலை வளமும், கலாச்சார வளமும், பண்பாட்டு வளமும் சிறப்பாக இருக்க வேண்டும். இனத்தை அழிக்க வேண்டும் எனில், மொழியை அழித்தால் போதும் என்பர். தமிழ் வளர நாம் ஒன்று கூடி விழா எடுப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று, என்றார்.

    திருப்பூர் அல்டாப்: மொழி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., தமிழுக்கு தனி இடம் பெற்றுத்தந்தது. சட்டம், மருத்துவம், கல்லூரியில் தமிழ் வழியில் உயர்படிப்புகள் என அனைத்து நிலைகளிலும் தமிழ் வளர்ந்து வருகிறது. ஆட்சிமொழியாகவும் விரைவில் அறிவிக்கப் படும் என நம்புகிறோம், என்றார்.

    தாவூத் மியாகான்: தமிழின் இருண்டகாலத்தின் போது, இஸ்லாமியர்களின் தமிழ்ப்பங்களிப்பு மறக்க முடியாத ஒன்று. 20ம் நூற்றாண்டில் மணிப்பிரவாள நடையால் பாதிப்பு ஏற்படும் நிலையில், ஈ.வெ.ரா.,வின் சுயமரியாதை இயக்கம், அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோர் தமிழுக்கு புதுரத்தம் பாய்ச்சினர். கருணாநிதியும் அவ்வழியே நின்றார். இந்திய அரசியல் நிர்ணயசபை 1949ல் ஆட்சிமொழி குறித்துக் கூடிய போது, தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என வாதிட்டவர் காயிதே மில்லத் தான். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது என்றும் தமிழ் என்று மாற வேண்டும்.

    பூவை ஜெகன், புரட்சி பாரதம்: மொழிப்போராட்டத்தின் போது, உயிர் நீத்த தியாகிகளை இங்கு நினைவு கூர வேண்டும். கம்ப்யூட்டரில் தமிழ், கோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ், வர்த்தகத்தில் தமிழ், அலுவல் மொழியாக தமிழ், திரைத்துறையில் தமிழ்ப்பெயர்களுக்கு வரிவிலக்கு, கோவிலில் வழிபாட்டு மொழியாக தமிழ் என தமிழ் பல்வேறு துறைகளிலும் வியாபித்து வருகிறது, என்றார்.

    காதர்மொய்தீன், இ.யூ.முஸ் லீம் லீக்: இஸ்லாமிய நெறியும், தமிழ் நெறியும் வேறல்ல; இரண்டும் ஒன்றுதான். இஸ் லாமியர்கள் எதைச் செய்தாலும், குரானையும், நபிகளின் மொழியையும் அடிப்படையாகக் கொண்டு செய்வதைப் போல; எல்லாத் தமிழர்களும் எண்ணம், செயல் எல்லாவற்றுக்கும் திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் மனதில் இருத்திச் செயல்பட வேண்டும், என்றார்.

    ஸ்ரீதர் வாண்டையார், மூவேந்தர் முன்னேற்றக்கழகம்: திருமண நிகழ்வுகளில் தமிழ், தமிழ் ஆண்டாக தைமாதம் முதல் தேதியை அறிவித்தது, அரசுத்துறைகளில் தமிழுக்கு முன்னுரிமை, இசை, நாடகம்,கலை, அறிவியல், இலக்கியம், சட்டம், மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ் தனக்கான இடத்தைப் பெற்று வருகிறது. அதற்காக பணியாற்றி வரும் முதல்வருக்கு நன்றி, என்றார்.

    .....தினமலர் 25.06.2010

  3. #1263
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    3-வது நாள் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கு `எங்கும் தமிழ் எதிலும்

    கோவை,ஜுன்.26-

    கோவையில் நடைபெற்று வரும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நேற்று முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. `எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற தலைப்பில் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.

    கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கொடிசியா வளாகத்தில் பிரமாண்டமான பந்தலில் கடந்த 23-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது.

    `எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'

    மாநாட்டின் 3-வது நாளான நேற்று மாலை, ரேவதி கிருஷ்ணா குழுவினரின் வீணை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத்தொடர்ந்து "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

    இந்த கருத்தரங்கில் அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றினார்கள். கே.வி.தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி, கி.வீரமணி, ஜி.கே.மணி, இல.கணேசன், டி.ராஜா, ஆர்.எம்.வீரப்பன், தொல்.திருமாவளவன், ஸ்ரீதர் வாண்டையார், கே.எம்.காதர் மொய்தீன், பூவை ஜெகன் மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்தாப், பொன்.குமார், எல்.சந்தானம், எம்.பஷிர் அகமது, வலசை ரவிச்சந்திரன், உடுமலை லியாகத் அலிகான் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    சீத்தாராம் யெச்சூரி

    மாநாட்டு கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து இடதுசாரிக் கட்சிகளும் ஆதரித்த முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் `செம்மொழி' என்று அறிவிக்கப்பட்டது குறித்து நாங்கள் தனிப்பட்ட முறையில் பெருமை கொள்கிறோம்.

    மொழி, சமூகத்தின் மிக முக்கியமான அடையாளமாக விளங்குகிறது. அரசியல், பண்பாடு மற்றும் சமூக வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளிலும் அவர்களுக்கிடையே எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும் கருவியாகவும் மொழி திகழ்கிறது.

    அரசுகள் மிக முக்கியமான பணியை ஆற்ற வேண்டிய நிலையில் உள்ளன. மும்மொழியைத் திணிக்கும் `நேரு மாடல்' என்ற வலைக்குள் சிக்கிவிடாமல், அந்தந்த மண்ணில் பேசப்படும் மொழிகளின் உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும். குறுகிய மொழி வெறி மனப்பான்மையால் இதை சாதிக்க முடியாது. அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படுவதோடு அந்த மொழிகள் தழைத்தோங்கி வளர சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

    இன்றைய உலகில் எந்தவொரு மனிதனும் தன்னை தனித்த அடையாளத்துடன் நிறுத்திக் கொள்ள முடியாது. இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய சூழலில் பன்முக அடையாளத்தை பேண வேண்டியுள்ளது.

    இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

    டி.ராஜா

    இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மற்ற செம்மொழிகளுக்கு இல்லாத தனித்துவம் தமிழுக்கு உண்டு. செம்மொழி தகுதிக்கான 11 இலக்கணங்களை தமிழ் நìறைவு செய்துள்ளது. அப்படி இருந்தும் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு ஏன் போராட வேண்டியுள்ளது என்று சிந்திக்க வேண்டும். இணையதள வளர்ச்சி மூலம், சீன மொழியும், கீப்ரு மொழியும் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. தமிழ் மொழியை மீட்டெடுப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

    பல்கலைக் கழகத்தில் மற்ற செம்மொழிகளை பயிலும் நிலை வர வேண்டும். அதுபோல மற்ற நாடுகளில் தமிழைக் கற்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை உலகத்தோடும், உலகத்தோடு தமிழையும் இணைக்க வேண்டும். தமிழின் புதிய படைப்புகளை வெளிஉலகிற்கு பரவச் செய்ய வேண்டும்.

    நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழை வளர்த்தாக வேண்டும். `எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பதைப் போல, `இங்கு தமிழ் இதில் தமிழ்' என இலக்கு நிர்ணயித்து, அதை ஒரு காலவரம்புக்குள் அடைய முயற்சிக்க வேண்டும். அதற்கு அரசியல் குறுக்கே இருந்தால் அதை மாற்றவோ அல்லது கருத்து ஒற்றுமை ஏற்படுத்தவோ முயற்சிப்பது பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்க வேண்டும். தாய் மொழி என்பது எல்லோருக்கும் பொதுவானது. எனவே, அதனை வளர்க்க ஒன்றுபட்டு செயல்படுவோம்.

    இவ்வாறு டி.ராஜா கூறினார்.

    கே.வி.தங்கபாலு

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசும்போது கூறியதாவது:-

    தமிழுக்காக உங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம். இருப்பினும் நான் தமிழ் வளர்ச்சிக்காக சில கோரிக்கைகளை இங்கே வைக்கிறேன்.

    ஆரம்ப பள்ளி முதல் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் முதல்பாடமாக இருக்கவேண்டும். அனைத்து தமிழ் ஆசிரியர்கள் பொறுப்புக்கு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    1-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ் பாட நிலைகள் சீர்படுத்தப்படவேண்டும். தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டு துறை தற்போது அரசில் உள்ளது. அது தொடரவேண்டும். தமிழ் மொழிக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படவேண்டும். பிறமொழி சிறப்புகள் தமிழுக்கும், தமிழின் சிறப்புகள் பிறமொழிக்கும் செல்ல வேண்டும்.

    தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள வேறுமாநில தமிழர்களுக்கு போதிய தமிழ் கல்வியறிவு புகுத்தப்படவேண்டும். அதேபோல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கல்வி பயில ஏற்பாடு செய்யவேண்டும்.

    இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்ச் சங்கம் சென்னையில் நிறுவப்படவேண்டும். அதற்கு கலைஞர் தலைவராக வரவேண்டும். உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படுவதை நாம்தான் முடிவு செய்யும் நிலைக்கு வரவேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்ச் சங்க கிளை ஏற்படுத்த வேண்டும். அரசியல் சார்பற்ற தலைவர்கள் அதில் பங்கேற்க வேண்டும்.

    இனிமேல் கணினி தமிழ்தான் உலகை ஆளும் நிலைக்கு வர இருக்கிறது. அதனால் அறிவியல் தமிழ், கணினி தமிழ் ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்யவேண்டும். மற்ற மொழிகளை விட செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழிக்கு அதிக உரிமைகள் கிடைக்க செய்யவேண்டும்.

    இவ்வாறு கே.வி.தங்கபாலு பேசினார்.

    ஜி.கே.மணி

    கருத்தரங்கில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    எல்லா கட்சியினரையும் அழைத்து `எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று அறிவிப்பதற்காகவே இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இதற்கு பா.ம.க. துணை நிற்கும்.

    வெளிநாட்டு தமிழர்கள் தூய தமிழில் பேசுகிறார்கள். தமிழக தமிழன் ஆங்கிலம் கலந்து பேசுகிறான். கலப்பில்லாத தமிழில் பேச வேண்டும். இல்லையென்றால் ஆங்கிலத்திலேயே பேசலாம். அரசின் ஆணைகள், கடிதங்கள், சுற்றறிக்கை அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வரவேண்டும். தமிழும், உலக தமிழர்களும் பாதுகாக்கப்பட இந்த மாநாடு முயற்சி மேற்கொள்ள வேண்டும். திருமணங்கள் தமிழிலேயே நடத்தப்படவேண்டும். ஆலயங்களில் ''தமிழிலும்'' அர்ச்சனை என்று இருந்ததை ''தமிழில்'' என்று கலைஞரால் மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஊடகங்களில் முழுவதும் தமிழில் பயன்படுத்த ஊக்கமளிக்கவேண்டும். அப்படி பயன்படுத்தும் தொலைக்காட்சியாக மக்கள் தொலைக்காட்சி விளங்குகிறது. அதற்கு மகத்தான ஆதரவு உள்ளது. அதே போன்று அனைத்து தமிழ் ஊடகங்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.

    திருமாவளவன்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    அண்ணா கண்ட கனவை நனவாக்கும் வகையில் உங்களின் வரலாற்று சாதனையாய் தமிழை ஆட்சி மொழியாக்க முயற்சி மேற்கொண்டுள்ளீர்கள். அதற்கு நாங்கள் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் உற்ற துணையாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

    தாயுள்ளம் கொண்ட தலைவரே தமிழை ஆட்சி மொழியாக்கும் ஆற்றல் உங்களுக்கு மட்டும்தான் உள்ளது. உங்களது தலைமையில் தமிழை ஆட்சி மொழியாக்குவோம்.

    ஒட்டுமொத்த தேசத்தை ஆண்ட பெருமை ராவணனுக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த இலங்கையும் இன்று தமிழருக்கு சொந்தமாக இல்லை. தமிழனுக்கு நாதி இல்லையா? தமிழ் இனத்திற்கு வீழ்ச்சி. ஈழத் தமிழர்களுக்கு ஒரு தனித் தாயகம் அமைத்துத் தாருங்கள். `எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற நிலையை அடைவதற்கு உங்கள் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் அணிவகுக்கும்.

    இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

    இல.கணேசன்

    தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் இல.கணேசன் பேசியதாவது:-

    `எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று இன்னும் அறிவுரையாக சொல்ல வாய்ப்பு என்றில்லாமல், இன்று முதல் இதை அமலாக்கும் செயல்களை தொடங்க வேண்டும். தமிழ் சமுதாயத்திற்கு வேண்டுகோளாக சொல்ல விரும்புகிறேன், தமிழில் படிக்கும் மாணவர்கள் உரக்க படிக்க வேண்டும். அப்போதுதான் சரியான உச்சரிப்பு முதல்-அமைச்சரைப் போலவும், கவிஞர் வைரமுத்துவைப் போலவும் வரும்.

    மொழியை மட்டும் காப்பாற்றினால் போதாது. உலக தமிழர்களையும் காப்பாற்ற வேண்டும். பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசை வற்புறுத்த ஒரு அமைச்சரை நியமியுங்கள்.

    இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

    ஆர்.எம்.வீரப்பன்

    எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் கருணாநிதி மத்திய அரசில் ஆட்சி மொழியாக தமிழையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் போராடி, வாதாடி வருகிறார். இப்படி போராடி பல வெற்றிகளை பெற்றவர் அவர். எனவே இதிலும் அவர் பொறுத்துக் கொண்டிருந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவார்.

    எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை நோக்கியே நம் உணர்வுகள், உள்ளம், நோக்கம் அனைத்தும் இருக்க வேண்டும். இதன் மூலம் இந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.

    இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் பேசினார்.

    கலை நிகழ்ச்சிகள்

    தொடர்ந்து மாநாட்டு வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொல்காப்பியர் அரங்கத்தில் `பிறப்பொக்கும்' என்ற தலைப்பில் பிரசன்னா ராமசாமி இயக்கத்தில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கூத்துப்பட்டறை முத்துசாமி வழங்கிய `ஆற்றாமை' என்ற நாடகம் நடந்தது. பூவாடி முத்து சாமி குழுவினரின் அண்ணன்மார் கதை என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதற்காகவும், கண்காட்சிகளை பார்ப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் நாள்தோறும் சாரை சாரையாக வந்துகொண்டிருக்கிறார்கள்.

    ..........தினத்தந்தி 26.06.2010

  4. #1264
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதர்சனம் எம்.எல்.ஏ. மரணம் கருணாநிதி உள்பட தலைவர்கள் இறு

    கோவை, ஜுன்.27-

    தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரும், பூந்தமல்லி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சுதர்சனம் கோவை ஆஸ்பத்திரியில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி உள்பட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

    சுதர்சனம் எம்.எல்.ஏ.

    தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.சுதர்சனம் கோவையில் நடைபெற்று வரும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். முதல் 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் 24-ந் தேதி நள்ளிரவு அவருக்கு `திடீரென்று' உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீருடன் ரத்தம் கலந்து வந்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே அவர், அவினாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக சிறிய ஆபரேசனும் செய்யப்பட்டது.

    தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் ஆ.ராசா, ஜி.கே.வாசன், உள்பட பலர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து அவரை பார்த்தனர்.

    துணை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக மருத்துவமனைக்கு சென்று, சுதர்சனம் எம்.எல்.ஏ.வுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவரது உடல் நிலையை கண்காணிக்குமாறு இருதய நிபுணர் டாக்டர் நரசிம்மனுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து டாக்டர் நரசிம்மன் தனது ஐதராபாத் பயணத்தை ரத்து செய்து விட்டு, கோவை மருத்துவமனையில் தங்கி சுதர்சனம் எம்.எல்.ஏ. உடல்நிலையை கண்காணித்து வந்தார்.

    மரணம்

    டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சுதர்சனம் எம்எல்.ஏ. நேற்று மாலையில் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு திடீரென்று சுதர்சனத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. அதை அறிந்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    முதல்-அமைச்சர் அஞ்சலி

    சுதர்சனம் எம்.எல்.ஏ.வின் மரணம் பற்றிய தகவல் கிடைத்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி விரைந்து சென்று சுதர்சனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க.அழகிரி ஆகியோரும் சுதர்சனம் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, காந்தி செல்வம், மற்றும் எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன்,பொன்முடி,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ஏ.வா.வேலு., தங்கம் தென்னரசு பெரியகருப்பன், சாமிநாதன், மதிவாணன், பூங்கோதை, கீதாஜீவன், தமிழரசி, முன்னாள் எம்.பி. மு.ராமநாதன், எம்.எல்.ஏ.க்கள் காயத்திரி தேவி, பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், ராஜசேகர், விடியல் சேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அவருடைய உடல் இன்று சென்னை கொண்டு வரப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    வாழ்க்கை குறிப்பு

    மரணம் அடைந்த டி.சுதர்சனம், 1943-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பிறந்தவர். அவருடைய சொந்த ஊர், காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, தென்னேரி அருகில் உள்ள பண்ருட்டி கிராமம். ஆகும். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த சுதர்சனம், மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மாவட்ட காங்கிரஸ் என கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து படிப்படியாக உயர்ந்தவர்.

    கடந்த சட்டசபை தேர்தலில், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுதர்சனம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். ஏற்கனவே 1991, 1996, மற்றும் 2001-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு இவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    67 வயதான சுதர்சனம், பொது சேவை மற்றும் சமூக சேவைகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். தமிழ்நாடு செங்கல் ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம், தர்மா நாயுடு கல்வி அறக்கட்டளை மற்றும் பூந்தமல்லி நிலவள வங்கியின் தலைவராக பணிபுரிந்தவர்.

    திருமணம் ஆன அவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    .........தினத்தந்தி 27.06.2010

  5. #1265
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ஈரான் மீது பொருளாதார தடை: நிறைவேற்றியது அமெரிக்க செனட்!........

    வாஷிங்டன்: அணு ஆயுதத் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஈரான் மீது பொருளாதாரத் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது அமெரிக்க செனட்.

    உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி அணுஆயுத திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐரோப்பிய யூனியன் ஆகியவை சமீபத்தில் பொருளாதார தடை விதித்தன.

    இந்நிலையில், அமெரிக்கா தன்னிச்சையாக ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கான மசோதா, அமெரிக்க செனட் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதன்படி, ஈரானுக்கு கேசோலின் வினியோகிக்கும் கம்பெனிகள், ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு உதவும் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் அமெரிக்கா எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளாது என்று இந்த மசோதா கூறுகிறது.

    இதனால் ஈரானுடன் தொடர்புடைய மற்ற நாடுகளும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக ஈரானின் நட்பு நாடுகளும் மறைமுக பொருளாதாரத் தடைக்குள்ளாகியுள்ளன.
    ...தட்ஸ் தமிழ் 27.06.2010

  6. #1266
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ராவண் ரூ.38 கோடி-ராவணன் ரூ.11 கோடி!,,,,,,

    மணிரத்னம் இந்தி, தமிழ், தெலுங்கில் இயக்கிய ராவணன்-ராவண் படம் இரு வேறான வசூலைக் கொடுத்து வருகிறதாம். முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் (தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து) ரூ.53 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    வட அமெரிக்கா வில் ராவண் திரையிடப்பட்ட திரையரங்குகளில் திருப்திகரமான அளவு கூட்டம் இல்லாததால், வசூலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவிலும் கனடாவிலும் முதல் மூன்று நாட்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் டாலர் மட்டுமே வசூலாகியுள்ளது.

    நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் படம் குறித்து ஓரளவு நல்ல விமர்சனங்கள் வெளியாகியும், தியேட்டர்களில் பாதியளவு கூட நிரம்பாததால் இந்த வாரத்துடன் படத்தைத் தூக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    மூன்றாண்டுகளுக்கு முன்பு மணிரத்னத்தின் குரு படம் வெளியானபோது, வட அமெரிக்காவில் மட்டும் முதல் மூன்று நாட்களில் 1 மில்லியன் டாலருக்கு மேல் வசூலானது. ஆனால், அதில் பாதியளவுக்குக் கூட ராவண் வசூலிக்கவில்லை.

    இதே நிலை நீடித்தால் இரண்டாவது வாரம் இந்தப் படம் தூக்கப்பட்டு விடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி ரசிகர்களில் பலர், இந்தப் படம் 'நவீன ராமாயணமாக' இருக்கும் என நினைத்தே வந்ததாகவும், ஆனால் சொதப்பலான க்ளைமாக்ஸ் மற்றும் விக்ரமின் பாத்திரப் படைப்பைப் பார்த்து ஏமாந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

    வசூல் எவ்வளவு?:

    முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் மூன்று மொழிகளிலும் சேர்த்து ரூ.53 கோடியை வசூலித்துள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதில் தமிழ் ராவணன் மட்டும் ரூ.11 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு பதிப்பு உலகமெங்கும் ரூ.4 கோடியை ஈட்டியுள்ளது. ராவண் இந்திப் பதிப்பு ரூ.38 கோடியை வசூலித்துள்ளது.

    இந்திப் படமான ராவணுக்கு வட இந்தியாவில் வரவேற்பில்லை. துவக்க நாளில் 40 சதவீத பார்வையாளர்களே வந்ததாகவும், பல மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் காலியாக இருந்ததாகவும் பாலிவுட் விமர்சகர்கள் எழுதியுள்ளனர்.

    அவெர்ஸ் ஃபன் சினிமா மல்டிப்ளெக்ஸின் சிஇஓ விஷால் கபூர் கூறுகையில், "எங்கள் திரையரங்குக்கு 25 சதவீத பார்வையாளர்கள்தான் வந்தார்கள். இப்போது இன்னும் மோசம்..." என்றார்.

    தமிழகத்தில் ராவணனுக்கு ஓரளவு நல்ல துவக்கம் இருந்தது. ஆனால் படம் குறித்த செய்தி பரவியதும் திங்களன்றே பல திரையரங்குகள் வெறிச்சோட ஆரம்பித்துள்ளனவாம்.

    தெலுங்கில் நிலைமை படுமோசம் என ரிலையன்ஸே ஒப்புக் கொண்டுள்ளது.

    ....தட்ஸ் தமிழ் 22.06.2010

  7. #1267
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    செம்மொழி மாநாடு கருத்தரங்கு,,,,சுப வீரபாண்டியன்ர தெடங்கி வைக்க,,,,,,நடிகர் சிவக்குமார் தலைமையில் ,,,,10.30,,
    சன் செய்திகள்

  8. #1268
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    இனி `யூனிகோட்' தான் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துரு!........

    கோவை: கணினிகளில் பயன்படுத்த தமிழ் `யூனிகோட்' எழுத்துருதான் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துரு என்று அரசு அறிவித்துள்ளது.

    கணினிகளில் தமிழில் டைப் செய்ய பல்வேறு எழுத்துக் குறியீடுகள் (பான்ட்கள்) பயன்படுத்தப்படுகின்றன.

    இதனால் எழுதுவோருக்கும் அதை கணினியில் படிப்போருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைக் களைய உலகின் அனைத்து கணினி மொழிகளையும் ஒன்றிணைக்க யூனிகோட் என்ற எழுத்துரு உருவாக்கப்பட்டது. இதற்காக, ஒருங்குறி கூட்டமைப்பு (யூனிகோடு கன்சார்டியம்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    இதில், தமிழுக்கும் குறிப்பிட்ட அலைவரிசை ஒதுக்கப்பட்டு அதற்குள் இடம்பெறும் வகையில் அனைத்து தமி்ழ் எழுத்துக்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் உலகெங்கிலும் கணினிகள் ஒரே விதமான தமிழ் எழுத்துருவை டைப் செய்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த `யூனிகோட்' எழுத்துருவை தமிழக அரசு பயன்படுத்துவது பற்றி ஆராய தமிழக அரசு மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழுவை அமைத்தது.

    அதன் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த அந்த குழு, தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

    இதன் அடிப்படையில் கோவையில் செம்மொழி மாநாடு தொடங்கிய நாளன்று, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் டேவிதார், ஒரு ஆணையை வெளியிட்டுள்ளார்.

    அதில், இனி தமிழக அரசு, டிஏஎம் (டேம்), டிஏபி (டேப்) மற்றும் பிற பிரத்தியேக `8-பிட்' குறியீடுகளில் இருந்து 16 பிட் தமிழ் யூனிகோடுக்கு (ஒருங்குறி) மாற வேண்டும்.

    16 பிட் தமிழ் யூனிகோட் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக் குறியீடாக இருக்கும்.

    எந்த மென்பொருள்களில் எல்லாம் தமிழ் யூனிகோடு வேலை செய்யவில்லையோ அல்லது முழுதாக தெரியவில்லையோ, அந்த பயன்பாடுகளில் டிஏசிஆ-16 குறியீட்டை மட்டும் ஒரு மாற்றுக் குறியீடாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    இதற்காக, அனைத்து அலுவலகங்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அரசு செய்யும். தற்போது டிஜிட்டல் வடிவத்தில் உள்ள ஆவணங்களும் யூனிகோடு எழுத்துருவுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் இணைய கண்காட்சி:

    மாநாட்டில் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை நிருபர்களிடம் பேசுகையில்,

    உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட தமிழ் இணைய கண்காட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழை எவ்வாறெல்லாம் இணையத்தில் பயன்படுத்த முடியும் என்பதை சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள இந்த கண்காட்சி பெரிதும் உதவியுள்ளது. எனவே இது போன்ற தமிழ் இணைய கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

    ..........தட்ஸ் தமிழ் 28.06.2010

  9. #1269
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: ப. சிதம்பரம்.....

    கோவை, ஜூன் 27: குழந்தைகளிடமாவது பெற்றோர் தமிழில் பேச வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் அவர் பேசியது:

    தமிழ்ச் செம்மொழித் தகுதி பெற்றதை நினைத்துப் பெருமைகொள்ளும் அதே நேரத்தில், தமிழ் உலக மொழியாக உயர வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் அடுத்து வரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளிலும் தமிழ்ச் செம்மொழியாகப் போற்றப்பட வேண்டும். ஒரு மொழியின் ஆதாரமே பேச்சுதான். தமிழ் பேசினால்தான் தமிழ் வாழும்.

    வழக்கொழிந்த மொழிகள் பல உள்ளன. லத்தீன், பாலி மொழிகள் வழக்கொழிந்துவிட்டன. கிரேக்க மொழியும் வழக்கொழிந்த நிலைக்கு வந்து, தற்போது அம்மொழியை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தமிழ் வாழும் மொழி. ஆனால், இன்னும் தமிழ் நீடூழி வாழ, தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியினரும் தமிழில் பேச வேண்டும். அதற்காக அவரவர் தனது தாய்மொழியில் பேசக்கூடாது என்று அர்த்தம் அல்ல. ஆங்கிலம் அல்லது வேறுமொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடாது என்றும் பொருள் அல்ல. தவிர்க்க முடியதாத சூழல் விடுத்து தமிழில்தான் பேச வேண்டும்.

    குறிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமாவது தமிழில் பேச வேண்டும். வட்டார வழக்கு மொழியிலும் நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. வட்டார வழக்கு மொழி என்பது எல்லா நாடுகளிலும் உள்ளது. ஆனால், வட்டார வழக்கு மொழி என்று ஒருமொழி சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தமிழ்நாட்டில் குறிப்பாக நகரங்களில் இந்தப் போக்கைக் காண முடிகிறது.

    அசிங்கமான அர்த்தங்களைச் சொற்களில் புகுத்துவதையெல்லாம் வட்டார வழக்குமொழி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்குமொழி வழுக்கு மொழியாக மாறி பின்பு இழுக்கு மொழியாக மாறி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.

    தமிழில் பேசுவது என்றால் இனிமை ஆகும். அதனால், இனிய தமிழிலில் பேசவும், எழுதவும் வேண்டும். கடும்,சுடும் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

    புதிய இலக்கியம் தொடர்ந்து படைக்கப்பட்டால்தான் ஒரு மொழி வாழும் மொழியாக இருக்கும். ஆனால், இலக்கியம் மட்டுமே ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் போதுமானது அல்ல. மிகப் பெரும் பகுதி மக்களின் மொழி பயன்பட்டால்தான் அந்த மொழி வாழும் மொழியாக இருக்கும். லத்தீன், பாலி மொழிகள் வரலாற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    இலக்கியத் தமிழ் போன்று, மருத்துவத் தமிழ், சட்டத் தமிழ், பொருளாதாரத் தமிழ், மேலாண்மைத் தமிழ், அறிவியல் தமிழ், தொல்லியல் தமிழ், கணினித் தமிழ் என்று புதிய வகைகளுக்கு ஊக்கம் அளித்தால்தான் தமிழ் பல்லாண்டு ஓங்கி உயர்ந்த செம்மொழியாக இருக்கும்.

    நான் குறிப்பிட்ட துறைகளில் போதிய நூல்கள் இல்லை. தமிழில் பல துறைகளிலும் புதிய நூல்கள் காலத்திற்கேற்ப வெளியிடப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு சில பல்கலைக்கழகங்கள் சில இயல்களில் பாடநூல்களைப் பதிப்பித்து வெளியிடுகின்றன, இது பாராட்டுக்குரியது. ஆனால், இந்த முயற்சி மட்டும் போதாது.

    நூலாசிரியர்களே நூல்களை எழுதுங்கள், பாடநூல்களை எழுதுங்கள், பயிற்சி நூல்களை எழுதுங்கள். பாமரர்களும் பயன்பெறும் வகையில் படிக்கக்கூடிய அறிவுசார்ந்த நூல்களை எழுதுங்கள். பதிப்பாளர்களே புதிய நூல்களை வெளியிடுங்கள்.

    நூலாசிரியருக்கான சன்மானத்தை நாங்கள் தருகிறோம். முதல் பதிப்பை வெளியிடுவதற்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தமிழக முதல்வர் கொடியசைத்தால் புதிய நூல்கள் நிறைய வெளிவரும். நூலாசிரியருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தர வேண்டும். பதிப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் பதிப்புச் செலவுகளுக்கு லாபமாகவும் தர வேண்டும்.

    ஒரு நூலுக்கு ரு.10 லட்சம் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் 100 புதிய நூல்களை வெளியிடுவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி தேவைப்படும். தமிழக அரசுக்கும் தமிழ்ப் புரவலர்களுக்கும் இது பெரிய தொகை அல்ல. ஆண்டுக்கு ரூ.10 கோடி செலவழித்தால் பல்லாண்டுகளுக்குத் தமிழ் மொழி செம்மொழியாக, உலக மொழியாக ஒளி வீசும். இந்தப் பெரும் செயலை முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டிலேயே தொடங்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அளித்த பெரும் கொடையாக இருக்கும் என்றார் ப.சிதம்பரம்.

    ....தினமணி 27.06.2010

  10. #1270
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    சர்ச்சைக்குரிய கோல்: பிஃபா மவுனம்............

    ஜோகனஸ்பர்க்,ஜூன் 28:ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு கோல் மறுக்கப்பட்டது குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் கருத்துக்கூற மறுத்துவிட்டது.
    .
    இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி மோதிய நாக்அவுட் சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜெர்மனி 41 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் இந்த போட்டியின்போது 38வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் லம்பார்ட் கோல் அடித்தார். அவர் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு கோட்டை தாண்டி உள்ளே சென்றது. அப்போது ஜெர்மனி கோல் கீப்பர் பாய்ந்து அந்த பந்தை பிடித்தõர்.

    எனினும் கோட்டை தாண்டிய பிறகே அந்த பந்தை பிடித்தார். இருப்பினும் உருகுவே நடுவர் லாரியோண்டா இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் இங்கிலாந்துக்கு கோல் கிடைக்கவில்லை. இது இங்கிலாந்து வீரர்களை மிகுந்த ஆவேசத்தில் ஆழ்த்தியது.

    இந்த கோல் கொடுக்கப்பட்டிருந்தால் இரண்டு அணிகளும் 22 என சமநிலை பெற்றிருக்கும். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த முடிவு குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா கருத்துக்கூற மறுத்து விட்டது.

    ஆட்டத்தின் போது நடுவர்கள் எடுக்கும் முடிவு குறித்து கருத்து தெரிவிப்பதில்லை என்பது சம்மேளனத்தின் கொள்கை என்று பிஃ பா தெரிவித்துள்ளது. மேலும் நடுவர் முடிவுகள் குறித்து மறுபரிசீலனை செய்ய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில்லை என கால்பந்து விதிகள் குழு முடிவு செய்திருப்பதையும் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

    .....மாலைச்சுடர்

  11. #1271
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நாடு தழுவிய `பந்த்' எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராட்டம்

    புதுடெல்லி, ஜுன்.28-

    பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நாடு தழுவிய முழு அடைப்பு (பந்த்) நடத்த முடிவு செய்துள்ளன.

    போராட்டம்

    கடந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக, பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது.

    இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    `பாரத் பந்த்'

    இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வற்புறுத்தியும் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி நாடு தழுவிய முழு அடைப்பு (`பாரத் பந்த்') போராட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அது குறித்து பிரகாஷ்கரத் (மார்க்சிஸ்ட்கம்ïனிஸ்டு), ஏ.பி.பரதன் (இந்தியகம்ïனிஸ்டு), முலாயம்சிங் யாதவ் (சமாஜ்வாடி), நிதின்கட்காரி (பா.ஜனதா), சந்திரபாபு நாயுடு (தெலுங்குதேசம்) உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் சரத்யாதவ் பேச்சு நடத்தி வருகிறார்.

    கோஷம்

    அகில இந்திய கட்சிகளுடன் மாநிலங்களில் செல்வாக்கு மிக்க கட்சிகளையும் இந்த போராட்டத்தில் ஒருங்கிணைத்துக் கொள்ளவும், முலாயம்சிங் யாதவ் மூலம் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவின் ஆதரவை பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து அல்லது ஆட்சியை விட்டு வெளியேறு'' என்ற கோஷத்தை முன்வைத்து நடைபெற இருக்கும் இந்த `பாரத் பந்த்', பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து பங்குபெறும் வகையில் வெகுஜன போராட்டமாக அமையும் என்று, மூத்த தலைவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    ஒருமித்த கருத்து

    நாடு தழுவிய `பாரத் பந்த்' நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் இடையே ஒரு மித்த கருத்து உருவாகி வருவதாகவும், எந்த தேதியில் `பந்த்' நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் சரத் யாதவ் தெரிவித்தார்.

    ஏற்கனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து `பாரத் பந்த்' நடத்த எதிர்க்கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இடதுசாரி கட்சிகள் 2 நாட்களுக்கு முன்னதாகவே பந்த் அறிவித்துவிட்டதால், பாரத் பந்த் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    .....தினத்தந்தி 28.06.2010

  12. #1272
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    தனியார் துறையிலும் தமிழ்ப் படித்தவர்களுக்கே வேலை-விஜயகாந்த் கோரிக்கை..........

    சென்னை: தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சட்டம் வரவேற்கப்படக் கூடியதுதான். ஆனால் இதனால் எந்த பயனும் ஏற்படாது. ஏற்கனவே 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தொழிற் கொள்கை மூலம் அரசு அறிவித்ததே, அது என்ன ஆயிற்று? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் [^] கேட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

    உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு சட்டம் கொண்டு வரப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், இதனால் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

    தற்பொழுது அரசாங்கத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு கூட வேலை கிடைப்பதில்லை. ஆனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 62 லட்சம் பேர்.

    ஏற்கனவே 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தொழிற் கொள்கை மூலம் அரசு அறிவித்ததே, அது என்ன ஆயிற்று? அரசுத் தொழிற்சாலைகளின் பங்கு தனியாருக்கு விற்கப்படுகிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று தனியார் துறை வளர்க்கப்படுகிறது. ஆகவே குறைந்தபட்சம், தற்பொழுது கொண்டு வரப்படவுள்ள சட்டம் தனியார் துறையிலும் தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை [^] எடுக்க வேண்டும்.

    இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செம்மொழி மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. ஆரம்பம் முதல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று வற்புறுத்தி வந்தவர் முதல்வர் கருணாநிதி.

    தமிழ் ஈழம்-ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை?:

    தமிழின வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இனப்படுகொலை இலங்கையில் நடந்த பிறகு இந்த கோரிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது. இன்று இனப் படுகொலைக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள் [^], தங்களுக்கென ஒரு தாயகத்தை ஏற்கனவே பெற்றுள்ளனர். அதை தக்க வைக்கும் வகையில் எதிர்காலத்தில் தமிழினப் பாதுகாப்பிற்கு அவர்கள் கோரும் தமிழ் ஈழத்தை பெற்றுத் தர வேண்டும் என்று ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை?

    பழ.கருப்பையா வீடு புகுந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கி, வீட்டையும், காரையும் சேதப்படுத்தி கொலை வெறி மிரட்டல் விடுத்துள்ளனர். இது என்ன நியாயம்? பழ. கருப்பையாவின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
    ....தட்ஸ் தமிழ் 29.06.2010

Page 106 of 232 FirstFirst ... 6 56 96 102 103 104 105 106 107 108 109 110 116 156 206 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •