Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: வீடு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    வீடு

    தேதியில்லா குறிப்புகள்
    வீடு

    ஊரில் சொந்தமாக வீடு இருந்தாலும், தூத்துக்குடியில் வேலைக்கு சேர்ந்த பின்னர் நிறுவனத்திற்கு சொந்தமான வீடுகளில் இடம் கிடைக்க பல வருடங்கள் ஆகக்கூடும் என்பதால் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டலாம் என்று யோசனை பல நண்பர்களால் எனக்கு வழங்கப்பட்டது.

    ஊரிலேயே வீடு கட்டலாமா...? அல்லது மதுரையில் வீடு கட்டலாமா என்ற எண்ணமும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் பின்னர் அதை நிராகரித்து விட்டேன். நண்பர்கள் சந்தானம், செவ்வேள் ஆகியோரின் ஆலோசனை பேரில் தூத்துக்குடி நகரத்தில் வீடு கட்ட இடம் பார்த்தேன். சில இடங்கள் வாங்கலாம் போல இருந்தாலும் விலை அதிகமாக இருந்தது.

    அப்போது சுந்தரம் நகரில் நண்பர்களுடன் வசித்து வந்தேன். அப்போதுதான் அத்திமரப்பட்டி ரோட்டில் புதிதாக அமைத்திருக்கும் மனையடியில் ஒன்றை வாங்கலாம் என்று யாரோ சொன்னார்கள். சில மாதங்களுக்கு முன்பாக கருவேலி மரங்களாக இருந்தது அந்த இடம். அதே இடத்தை சில மாதங்கள் முன்னர் "இந்த இடத்தை எவனாவது செண்ட் மூவாயிரம் கொடுத்து வாங்குவானா..?" என்று எண்ணிய அதே என்னுடைய எண்ணம் இப்போது என்னைப்பார்த்து நகைத்தது.

    நான் பணி புரிந்த நிறுவனத்தின் உணவகத்தில் தளவாய் என்பவர் பணி செய்து வந்தார். அவரும் அவருடைய உதவியாளராக அங்கே இருந்த முருகன் என்பவரும் சேர்ந்து காலி இடத்தை வாங்கி மனையடியாக மாற்றி விற்பனை செய்து வந்தனர்.

    அந்த இடத்தில் விற்காமல் இருந்த கடைசி மனையடி அதுதான் என தளவாய் சொன்னார். பெரும்பாலும் நிறுவனத்திலேயே பணிபுரியும் நண்பர்களே மற்ற இடங்களை வாங்கி இருந்தனர்.

    அந்த மனையடி கடைசியாக இருந்தது. மனையடியின் பின்பக்கம் பனைத்தோப்பு. வலதுபுறம் ஒரு பழைய வீடு. எதிரே பத்தடி தெரு. இடது பக்கம் கண்ணன் வாங்கியிருந்த இடம். அந்த இடம் கிட்டத்தட்ட ஒரு "ப" வடிவத்தில் அமைந்த காலனி போல் அமைந்திருந்தது. கிட்டத்தட்ட சதுரம் போல ஐந்து செண்டில் அமைந்த அந்த மனை ஓரளவுக்கு மனதுக்கும் பிடித்திருந்தது. காற்றோட்டம், பாதுகாப்பு வசதி போன்றவை பரவாயில்லை என்பதாகவும் தோன்றியது.

    ஒரு வழியாக பேரம் பேசி, நிறுவனத்தில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து சுமார் இருபத்தி எட்டாயிரம் பி.எப் கடன் பெற்று, பத்திரம் முடிக்க கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் ஆனதாக நினைவு. வீடு கட்ட நிறுவனத்தில் கடனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். வீடுகட்ட பிரபலமாக இருந்த மலர் கன்ஸ்ட்ரக்ஷனை அணுக கண்ணன் வலியுறுத்தினான். பிரதீப்பும் நானும் அங்கே சென்று பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

    வீடு எப்படி இருக்க வேண்டும் என்று நானும் பிரதீப்பும் யோசனை செய்து ஒரு உத்தேச திட்டத்தை சொன்னோம். கீழ் வீட்டின் ஒரே தளத்திலேயே இரண்டு படுக்கை அறைகள் அமைவதாக - அதாவது ஒரு படுக்கையறை தரை மட்டத்திலும், மற்ற படுக்கையறை அதற்கு மேலாகவும் - திட்டம் போட்டிருந்தோம். அதனால் கீழ் வீட்டின் ஹால் கூரை சுமார் 17 அடி உயரத்தில் வருவதாக ஆனது. இதை எழுத்தில் விளக்குவது சற்று சிரமம் தரக்கூடியது. அதாவது வீட்டினுள்ளேயே படிக்கட்டுகள் மூலமாக படுக்கையறைக்கு செல்வதாக அமைந்திருக்கும். 16 * 12 அடி என்கிற அளவில் வரவேற்பறையும், 12*12 அடி என்கிற அளவில் படுக்கையறைகளும், 16* 9 அடி என்கிற அளவில் சமையலறையும் இருப்பதாக திட்டம் போட்டோம். ஒரு படுக்கையறை குளியல் மற்றும் கழிப்பறை இணைந்ததாக இருந்தது. ஒரு பரண், தேவையான இடங்களில் பொருட்களை வைக்க இடம்... இப்படி எல்லாவற்றையும் யோசித்து யோசித்து அமைத்தோம். ஆனால் இங்கு ஒன்றை சொல்லியாக வேண்டும். வாஸ்து போன்றவற்றில் நம்பிக்கை கிடையாது என்பதால் வசதியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு திட்டம் அமைத்தோம். பின்புறம் தோட்டத்திற்கு செல்ல ஒரு வாசலும் அடங்கி இருந்தது. உத்தேச வரைபடமும் தயாரானது. கீழே பெரிய வீடாகவும், மேலே ஒரு சிறிய குடித்தனம் இருக்கக்கூடியதாகவும் வரைபடம் அமைந்திருந்தது. தோற்றமும் பிடித்திருந்தது.

    விரைவில் வேலை ஆரம்பித்து விடலாம் என்று பொறியாளர் சொன்னார். ஒரு பிப்ரவரி மாதத்தின் நல்ல நாளில் ( ? ) பூமிபூஜை போடப்பட்டதாகவும் நினைவு. முதலில் வீடு கட்ட ஒரு தண்ணீர் தொட்டி தேவைப்படும் என்பதால், வீட்டின் பின் மூலையில் ஒரு பெரிய கிடங்கு தோண்டி, அதையே பின்னர் "செப்டிங்" தொட்டியாக மாற்றிக்கொள்ளலாம் என்று திட்டம்.

    இதே நேரத்தில் வீட்டில் மரக்கன்றுகளை ஆரம்பத்திலேயே நட்டால் நல்லது என்பது பிரதீப்பின் ஆலோசனை. ஒரு மாதுளை கன்று, மூன்று தென்னங்கன்றுகள், ஒரு அரைநெல்லி மரக்கன்று , இரண்டு வேப்பமரக்கன்றுகள் ஆகியவற்றை நர்சரியில் இருந்து வாங்கி வந்தோம். தேவையான ஆழம் தோண்டி, உரங்கள் இட்டு மரங்களை நட்டோம். வீட்டு முகப்பில் இரண்டு வேப்பமரக்கன்றுகள் நடப்பட்டன.

    தண்ணீர் தொட்டி கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு கட்டிடத்தொழிலாளர்கள் மட்டும் வேலை பார்த்தனர். சில நாட்களில் ஆழமாக கிடங்கு தோண்டப்பட்டு அதில் தொட்டியும் கட்டப்பட்டது. குறிப்பிட்ட நாட்கள் கழித்து தண்ணீர் ஊற்றப்பட்டது. அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால், தண்ணீர் ஊற்றப்பட்ட தொட்டியில் பெரிய விரிசல்.!!

    கவனக்குறைவான அல்லது தரக்குறைவான கட்டுமான பணி என்று எனக்கு தோன்றியது. முதலில் ஆரம்பித்த இது போன்ற சாதாரண வேலையிலேயே பிரச்சினை என்றால் கட்டிடப்பணி எப்படி இருக்கும் என்கிற எண்ணம் எனக்கு வந்தது. எனவே பொறியாளரிடம் நேரடியாக பேசினேன். "இது போன்ற சாதாரண வேலையில் பிரச்சினை என்றாலும், பின்பு வீடு கட்டும் போது ஏற்படும் பிரச்சினைகள் வேண்டுமென்றே கவனக்குறைவாக செய்வதாக எனக்கு தோன்றும். வீணான சச்சரவு உண்டாகும். எனவே இது வரை நடந்த வேலைக்கான பணத்தை தந்து விடுகிறேன். அநாவசியமாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல்.. வேறு நபரிடம் வீடு கட்டும் பணியை ஒப்படைத்து விடுகிறேன்" என்று சொன்னேன்.

    பொறியாளரும் மிகவும் நாகரீகமாக சொன்னதை ஒப்புக்கொண்டார். தர வேண்டிய பணத்தை கொடுத்து முடித்தேன். மறுபடியும் யாரிடம் வீடு கட்ட கேட்கலாம் என்ற போது நண்பர்கள் "சேகரன்" என்கிற நபரை பரிந்துரைத்தார்கள்.

    அவர் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவரல்ல... ஆனால் அதில் அதிகம் அனுபவ அறிவு இருப்பவர். மிகவும் நல்லவர் - இப்படியெல்லாம் சொன்னார்கள். நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி அவர் கட்டிய வீடுகள் சிலவற்றை பார்வையிடச் சொன்னார்கள். நானும் பார்த்தேன். பார்வையிட்டதில் எனக்கு பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் வீடுகளெல்லாம் நன்றாக இருப்பது போலதான் எனக்கு தோன்றியது.

    அவரிடம் பேசிய பின்னர் மறுபடியும் வீட்டுத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்களை செய்யலாம் என்று சொன்னார். சற்று யோசித்த பின்னர் அதன்படியே செய்யலாம் என்று ஒப்புக்கொண்டு, புது வரைப்பட திட்டம் தயாரித்து, பஞ்சாயத்தில் ஒப்புதல் பெற்று, நிறுவனத்தில் காண்பித்து வீடு ஆரம்பித்து விடலாம் என்கிற நிலை வந்தது.

    சந்தானம் அண்ணாச்சி, செவ்வேள் முன்னிலையில் அவருடைய வீட்டில் சேகரனிடம் புதிதாக வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

    வீடு கட்டும் வேலை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, ஒரு சிறிய ஓலைக்குடிசை ஒன்றை போட்டால் நல்லது என்று சேகரன் சொன்னார். அதன் படியே வீட்டுக்கு முன்பாக ஒரு சிறிய குடிசை போடப்பட்டது. ஆரம்பத்தில் வீடு கட்ட தேவையான சில கருவிகள், சிமெண்ட் போன்றவற்றை வைக்க அது உபயோகிக்கப்பட்டது.

    அவர் வீடு கட்டும் போது ஒரு பகுதியை கிழக்கு பக்கமாக ஒரு இஞ்சாவது இழுத்து ( ! ) கட்ட வேண்டும் என்று சொன்னார். பின்பு அஸ்திவாரத்திற்கும், செங்கல் கட்டடத்திற்கும் வித்தியாசம் தெரியாதபடி புதுமுறையில் அமைக்கப் போவதாகவும் சொன்னார்.

    வீடு கட்டும் போது, முழுவதும் உடனிருந்து பார்த்துக்கொள்ள, விளாத்திகுளத்திற்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் இருந்து ஒருவரை அவரே அழைத்து வந்தார். அவர் ஒரு இளைஞர். கடினமான உழைப்பாளியாக தென்பட்டார். அவர் நல்ல முறையில் அங்கேயே தங்கி இருந்து வேலைகளை கவனித்து வந்தார்.

    இந்த குறிப்பிட்ட சில நாட்கள் பழக்கத்திலேயே சேகரனை நான் முழுவதுமாக நம்ப ஆரம்பித்து விட்டேன். ஏற்கனவே விரிசல் விட்டிருந்த தொட்டியை உடனடியாக பழுது பார்த்தார். சுறுசுறுப்பாக அடிக்கடி வீடு சம்பந்தமாக, வீடு கட்டத்தேவையான தண்ணீரை வண்டிகள் மூலமாக எப்படி கொண்டு வருவது சம்பந்தமாக, வீடு கட்டுவதை எப்படி செய்யலாம் என்று... அடிக்கடி ஆலோசனை செய்வது என்று... அவரது நடவடிக்கைகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

    நான் எந்த அளவிற்கு அவரை நம்பினேன் என்றால், அஸ்திவாரம் போடும் போது நான் நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுப்பயணம் செல்லும் அளவுக்கு...! கொடைக்கானலில் இருந்து வரும் போது கிட்டத்தட்ட தரை மட்டத்திற்கு சற்று மேலே கல் கட்டப்பட்டிருந்தது.

    வீட்டின் வரைபடத்தின் படி, முன்பகுதி அஸ்திவார கல்கட்டிடம் சற்று குறைவாகவும், பின்பகுதி சற்று உயரமாகவும் கட்டப்பட்டிருந்தது.

    வீடு கட்டும் போது மேற்பார்வையிடவும், பொருட்களை வைத்துக்கொள்ள வசதியாகவும், அதே தெருவில் வீடு கட்டி குடியேறியிருந்த நண்பர் விஜயனின் பின் வீட்டில் வாடகைக்கு வந்தேன். அம்மாவையும் உடன் அழைத்து வந்து விட்டேன். அப்பா அவ்வப்போது வந்து செல்வார்.

    அஸ்திவாரத்திற்கு, செங்கல் கட்டுக்கு, கான்கிரீட்டுக்கு, சுவர் பூச்சுக்கு... என்று தனித்தனியாக...எவ்வளவு மணலுக்கு எவ்வளவு சிமெண்ட் கலக்க வேண்டும் என்றெல்லாம் ஏற்கனவே ஒப்பந்தத்தில் இருந்தது. அதை அவ்வப்போது கவனிப்பதுதான் பெற்றோர்களின் முக்கிய கடமையாக மாறி விட்டது.

    வீடு கட்டும் செங்கல் வாங்க சீவலப்பேரியில் தயார் செய்யப்படும் செங்கற்கள்தான் நன்றாக இருக்கும் என்று அங்கே உள்ள ஒரு செங்கற்சூலைக்கு அழைத்துச் சென்றார் சேகரன். பழையகாயல், ஆத்தூர், ஏரலைக் காட்டிலும் அங்கே தயாரிக்கப்படும் கற்கள்தான் சிறந்ததாம்.. நிறமும் நன்றாக இருக்கும் என்று அவர்தான் சொன்னார். சூலையில் செங்கற்களுக்கும் நன்றாகத்தான் இருந்தன. எத்தனை 'லோடு' (லாரி மூலம் ஒரு முறை கொண்டு வரப்படும் செங்கற்களின் அளவு ஒரு லோடு ) தேவை என்பதை ஏறக்குறைய கணக்கிட்டு முன்பணம் எல்லாம் கொடுத்து விட்டு வந்தோம்.

    வீடு கட்ட நல்ல நீர் அத்திமரப்பட்டியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தேவையான சிமெண்ட் அத்திமரப்பட்டி ரோட்டிலேயே இருந்த ஒரு சிமெண்ட் கடையில் தேவையான போது எல்லாம் வாங்கப்பட்டது. வேலை எல்லாம் நன்றாகவே நடந்ததாகத்தான் நினைவு.

    வரைபடம் எல்லாம் முன்னேற்பாடாக இருந்தாலும், வீடு கட்டும் போதுதான் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் என்ன என்ன என்பதெல்லாம் தெரிய வந்தன. வீட்டினுள்ளேயே இருந்த படுக்கையறைக்கு வீட்டின் உள்ளே இருந்து ஒரே வரிசையில் மாடிப்படி மூலம் செல்வதாக வரைபடம் இருந்தது. ஆனால் நடைமுறையில் அவ்விதம் போட்டால் மாடிப்படி செங்குத்தாக இருப்பதாக அமையும் என்று தோன்றியது. அதற்காக மாடிப்படி முதலில் ஏறி ஒரு இடத்தில் திரும்பி, பின்னர் மறுபடி ஏறி படுக்கையறையை அடைவதாக மாற்ற வேண்டியதாயிற்று. இதனால் ஹாலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மாடிப்படி அடைத்துக்கொண்டது.

    இதே போல வீட்டின் பின் வாசல் நேராக சமையலறையிலிருந்து செல்வதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்விதம் இருந்தால் சமையலறையில் பாதியளவு உபயோகிக்க முடியாததாகி விடும் என்பது தெளிவாக தெரிந்தது. அதனால் குளியலறையில் மாற்றம் செய்து, அதன் பக்கவாட்டில் பின்வாசல் அமைக்கப்பட்டது.

    தேவையான இடங்களில் பொருட்களை வைப்பதற்கான தளங்கள் கட்டப்பட்டன. சமைலறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பரண் அமைந்தது. அதை கட்டிய பின்னர் அதை பூஜையறையாக்க வேண்டும் என்று அப்பா சண்டை போட்டது தனிக்கதை..!

    வீட்டின் வாசல் நிலைக்கு தேக்கு மரமும், ஜன்னல்களுக்கு மலேசிய கோங்கு மரமும் உபயோகிக்கப்பட்டது.

    வீட்டை பார்வையிட எப்போது வந்தாலும், எங்கள் வீட்டிலேயே எப்போதும் உணவருந்தும் அளவுக்கு அவருடனான நட்பு இருந்தது. அவ்வப்போது அவருக்கு தரும் பணம் எவ்வளவு என்பதை மட்டும் நாட்குறிப்பில் குறித்து வந்தேன்.

    பக்கத்தில் கண்ணன் வீட்டு கட்டிடமும் கட்டப்பட்டு வந்தது. அவன் மாடிக்கு செல்லும் சுவர் தவறுதலாக பொது இடத்தில் கட்டப்பட்டு விட்டது. அதை நான் பெரிது படுத்தவில்லை. இருந்தாலும் சேகரன் விடவில்லை. பிற்பாடு பிரச்சினைகள் வரும் என்று வாதிட்டார். மறுபடியும் வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து மாடி வீட்டுக்கு செல்ல வேண்டிய மாடிப்படிகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டியதானது. அப்போது செல்லும் மாடிப்படியை பொதுசுவற்றில் நானும் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தி அவ்வாறே செய்தார்.

    வீட்டை பார்த்து வந்த நபரும் நல்ல முறையில் தொடர்ந்து கட்டிடத்திற்கு தண்ணீர் தெளிப்பது, கட்டிடத்திற்கு தேவையான பொருட்களை பராமரித்து வருவது போன்றவற்றை சிறப்பாகவே செய்து வந்தார். அவர் சில நேரம் மட்டுமே எங்கள் வீட்டில் உணவருந்தினார். மற்ற நேரங்களில் உணவகத்திலேயே உணவு உட்கொண்டார்.

    அப்போது வீடு கட்டும் பணிகளுக்கு தண்ணீர் தெளிக்கவும், பிற்பாடு மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு தண்ணீரை ஏற்றவும் வசதியாக இருக்கும் என ஒரு மோட்டாரை சுமார் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்தோம். அது ஓரளவுக்கு பயனுள்ளதாகவே இருந்தது.

    சமைலறை மேடையில் கடப்பா கற்கள் பதிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் சேகரன் கான்கிரீட் மூலமே அவ்விதமான மேடை அமைக்க முடியும் என்றும் கடப்பா கற்கள் போன்றே தோற்றம் தரும் விதமாக கருப்பு வண்ணத்தில் நன்றாக செய்து தருவதாகவும் சொன்னார். அவ்விதம் அமைக்கப்பட்ட மேடையில் சமையல் வாயு செல்லும் குழாய்க்கான துளையும் அமைக்கப்பட்டது. பலசரக்கு சாதனங்கள் வைக்க பல சிறிய அடுக்குகளும் அமைக்கப்பட்டன. சமையலறையில் இருந்து புகை வெளியேற ஜன்னல்களும் அமைக்கப்பட்டன.

    எல்லா அறைகளும் நல்ல வெளிச்சம் தரக்கூடிய வகையிலும், காற்றோட்டம் இருக்கும் வகையிலும் சன்னல்கள் பெரியதாக அமைக்கப்பட்டன.

    இப்படியாக வீடு கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் அம்மாவும் அப்பாவும் அடிக்கடி வீடு கட்டும் பணியாளர்கள் குறித்து தொடர்ந்து என்னிடம் குறை சொல்லி வந்தனர். கீழே நின்று கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே சிமெண்ட் கலவையை மேலே போடுவதாகவும், அடிக்கடி சொல்வதைக் கேட்பதில்லை என்றும் குறைப்பட்டனர். ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனினும் இது தொடர்ந்ததால் மிகவும் கவலைப்பட்டேன். சேகரனிடமும் இதைப்பற்றி சொன்னேன்.

    கான்கிரீட் அமைக்க தேவையான மரப்பலகைகள் பொருத்துவதை "செண்ட்ரிங்" என்று அழைத்தார்கள். அதை அமைப்பதற்கு முத்தையாபுரம் தோப்பில் இருந்த ஒரு நபர் அமர்த்தப்பட்டார். அவர் சேகரனுக்கு கொஞ்சம் தூரத்து உறவு என்பதைப் போல அவர்களின் பேச்சு புலப்பட்டது.

    மரப்பலகைகள் பொருத்த ஆரம்பித்த அந்த நபர் பாதி வேலைக்கு பின் வரவில்லை.. அவரை தேடிப்போகும் நேரம் எல்லாம் வீட்டிலும் இருப்பதில்லை. நிறைய குடிப்பவர் என்றும் அறிந்தேன். ஏற்கனவே ஒரு நபர் ஆரம்பித்த பணி என்பதால் பொதுவாக மற்றவர்கள் வந்து பணி செய்ய மாட்டார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. விடாமல் அவர் வீட்டுக்கு சென்று ஒரு வழியாக மரப்பலகைகள் அமைக்கும் பணியை அவர் முடித்தார்.

    கான்கிரீட் அமைக்கும் முன்னரே எந்த எந்த இடங்களில் மின் விளக்குகள் வர வேண்டும், மின் விசிறிகள் வர வேண்டும் என்பதை எல்லாம் திட்டமிட்டு அதற்கு தேவையான பிளாஸ்டிக் குழாய்கள் தகுந்த முறையில் பொருத்தப்பட்டன. கூடவே தொலைபேசி கம்பி வருவதற்கான குழாயும், மாடியில் இருந்து ஆண்டனாவிலிருந்து தொலைக்காட்சிக்கு வரும் கம்பி வருவதற்கான குழாயும் தனித்தனியே சுவற்றிலும், கான்கிரீட் உள்ளேயும் அமைக்கப்பட்டன. இதே போல் சமைலறை, குளியலறை, கழிவறை ஆகியவற்றிற்கு செல்ல வேண்டிய தண்ணீர்குழாய்களும் அமைக்கப்பட்டன.

    கான்கிரீட் தளம் அமைக்கும் போது உடனிருந்து பார்வையிட்டேன். கற்களினிடையில் கொஞ்சம் செங்கல் துண்டுகள், குப்பைகள் தென்பட்டன. அதையெல்லாம் அகற்றும் படி சொன்னேன். அங்கு பணி செய்தவர்கள் பேருக்கு அப்படி செய்வது போல பாவனை மட்டுமே செய்தனர். பின்பு நானே அதையெல்லாம் அகற்ற ஆரம்பித்தேன். அதன்பின்னர் அவர்களும் கொஞ்சம் ஒத்துழைத்தனர்.

    கான்கிரீட் பணி நடக்கும் தினம் எத்தனை பேர் வேலை செய்தாலும் அனைவருக்கும் திருப்தியாக உணவும் நாம் வழங்க வேண்டுமாம். உணவகத்தில் சொல்லி தேவையானவற்றை தருவித்தோம். கான்கிரீட் பணி முடிந்த பின்னர் தன் மேல் சிறியதாக "பாத்தி" கட்டி தண்ணீர் தேங்குவதற்கான ( க்யூரிங் )ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    தினமும் காலையும் மாலையும் கான்க்ரீட்டுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது பெய்த சிறு மழையும் நன்றாக உதவியது. வீட்டில் பதிக்க மொஸைக் கற்கள் தூத்துக்குடியில் வாங்கினோம். வீட்டின் பூச்சு ஓரளவுக்கு சொர சொரப்பாக இருந்தால் வர்ணம் பூச்சு நன்றாக இருக்கும் என்று கூறி அவ்விதமே செய்தார்.

    வீட்டிற்கான கதவை ( மரத்துகள்கள் நன்றாக அழுத்தப்பட்டு புது முறையில் தயாரிக்கப்படும் கதவுகள் - மிகவும் உறுதியானவை ) இராஜபாளையத்தில் வாங்கலாம் என்று நான் ஆலோசனை சொன்னேன். ஆனால் அவர் அவரிடம் இருக்கும் தச்சரே அவ்விதமான கதவை நன்றாக செய்வார் என்று கூறினார். அவர் கூறியதை நான் முழுவதும் நம்பினேன்.

    ஆனால் கதவு தயாரிக்கப்படும் இடத்தில் ஒரு நாள் சென்று பார்த்தேன். சட்டங்களில் பெவிக்காலை தடவி, நடுவில் மரத்துகள்களை கொட்டினர். மரத்துகள்கள் அழுத்தப்படவோ வேதிப்போருட்களால் கெட்டிப்படுத்தப்படவோ இல்லை. சட்டங்களின் மேல் பிளைவுட் அறையப்பட்டு கதவு தயாரிக்கப்பட்டது. சேகரனிடம் சொன்ன போது இவ்விதம் செய்யப்படும் கதவுகள் நன்றாக இருக்கும் என்று சொன்னார். எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது - திருப்தியும் இல்லை. வீட்டின் ஜன்னல்களில் கண்ணாடி மட்டுமே பதிக்கப்பட்டதால் அதில் எந்தப்பிரச்சினையும் வரவில்லை.

    வீட்டில் மொஸைக் கற்கள் பதிக்கப்பட்டன. சுத்தப்படுத்த எளிதாக இருக்கும் வகையில் சமையல் மற்றும் கழிவறைகளில் மொஸைக் போன்றே ஒரு கலவை சுவர்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டது.

    வீட்டை சுற்றி சுற்றுப்புற சுவரும் கட்டப்பட்டது. வீட்டின் உட்சுவர்களில் பூச்சு வேலை ஆரம்பிக்கப்பட்டது. வீட்டின் பணிகள் முடிவடையப்போகும் தருணத்தில் வேலைகளில் கொஞ்சம் சுணக்கம் தெரிந்தது. வேலைக்கு வரும் ஆட்கள் வெகுவாக குறைந்தனர். வீட்டின் பணிகள் முடிவடைவது தேவையில்லாமல் தள்ளிப்போடப்படுவது போல எனக்கு தோன்றியது.

    வீட்டின் முன்புறம் பெரிய அளவில் அலங்கார வேலைகளும் நடந்தன. வீட்டை பார்வையிடுபவர்கள் வீட்டின் முகப்புத்தோற்றத்தைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர். அந்த இடத்தில் கட்டப்பட்ட வீடுகளிலேயே மிகவும் உயரமான வீடாக அது திகழ்ந்தது.

    மொட்டை மாடியில் மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி கட்டப்பட்டது. அதில் சில நாட்கள் நீரை நிரப்பி சோதித்தோம். சில தினங்களில் ஒரு இடத்தில் தண்ணீர் கசிவது கண்டுபிடிக்கப்பட்டது. ( இங்குமா...? ) கசிவைத்தடுப்பதாக சொல்லி மேற்கொண்டு கூடுதல் கான்கிரீட் தொட்டியில் போட ஏற்பாடு செய்தார் சேகரன். மீண்டும் சோதனை.. ஆனால் கசிவு நின்ற பாடில்லை. உட்புற சுவர்களை கொத்தி, மீண்டும் நன்றாக பூசி மறுபடியும் நீர் ஊற்றி சோதனை... அப்படியும் பலனில்லை. கசிவு பெரிய அளவில் இல்லையென்றாலும் தொட்டியைப்பார்த்தாலே நீர் கசிவு இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு அது இருந்தது.

    நல்ல தண்ணீர் வருவதை சேமிக்க தரைமட்டத்திலேயே ஒரு பெரிய தொட்டியும் கட்டப்பட்டது. மோட்டாரும், தொட்டிகளுக்கு செல்வதற்கான குழாய்களும் நிறுவப்பட்டன.

    மின்வேலைகள் முடிவடையும் தருவாயில் தமிழக மின் வாரியத்தில் இருந்து வீட்டிற்கான மின்னிணைப்பு பெறப்பட்டது.

    புதுமனையில் பால் காய்ச்சுவதற்கான நாள் குறிப்பதற்காக சேகரனிடம் வேலை முடிய எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டேன். அவர் சொன்ன தேதிக்கு பின்னர் ஒரு நாளில் பால் காய்ச்சலாம் என்று திட்டமிட்டுக் கொண்டோம்.

    உட்புறச்சுவர்களில் 'டிஸ்டம்பர்' வர்ணம் தீட்டுவது, மரச்சட்டங்களுக்கு வர்ணம் தீட்டுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கப் பட்டன. ஹாலுக்கு வான நீலமும், படுக்கையறைகளுக்கு ஒருவித வெளிர்பச்சை நிறமும், சமையலறைக்கு சந்தன வர்ணமும் தீட்டப்பட்டது. மேற்கூரைகளுக்கு வழக்கம் போல வெள்ளை நிறம் மட்டுமே. கதவுகளுக்கும் சன்னல்களுக்கும் 'லில்லி ஒயிட்' எனப்படும் வெள்ளை நிறம் பூசப்பட்டது.

    வீட்டில் மொஸைக் தரை இரண்டு முறை பாலீஷ் போடப்பட்டது. வீடு பால் காய்ச்சியபின் மூன்றாவது முறை பாலீஷ் போடலாம் என்று சொன்னார்கள்.

    வீட்டினுள் இருக்கும் மாடிப் படுக்கையறைக்கு செல்ல கைப்பிடி சுவருக்கு பதிலாக, அலுமினியத்தால் ஆன கைப்பிடிகள் வைப்பதாக திட்டம் இருந்தது. அதற்கான வேலையை செய்ய வெளியிலிருந்து ஆட்களைத் தருவித்திருந்தார். எவ்வளவு நேரம் ஆனாலும் சரி... அன்றைக்குள்ளாக வேலையை முடிக்கும்படி அவர்கள் பணிக்கப்பட்டிருந்தார்கள்.

    அவர்கள் பணி செய்யும் போது ஏற்கனவே பாலீஷ் போடப்பட்ட மொஸைக் தரையில் வைத்து சுத்தியால் கைப்பிடியை அடித்து தயார் செய்வதாகவும், வெளியில் வைத்து வேலை செய்யும் படி சொன்ன போது கேட்கவே இல்லை என்றும், சற்று மரியாதைக்குறைவாக பேசுவதாகவும் அம்மா குறைப்பட்டார்கள்.

    எனக்கு ஏற்கனவே வேலை இடத்தில் இருந்த பிரச்சினை.. மன அழுத்தம்.. இருந்தாலும் அம்மா சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தேன். ஆனால் அம்மா விடவில்லை.. கண்டிப்பாக நான் அவர்களை ஒரு வார்த்தையாவது கேட்டாக வேண்டும் என்று அடம் பிடித்தார்.

    எனக்கு எரிச்சலும் கோபமும் தாளவில்லை. நேரே பணி செய்து கொண்டிருப்பவர்களிடம் சென்றேன். அமைதியாக பேச ஆரம்பித்தாலும் எனக்கிருந்த மன அழுத்தமும் கோபமும் விரைவிலேயே வெளிப்பட்டது. வேலை செய்வதில் பிரச்சினை இருந்தாலோ, வீட்டு உரிமையாளர்கள் சொல்வதை கேட்க மறுத்து மரியாதைக்குறைவாக நடந்தாலோ வீட்டில் வேலை பார்க்கத் தேவையில்லை என்றும் அவர்களுக்கு அது கடினமாக இருந்தால் சென்று விடுமாறும் கடிந்து பேசினேன். நான் பேசியதைப் பார்த்து அம்மாவும், பிரதீப்பும் எதுவும் பேசவில்லை.

    அன்று இரவு எனக்கு உறக்கம் வரவில்லை. மனம் மிகவும் சங்கடப்பட்டது. அவ்விதம் நான் என்றுமே பேசியதில்லை. ஏன் அப்படி பேசினோம் என்று நினைத்து மிகவும் வருந்தினேன். இரவு சுமார் பனிரெண்டு மணியளவில் அந்த பணியாளர்கள் வீட்டுக்கு வந்தனர். கைப்பிடி வேலை முடிவடைந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த நான் மனப்பூர்வமாக நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்து, மனதில் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அதன் பின்னரே கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அடுத்த தினம் காலையில் சேகரனை சந்தித்து நடந்த விபரங்களை முழுமையாக எடுத்துரைத்தேன். அவரும் அதை கேட்டு விட்டு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொன்னார்.

    புதிய மோட்டார் பொருத்தப்பட்ட இடத்தில் சிமெண்ட் பூச்சு எதுவும் செய்யப்படவில்லை. அம்மாவிற்கு எப்போதும் ஏதாவது வேலைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர் என்ன செய்தார் என்றால் அவ்விதம் சிமெண்ட் பூசப்படாத இடத்தில் அவராகவே சிமெண்ட் கலவையால் நன்றாக பூசி விட்டார். நான் கூட அவரிடம் செய்ய வேண்டாம் என்று கூறினேன்.. ஆனால் அவர் கேட்கவில்லை. செய்து முடித்தார். வீடு பால் காய்ச்சும் நாள் நெருங்கியதால் நானும் பொருட்படுத்தவில்லை.

    இந்தச்சூழலில் சில அரைகுறைப்பணிகள் முடிக்கப்படாமல் இருந்தன. பால் காய்ச்சிய பின்னர் எஞ்சிய பணிகளை முடிக்கலாம் என்றும் அப்போதுதான் நல்லது என்றும் சொன்னார்கள். ஆனாலும் பால் காய்ச்சும் தேதிக்கு முன்னதாக அவர் முடித்து விடுவதாக சொன்ன வேலைகளை சேகரன் முடிக்கவில்லை. நான் எவ்வளவோ வலியுறுத்தியும் எந்த பலனுமில்லை. பால் காய்ச்சும் தினம் நெருங்கிக்கொண்டிருந்தது. என்னுடைய பொறுமையை அளவுக்கு அதிகமாக அவர் சோதித்தார். சில தினங்களாக வீட்டு வேலைகள் அப்படியே கிடந்தன. பணி செய்யவோ நிலைமையை விளக்கவோ யாரும் வரவேய்ல்லை.

    அப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் பொழுது சாயும் நேரம் அவருடைய வீட்டுக்கு சென்றேன். குடிசையாக இருந்த அவரது வீடு அப்போது கான்கிரீட் கட்டிடமாக மாறிக்கொண்டிருந்தது. அவருடன் பணி செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். நான் வீட்டு வேலை முடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னேன். அவர் அதில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. பார்ப்போம்.. பார்ப்போம்... என்றே பதிலளித்துக்கொண்டிருந்தார். மீண்டும் ஒரு முறை எனது மன அழுத்தம் வெளிப்பட்டது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிகவும் கோபத்துடன் தெளிவாக, உரத்த குரலில் என்ன செய்ய வேண்டும் என்பதை கட்டளை போல பிறப்பித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். அங்கிருந்த அனைவரும் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.

    அதன் காரணமாகவோ என்னவோ அடுத்த தினத்தில் இருந்து வீட்டு வேலைக்கு ஆட்கள் வந்து பணி செய்தனர். ஆனால் ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது நன்றாக தெரிந்தது. பால் காய்ச்சும் விழாவிற்கு சேகரனையும் அவருடன் பணி புரிந்த அனைவரையும் நேரில் சென்று அழைத்தேன்.

    ஆடம்பரமாக பால் காய்ச்சுவதை கொண்டாட எனக்கு விருப்பமில்லை. அக்காக்கள் குடும்பத்தினருக்கும், மிகச்சில நண்பர்களுக்கும் மட்டுமே சொல்லி பால் காய்ச்சும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தேன். பால் காய்ச்சும் தினத்தில் வீட்டில் பணியாற்றிய அனைவரையும் வரச்சொல்லி விருந்து வைத்தோம். சேகரன், தச்சர்,மேஸ்திரி ஆகியோருக்கு புத்தாடைகளும் வெகுமதிகளும் வழங்கினோம். ஒரு வழியாக பால்காய்ப்பு விழா முடிவடைந்தது.

    இதன்பின்னர் அந்த வீட்டிற்கு குடி போவதற்கு முன்பாக மீதமிருந்த சில பணிகளை முடிக்கும் படி சேகரனிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் முடித்தபாடில்லை. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. வேலைக்கும் ஆட்கள் வரவில்லை. வீட்டைப்பார்த்துக் கொண்டிருந்த இளைஞரும் வேறு ஒரு வீடு கட்டும் இடத்திற்கு செல்வதாக கூறி சென்று விட்டார்.

    பிரச்சினை என்ன என்பதை பேசுவதற்காக நானும் பிரதீப்பும் சந்தானம் அண்ணாச்சி வீட்டில் கூடினோம். செவ்வேளும் வந்தார். சேகரனும் வரவழைக்கப்பட்டார். நான் என்ன வேலைகள் மீதம் உள்ளன என்பதை விளக்கி சொன்னேன். தொடக்கத்தில் அமைதியாக இருந்தது போல காணப்பட்ட சேகரன் திடீரென்று, வீடு கட்டியதால் அவருக்கு மிகுந்த நஷ்டம் என்று கூறினார். அதற்கு காரணம் என்ன என்று கூறவில்லை. ஒப்பந்தத்தின் படி தரவேண்டிய பணம் முழுமையும் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தது. பேசிக்கொண்டிருக்கும் போதே, அவர் வேலை பார்த்த வீட்டில் வேறு ஆட்களைக்கொண்டு எப்படி நான் வேலை செய்யலாம் என்று கேள்வி எழுப்பினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது, அவர் மோட்டார் வைத்திருந்த இடம் பூசப்பட்டதைக் குறித்து சொல்கிறார் என்று. நான் அந்த வேலையை செய்தது என் அம்மாதான் என்று தெளிவாக எடுத்துக்கூறியும் அதை ஏற்க மறுத்தார். அதை என் அம்மாதான் செய்தார் என்பதை நிரூபிக்கிறேன் என்று சொல்லும் போது, அப்படி நிரூபிக்கவில்லை என்றால்...? என்று கிண்டலாக சேகரன் கேட்க... கோபம் என் கண்ணை மறைத்தது. உடனே சொன்னேன் கட்டிய அந்த வீடு முழுவதையும் தரைமட்டமாக்கி விடுவதாக. நிரூபித்தால் அவர் என்ன செய்வார் என்ற என் கேள்விக்கு அவர் நேரிடையாக பதில் அளிக்கவில்லை.

    வேண்டுமென்றே பணம் கேட்பதற்காக சாக்குகளை சொல்லும் சேகரனைப்பற்றி அப்போதுதான் எனக்கு விளங்கியது. என்னைப்பற்றி நன்றாக தெரிந்த சந்தானம் அண்ணாச்சிக்கும் கோபம் வந்தது. பேச்சுக்கள் வெட்டியாக வளர்ந்து கொண்டே போனது. நான் குறுக்கிட்டு அநாவசியமாக எதுவும் பேசிப் பலனில்லை என்றும், ஒப்பந்தம் போடும் போது சந்தானம் அண்ணாச்சி சொன்னதை அப்படியே ஒப்புக்கொண்டேன் என்பதையும் நினைவூட்டினேன். அதே போல இப்போதும் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் கூறினால் போதும் என்று கூறினேன். அவர் சேகரன் மீது உள்ள குறைகளை கூற முற்பட்ட போது தடுத்து, எவ்வளவு பணம் தரவேண்டும் என்று மட்டும் கேட்டுச்சொல்லுங்கள் என்று கூறினேன். அதுவரை தந்திருந்தது போக கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் வரை தர வேண்டும் என்று சொன்னார். ஒரு வார்த்தைக்கூட பதில் பேசாமல் கையில் கொண்டு போயிருந்த பணத்தை எண்ணிப்பார்த்தோம். பிரதீப்பிடம் இருந்த பணமும் சேர்ந்து அந்தத்தொகை இருந்தது. கையிலிருந்த அந்த பணம் முழுவதையும் அவரிடம் கொடுத்துவிட்டு, அவர் பணம் பெற்றுக்கொண்டதாக கடிதம் தருமாறு கேட்டேன். அவர் அதற்கு தர முடியாதென்று மறுத்தார். அப்போது இன்னும் அவரை நம்புவதாகவும், கடிதம் எதுவும் தரவேண்டாம் என்றும் சொன்னேன். அவர் என் முகத்தை பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டார்.

    அதற்கு பின் தூத்துக்குடியில் இருந்து வீட்டுக்கு வருவதற்கான செலவிற்காக செவ்வேளிடமிருந்து ஐம்பது ரூபாய் கடன் வாங்கினேன். அரை மணி நேர பேருந்து பயணத்திற்கு பின் பிரதீப்பும் நானும் வீடு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் நானும் பிரதீப்பும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அன்றிரவு வீட்டில் மிகவும் நிம்மதியாக உறங்கினேன்.

    பின்குறிப்பு:

    1. முழுமையான தொகுப்பாக தரவேண்டும் என்று எண்ணினாலும், தேவையின்றி கதை வளர்க்கப்படும் என்கிற தோற்றம் வரும் என்பதால் இப்போதைக்கு வீட்டை நிறைவு செய்கிறேன்.

    2. 'வீட்டைக்கட்டிப்பார்' என்னும் அந்த மொழியில் இருந்த உண்மையை உணர வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. 'போதுமடா சாமி' என்கிற நிலைதான் எல்லோருக்கும் ஒரு நிலையில் வருமோ என்று தோன்றுகிறது.

    3. மேல்நிலைத் தண்ணீர் தொட்டி கசிவை நிறுத்த பலமுயற்சிகள் செய்தும் பலனில்லை. கடைசியில் சிண்டெக்ஸ் தொட்டி வாங்கி நிறுவினேன்..!

    4. மிகவும் நேசித்த அந்த 5/103 - z, சுபாஷ் நகர், மூன்றாவது தெரு, அத்திமரப்பட்டி ரோடு வீட்டை ஆறு வருடங்களுக்கு முன்பாக நாகர்கோவிலை சேர்ந்த ஒருவருக்கு விற்றுவிட்டேன்.

    -------------------------------------------------
    தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:


    1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
    2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
    3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
    4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
    5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
    6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
    7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
    8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
    9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
    10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
    11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
    12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
    13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
    14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
    15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
    16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
    17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
    18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
    19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
    20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை
    21. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8493 - குளிர்காலம்
    Last edited by பாரதி; 09-01-2008 at 09:39 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அருமை பாரதி, அருமை.
    உங்கள் நிலையில்தான் வீடு கட்ட ஆரம்பித்த பலரும் இருப்பர்.
    கொஞ்ச நாளைக்கு முன் ஆனந்த விகடனில் மகுடேஸ்வரனின் கவிதை ஒன்று வந்தது.

    வாழ்ந்து கெட்டவனின் வீட்டை
    விலைபேசி முடிக்குமுன் உற்றுக்கேள் -
    கொல்லைப்புரத்தில் பெண்களின் சன்னமான அழுகையை!


    நாம் எதற்காக விற்றாலும் வீட்டை ஆசை ஆசையாய்க் கட்டி அதன் மீது பாசத்தைப் பொழிந்து - அது உண்டாக்கும் வலி வலியது.

    அன்புடன்,
    பிரதீப்
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    அருமையான கதைக் கரு, பாரதி. ஆனால் என்ன கொஞ்சம் கட்டுரை நடையில் கதை சொல்லப்பட்டிருக்கிறதினாலே, நடு நடுவே கொஞ்சம் குழப்பம் - கதை வாசிக்கிறோமா இல்லை கட்டுரை படிக்கிறமோ என்று. பழகப் பழக கதை சொல்லும் நேர்த்தி கை வரும்.

    ஆனால், கதையின் கரு, அதன் நேர்மை மனதில் ஆழப்பாய்கிறது - எல்லோருக்குமே இது ஒரு வாழ்நாள் அனுபவம் என்பதால், பட்டென்று மனதில் பரவுகிறது. படர்கிறது. இந்த அனுபவம் எனக்கும் உன்டு என்பதால் ரசித்து வாசிக்க முடிந்தது...

    பாராட்டுகள் + வாழ்த்துகள்...

    அன்புடன்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    வீடு கட்டி முடிந்து வாழ்ந்து விற்றும் போனது. பாரதி உங்கள் கட்டுரை அல்லது கதை எனக்குப் பல விதங்களில் உதவியாக இருந்தது. நிகழ்வுகளை மட்டும் சொல்வது ஒரு வகை. மனவோட்டங்களை மட்டும் சொல்வது மற்றொரு வகை. இரண்டையும் கலந்து சொன்ன இந்த வீடு எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது என்றால் அது உண்மையே. மேலும் தூத்துக்குடிப் பின்புலத்தில் எழுந்த வீடாதலால் மிகவும் ஆழ்ந்து படித்தேன்.

    சரி. அடுத்த பந்திக்குக் காத்திருக்கிறேன்.

    அன்புடன்,
    கோ.இராகவன்

    ஆண் பெண் அணிகலன்கள்...........கற்கையில் வேண்டியது
    http://www.tamilmantram.com/vb/showt...9776#post99776

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    இதே குழப்பம்தான் எனக்கும்.. சுவாரஷ்யமான தகவல்கள் பக்கத்தில் பதிக்க வேண்டியது ஏன் கதைப்பகுதியில் பாரதி பதித்தார் என்று..
    இது ஒரு நிஜக்கதைதானே..??
    இன்னும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம்.. சுவாரஷ்யம் இன்னும் கூடி இருக்கும்..
    வீடு கட்டுவது பெரும் பாடு.. அதை கஷ்டத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பாரதி..
    அன்புடன்
    மன்மதன்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கருத்துகள் தந்த பிரதீப், நண்பன், இராகவன், மன்மதனுக்கு நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    அன்பு பிரதீப், நீங்கள் சொன்னது உண்மைதான். காரணம் அறியாமலேயே சில விசயங்கள் மீது நமது கவனம் ஈர்க்கப்பட்டு விடுகிறது.

    அன்பு நண்பன், நீங்கள் சொன்னது போல இது கதையாக அல்லது கட்டுரையாக எழுத வேண்டும் என்கிற எந்த நோக்கமும் இல்லாமல் எழுதியது இது. மனதில் இருப்பதை சொல்வது மட்டுமே குறிக்கோள். எனினும் இனிமேல் உங்கள் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்வேன்.

    அன்பு இராகவன், வழக்கம் போல் உங்களிடமிருந்து பாராட்டு.. நானும் வேறு என்ன சொல்ல..? நன்றி.

    அன்பு மன்மதன், நேரம் கிடைக்கும் போது இந்த தேதியில்லாக் குறிப்புகளின் ஆரம்பத்தையும் பார்க்கவும். சுவாரஸ்யமாய் தருவது மட்டுமே அல்ல இப்பதிவின் நோக்கம். ஆனால் ஒன்று. எழுத ஆரம்பித்த போது இருந்த வேகம் பின்னர் இல்லை. எப்படியாவது முடித்தால் போதும் என்கிற நிலைமையில்தான் இப்பதிவை முடித்தேன் என்பது நிஜம்தான்.

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    ஆயிரமாயிரமாக கொட்டி கடைசியில் பேருந்திற்குக்கூட கடன் வாங்கி வந்தது, எந்த நிலைக்கும் தயாராய் இருக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.
    இறுதியில் விற்று விட்டோம் என்று முடித்தது என்னவோ நானே பிரிந்தது போல் ஒரு உணர்வு.

    வீட்டைக்கட்ட இருக்கும் பலருக்கும் இந்தப்பதிவு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். நன்றி பாரதி.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    சில விசயங்களை மற்றவர்கள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்வதே இல்லை. நாமே அனுபவித்த பின்னர்தான் அவர்கள் சொன்னதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

    ஆனால் என்ன இருந்தாலும் பிரிவு தரும் வலி மனதில் அழியாத வடுவாக என்றைக்கும் தங்கித்தான் விடுகிறது. கருத்தளித்து மகிழ்வித்த கவிதாவுக்கு நன்றி.

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வழமையாக எவனுக்கும் வரும் கோபம் தான். எமது வீடுகட்டும் போதும் எனது தந்தையார் பலதடவை அந்த மேஸ்திரியிடம் கடிந்திருக்கிறார்....

    ஒரு வீடு கட்டிமுடித்த பெருமூச்சை நான் விட்டேன். பாராட்டுக்கள் அண்ணா.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    ஒரு மனிதனின் வாழ்க்கை நசிந்து போவதின் கடைசி அடையாளம் அவனின் எதிர்கால வாழ்க்கைப்பயணத்தை தொடர வேறு வழியில்லாமல் தன் வீட்டை விற்பது தான். ஒரு வீடு கட்டுவதின் வலியை நான் சமீபகாலமாக உணர்ந்து வருகிறேன், நானும் ஒரு வீட்டை கட்டி வருவதன் மூலம்..! ஆனாலும், அந்த வலி என்னை தளரவிடுவதில்லை. காரணம், அதன் மேல் நான் கொண்டிருக்கும் நேசம். என் வீட்டைக்கட்டி வரும் மனிதர்களை என் அப்பா சில நேரங்களில் கோபத்துடன் பேசுவார். நான் அதற்காக என் அப்பாவிடம் சண்டைக்கு போவேன். நான் மகிழ்ச்சியாக வாழ ஒரு வாழிடத்தை தங்கள் வியர்வை சிந்தி உருவாக்குபவர்களை இம்சிப்பது என்பது என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. இன்னும் நிறைய வேலைகள் முடிக்கப்படாமல் இருந்தாலும் இப்போதே அந்த வீட்டில் புழங்கி, வாழ வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. வீடு என்பவை நாம் இந்த மண்ணில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். அதை இழப்பது நம்மை நேசித்த உயிரை இழப்பதற்கு சமம்..!!

    மனம் நெகிழும் பதிவை அளித்த பாரதிக்கு என் நன்றிகள்..!!
    அன்புடன்,
    இதயம்

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    அன்புள்ள பாரதி அண்னனுக்கு,

    பதிவு மிகவும் அருமையாக உள்ளது, வீட்டைக் கட்டிப்பார் கல்யானத்தைச் செய்துபார் என்று ஒரு பலமொழியை கூருவார்கள், காரணம் வீடு கட்டும் போதும் கல்யாணம் செய்யும்போதும் தான் நம் நண்பர்கள் யார், நம் எதிரிகள் யார் என்ற உண்மை தெரியும், இன்னொண்று நாம் எவ்வளவுதான் திட்டம் போட்டு காரியங்கள் செய்தாலும் கல்யாணத்தில் அனைவரையும் திருப்தி படுத்த முடியாது, அதேபோல் வீடு கட்டுவதிலும் நம் கணக்கு முழுவதும் சரியாக இருக்காது, ஒரு வீட்டை ஒருவன் கட்டி முடித்துவிட்டானானால் நிச்சயம் அவனால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியும் என்று பெரியவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். ஒரு வீடு கட்டுவதில் ஏற்படும் அனுபவம் உன்மையிலேயே மிகவும் அதிகமானது. அந்தவகையில் நீங்கள் வீடு கட்டியதிலிருந்து நாங்கள் பலவற்றைத் தெரிந்துகொண்டோம். நான் இன்னும் சிருவன்தான், ஆனால் என் வாழ்க்கையின் முக்கியமான ஆசைகளுள் ஒன்று என் விருப்பப்படி ஒரு வீட்டைக்கட்டிக்கொள்வது. வீடு கட்டுவதில் இருக்கும் சிரமத்தை அனுபவிக்காவிட்டாலும் பார்த்துத் தெரிந்துவைத்துள்ளேன். ஓரளவு நியாபகம் தெரிந்த வயதில் என் அப்பா வீடு கட்டிய போது ஆன கடனும், சமீபத்தில் என் சித்தப்பா வீடு கட்டி அடைந்த கஸ்டங்களும் நான் உணர்ந்திருக்கிறேன். இத்தனைக்கும் அவர்கள் இருவருமே மிகவும் எச்சரிக்கையோடு கண்க்கிட்டு பணத்தை செலவு செய்தும் அவர்கள் அந்த வீட்டைக்கட்டி முடிப்பதற்க்குள் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. உங்களின் அனுபவத்தையும் அறிந்ததிலிருந்து நான் நிச்சயம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பேன், பழமொழியை
    மாற்றிக்காட்டுகிறேன், ( யாரும் தப்பா நெனச்சுக்காதீங்க பழமொழி வந்து வீட்டைக்கட்டிப் பார், கல்யாணத்தை செய்து பார் என்பது, நான் மாற்றப் போவது முதலில் கல்யாணத்தைச் செய்து விட்டு பிறகு வீட்டைக் கட்டப்போகிறேன், எப்படி, எப்படியோ மாத்துறோம்ல )

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    வழமையாக எவனுக்கும் வரும் கோபம் தான். எமது வீடுகட்டும் போதும் எனது தந்தையார் பலதடவை அந்த மேஸ்திரியிடம் கடிந்திருக்கிறார்....
    ஒரு வீடு கட்டிமுடித்த பெருமூச்சை நான் விட்டேன். பாராட்டுக்கள் அண்ணா.
    கருத்துக்கு மிக்க நன்றி அன்பு.

    Quote Originally Posted by இதயம் View Post
    ஒரு மனிதனின் வாழ்க்கை நசிந்து போவதின் கடைசி அடையாளம் அவனின் எதிர்கால வாழ்க்கைப்பயணத்தை தொடர வேறு வழியில்லாமல் தன் வீட்டை விற்பது தான். ஒரு வீடு கட்டுவதின் வலியை நான் சமீபகாலமாக உணர்ந்து வருகிறேன், நானும் ஒரு வீட்டை கட்டி வருவதன் மூலம்..! ஆனாலும், அந்த வலி என்னை தளரவிடுவதில்லை. காரணம், அதன் மேல் நான் கொண்டிருக்கும் நேசம். என் வீட்டைக்கட்டி வரும் மனிதர்களை என் அப்பா சில நேரங்களில் கோபத்துடன் பேசுவார். நான் அதற்காக என் அப்பாவிடம் சண்டைக்கு போவேன். நான் மகிழ்ச்சியாக வாழ ஒரு வாழிடத்தை தங்கள் வியர்வை சிந்தி உருவாக்குபவர்களை இம்சிப்பது என்பது என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. இன்னும் நிறைய வேலைகள் முடிக்கப்படாமல் இருந்தாலும் இப்போதே அந்த வீட்டில் புழங்கி, வாழ வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. வீடு என்பவை நாம் இந்த மண்ணில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். அதை இழப்பது நம்மை நேசித்த உயிரை இழப்பதற்கு சமம்..!!

    மனம் நெகிழும் பதிவை அளித்த பாரதிக்கு என் நன்றிகள்..!!
    மிக்க நன்றி இதயம். எதையும் பார்த்து பார்த்து செய்து, நேசித்து இழப்பது மிகவும் துன்பகரமானது. இப்போதும்கூட நான் பிறந்த வீட்டில் ஒரு பகுதியில் வீடு கட்டி வருகிறேன். எல்லா இடங்களிலும் வீடு கட்டுபவர்கள் ஓரளவுக்கு ஒரே மாதிரியான கொள்கைகளை வைத்திருக்கிறார்கள் போலும்..ஹும்ம்..


    Quote Originally Posted by rocky View Post
    அன்புள்ள பாரதி அண்னனுக்கு,

    பதிவு மிகவும் அருமையாக உள்ளது, வீட்டைக் கட்டிப்பார் கல்யானத்தைச் செய்துபார் என்று ஒரு பலமொழியை கூருவார்கள், காரணம் வீடு கட்டும் போதும் கல்யாணம் செய்யும்போதும் தான் நம் நண்பர்கள் யார், நம் எதிரிகள் யார் என்ற உண்மை தெரியும், இன்னொண்று நாம் எவ்வளவுதான் திட்டம் போட்டு காரியங்கள் செய்தாலும் கல்யாணத்தில் அனைவரையும் திருப்தி படுத்த முடியாது, அதேபோல் வீடு கட்டுவதிலும் நம் கணக்கு முழுவதும் சரியாக இருக்காது, ஒரு வீட்டை ஒருவன் கட்டி முடித்துவிட்டானானால் நிச்சயம் அவனால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியும் என்று பெரியவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். ஒரு வீடு கட்டுவதில் ஏற்படும் அனுபவம் உன்மையிலேயே மிகவும் அதிகமானது. அந்தவகையில் நீங்கள் வீடு கட்டியதிலிருந்து நாங்கள் பலவற்றைத் தெரிந்துகொண்டோம். நான் இன்னும் சிருவன்தான், ஆனால் என் வாழ்க்கையின் முக்கியமான ஆசைகளுள் ஒன்று என் விருப்பப்படி ஒரு வீட்டைக்கட்டிக்கொள்வது. வீடு கட்டுவதில் இருக்கும் சிரமத்தை அனுபவிக்காவிட்டாலும் பார்த்துத் தெரிந்துவைத்துள்ளேன். ஓரளவு நியாபகம் தெரிந்த வயதில் என் அப்பா வீடு கட்டிய போது ஆன கடனும், சமீபத்தில் என் சித்தப்பா வீடு கட்டி அடைந்த கஸ்டங்களும் நான் உணர்ந்திருக்கிறேன். இத்தனைக்கும் அவர்கள் இருவருமே மிகவும் எச்சரிக்கையோடு கண்க்கிட்டு பணத்தை செலவு செய்தும் அவர்கள் அந்த வீட்டைக்கட்டி முடிப்பதற்க்குள் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. உங்களின் அனுபவத்தையும் அறிந்ததிலிருந்து நான் நிச்சயம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பேன், பழமொழியை
    மாற்றிக்காட்டுகிறேன், ( யாரும் தப்பா நெனச்சுக்காதீங்க பழமொழி வந்து வீட்டைக்கட்டிப் பார், கல்யாணத்தை செய்து பார் என்பது, நான் மாற்றப் போவது முதலில் கல்யாணத்தைச் செய்து விட்டு பிறகு வீட்டைக் கட்டப்போகிறேன், எப்படி, எப்படியோ மாத்துறோம்ல )
    மிக்க நன்றி ராக்கி. நீங்களும் பலமொழியை மாற்றாமல் விடமாட்டீர்கள் போலும். ஒரு விதத்தில் நம் பொறுமை எவ்வளவு தூரம் தாங்கும் என்பதை நமக்கு உணர்த்துவதற்கான பாடமாகக்கூட வீடு கட்டுவதை எடுத்துக்கொள்ளலாம். அனுபவப்பாடங்கள் சமயங்களில் கசப்பானவைதான். அது சரி.. கல்யாணத்திற்கு பின்னர்தான் யார் யார் எதிரிகள் என்பதை அறிய முடியுமா..? ஹஹஹா... இருப்பினும் முன்கூட்டிய வாழ்த்துக்கள் ராக்கி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •