Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: அகலிகை வம்சம்...

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    அகலிகை வம்சம்...


    அகலிகை வம்சம்...


    ஆறடி உயரத்தில் அங்கொரு சிலை நின்று கொண்டிருக்கிறது.ஏறக்குறைய மனிதனை வார்ப்பில் எடுத்தது போலவே இருக்கும் அந்தச் சிலையை யாராவதுஇரவில் பார்த்தால், உயிருள்ள ஒரு நபர் நின்று கொண்டிருப்பதாகவே நினைப்பார்கள்.அந்தச் சிலையின் கணுக்கால் வரை சாக்கடை நிறைந்து ஓடுகிறது. அந்தச் சாக்கடை ஒருகாலத்தில் நதியாக இருந்தது என்று சொன்னால் நம்புவது கடினம். பின்னாளில்நதிக்கரையில் நாகரிகம் மட்டும் வளர நதி கைவிடப்பட்டு அநாதரவாகி விட்டது. ஒருகாலத்தில் இந்த நதிக்கரையில் வேத பாடசாலைகள் இருந்தன என்று சொன்னல் அதுநகைப்பிற்குரியது. ஆனால், நதிக்கரைதனில் நடந்து முடிந்தவைகளுக்கு சாட்சியாக அந்தசிலை மட்டும் நின்று கொண்டிருக்கிறது. தொல் பொருள் ஆய்வாளர்களால் பதிவேடுகளில்குறித்து வைக்கப்பட்டிருக்கும் அந்தச் சிலை சுமார்நானூறு ஆண்டுகளுக்கு முந்தியது. அதற்கு மேல் அதைப் பற்றியவரலாற்று விபரங்கள் தெரியாததால், சிலையை அவர்கள் பெரிதாக லட்சியம் கொள்ளவில்லை.அவர்களுக்கு வேண்டியதெல்லாம் நாயக்கர் மகாலும், மீனாட்சி அம்மன் கோவிலும்தான்.மற்றவைகள் வெறும் குறிப்புகள் மட்டுமே. நதியைப் போலவே அந்தச் சிலையும்ஒரு காலத்தில் உயிருள்ளதாக இருந்தது. வேதம் கற்றது.தருக்கம் புரிந்தது. தீராத அலைக்கழிப்பில் சிக்கித் தவித்தது.



    000



    மின்னலெனத் தெறித்து ஓடும் பச்சை நரம்புகள் கழுத்தில்தெரிந்தன. பஞ்சுத் துகள்களை ஒட்டி வைத்தாற் போன்று காதோரம் சிறு பூனை மயிர்இருந்தது. கண்களின் ஓரம் தீற்றிய மை காண்பவரது உயிரைக் குறி பார்ப்பதாய் இருந்தது.ஒரு பறவையின் இறகாய், மரத்தில் இருந்துஉதிர்ந்த இலை மண்ணை அடைவதற்குள் ஆடும் லாவகமாய் அவள் உடல்காற்றில் மிதந்து கொண்டிருந்தது. ஒய்யாரமாய் விழிகளால் அம்பு ஏந்தி பார்வைகளைவீசிக் கொண்டிருக்கிறாள் எட்டுத் திக்கிலும். அவளது அம்புறாவில் இன்னும் எத்தனைஅம்புகள் மிச்சமிருக்கின்றதோ அது எனக்குத் தெரியாது. ஆனால், அத்தனை அம்புகளும்ஆடவர்களை குறி வைத்தே எய்யப்படப்போகின்றன. ஏன் எனக்கு மனம் இப்படிப் போகிறது? நான் ஒரு வித்யாகர்த்தியல்லவா? சித்தாந்தம் பயிலும்மாணக்கன் மனதை இப்படித் தறிகெட்டு அலையவிடலாகுமோ? என்னைப் போலவேதான் இங்குகுழுமியிருக்கும் அனைவரின் மனங்களும் இருக்குமா? இவர்களுக்கு இருக்கலாம். ஆனால், என்னைப் போன்ற வேதம் பயிலும் ஒருவனுக்கு இருத்தல் பிழை. இது தவறு. காமமென்பது மாயை.காமம் கிளர்த்தெழ வைக்கும் பெண் மாயை. அவளின் கண்களும்மாயை. மாயைகளால் சூழப்பட்ட உலகில் சிற்றின்பங்களில் இருந்துதப்பவே வேதங்களும் உபநிசத்துகளும் வழிபுரிகின்றன. இந்தக்கோவில் திருவிழாவில் தேவரடியார் ஆட்டத்தைக் காண்பது தவறு. இந்தக் கணிகை சுத்தமானவள்அல்ல. ஆதலாலேயே அவள் கணிகை. இவளைக் கண்ணால் காணுதல் பாபம். அந்த இடத்தை விட்டுநடக்க ஆரம்பித்தேன்.காதுகளில் இருந்து பாடல் சத்தமும் கூட்டத்தின் இரைச்சலும்விலகிய பின்பு என்னை அறியாமல் என் கழுத்து அநிச்சை நிகழ்வாய் திரும்பியது.மண்டபத்தில் இருந்து இரண்டு கண்கள் என்னைப் பார்ப்பதைஉணர்ந்தேன். பின் விடுவிடுவென்று திரும்பிப்பாராமல் நடந்து பள்ளித் திண்ணைக்குவந்தேன்.உள்ளே மணக்க மணக்க சமையல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.



    சிறிது நேரத்தில் சாப்பிட அழைப்பு வந்ததும் உண்டு விட்டுதிண்ணையிலேயே உறங்கிவிட்டேன். அடுத்த நாள் காலை எழுந்து சந்தியாவந்தனம்முடித்துவிட்டுக் குருகுலத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். எதிரில் திடீரென்றுசந்தணத்தின் மணமும் மரிக்கொழுந்துவின் மணமும் கலந்த புதுவித மணம் என் நாசியைத்தாக்கியது. திரும்பிப் பார்த்தேன். அவள்தான். நேற்றிரவுகோவில் மண்டபத்தில் என்னை கலங்கச் செய்த காதோரப் பூனைமயிர், கழுத்து பச்சைநரம்புகளுக்குச் சொந்தமான அதே கணிகை. ஓரவிழியில் என்னைப் பார்த்தபடியே கோவிலைநோக்கிச் சென்று கொண்டிருந்தாள். என் மனம் ஒரு கணம் தன்னை மறந்தது. என்னை அறியாமல்என் உதடுகள் ஒரு புன்னகையைப் பூத்தது. அதைக் கண்டதும் அவள் தன் முகத்தை சட்டென்றுதிருப்பிக் கொண்டாள். எனக்குள் ஏதோ ஒன்று அறுந்து விழுந்தது போன்ற உணர்வுஏற்பட்டது. பின் விடுவிடுவென்று குருகுலம் நோக்கித் திரும்பிப் பாராமல் நடக்கஆரம்பித்தேன். ஆனால், முதுகை மட்டும் ஏதோ மெலிதாய் வருடுவது போன்ற ஓர் உணர்வுஏற்பட்டது. திரும்பிப் பார்க்க அவள் அங்கேயே நின்று கொண்டு என்னைப் பார்த்த வண்ணம்இருந்தாள். எல்லாம் மாயை. சிலந்திகள் விரிக்கும் வலை அற்புதமானது. ஆனால், அதில்சிக்கும் சிறுபூச்சிகள்? வேண்டாம் அருங்கேதா.. வேண்டாம். நீ சிறுபூச்சி அல்ல.. உலகைவெல்லும் தருக்க சிந்தாந்தங்களை விட பெண்கள் ஒன்றும் மேலானவர்கள் அல்ல. அவள் பார்வைமுதுகை வருட நான் நடந்து குருகுலத்தை அடைந்தேன்.



    மாலை நேர ஸ்நானத்தைக் குளத்தில் முடித்துவிட்டு கோவில்பிரகாரத்துப் படிக்கட்டுகளில் ஏறும் பொழுது படிக்கட்டுகளின் ஓரமாய் அவள்அமர்ந்திருந்தாள். அவள் மயக்கவைக்கும் அலங்காரங்கள் ஏதுமன்றி, மோகனப் பார்வைகள்அற்று, நடை சாத்தப்பட்ட நேரத்து அம்மன் போல் இருந்தாள். அவளது அலங்காரங்கள்ஏதுமில்லாவிட்டாலும் அவள் ஒரு தாசி என்பதை அவள் முகக்களை சொல்லியது. மெல்லியபுன்னகையுடன் யாருக்கும் தெரியாதவாறு குனிந்தவாறு என்னைப் பார்த்தாள். அவள்பார்வையைக் கண்டதும் மனம் துள்ளியது. ஆயிரம் வீணைகள் உயிர்பெற்றது போல்என் உடல் அதிர்ந்தது. அந்தப் பார்வை காமம் அல்ல. காதலா? கணிகையிடம் காதல் சாத்தியமா? தவறு.. இது தவறு.. இன்னும் கற்க வேண்டியது எவ்வளவோஇருக்கிறது. போயும் போயும் ஒரு தாசியிடமா மனதை இழப்பது. ஏன் என் மனம் இப்படிஅலைபாய்கிறது? ஆண் என்கின்ற அகம்பாவமா? படித்த செருக்கா? எனக்குவிளங்கவில்லை. இருந்தாலும் இவள் வேண்டாம். இது மாயை. அந்த இடத்தை விட்டுநகர்ந்தேன். முதுகை மட்டும் அவளது பார்வைகள் வருடிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.அதன்பிறகு கோவிலில் நிற்க மனமில்லாது கோவிலை விட்டு வெளியேறினேன்.



    அன்று இரவு அந்தப் பார்வை என்னைத் தூங்கவிடவில்லை. கண்களைமூடினால் அவள் பார்வைகள் எனக்குள் ஊடுருவி என் அடிவயிற்றைப் பிசைந்தது. காதுகளில், சதுர் ஆடிய அவளது சலங்கை ஓலி இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. அதன் பின் எழுந்துநடக்க ஆரம்பித்தேன்.அவளைப் பற்றிய சிந்தனைகளே தீய சக்தியாய் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தது. அந்த நினைவுகளினூடே நடந்து வந்தேன். சிந்தனைகள் வடிந்த பொழுதுதான்தெரிந்தது. நான் தேவரடியார் வீதி முகப்பில் நின்று கொண்டிருக்கிறேன் என்று.வீதியெங்கும் சலங்கை ஒலியும் சிரிப்பொலிகளும் பல்லக்குகள் வந்து போவதுமாய்இருந்தது. சில பல்லக்குகள் அந்த வீதியில் சில வீட்டு முகப்புகளில் நின்றுகொண்டிருந்தது. அதைச் சுமந்து வந்த தூக்கிகள் திண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். சில தலைகள் முக்காடு போட்டுக் கொண்டு என்னைக் கடந்து சென்றன.அந்த முக்காடுகளுக்கு சொந்தக்காரர்கள் கண்டிப்பாக ஊருக்குள் முக்கியமானஉத்யோகத்தில் இருப்பவர்களாய் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளிருந்து எச்சரிக்கைஉணர்வு எழுந்தது. தேவரடியார் வீதி முகப்பில் அருங்கேதனைக் கண்டேன் என்று யாராவதுகுருவிடம் சொல்லிவிட்டால்.. அல்லது இங்கு வந்தது குருவிற்குத் தெரிந்தால்..இந்த எண்ணமே என்னை ஒவ்வொரு துண்டமாய் வெட்டியது. ஏதோகுற்றம் புரிந்ததாய் மனம் ரணமானது. இது தவறு. திரும்பி நடக்க ஆரம்பித்தேன். எல்லாம்அடுத்த நாள் இரவு வரைதான்.



    இந்த முறை அந்த வீதிக்குள்ளேயே நுழைந்துவிட்டேன். சிலவீட்டு முகப்புகளில் ஆண்களைப் போன்ற தோற்றமுடைய சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.அவர்கள் என்னைப் பார்த்து சைகை காட்டுவது தெரிந்தது. அதில் ஒரு வீட்டு முகப்பில்இருந்து ஒரு ஆண் என்னை நோக்கி வந்தான். அவன் ஏறக்குறைய ஆண் போலவே இருந்தான். அவன்பேச ஆரம்பித்த பிறகு அவன் ஆண் என்ற சந்தேகம் எனக்குள் வந்தது.அவனிடம் அவளின் அடையாளங்களைச் சொல்லி விசாரித்தேன். அதற்குஅவனோ அவளுக்கு விலை அதிகம் என்றான். உன்னிடம் அவ்வளவு பணம் இருக்காது. உனக்கு இந்தவீதியின் இறுதியில் இருக்கும் குமுதவல்லி வீடுதான் சரியாய் இருக்கும் என்றுகூறினான். நான் ஏன் இப்படி மாறினேன். நான் யார்? அருங்கேதன். இந்த உலகைவெல்வதற்காகவே அத்தனை நூல்களையும் கற்றுக் கொண்டிருக்கும்ஒரு அசாதாரணமானவன். நான் ஏன் இவனிடம் பேச வேண்டும்? சிந்தனைகள் வலுக்க அவளது பெயரை மட்டும் கேட்டேன். அவள் பெயர் மதிவதனி என்றான். அதன்பின் அந்த இடத்தை விட்டு அகன்றேன்.



    அடுத்த நாள் அவளை கோவிலில் சந்தித்தேன். அவளது பெயரைச்சொல்லி அழைத்தேன். அவள் திரும்பிப் பார்த்தாள். அவள் பெயர் அதுதான் என்று ஊர்ஜிதம்ஆனது. ஆனால் எப்படித் தொடங்குவது. அதன் பின் அவளிடம் ஒன்றும் பேசவில்லை. மௌனியாகஇருந்தேன். அவள்என்னைப் பார்த்து மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுஒயிலாக நடந்து சென்றாள். அவள் நடந்த நடை சற்று விநோதமாகப்பட்டது. அவள் என்னைக்கவரும் விதமாய் இருக்கவேண்டும் என்பதற்காகவே இடுப்பை வெட்டி நடக்கிறாள் என்றுபுரிந்தது.



    இவள் மாயை. இந்த உணர்வு மாயை என்றால் மனதிற்குள் பொங்கிவரும் பிரவாகத்திற்கு பொருள் என்ன? காமமா? உடலின் வேட்கையா? தினவெடுத்த உடலின் பசியா? அதைத் தீர்க்க என்ன செய்யவேண்டும்? அவளோடு கூடுவதா? அப்படியென்றால் இந்த சிந்தாந்தங்கள்? படித்தசித்தாந்தங்கள்? எது மாயை? கண் முன் காணுகின்ற பெண்ணும் அவளது வளைவுகளுமா? இல்லைஇவைகளை மாயை என்று சொல்லுகின்ற உபநிசத்துக்களா? ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், என்பார்வை அவளது பின்னழகை மட்டும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.அந்த உணர்வு அவளுக்குள் ஏற்பட்டிருக்கும் என்றுநினைக்கிறேன். தூரத்தில் இருந்து அவள் திரும்பிப் பார்த்தாள். பின்வெடுக்கென்றுதிருப்பிக் கொண்டாள். அந்தக் கண நேரப் பார்வை என்னை அணுஅணுவாய்க் கொல்ல ஆரம்பித்தது. இவளது பார்வைக்கு மட்டும் அப்படி என்ன சக்தி?



    அவளது வீட்டிற்குள் விடுவிடுவென்று நுழைந்தேன்.அங்கிருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள். அம்மனின் மறு உருவம் என்றுஎண்ணும் அளவிற்கு தடித்த பெண் ஒருவள் நகைகளை வாரிச்சூடியிருந்தாள். அவள் உடலில் ஒரு பாகம் கூடத் தெரியவில்லை.அவ்வளவு நகைகள் அணிந்திருந்தாள். என்னைக் கண்டதும் அவள்சத்தம் போட ஆரம்பித்தாள். அவள் சத்தம் கேட்டு மாடியிலிருந்துபடபடவென்று ஓடி வரும் கொலுசொலி கேட்டது. மேலே பார்த்தேன்.அங்கு மதிவதனி நின்று கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் சிரித்து விட்டாள். அந்தச்சிரிப்பு என் ஆண்மையை சோதிப்பதாக இருந்தது. என்னை இழிவுபடுத்துவதாக இருந்தது. பின்அவள் உள்ளே சென்று மறைந்து விட்டாள். அதற்குள் அந்த வீட்டில் இருந்த ஆண்கள் என்னைவெளியில் அனுப்பி விட்டார்கள். "அவளின் விலை எதுவாக இருந்தாலும் கொடுக்கத் தயார்"என்றேன். "அதெல்லாம் உன்னால் முடியாது.. பேசாமல் போ.." என்று விரட்டிவிட்டார்கள்.ஒரு கணம் நான் செய்த தவறைக் கண்டு மனம் வருந்த மனம் போனதிக்கில் நடந்தேன். கிருதுமால் நதி வந்தது. அதில் மூழ்கி எழுந்தேன். செய்தது பாவம்என்று மனம் வதைத்தது. கிருதுமாலில் பாவங்கள் கரைந்து போக வேண்டும் என்று வெறிகொண்டு மூழ்கி மூழ்கிஎழுந்தேன். உடல் சுத்தமானது. மனது? கேள்விகள் மீண்டும் எழஆரம்பித்து விட்டன. இவைகளில் இருந்து தப்பவே முடியாதா என்னால்? ஆடை முழுதும் நனைந்திருக்க அப்படியே எழுந்து குருகுலம்நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வழியில் குரு வந்து கொண்டிருந்தார். அழும் குழந்தைக்குதாயைக்கண்டதும் ஏற்படும் பரவசம் எனக்குள் பிரவகித்தது. நடந்த சம்பவங்களை அவரிடம்சொல்லி ஏதேனும் பிராயச்சித்தம்கிடைக்க வழி பண்ண வேண்டும். அவரை விட்டால் எனக்கென்றுயாரிருக்கிறார்கள் இவ்வுலகில்?



    "குருவே என்னை மன்னியுங்கள்.. நான் ஒரு பிழைசெய்துவிட்டேன்.."

    "என்ன பிழை? விளக்கமாகச் சொல்" என்றார். நடந்த அனைத்தையும்சொன்னேன்.



    "நீ குருகுலத்தில் இருக்கும் விதிகளை மீறிவிட்டாய். நீசெய்த பிழைக்கு விமோசனம் கிடையாது.. இச்சைகளில் வீழ்ந்தவனுக்கு கிடைக்கும் தண்டனைஎன்னவென்பதை குருகுலத்தில் பயிலும் மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்"



    "காமம் பிழையா? பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்களினால்ஏற்படும் இச்சைக்கு நான் என்ன செய்வேன்?"



    "முடியும்.. மனதை தன் கைக்குள் வைத்திருக்கவேண்டும். அவனால்மட்டுமே இவ்வுலகை வெல்ல முடியும். நீ செய்த பிழைக்கு..இந்தக் கிருதுமால் நதிக் கரையிலேயே கல்லாகச் சமைவாய்.."



    "ஸ்வாமி.." என் உதடுகள் இவ்வார்த்தைகளைச் சொல்லி முடிக்கும்முன் கல்லாகி...

    Last edited by Iniyan; 19-05-2005 at 05:29 PM.

  2. #2
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி இனியன்,
    ராம்பாலின் இந்த அருமையான கதையை மீண்டும் பதிந்ததுக்கு.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    அடடா! அற்புதமான கதை. அருமை ராம்பல். நீண்ட நாட்கள் கழித்து உங்கள் கதையை...வருணனையை....படிப்பது ஆனந்தம்.

    கருத்துக்கு வருவோம். அந்தச் சிலைக்குப் பக்கதிலேயே மற்றொரு சிலை. அது குருவினுடையது. இயல்வை மறுத்துரைத்து அதற்குச் சாபமும் இட்ட குற்றத்திற்கு இயற்கைத் தேவதையே கொடுத்த சாபம்.

  4. #4
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    கதைக்கு சரியான விமர்சணம் வராத நிலையிலும்..
    எனது அடுத்த கதையைப் பதிகிறேன்..

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    அகலிகை வம்சம்.......

    அருங்கேதன்.... அவள் உடலளவிலும் சோரம் போகிறாள்; இவன் மனதளவில், உடலின் உந்துதலினால் சோரம் போனதாகக் குரு சொல்கிறார். அதற்கு தண்டனையும் வழங்குகிறார்.

    அகலிகைக்கு ஒரு இராமன்; இவனுக்கு யாரோ!

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  6. #6
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    இது கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டிய கதை.. விளக்கங்களுடன் விரைவில்..
    அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    கதை பல சிந்தனைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. உங்கள் விளக்கத்திற்காக காத்திருக்கிறேன். நன்றி.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ராம், நலமா?
    உனக்கே உரித்தான தனித்துவ நடை, பாணி..
    உரையாடல்கள் கொஞ்சம். மன விசாரணைகளே பிரதானம்.
    பஞ்சுத்துகள், பறவை இறகு என்று வர்ணனைகள் தெளிக்கப்பட்டிருந்தாலும், கதையின் மைய ஆழக்கருத்தை அவை சிதறடிக்க முடியவில்லை.

    கதையைப் பற்றி,
    அண்ணல் சொன்னது போல்---
    உடலால், மனதால் --- ''நெறி'' பிறழ்வோர் வம்சம்...
    ஆண்= பெண் என்னும் சமநோக்கு..
    இப்படி சிந்தனைகள் போனாலும்,
    உன் விளக்கங்கள் அறிய நானும் ஆசைப்படுகிறேன்.

    ( சின்ன சந்தேகம்- சந்தியா வந்தனம் என்பது மாலையில் செய்யப்படுவதல்லாவா?)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    இளசு, காலைச் சந்தி மாலைச் சந்தி என்று இரண்டு செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி இராகவன்.. நான் இதுவரை கேள்விப்படாதது.

    நாலு(ளு)ம் தெரிந்து கொள்ள நம் மன்றம் நல்ல இடம்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அற்புதமான கதை. ஆனால் ஒரு பெண்ணை நினைத்தது பாவமா? அதற்கு இந்த அளவு தண்டனையா? கொஞ்சம் மனதை நெருடுகிறது.

    அருமையான வர்ணனையில் அழகாக எழுதியிருக்கும் கதை. பாராட்டுக்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அருங்கேதனுக்கு ஏற்பட்ட இச்சை இத்தனை பெரிய தண்டனைக்குகந்ததா..?
    குரு முழுதுமாய் ஞானம் பெறவில்லை என்பதையே அவருடைய அவசர சாபம் காட்டுகிறது.தொட்டால் சுடும் என்று சொல்வதற்கும் தொட்டுபார் என்று வலியுறுத்தி சுட்டதை உணர்ந்து கொள்ள வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.வயதும்,அந்த வயதில் ஏற்படு இயற்கையான உணர்வுமே அவனை அந்த வீதிக்கு நடத்திச் சென்றது...இதில் குற்றம் யாருடையது என்ற தர்க்கம் அவசியமில்லை.
    விலை கொடுக்க முடியாது என்று விரட்டப்பட்டபின் தான் செய்ய நினைத்தது தவறு என்று உணர்ந்து பாவம் போக்க நதி நீராடுகிறான்.அதே நிலையில் குருவிடம் மனம் திறக்கிறான்.
    இதில் இரண்டு விஷயம்...ஒன்று அனுமதிக்கப்பட்டிருந்தால் அவன் அந்த சுகத்திலேயே அமிழ்ந்திருப்பான்.அல்லது இவ்வளவுதானா இது என்று தெளிந்து திரும்பியிருப்பான்.

    ஆனால் எதுவுமே நிகழவில்லை...இருந்தும் அதை நினைத்ததே குற்றமென்று தண்டனையும் பெற்றது சரியில்லை.என்னைப் பொறுத்தவரை குருவே குற்றவாளி.

    எழுத்து மிகப் பிரமாதம்.எண்ண ஓட்டங்கள் சொல்லப்பட்ட விதம் அருமை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •